பெண்கள் தினத்தை கொண்டாடாதீர்கள்!



சுமதிஸ்ரீ

அமெரிக்காவின் சான் ஓசே நகரம். அமெரிக்க வாழ் தமிழ் உறவுகளோடு ‘பாபநாசம்’ படம் பார்த்து விட்டு, வெளியே வருகிறேன். நான் தங்கியிருக்கும் இடத்திற்கு என்னைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு, இளம்பெண் ஒருத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அமெரிக்காவில் பெண்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஒன்றரை மாத அமெரிக்கப் பயணத்தில் என்னைப் பல்வேறு இடங்களுக்கு காரில் அழைத்துப் போனவர்கள் பெண்களே.



இருந்த போதும் என்னை விட மிகச்சிறிய பெண் ஆகையால், ‘என்னடா... பத்திரமா கொண்டு போய் சேர்த்துடுவியா’ என சிரித்துக் கொண்டே கேட்டேன். வேகமாக ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் மாட்டியவள், ‘சீக்கிரம் ஏறுங்கக்கா... ம்...’ என்ற போது, குரல் கடினமாக மாறியிருப்பதை உணர்ந்தேன். முகத்தில் சிரிப்புக்குப் பதில் ஒரு கடுப்பு இருந்தது. இதென்ன... இவ்வளவு நேரம் நன்றாகத்தானே பேசினாள் என்ற குழப்பத்துடன் காரில் ஏறினேன். கார் கிளம்பி சில நிமிடங்கள் ஆனதும் உஃப் என பெருமூச்சு விட்டவள், ‘அக்கா... நம்ம கார் பக்கத்துல நாலு பசங்க நின்னாங்கள்ல... தமிழ் பசங்க... நல்ல வேளை டக்னு கிளம்பிட்டோம். இல்லன்னா, ரொம்ப அசிங்க அசிங்கமா கமென்ட் அடிச்சு கிண்டல் பண்ணுவாங்க. அமெரிக்க பசங்க பொண்ணுங்களை கிண்டல் பண்ண மாட்டாங்க. அது சட்டப்படி குற்றம். தமிழ்நாட்டில் இருந்து வர்ற பசங்கதான் தமிழ்ப் பொண்ணுங்களை ரொம்ப கிண்டல் பண்ணி பேசுவாங்க’ என்றாள்.
தூர தேசத்தில், தமிழச்சிகளுக்கு ஒரு ஆபத்து எனில், ‘தமிழன்’ என்று மார்தட்டிக் கொள்கிற தமிழ்நாட்டு இளைஞர்கள் தானே காப்பாற்ற வேண்டும்? மாறாக, அந்நிய மண்ணில் படிப்புக்காகவோ, வேலை நிமித்தமாகவோ சென்ற பெண்களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களால்தான் ஆபத்து. என்ன விந்தை...

இந்த செய்தியை வாஷிங்டன் தமிழ் சங்க நிர்வாகிகளுடன் நான் வருத்தப்பட்டு பகிர்ந்து கொண்ட போது, ‘அந்தப் பசங்க இப்பதான் இந்தியாவிலிருந்து வந்திருப்பாங்க. 6 மாசம் ஆச்சுன்னா, அமெரிக்கா அவங்களை மாத்திடும். பெண்களை மதிக்க கத்துக்குவாங்க’ என்று சொன்னார்கள். பெண்களை மதிக்க அமெரிக்காதான் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கற்றுத் தர வேண்டுமா? ‘தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு’ என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோமே... என்ன தான் தமிழனின் தனி குணங்கள்? பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ‘திணைமாலை நூற்றைம்பது’. அந்த நூலின் 89வது பாடலில், இப்படி ஒரு வரி வருகிறது. ‘வெம்சுடர் அண்ணானை யான் கண்டேன்...

கண்டாளாம் தண்சுடர் அன்னாளைத் தான்’ நம் தமிழ்நாட்டில் ‘உடன்போக்கு’ என்ற ஒன்று வழக்கத்தில் இருந்தது. காதலிக்கும் ஆணும் பெண்ணும், தங்கள் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனில், வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொள்ளும் சுதந்திரத்தைத் தமிழ் சமூகம் அளித்திருந்தது. இப்படி திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு, காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு ‘உடன்போக்கு செல்லுதல்’ என்று பெயர் (இன்று நாம் ஓடிப்போதல்னு மாத்திட்டோம்!). அப்படி, உடன் போக்கு சென்ற மகளை தேடிக்கொண்டு வருகிறாள் ஒரு தாய். எதிரே ஒரு கணவனும் மனைவியும் வருகிறார்கள். அவர்களிடம், அந்த தாய், ‘என் மகளையும் அவள் காதலனையும் வழியில் எங்காவது பார்த்தீர்களா’ என வினவ, அதற்கு அந்த ஆடவன் சொன்ன பதில்தான் அது. அதாவது, சூரியனைப் போன்ற ஒரு ஆடவனை (மட்டும்) நான் பார்த்தேன். நிலவு போன்ற பெண்ணை (மட்டும்) என் மனைவி பார்த்தாளாம்.

கணவன்-மனைவிக்கு எதிரே ஆணும் பெண்ணுமாக இருவர் வருகிற போது, ஆணை மட்டுமே, ஆண் பார்க்கிறான். பெண்ணை மட்டுமே பெண் பார்க்கிறாள். இதுதான் தமிழரின் தனிக்குணம். இந்த பெருமைமிகு பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் ஒரு பக்கம் ‘தமிழன்டா’ என பெருமை பேசிக்கொண்டே, இன்னொரு புறம் பெண்களை பகடி செய்கிறார்கள். வார்த்தைகளாலேயே அவளைதுயிலுரிக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்த சான் ஓசே நகரத்தில்தான், ஃபேஸ்புக், கூகுள், யூட்யூப், ஆப்பிள் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் இருக்கின்றன. நான் அந்த அலுவலகங்களுக்குச் சென்று பார்த்து வந்தேன். அந்த இளைஞர்கள் இந்த நிறுவனங்களில் ஏதோ ஒன்றுக்குத்தான் பணிக்கு வந்திருக்க வேண்டும். அப்படியெனில், அவர்கள் எவ்வளவு படித்தவர்களாக இருக்க வேண்டும்? எத்தனை படித்தும் என்ன? ‘பெண் மனம் நோகும் படி பகடி செய்வது தவறு... அநாகரிகம்’ என நம் கல்வி நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தரவே இல்லையா?

பேருந்தில், ரயிலில் நான்கைந்து ஆண்கள் இருக்க, அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால், சாலைகளில் பல ஆண்கள் நின்று பேசிக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு பெண் அங்கே கடந்து செல்ல நேர்ந்தால், நிச்சயமாக அந்த பெண் அந்த ஆண்களின் பகடிக்கு ஆளாவாள். பெண் என்றாலே ஏளனத்திற்குரியவள். அப்படி அவளை பகடி வதை செய்வதுதான் ஆண்மை என்றே நம் இளைஞர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். நான் மாணவியாக இருந்த போது, 4 பேர் சேர்ந்து பள்ளிக்குப் போய் வருவோம். வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு, நாங்கள் போகும் போது, சினிமா பாடல்கள் பாடி கிண்டல் செய்வார்கள். அவர்களின் தொல்லை எல்லை மீறிய போது, பெற்றோரிடம் சொல்ல முடிவெடுத்தோம். எங்கள் குழுவில் ஷாஜிதா என்ற தோழியும் இருந்தாள். ‘எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, என்னை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டாங்க. நான் வீட்ல சொல்ல முடியாது’ என, அவள் பின்வாங்க, மற்ற மூவரும் வீட்டில் விஷயத்தைச் சொன்னோம். மறுநாள், ‘உன் வீட்ல என்னடி சொன்னாங்க?’ என ஒருவரை ஒருவர் விசாரிக்கையில், எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரிதான் சொல்லி இருந்தார்கள். ‘நீங்க ஏன் அந்த பாதையில் போறீங்க... வேற பாதையில போக வேண்டியதுதானே?’

20 வருடங்கள் கழித்து, இன்று என் மாணவி சொல்கிறாள்... ‘இந்தப் பசங்களுக்கு பயந்துகிட்டே வேற ரூட்ல போறேன் மேம்...’ ஒரு தலைமுறை கடந்தும், ‘நீ வேற பாதையில் போ... பசங்க கிண்டல் பண்ணினா நீ பேசாம இரு’ என்றே முந்தைய தலைமுறை பெண்களுக்கு சொன்னதைப் போலவே, இந்த தலைமுறைப் பெண்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ‘ஆம்பளப் பசங்க அப்படித்தான் இருப்பாங்க’ என, சென்ற தலைமுறை ஆண்களை சொன்னது போலவே, அவர்களின் மகன்களை சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஜல்லிக்கட்டுக்குத் தடை என்றதும், ‘தமிழன்டா’, ‘வீரம்டா’, ‘எங்களை யார் தடுக்க முடியும்’ என்றெல்லாம் கொதித்தெழும் இளைஞர்கள், ‘பெண்களை மதிப்பதுதான் தமிழனின் தனி குணம்... அதன் மூலமே தமிழன் என பெருமைப்பட முடியும்’ என்பதை சிறிதேனும் உணர வேண்டும்.

ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடுவது சம்பிரதாயமான ஒன்றாக மாறி விட்டது. பெற்றோர்கள் தினத்தை பிள்ளைகள்தான் கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் தினத்தை மாணவர்கள்தான் கொண்டாடி ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். குழந்தைகள் தினத்தன்று பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு பரிசுகள் கொடுத்து கொண்டாடுகிறார்கள். அப்படியானால் பெண்கள் தினத்தை யார் கொண்டாட வேண்டும்? ஆண்கள்தான் கொண்டாட வேண்டும்...

இல்லையா? இங்கோ, பெண்களே கேக் வெட்டி, கோலப் போட்டி, சமையல் போட்டி நடத்தி(?) பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம். எனினும், ஆண்கள் பெண்கள் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்பதே என் கருத்து. ஒரு கவிதையில் அப்துல் ரகுமான் சொல்வார்... ‘குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட்டு விட்டு குழந்தைகளை கொண்டாடுங்கள்’ என்று. அது போலவே, ஆண்களே...  நீங்கள் பெண்கள் தினத்தை கொண்டாட வேண்டாம்... பெண்களை கொண்டாடுங்கள்!

பின் குறிப்பு... பெண்மையைப் போற்றுகிற, பெரிதும் மதிக்கிற பல ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களை அன்றி, பெண்களை பகடி செய்து மகிழ்கிற ஆண்களை மட்டுமே இக்கட்டுரையில் கூறி உள்ளேன்.

பெண்களை மதிப்பதுதான் தமிழனின் தனி குணம்... அதன் மூலமே தமிழன் என பெருமைப்பட முடியும்!