சிரிக்கும் பூக்கள்



மொபைல் க்ளிக்ஸ்

-பூமதி என்.கருணாநிதி

‘மலர்கள்’ எனச் சொல்லும்போதே ஆனந்தம்! மனதை மயக்காத மலரும்  உண்டோ? அதன் வண்ணங்களும் வடிவும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். மனதை உற்சாகமாக வைக்கும் சக்தி மலர்களுக்கு மட்டுமே உண்டு!  ‘‘இருக்கும் இடத்தில், வெளியில், பயணங்களில் என எங்கும் காணுமிடமெல்லாம், வண்ண வண்ணமாக மலர்கள் மலர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும். அவை கைகாட்டி, தலையாட்டி நம்மை அழைப்பது போலவே இருக்கும். ஒரு நொடியாவது நின்று பார்த்து விட்டு செல்லத் தூண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனில் படமாக மாறிவிடும். மனம் சோர்ந்திருக்கும் வேளைகளில் உற்சாகமூட்டுபவை மலர்களின் படங்களே’’ என்கிற பூமதி கருணாநிதி யின் மொபைல் போன் கேமராவில் பூத்த மலர்களே இப்பக்கங்களை அலங்கரிக்கின்றன. ‘‘புகைப்படக்கலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மலர்களைப் படம் பிடித்துப் பிடித்து அதில் ஆர்வம் உண்டாகியது. அதிலும் முகநூல் நண்பர்களின் படங்கள் அவ்வளவு அழகாக இருக்கும். அதைப் பார்த்தே என் படங்களையும் பதிய ஆரம்பித்தேன். உண்மையில் ஊக்கமளித்தவர்கள் முகநூல் நண்பர்கள்தான்!’’ என்கிற பூமதி தன் வீட்டுத் தோட்டத்து மலர்களையே அதிகம் பதிகிறார்.

‘‘நாமே செடி வைத்து அவை வளர்ந்து பூ பூக்கும் தருணங்களில் நம் மனதிலும் அளவில்லா ஆனந்தம் பூக்கும். மலர்களின் அழகை இருந்த இடத்தில் இருந்தே வித்தியாசமாக படம் பிடிக்கலாம். ஆனால், காற்றுக் கிறுக்கனை கண்டால் பூக்கள் தலையாட்ட ஆரம்பித்து விடும். அதிலும், படம் பிடிக்கலாம் என்று நாம் செல்லும்போது எங்கிருந்துதான் காற்று வருமோ தெரியாது. அப்புறமென்ன காற்றோடும் பூவோடும் ஒரு சிறு போராட்டம்தான்.

என்வீட்டு ஜனங்களின் கேலிகளுக்கிடையில் காலை 6 மணிபோல செல்போனும் கையுமாக செடிகளுக்கு இடையில் என்னைப் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செடி எனக்காக ஒரு புதிய பூவை சுமந்துகொண்டு காத்திருக்கும். ஒவ்வொரு பூவும் என்னோடு பேசுவது போலவே தோன்றும். புதுவிதமான பூக்களின் ரகங்களை எங்கு பார்த்தாலும் வாங்கி வந்து எப்படியாவது ஒரு இடத்தைப் பிடித்து நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்துவிடுவேன். அவையும் நான் ஊற்றும் நீருக்கு நன்றிக்கடனாக அழகிய பூக்களைத் தரத் தவறுவதில்லை. ஒருநாளில் ஒருதடவையாவது எல்லாவற்றையும் பார்த்தால்தான் எனக்கு நிம்மதி.

மலர்ந்து, அழகை அள்ளித் தெளித்து, மணம் வீசி, வாடி மறைந்து வாழ்க்கைத் தத்துவத்தையே இந்த மலர்கள்தான் எவ்வளவு எளிமையாக உணர்த்துகின்றன. மனதினை மயக்கும் மலர்கள் பேரானந்த வரம்’’ என்று பூ புராணம் பாடுகிற பூமதியின் பெயரிலேயே பூ உண்டே!

காற்றுக் கிறுக்கனை கண்டால் பூக்கள் தலையாட்ட ஆரம்பித்துவிடும். அதிலும், படம் பிடிக்கலாம் என்று நாம் செல்லும்போது எங்கிருந்துதான் காற்று வருமோ தெரியாது!

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு செடி எனக்காக ஒரு புதிய பூவை சுமந்துகொண்டு காத்திருக்கும். ஒவ்வொரு பூவும் என்னோடு பேசுவது போலவே தோன்றும்.