சூப்பர் சீனியர்- காமாட்சி மஹாலிங்கம்

* நான் ஒரு மனுஷியாக...
85 வயதில் இருக்கும் நான் ஏனோ தெரியலை, ஏழு வயது முதலே மிகவும் பொறுப்பறிந்த ஒரு பெண்ணாகவே இருந்து வந்திருக்கிறேன். அனுசரித்துப் போகும் தன்மைக்காகவே பல ஊர், பல பாஷை, பல கலாசாரம், பல சுபாவமுள்ள மனிதர்கள், யாவரும் நல்லபடியாக கொண்டாடும் ஒரு மனுஷியாக இருக்கிறேன்.

* மனைவியாக...
குடும்பப் பொறுப்புகளே தெரியாத ஒரு அப்பாவி மனிதரைக் கைப்பிடித்து, குறைந்த வருமானத்தில், வருமானத்திற்குத் தக்க குடும்பம் நடத்தி, இன்று வரை பலன்கள் கண்டுள்ள ஒரு மனைவி நான்.

* தாயாக...
நால்வர். கிராமத்தில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகளின் இங்கிலீஷ் மீடியம், ஹிந்தி, நேபாளி என எந்த மொழியானாலும், நானும் தெரிந்து கொண்டு அவர்களுக்கும் உதவியது பெரிய விஷயம். எல்லோரும் படித்து முன்னேறி, இன்று நல்லபடியாக இருப்பது பசுபதி நாதர் கொடுத்த அருள். பிள்ளைகளின் மனதிற்கிணங்க, எளிமையான முறையில் நட்பு, உறவுகள் சூழ மணமுடித்து வைத்து ஒரு தாயின் கடமையை நிறைவேற்றினேன்.

* படிப்பு...
என் தகப்பனார் ஒரு தமிழ் பண்டிதர். என் எழுத்திற்கு அப்பாதான் ஆசான். தபாலில் வரும் சுதேசமித்திரன், தின, வாரப் பதிப்புகளை படிக்கும் பழக்கம் அன்று முதல் இன்றுவரை உள்ளது. எட்டாம் வகுப்பு முடிய  படித்தாலும், பாட்டு, நடிப்பு, மேடைப் பேச்சுகள், கைவேலை, தோட்ட வேலை எதிலும் முன்னணி. போதித்த ஆசிரியர்கள் மறக்க முடியாதவர்கள்.

* இசை...
வளவனூரில் படிக்கும்போது அம்மிணி மாமி என்பவரிடம் ராம நாடகக் கீர்த்தனைகள் மற்றும் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டேன். மனது சரியில்லாத  நேரத்தில் கீர்த்தனங்களைப் பாடினால் அமைதியாகிவிடும்.

* சமையல், பிற கலைகள்...   
சின்ன வயதில் குறிப்புகள் பார்த்து எதையாவது செய்வேன். ‘சொல்லுகிறேன்’ என்ற பிளாக்கை ஆரம்பித்து, ஆறு ஏழு வருடமாக பெரும்பாலும் சமையல், குறிப்புதான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். இப்போதும் அதுதான் என் உற்ற தோழி. க்ரோஷா, எம்பிராய்டரி, க்ராஸ்டிச், நிட்டிங், பெரிய கோலங்கள், கைவேலைகள் எல்லாம் தெரியும் ஒரு காலத்தில்.

* அலுவலகம்...
பதிமூன்று வயதில் கம்பல்சரி எஜுகேஷனில் டீச்சராக வேலைக்குப் போய்விட்டு நோட்ஸ்ஆஃப்  லெஸன் எழுதவும், தோராயமாக பசங்களுக்கு டேட் ஆஃப் பெர்த் எழுதவும் ரெக்கார்ட் ஷீட் எழுதவும் பழகிக் கொண்டேன். டீச்சர் என்று யாராவது சொல்லும்போது  வெட்கமாக இருக்கும்.

* நேர நிர்வாகம்...
இருபத்தெட்டு வருடங்களாக எங்கு உதவி தேவையோ அங்கு ஆஜர். இருவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்லை. அயல்நாட்டு வாழ்வு, எல்லாமே கரெக்ட்டா, டைமிற்கு தயாராகும் ஒழுக்கம்.

* எழுதியதில் பிடித்தது...
‘சில நினைவுகள்’ என்ற நிஜ உறை Free books டீமால் வெளியிடப் பட்டிருக்கிறது. அன்னையர் தினம் என்ற என் அம்மாவின் நினைவுகளை முப்பது பகுதி களாகச் ‘சொல்லுகிறேன்’ பிளாக்கில் எழுதியது எனக்குப் பிடித்தமானது.

* பிடித்த பெண்கள்...
என்னை  விட பத்து வயது சிறியவளானாலும் ஆத்மஞானம் கற்கும் அவளின் உதவிகளும்,  பேச்சும் தோழியான ‘கங்கா கார்க்கி’ என்ற நேபாளி டீச்சர். என்னுடைய, ‘சொல்லுகிறேன்’ பிளாக்கின் மூலம் நட்பைப் பெற்ற மதி ரஞ்ஜனி மற்றும் வலையுலக நட்புறவுகளும் மறக்க
முடியாதவர்கள்.

* இயற்கை...
பணிநிமித்த பல ஊர் வாசமும், ரிட்டையரான பிறகு கடைசி மகனுடன் ஜெனிவா வாழ்க்கை என பலதரப்பட்ட அனுபவங்கள், எல்லாவற்றையும் நேரில் பார்க்கும் சுகம். ஆஹா!!! விலை மதிப்பற்ற இயற்கைக் காட்சிகள்... சுவிஸ்லேயே பத்து வருஷங்கள். அத்தனை இயற்கை காட்சிகளும் என் பார்வைக்கு வசப்பட்டன.

* மனிதர்கள்...
இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முந்தியவள் நான். காரியம் ஆக வேண்டுமென்றால்தான் உறவு. மனிதநேயம் குறைந்து போய்விட்டது. உறவுகள் வேண்டாம். சினேகிதம் ஓரளவிற்கு மட்டும் போதுமானது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள்.

* பிறந்த ஊர், சொந்தங்கள்...
ஒரு அழகிய கிராமம். இப்போது எல்லோருக்கும் குலதெய்வத்தை ஆராதிக்கும் ஒரு புண்ணிய பூமியாக மாறி விட்டது. கல்யாணம்  மற்ற விசேஷங்களில் சொந்த பந்தங்களோடு கூடும்போதும், ஊரைப் பார்த்தாலும் வரும் உற்சாகம்.

* நகைச்சுவை நிகழ்ச்சிகள்...
காட்மாண்டு சென்ட்ரல் ஸ்கூல். பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில், ரப்பர், நோட்புக், கைக்குட்டை கொடுத்து அனுப்புவதில்லை என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டே போனார்–்கள். எப்படி பதில் சொல்வது என்று யோசிக்கும் போது, இது இரண்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கானது என்று கன்னடத்தில் ஒருவர் சொன்னார். என் பிள்ளையோ பிளஸ்டூ. எல்லோருக்கும் சிரிப்பு. இதே மாதிரி பெண்ணின் பிரசவத்திற்காக மருத்துவமனை போனால், நான்தான் கர்ப்பிணி என்று என்னை சோதிக்க வந்து விட்டார்கள். இது நேபாளத்தில் நடந்தது. சிரித்து மாளவில்லை.

* ஃபேஸ்புக் கற்றதும், பெற்றதும்...
இந்த வயதில் காமாட்சி ஃபேஸ் புக்கில். என் உறவினர் மத்தியில் இதுவே என்னை புகழக் காரணமாக இருந்தது. இழந்த உறவுகள், சிநேகங்கள், புத்தம் புதிய விஷயங்கள், நம் ஆர்வங்களைப் பிறர் அறியச் செய்வது என பல்வேறு நன்மைகள். நல்ல கோணங்களில் பார்த்தால் நல்லதையே நினைக்கத் தோன்றுகிறது. பக்குவத்துடன், ஒருவித எல்லையுடன் உபயோகிக்க, நல்ல மருந்து.

* புகைப்படக்கலை...
அமெரிக்காவிலுள்ள பேரன் டிஜிட்டல் கேமரா வாங்கிக் கொடுத்தான். தேர்ந்த கலைஞரில்லை. என்வரையில் விஷயங்களை பகிர இந்தக் கலை உதவுகிறது.

* இளைஞர்களுக்கு...
வயதான காலம் என்றும் ஒன்று வரவுள்ளது. நமக்கே என்ற வீடு, மெடிக்கல் பாலிஸி, தாராளமாக செலவு செய்யும்படியான சேமிப்பு, மனோ
தைரியம் இவை யாவும் நமக்கு அவசியம். வயதானவர்களை நேசியுங்கள். அவர்களுக்கென்ற ஒரு மனமும் உண்டு.

* குங்குமம் தோழி இதழ் பற்றி...
நல்ல இதழ். அவ்வப்போது இணையத்திலும் படிப்பேன். இல்லாத விஷயமே இல்லை. குழந்தைகள் பெரியவர்களான பின், தனித்திருக்க அவசியம் நேரிடின் சமூக சேவை மூலம் எவ்வளவு நிம்மதி பெறலாம் என்பதைக் குறித்தும் எழுதினால் வருங்காலத்திற்கு உதவும் என்பது என் பூரண நம்பிக்கை.