ஒரு படி உயர்ந்து நிற்கிறார்!



கல்பனா சாவ்லா விருது - ஜெயந்தி

இதயம் பிளக்கும் கண்ணீர்த்துளிகள்... கன்னங்களில் உருளும் கடைசி முத்தம்... மகிழ்வை வேருடன் இழுத்துச் செல்லும் வலி... ஆறுதல் வார்த்தைகள் அர்த்தம் இழக்கும்  தேம்பல்... இப்படி ஒரு நாள் தன் வாழ்வில் வரவே கூடாது என எல்லா மனிதர்களும் ஏங்கும் நாள்... வேதனைகளும் கண்ணீரும் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும் இடத்தில் பணியாற்றுவது சாதாரண விஷயம் இல்லை. நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்யும் பணியை தொடர்ந்து வருகிறார் ஜெயந்தி.

இதுவரை 2 ஆயிரத்து 800 உடல்களை தகனம் செய்துள்ளார். தனது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக சுதந்திர தினவிழா நிகழ்வில் கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார். சமூக சம்பிரதாயங்களைத் தாண்டி தனது தாய்க்கான இறுதிச் சடங்கையும் இவரே செய்துள்ளார்.

நாமக்கல் கூலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டு குருக்கள், பர்வதவர்த்தினி தம்பதியின் 3 பெண் குழந்தைகளில் கடைக்குட்டி  ஜெயந்தி. பட்டு குருக்கள் கோயில் பணியில் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை பராமரித்தார். முதல் இரு பெண்குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்புடன் திருமணம் முடித்தார். நிறைய படிக்க ஆசைப்பட்ட ஜெயந்தி மட்டும் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் படித்து எம்.ஏ. பொருளாதாரம் முடித்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் படித்து முடித்தாலும், அரசு வேலை கிடைப்பதில் சிக்கல். சிறிய அளவில் சொந்தத் தொழில் தொடங்க நினைத்தார். தனியார் பள்ளிக்கு டிராவல்ஸ் நடத்தத் திட்டமிட்டார்.

கல்லூரி விழாவில் தொகுப்பாளராக மேடையில் அசத்திய ஜெயந்தி, ஆண்கள் கலைக் கல்லூரி மாணவரான வாசுதேவனையும் கவர்ந்திருந்தார். மேடையில் இருந்து இறங்கிய ஜெயந்தியை வாசுதேவன் மனதார பாராட்டினார். பின்னர் இவர்களது டிராவல்சில் இணைந்து வேலை பார்க்க வந்தார் வாசுதேவன். நண்பர்களாக பிசினசில் இணைந்து செயல்பட்ட இரு உள்ளங்கள் வாழ்வில் இணையலாமே என்ற கேள்வி எழுந்தது. தடையானது சாதி. அதையும் தாண்டினார் ஜெயந்தி. வாசுதேவனை கலப்பு மணத்தில் கரம் பிடித்தார்.

நந்தகுமார், நவீன்குமார் என்று இரட்டைக் குழந்தைகள். இப்போது தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி  வாசுதேவன் தனியார் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். உடல்களை தகனம் செய்யும் பணியில் சேர்ந்ததற்காக வீடு, சமூகம், உறவுகள் என ஒதுங்கிப் போனவர்கள், இன்று வியந்து பார்க்கும் அளவுக்கு ஜெயந்தியை தலைநிமிரச் செய்துள்ளது கல்பனா சாவ்லா விருது!

‘‘இரண்டு பெண்குழந்தைகளுக்கு திருமணம் செய்த அப்பா வயோதிகத்தை எட்டினார். படித்து முடித்து அன்பு இல்லம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை. பின் அம்மா நோயில் விழ, அந்த வேலையையும் விட்டு அவரைப் பார்த்துக் கொண்டேன். சொந்தமாக தனியார் பள்ளி யுடன் இணைந்து டிராவல்ஸ் தொடங்கிய காலத்தில் கணவர் வாசுதேவனுடன் கலப்புத் திருமணம் என எப்போதும் ஏதாவது ஒரு எதிர்ப்பை மீறியே வாழ்ந்தாக வேண்டிய சூழல்.

நிதி நெருக்கடி காரணமாக மீண்டும்  வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. கிடைத்த வேலையில் சேர்வது என்று முடிவெடுத்தேன். நாமக்கல் மின் மயானம் அமைக்கும் போது மலர்க்கொடி என்ற பெண்ணும் நானும் இணைந்து தோட்டப்பணிகளுக்கு சென்றோம். மின்மயானம் அமைக்கப்பட்டு தோட்ட வேலைகள் முடிந்த பின், அதற்கு மேல் எங்களுக்கு வேலை இல்லை. உடல்களைத் தகனம் செய்யும் பணியை செய்வதாக நான் சொன்ன போது நம்ப மறுத்தனர். ஒரு மாதம் சம்பளம் கூட வாங்காமல் சடலம் எரிக்கும் பணியைத் தொடர்ந்தேன்.

ஜீவன் போன உடல்களை சிவனின் அம்சமாகவே பார்த்தேன். அதனையும் வழிபாடாகவே ஏற்றுக் கொண்டேன். எனக்கு பயம் ஏற்படவில்லை.  எனது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அந்த வேலை எனக்கே கிடைக்க வழி செய்தது. 2013ல் இருந்து ஆத்மார்த்தமாக இந்தப் பணியைத் தொடர்கிறேன். மின் தகன மேடையின் மேலாண்மைப் பணி, தோட்ட வேலை, உடல் தகனம் என அத்தனை பணிகளையும் கவனிக்கிறேன். ஆரம்பத்தில் இந்த வேலையில் சேர்ந்ததற்காக கணவர் கூட சங்கடப்பட்டார்.

மற்றவர்கள் பேசுவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என அவருக்கு ஆறுதல் சொன்னேன். ஆண்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்று எந்த வேலையும் இல்லை. ஆணை விட பெண்ணால் எந்த வேலையையும் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அதுவும் எனக்கு தன்னம்பிக்கை அளித்தது. பெண் வாரிசுகள் மட்டுமே இருந்த என் குடும்பத்தில் அப்பாவின் இறுதிச்சடங்கின் போது பல்வேறு சிரமங்களைச் சந்தித்தேன். அம்மா இறந்த போது அவருக்கான இறுதிச்சடங்கை நானே செய்தேன்.

அது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். பெற்ற தாய்க்கான இறுதிச்சடங்கு செய்து வழியனுப்பிய போது  குழந்தை பிறப்பின் போது அனுபவிக்கும் வலியை யும் மகிழ்வையும் உணர்ந்தேன். எனது பணிக்காக விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கல்பனா சாவ்லா விருது அனைத்து பெண்கள் மத்தியில் நான் ஒரு படி உயர்ந்து நிற்பது போன்ற உணர்வை தந்துள்ளது’’ என்கிறார் ஜெயந்தி.

ஆண்கள் மட்டும் தான் செய்ய முடியும் என்று எந்த வேலையும் இல்லை. ஆணை விட பெண்ணால் எந்த வேலையும் சிறப்பாக செய்ய  முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

படங்கள்: சுப்ரமணியம்