ஆயுதபூஜை அமர்க்களம்



ஃபேஸ்புக் ஸ்பெஷல்

அப்பா இறந்த பிறகு அம்மா மங்கை, என்னையும் தங்கையையும் வேற வேற ஊர்ல  கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க... அம்மா கூட இப்ப துணைக்கு இருக்கிறது  எங்க பாட்டி மட்டும்தான்(அப்பாவோட அம்மா, 85 வயசு). பாட்டிக்கு இவ்ளோ வயசானாலும் முடிஞ்ச வேலைகளை அம்மாவுக்குப் பண்ணிக் கொடுப்பாங்க. அம்மா சொன்னாக்கூட பாட்டி கேட்காம, ஏதாவது கூடமாட ஒத்தாசை பண்ணிட்டேதான் இருப்பாங்க.

அன்னைக்கு ஆயுதபூஜைங்கறதால நாங்களும் தங்கை வீடும் குடும்பத்தோட அம்மா வீட்டுக்குப் போயிருந்தோம். நாங்க எல்லாருமே, வீட்ட க்ளீன் பண்ண, ஒட்டடை அடிக்கறதுனு ஆளுக்கொரு வேலையைப் பார்த்தோம். அம்மா பூஜைக்கு பொருட்கள் வாங்கப் போய்ட்டு வந்ததுமே, பாட்டியை பார்த்து செம கோவத்துல பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க... பாட்டி விஷயம் என்னன்னே தெரியாமல் முழிச்சபடி நிற்க, அதுக்குள்ள நான், தங்கை எல்லாரும் ஓடிப் போய் பார்க்க...

எங்களுக்கோ செம சிரிப்பு... எங்களோட லேமினேசன் செஞ்சு வைச்ச கல்யாண போட்டோக்கெல்லாம் சந்தனம், குங்குமம் வைச்சு, பூவெல்லாம் போட்ருந்தாங்க பாட்டி... அம்மா போய் பூவெல்லாம் பிய்த்து எறிஞ்சு, பொட்டெல்லாம் அழிச்சாங்க... ‘வயசானவங்கதானே நிதானம் இல்லாம ஏதோ பண்ணிட்டாங்க... விடுங்கம்மா’னு சமாதானம் பண்ணினோம். இப்ப வரை ஆயுத பூஜைன்னாலே இந்த ஞாபகம் வந்து வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பிச்சுடுவோம்!

விருப்பம்

அதிகாலையில் அலாரம் அடிக்கும் முன்பே எழுந்து அதை அணைக்க வேண்டும், இல்லையெனில் அது சத்தமிட்டு என் கணவரின் உறக்கத்தை கெடுத்து விடும். தினமும் காலையில் என் மாமியாருக்கு காபி கொடுத்துதான் அவர் துயிலை கலைக்க வேண்டும். நடைப்பயிற்சிக்கு என் மாமனார் கிளம்பும் முன்பே வாசல் தெளித்து மாக்கோலம் இட்டிருக்க வேண்டும். துள்ளித் திரிந்து கொண்டு இருக்கும் என் நாத்தனாரை, அவள் வேறு வீடு செல்லும் வரை, என் மூத்த மகளாக நினைத்து சீராட்ட வேண்டும்.

எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் வீட்டுவேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டும். யார் மனதையும் நோகடிக்காது என் அம்மா, அப்பா வளர்ப்பை உறவுகள் போற்ற வாழ வேண்டும். எனக்கும் விருப்பம்தான் இப்படி எல்லாம் நடந்து கொள்ள... எல்லாம் சரி... ஆனால், இப்படி நடக்க வேண்டுமெனில் முதலில் எனக்கு திருமணம் ஆக வேண்டுமே!!!

#‎முதிர்கன்னி‬