ஹோம் ஆட்டோமேஷன்
ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!
எது ரைட் சாய்ஸ்?
-கிர்த்திகா தரன்
ஒரு கற்பனை... உங்கள் வீட்டை நீங்கள் எங்கிருந்தாலும் ரிமோட்டில் இயக்க முடியும். ஃப்ரிட்ஜே முட்டை இல்லை என்று நம்மிடம் சொல்லும். அதை ’ஆன்லைன் மார்ட்’டுக்கு செய்தியாக அனுப்பி கார்டில் கழித்து முட்டை வரவழைத்து விடும். கொத்தமல்லியும் கொசுறு கறிவேப்பிலையும் கூட அதுவே வாங்கும்! சென்னை வெயிலில் மண்டை பிளக்க வீட்டுக்கு வந்தால் மொட்டை மாடி சூடு இறங்கி வீடே அனலா கக் கொதிக்குது. ’முதலாளி யம்மா வருவாக... அதுக்குள்ளே நாம குளுகுளுன்னு அறைய வைப்போம்’ என முன்கூட்டியே யோசித்து தானே இயங்க ஆரம்பிக்குது ஏசி!
அதாவது, பரவாயில்லை... கெய்சரில் நம் திட்டத்துக்கு வெந்நீர், டி.வி.யில் நாம் விரும்பும் சீரியல் ரிக்கார்ட் ஆவது, உள்ளே நுழைந்தவுடன் மெல்லிசை, ஏன் மாலை 6 மணிக்கு விளக்கு (எலெட்ரிக்) ஏற்றி, சாமி மணியும் அடித்து பக்தி மணம் கமழும் என்றால் சொர்க்கம்தானே வீடு!
ஹோம் ஆட்டோமேஷன் என்பது ரோபாட்கள் நம்மை ஆளும் என்றெல்லாம் ரொம்ப யோசிக்கத் தேவையில்லை. மிக சிம்பிள் டெக்னாலஜி. எந்த எலெக்ட்ரானிக் சாதனத்தையும் ரிமோட் மற்றும் இணையம் மூலம் இயக்குவதுதான் ஹோம் ஆட்டோமேஷன். நான் அமெரிக்கா சென்று இருந்தபோது என் தோழி கேரேஜ் கதவை யாரும் திறக்கவில்லை. காரில் அமர்ந்தபடியே கேரேஜ் கதவை திறக்கவும், பூட்டவும் முடிந்தது. காருக்குள்ளே ரிமோட். அது மட்டுமல்ல... வீடும் சரியான அளவில் வெப்பம் மூட்டப்பட்டு இருந்தது. இணையம் இணைக்கப்பட்டு விட்டாலோ, இவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.
மிக எளிதாக இந்த தொழில்நுட்பத்தை விளக்க வேண்டுமா? வீட்டில் இருக்கும் விளக்கு முதல் விளக்குமாறு வரை மின் சாதனத்தில் இயங்கும் பொழுது அதை இயக்க இணைய இணைப்பும் அதற்கான ஐ. பி. அட்ரசும் கொடுக்கப்படுகிறது. அது தனிப்பட்ட சிம் ஆகவும் இருக்கலாம். ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் நாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் செயல் படுத்தலாம்.’ விளக்கை அணைச்சோமா இல்லையா...’ என்ற கவலையே இல்லை. காலையில் நாம் எழும்போது சூடா டிகாக்ஷன் போட்டு வைக்க, வீட்டுக்குள் திருடன் வந்துவிட்டால் கேமரா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்க என்று பல விஷயங்கள் செய்யலாம்.
வெளிநாட்டில் மிக அதிக வருடங்களாக இந்தத் தொழில்நுட்பம் இருக்கிறது. நம் நாட்டில் இப்பொழுதுதான் வர ஆரம்பித்து உள்ளது. ஹை எண்ட் எனப்படும் உயர் விலை உள்ள மின்சாதனங்களில் இந்த வசதிகளை சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். முக்கியமாக ஏசியையும் மொபைலையும் இணைத்து அதை உலகத்தில் எங்கு இருந்தாலும் செயல்பட வைக்க முடியும். வாஷிங் மிஷின் தோய்த்து தயாராக வைத்து இருக்கும். முக்கியமாக சி.சி.டி.வி.யில் இந்தத் தொழில்நுட்பத்தை காணலாம். அதில் நெட்வொர்க் சாஃப்ட்வேர் மூலம் நம் மொபைலில் இருந்தே இயக்க முடியும்... பேச முடியும்.
இதற்குத் தேவையானவை மூன்று அம்சங்கள்... ஒன்று ரிசீவர். ரிசீவரில்சிம் பொருத்தப்பட்டு அதன் மூலம் மின் சாதனம் இணைக்கப்படும். இதனால் டேட்டா இணைப்பு மூலமாக இன்டர்நெட் இணைப்பு சாத்தியமாகும். அடுத்து மின் சாதனங்களில் சென்சார் பொருத்தப்படும். இரவானால் சென்சார் மூலம் உணர்ந்து அறை விளக்குகள் தானே எரிய ஆரம்பிக்கும். அடுத்து சாஃப்ட்வேர். இதுவே தூரத்தில் இருந்து இயக்க உதவும். பல சாஃப்ட்வேர்கள் வாய்ஸ் கமென்ட் மூலமே உபயோகிக்கும் வசதி உள்ளது. சில நிறுவனங்கள் மாஸ்டர் கன்ட்ரோல் சிஸ்டம் கூட தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். வீடு முழுக்க ஒரே இணைப்பில் வந்துவிடும். தனிப்பட்ட சாஃப்ட்வேர் தேவை இருக்காது. விளக்கு முதல் வாக்குவம் கிளீனர் வரை ஒரே ஆப்பில் பயன்படுத்தலாம்.
என்னென்ன பொருட்கள் தேவை?
சி.சி.டி.வி. முன்பே சொன்னது போல எங்கிருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும். எதையும் கண்காணிக்கும் வசதிக்காகவே இது.
விளக்குகள் Philips Hue Personal Wireless Lighting Home Automation Bridge 2.0 (Apple HomeKit Enabled)
மொபைல் போன் மூலம் வீட்டு விளக்குகளை எங்கிருந்து வேண்டும் என்றாலும் இயக்க முடியும். அமேசானில் 15 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இவற்றைத் தவிர மின் விளக்குகளை இணைத்து ஆட்டோமேஷன் செய்து தர சில தனியார் நிறுவனங்களும் உள்ளன. சாம்சங்கில் உள்ள கதவுக்கான சென்சார் கதவை மூடி திறக்கும் கண்காணிப்பை மிக அருமையாக செய்யும். கேரேஜ் கதவுகளில் பொருத்தி விட்டால் இன்னும் எளிதாக இருக்கும்.
இது இணையம் இணைக்கப்பட்ட கதவு சென்சார்... சாம்சங் தயாரிப்பு. ‘சரி... கதவைப் பூட்டியாச்சா இல்லை... சும்மாதான் சாத்தி இருக்கா... இதை எப்படி அறிவது? யாராவது திறந்தா நமக்கு தெரியுமா? ஆம்... அதுக்கும் வழி இருக்கு. ஹோம் ஆட்டோமேஷன் கதவுகளில் பொறுத்த வேண்டும். யாராவது கதவை திறந்தால் கூட நமக்கு தெரியுமாறு செட் செய்துவிடலாம். இவை ஆட்டோமேட்டிக் பூட்டுகளில் நவீன வகை.
அடுத்து இணையம் இணைக்கப்பட்ட ரிமோட்டில் வேலை செய்யும் ப்ளக் பாயின்டுகள். இதில் எந்த மின் சாதனத்தை இணைத்தாலும், அதை ஆன் செய்யவோ, ஆஃப் செய்யவோ முடியும். ப்ளூடூத் மூலமாகவும் இயங்கும் கதவு பூட்டுகள். செல்போன்களால் செயல்படும் விதத்தில் அமைந்து இருக்கும்.
wifi அடுத்து பிலிப்ஸ் அளிக்கும் சாதனம். இது குழந்தையை பார்த்துக் கொள்ளும். என் தோழி தனியே அமெரிக்காவில் வசித்தார். சமையல் செய்ய அல்லது பாத்ரூம் போக வேண்டும் என்றால் குழுந்தையை தனியாக விட்டுவிட்டு போகணுமே. இது போன்ற ஒருசாதனம் வைத்து இந்தியாவில் இருக்கும் பாட்டியை வரச் சொல்லி, குழந்தையை பார்த்துக்கொள்ள செய்வார். பல இக்கட்டான நேரத்தில் மனிதர்கள் போல கருவிகளும் கை கொடுக்கவே செய்கின்றன. குழந்தை வளர்ப்பாளர்களுக்கு இவை எல்லாம் நவீன வரப் பிரசாதம். போன் மூலம் இயக்க முடிவது மட்டுமல்ல... எந்த அளவுக்கு அறை வெப்பம் தேவையோ அந்தளவுக்கு வெளியில் இருந்தே செயல்பட வைக்க முடியும். ஏசி ஆன் என்று போனில் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக் கதவை திறந்தால் குளு குளு ஜில்ஜில் அறை நமக்காக காத்துக் கொண்டிருக்கும். ஸ்மார்ட் டிவிகள் பற்றி சொல்லவே வேண்டாம். ஐ போன் மூலமாக நம் சீரியலை ரெக்கார்டு செய்யும் டி.வி.கள் கூட உள்ளன. இணையத்துடன் இணைக்கப்பட்ட குளிர் சாதனப் பெட்டிகளும் விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றை எல்லாம் சேர்த்து செயல்பட வைக்கும் சென்ட்ரல், ஹப், அதனுடன் இணைக்கும் சாஃப்ட் வேர், போன் எல்லாமே விற்பனையில் உள்ளன.
போனில் பேசினாலே மாயக்கதவு திறக்கும். வீட்டின் தட்பவெப்பம் சரியாக இருக்கும். காபி மேக்கரில் டிகாக்ஷன். அவனில் சூடு உள்ள பால், மிஷினில் சற்றுமுன் துவைத்த துணிகள், தானியங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளே நுழைந்தால் எரியும் விளக்குகள், நடமாட்டத்தை கண்காணித்து அதற்கு ஏற்ப வீட்டையே சரி செய்யும் சென்சார்கள்... இப்படி ஏராளம். மோட்டார் நீர் ஏற்றி, நீர் ஏறியவுடன் தானே அணையும் தானியங்கி நீரேற்று சாதனங்கள் கூட ஆட்டோமேஷனின் ஒரு வகை. நவீன வீடுகள் அமெரிக்காவில், ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியம் என்பது மாறி, இப்பொழுது அமேசான் மூலமே சாத்தியம் ஆகிவிட்டது. முழு ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டன.
அடுப்பங்கறையில் கண்ணை கசக்கிய காலம் போய், ஸ்மார்ட் போனில் கண்ணால் பேசும் காலம் வந்துவிட்டது! இப்படி எல்லாம் சாத்தியம் செய்து விட்டோம். அடுப்பங்கறையை ஆண்களுக்கும் சாத்தியம் செய்யும் காலம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் முடித்துக்கொள்கிறேன்.பெங்களூரில் வசிக்கும் என்னை, ஒரு வருடத்துக்கு மேலாக உங்கள் வீட்டினுள் வந்து உங்களுடன் பேச வைத்த மிக அழகிய ஹோம் ஆட்டோமேஷன் குங்குமம் தோழியும்தான்!
நவீன வீடுகள் அமெரிக்காவில், ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியம் என்பது மாறி, இப்பொழுது அமேசான் மூலமே சாத்தியம் ஆகிவிட்டது. இந்தியாவிலும் முழு ஆட்டோமேஷன் தொழில் நுட்பங்கள் செயல்பட ஆரம்பித்து விட்டன.
போனில் பேசினாலே மாயக்கதவு திறக்கும். வீட்டின் தட்பவெப்பம் சரியாக இருக்கும். காபி மேக்கரில் டிகாக்ஷன். அவனில் சூடு உள்ள பால், மிஷினில் சற்றுமுன் துவைத்த துணிகள், தானியங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள், உள்ளே நுழைந்தால் எரியும் விளக்குகள், நடமாட்டத்தை கண்காணிக்கும் சென்சார்கள்... இப்படி ஏராளம்.
அடுப்பங்கறையில் கண்ணை கசக்கிய காலம் போய், ஸ்மார்ட் போனில் கண்ணால் பேசும் காலம் வந்துவிட்டது. இனி அடுப்பங்கறையை ஆண்களுக்கும் சாத்தியம் செய்யும் காலம் வந்து விடும் என்ற நம்பிக்கையோடு...
|