அன்பை விதைத்து அன்பையே அறுவடை செய்வோம்!ஷேரிங்

-நிவேதிதா

அதிர்ச்சி என்பதை விட பன்மடங்கு கொடுமையான ஓர் உணர்வு அது. ஒட்டுமொத்தமாக உடலும் மனமும் ஸ்தம்பித்து விட்ட ஒரு நிலை எனக்கு. அது ஒரு காணொளி. ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை அறையில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சி. சொந்தத் தந்தையின் உயிர் காக்கும் ஐ.வி. லைனைப் பிடுங்கி விடுகிறார் மருத்துவரான அவரது மகள், ரகசியமாக சில பத்திரங்களில் கைநாட்டு வாங்கிய பின்.

 80 வயதைத் தாண்டிய மருத்துவரான அந்த முதியவர் இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களில் இறந்து விடுகிறார். அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரான அந்தப் பெரியவரின் மகன் (அவரும் மருத்துவரே) டாக்டர் ஜெயசுதா என்ற தன் தமக்கையின் மீது போலீஸ் புகாரும், மருத்துவ கவுன்சில் புகாரும் அளிக்கிறார். வழக்கம் போல, விசாரணையில் இருக்கிறது வழக்கு.

பணம் ஒரு மனிதனை எவ்வளவு மிருகத்தனமாக மாற்றுகிறது? வரலாறு முழுக்க இது போன்ற வன்மக் குற்றங்கள் நிறைந்திருக்கின்றன. முகம்மதிய மன்னர்கள்-அவுரங்கசீப்-ஷாஜஹான் முதல், தமிழகத்தின் தலைசிறந்த அரசி ராணி மங்கம்மாள்-விஜய ரங்க சொக்கனாதன் வரை, அரச மணிமகுடத்துக்காகக் குடும்பங்களுக்குள் கொலைகள் நடந்திருக்கின்றன.

‘எந்த சூழ்நிலையிலும் ஓர் உயிரைக் காக்கும்’ ஹிப்பொக்ரட்டிக் மருத்துவ உறுதிமொழி ஏற்றிருக்கும் ஒரு மருத்துவர், அதிலும் பொறுமையும் கருணையும் கொண்ட ஒரு பெண், தன் சொந்தத் தகப்பனை, தன் மகன்கள் முன்னிலையில் கொல்லத் துணிவது உச்சகட்டக் கொடூரம்? பணம் என்னும் பேப்பருக்கு நம் வாழ்க்கையை என்று நாம் அடகு வைத்துவிட்டோமோ, அன்றே நம் மனிதாபி மானம் மரித்துவிட்டது.

6 இலக்க சம்பளம், 2 இலக்க லகரங்களில் கார்கள், வார இறுதியில் கொண்டாட்டம், வருடத்துக்கு ஒரு முறை வெளிநாட்டு விடுமுறையுமாக நம் வாழ்க்கை என்று மாறத் தொடங்கியதோ, அன்றே நம் முதியோரை கதவு ஓரத்தில் சாத்தும் குச்சியாகவே நாம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். பிள்ளைகளை வளர்த்து எடுத்து, ஆளாக்குவது என்பது பெற்றோரின் ‘கடமை’ என்பதை ஆணித்தரமாக நம்பும் நாம், முதுமையில் நம் பெற்றோரை அன்பாகவும் கனிவாகவும் கவனித்துக் கொள்ளாதது ஏன்?

தமிழகத்தின் கிராமப்புறங்களிலும் காரும் ஏசியும் இல்லாத வீடுகள் இன்று இல்லை. அந்த சூனியமான வீடுகளில் ஒரு முதிய ஜோடியைத் தவிர யாரும் இருப்பதில்லை. ஈஸி சேரில் சாய்ந்தபடி வாசலை பூ விழுந்த கண்களுடன் பார்த்துக் கொண்டு, எதுவுமே காதில் கேட்காத ஒரு மவுன வெளியில் நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்தபடி எத்தனை ஆயிரம் முதியவர்கள் இருக்கிறார்கள்? வெளிநாடுகளில் வேலைக்காக தஞ்சம் புகும் பிள்ளைகள் வாரம் ஒருமுறை, ஒற்றை ஸ்கைப் காலில் தன் ‘புத்திரக் கடமை’யை ஆற்றிவிடுகிறார்கள். நகரங்களிலோ, கொஞ்சம் கையில் காசு மிஞ்சிய முதியவர்கள், ‘ரிட்டயர்மென்ட் ஹோம்’களில் தஞ்சம் அடைந்து விடுகிறார்கள். பணக்காரக் குடும்பங்களிலோ இயலாத முதியோரை ஹோம்-நர்சுகள் வைத்து பார்த்துக் கொள்வது இன்று சகஜமாகி விட்டது.

நடுத்தர வர்க்கத்தின் நிலைதான் கவலைக்குரியது. ‘மெட்ராசில்’ 6 இலக்க சம்பளம் வாங்கும் மகன்கள்/மகள்கள் வீட்டில் சம்பளம் இல்லாத கேர்-டேக்கர்களாக வளைய வரும் அம்மா - அப்பாக்களே இன்று அதிகம். தங்கள் சிறிய குழந்தைகள் வளரும் வரை தேவைப்படும் இந்த கேர்-டேக்கர்களை, அவர்கள் சுருங்கும் காலத்தில் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொள்ளும் மகன்/மகள்கள், நாளை ஒரு நாள் தன் நிலையும் அதுதான் என்பதை உணர்வதே இல்லை. ஃப்ளாட்களின் பால்கனிகளில், சாயம் போன, கெண்டைக்காலுக்கு மேலேறிய நைட்டியிலும், ஒட்ட வெட்டப்பட்ட கிராப்புத் தலையுமாகப் பெண்களும், கை கால் விரல்களில் நகங்கள் சுருண்டு, பல நாட்கள் தாடி மண்டிய முகங்களுடன், அழுக்கேறிய வேட்டிகளை அணிந்து, கம்பிகளைப் பற்றி வெறித்துக் கொண்டிருக்கும் ஆண்களையும், நாம் ஒற்றை நொடி பரிதாபத்துடன் கூடக் கடந்து போவதில்லை.

இவர்களின் நிலையே இதுதான் என்றால், விளிம்புநிலை மனிதர்களின் நிலை குறித்து சொல்லவே வேண்டியதில்லை. இயன்ற வரை உழைத்துவிட்டு அதன்பின் பிச்சை எடுத்து அடுத்தவரின் கருணையில் வாழ்க்கையை நகர்த்துகின்றனர் முதியோர். மரணம் எவ்வளவு இனியது என்று இவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும். இன்னொரு விதமான உளவியல் பிரச்னையும் இதில் உண்டு. சிக்கனமாக வாழ்க்கையை ஓட்டிப்பழகிவிட்ட ஒரு தலைமுறைப் பெரியவர்களை இன்று நாம் சமாளித்தாக வேண்டும்.

எண்பது களின் கொடிய பஞ்சத்தைப் பார்த்து வளர்ந்த இவர்கள், பண விஷயத்தில் படு கறாராகவே நடந்துகொள்கிறார்கள். சிக்கனமாக இருக்க வேண்டும் என்கிற அவர்களது எண்ணங்கள் இன்றைய சமுதாயத்திடம் எடுபடுவதில்லை. மருத்துவத்துக்கு பணம் செலவு செய்வதை இவர்கள் அனாவசியமாகவும் கருதுகிறார்கள். பிள்ளைகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், தனக்கு நேரும் அசவுகரியங்களை மறைத்துக் கொள்கிறார்கள். சிபிசிஐடி தரத்துக்கு துப்பறிந்தால் மட்டுமே இவர்களது உடல்நலம் குறித்தும், எண்ண ஓட்டங்கள் குறித்தும் நமக்குப் புலப்படும். பணம் என்பது நாளைக்கு மட்டும் தேவைப்படும் ஓர் ‘உயிர் காப்பீடு’.