மாற்றுத் திறனாளிகள் வாழ்வை மாற்றுகிறார்



சிறந்த ஆட்சியர் விருது - மலர்விழி

வாழ்வை வலிகளோடு நகர்த்துபவர்களுக்கும், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி அவர்களது வாழ்வில் அரசுத் திட்டங்களால் ஒளியேற்றிய உன்னத சேவைக்காக சிறந்த ஆட்சியராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி.

திருப்பூரைச் சேர்ந்தவர் மலர்விழி. சுப்ரமணியம், சுப்பாத்தாள் தம்பதியின் மகள். மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள். ஒரு சகோதரர் மருத்துவம் முடித்துவிட்டு பஞ்சாபில் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளார். மலர்விழி எம்.எஸ்சி. அக்ரி என்டமாலஜி படித்துள்ளார். 1996ம் ஆண்டில் காவல் துறையில் டி.எஸ்.பி. பணி, 97ம் ஆண்டில் ஒரிசாவில் ஐ.பி.எஸ்., ரெவின்யூ சர்வீசில் ஐ.ஆர்.எஸ். முடித்துள்ளார். 2001ல் ஸ்டேட் சிவில் சர்வீசில் இணைந்து பல்வேறு பதவிகளைக் கடந்து, பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று சிறந்த சேவையைத் தொடர்கிறார். கணவர் சரவணன் ஈரோட்டில் பிசினஸ் செய்து வருகிறார். அமுதா, அன்புச் செல்வன் என இரண்டு குழந்தைகளின் தாய்.

‘‘சிவகங்கை பின்தங்கிய மாவட்டம். மூடநம்பிக்கைகள் குறையாத மக்கள். நாட்டுமருந்து, சிறகு போடுவதை நம்புகின்றனர். நோய் வந்தால் மருத்துவமனைக்குச் செல்லவும் கூட தயங்குகின்றனர். அறியாமையின் பிடி இங்கு இறுக்கமாவே உள்ளது. ஒதுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பற்ற மக்கள் மத்தியில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்பது எனக்குப் புரிந்தது. முதல் விஷயமாக... மூடநம்பிக்கை தாண்டி தாய் சேய் இறப்பை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு பணிகளில் தீவிரம் காட்டினேன்.

இரண்டாவது... இங்குள்ள 22 திருநங்கைகளுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத் தருவது. திருநங்கைகளுக்கு ரூ.8.5 லட்சத்தில் வீடுகட்டித் தர ஏற்பாடு செய்தேன். வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கச் செய்தேன். சுய வேலைக்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்பட்டது. கார்த்திகா என்ற திருநங்கைக்கு சமூகப்பணி அலுவலர் பணியிடம் ஏற்படுத்திக் கொடுத்தேன். இதன் மூலம் திருநங்கைகள் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

மூன்றாவதாக... இப்பகுதியில் உள்ள நரிக்குறவ இனத்தை ேசர்ந்த மக்களுக்கும் 300 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடரவும் கவனம் செலுத்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளில் எம்.ஆர். என்று கூறப்படும் மனவளர்ச்சி குன்றிய நிலையில் புறக்கணிக்கப்பட்ட 37 பேர் கருணாலயா இல்லத்தில் பராமரிக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் செய்ேதன். மாற்றுத் திறனாளிகளில் தவழ்ந்தே செல்பவர்கள் நிலை மோசமாக உள்ளது. அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடக்கப்படுகின்றனர். வீட்டிலும் பாரமாக நினைத்து ஒதுக்கப்படுவதால், வாழும் நாட்கள் ஒவ்வொன்றுமே கொடுமையானது. அவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தும் வகையில், தங்கவும், தொழில் பயிற்சி பெறவும் பைய்யூர் அருகில் ₹20 லட்சம் செலவில் மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் தலைநிமிர்ந்து வாழ தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.  தயாரிக்கும் பொருட்கள் மார்க்கெட்டிங் செய்யப்பட்டு, உழைப்புக்கான வருவாய் எந்தத் தடையும் இன்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வும் மகிழ்ச்சியால் நிறைய வேண்டும் என்பதே எனது கனவு. அரசுத் திட்டங்கள் முழுமையாக அவர்களை அடைய நான் ஒரு கருவியாக இருக்கிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவருமே நான் நினைப்பதை செயல்படுத்துவதில் அதிக வேகம் காட்டுகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்துக்காக ஒரு விஷயத்தைச் செய்யும்ேபாது, மக்கள் முதல் அரசு அலுவலர் வரை அனைத்து நிலைகளிலும் ஈடுபாட்டை பார்க்க முடிகிறது. அரசின் திட்டம் கடைசி மக்களையும் முழுமையாக சென்று அடைய பலரும் உழைத்துள்ளனர். அவர்களின் பிரதிநிதி யாகவே இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன். சிறந்த கலெக்டருக்கான விருதின் மூலம் என்னையும், எனது மாவட்ட மக்களையும் பெருமைப்படச் செய்த முதல்வருக்கு எனது நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்’’ என்கிறார் கலெக்டர் மலர்விழி.