காற்றில் நடனமாடும் பூக்கள்



நண்பர்கள் சூழ் உலகம்

‘‘நீ உன் நண்பனைப் பற்றிச் ெசால். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்ற பொன்மொழி நட்பு என்பது ஒருவரின் ஆளுமையை எந்த அளவிற்கு மாற்றியமைக்கக்கூடியது, மனதில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது என்பதையே குறிப்பிட்டுச் சொல்கிறது. கழுதைக் குட்டிகளோடு பழகிய சிங்கக்குட்டியும் குணத்தளவில் கழுதைக்குட்டியாகவே மாறிவிட்ட கதையும், நட்பின் பாதிப்பையும் வல்லமையையும்தான் நமக்கு மறைமுகமாக பாடம் புகட்டுகிறது.



வள்ளுவப் பெருந்தகையை விட, நட்பை அறுதியிட்டு, இலக்கணப்படுத்தி, தெளிவுறுத்திய நல்லாசான் ஒருவரை நாம் பார்த்துவிட முடியாது... படித்து விடவும் முடியாது. ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை...’ எனத் தாய்மையை போற்றிய வள்ளுவர். ‘அலையத்து முந்தி இருப்பச் செயல்’ என தந்தையின் கடமையைச் சொன்ன வள்ளுவர், உறவுகள் பற்றி எழுதியதை விடவும், நட்பைக் குறித்தே அதிகம் எழுதிஉள்ளார். திருக்குறளில் ‘தாய்மை’, ‘தந்தைமை’ என்றெல்லாம் அதிகாரங்கள் ஏதும் இல்லை. ஆனால், நட்பு, நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு என்று, 40 குறட்பாக்களை நட்பிற்காக மட்டுமே எழுதியுள்ளார்.

‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு’

இப்படி நட்பின் மேன்மையை வள்ளுவரைவிட, மேன்மையாக இனி யார் சொல்லக்கூடும்? யார் எழுதக்கூடும்? இடுப்பிலிருக்கும் துணி நழுவும் போது, மூளையின் ஆணை இல்லாமலே தானே அனிச்சையாகச் சென்று அவிழ்ந்த துணியை கீழே விடாமல் பிடித்து மானத்தைக் காக்கும் கை போல இருக்க வேண்டும் நட்பு என்கிறார். இது மிகவும் முக்கியமான மெய்ப்பொருள் உடைய குறள். இக்குறள் திரும்பத் திரும்ப சொல்லப்படுவதாலோ என்னவோ முக்கியமற்றது போல ஆக்கப்பட்டு விட்டது.

சென்ற நூற்றாண்டின் இறுதியிலேயே, அன்பு, காதல், புரட்சி, மாற்றம் என நீர்த்து, வலுவிழந்து பொருள் இழந்த சொற்களோடு, நட்பும் இப்போது சேர்ந்து கொண்டது. இப்போது உண்மையான, நேர்மையான நல்ல நட்பு கிடைப்பது, அத்தி பூப்பது போல அதிசயமாகவும் ஆச்சரியமானதாகவும் ஆகிவிட்டது. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. ஆனாலும், ‘ஒரு நண்பனின் மரணத்தை விடவும் கொடியது, ஒரு நட்பின் மரணம்’ என்று எப்போேதா படித்த புதுக்கவிதை வரிகள் என் நெஞ்சை விட்டு நீங்காது உள்ளது. நட்பு, நீலச்சாயம் வெளுத்துப்போன நரி போல, என் எதிர் நிற்கும்போது, நட்பு குறித்த எனது நம்பிக்கைகளுக்கு, துரோகம் இழைக்கப்படும் போதெல்லாம்...

‘யார் யாரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சமுண்டு
பால்போல கள்ளும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நீயென்னக் கள்ளா பாலா
நீ சொல்லு நந்தலாலா’

என, மறைந்த கவிஞர் வாலியின் பாடலை என் மனம் மௌனமாகப் பாடிக் கொள்ளும். அதே நேரத்தில் ‘உன் நண்பனை அளவோடு நேசி. ஒரு நாள் அவன் உன் பகைவனாகலாம். உன் எதிரியை அளவோடு வெறு. ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்’ என்ற கீதையின் வாசகமும் ஏதோ எச்சரிக்கை சொல்வது போல, என் நினைவிற்கு வந்து போகும்.

நட்பின் தாக்கம் அதிகமாக உள்ள பருவம் பதின்பருவத்தினரே. இவர்களுக்கு வீடு, பெற்றோர், சமூகம், உறவினர் எல்லாமே, பெரிய வெற்றிடங்களாகவும், நண்பர்கள் மட்டுமே முழு உலகமாகவும் தெரிவர்... உணர்வர். புத்தக ஏடுகளைப் புரட்டுவது போல, பட்டை பட்டையான பெரிய அலைபேசிகளில் எதையோ புரட்டிப் பார்த்தும், படித்துக் கொண்டும் இருக்கும் இவர்கள், நண்பர்களை சந்திக்கவும் உரையாடவும் மறை விடங்களைத் தேடிச் செல்வர். கல்வி குறித்தோ, குறிக்கோள்கள் குறித்தோ, இவர்களின் தோழமை இருக்கும்பட்சத்தில், மறைவிடங்களைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்படுகிறது என்பதறிந்து, இலைமறை காய் மறைவான பெற்றோர் கண்காணிப்பு, இப்பருவத்தினர்க்கு அவசியம் தேவை. மாணவர்களை குழப்ப மனநிலைக்கு உள்ளாக்கி, குறிக்கோள்களை தவறவிடாமல் பார்த்துக் கொள்வதில் சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால், நம் சமூகம் அப்பொறுப்பை கை கழுவி பல்லாண்டுகள் ஆகிவிட்டன. உறவுக்கும் நட்பிற்கும் சான்று பகரும் ஒளவையின் பாடல் இது...

‘அற்ற குளத்தின் அறுநீர் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு’

‘குளத்தில் நீர் வற்றிய பின் பறந்து எங்கோ சென்று விடும் பறவைகள் போன்றோர் அல்லர் நல்ல உறவினரும் நட்பினரும். நீர் வற்றினாலும் எப்போதும் அக்குளத்துடனே ஒட்டியிருக்கும் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற தாவரங்களை போல உடனிருப்பவர்களே நல்ல உறவும் நட்பும்’ என்பது இதன் பொருள்.

‘பைத்தியக்காரனைச் சுற்றி பத்து பேர் (வேடிக்கைப் பார்க்க)... பணக்காரனைச் சுற்றி பத்து பேர் (பணம் பறிக்க) என்றொரு சொலவடை இருக்கிறது. பொருள் வளமிக்கவர்களோடு, வலிந்து நட்பு பாராட்டித் திரிபவர்களின் நோக்கம், ‘ஆபத்துக் காலத்தில் நமக்கு ஏதாவது உதவி செய்யக்கூடும்’ என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே நீடிக்கிறது. இது போன்ற நட்பின் (?) நீடிப்பு பணக்கார மனம் குறித்த ஓர் அறியாமையே. பெயருக்காகவும் புகழுக்காகவும் எங்கோ இருப்பவர்களுக்கோ கூட வசதிபடைத்தோர் சிலர் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, கூடவே இருப்பவர்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடமாட்டார்கள் என்பதை அவர்கள் அறியாதவர்கள் பாவம்! இதைத்தான் ‘தெளிவிலார் நட்பின் பகை நன்று’ என்கிறது நாலடியார். அதே நாலடியார்தான் நெல்லுக்கு உமி போல, நீருக்கு நுரைபோல நல்ல நட்பிற்குள்ளும் சில குறைபாடுகள் இருக்கலாம். அப்போது...

‘நல்லார் என நனி விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்’

என்று நமக்கு புத்திமதி கூறுகிறது. ஒருவர் பல்லாண்டுகளாக, உங்கள் முன் நாள்தோறும் எதிர்படுபவராக, இருப்பினும்கூட, மனசுக்கு உகந்தவராக இல்லாதபட்சத்தில் ஒருபோதும் உங்கள் நட்பு நெஞ்சில், நன்னெஞ்சில், நினைவில் வராதவராகவே இருப்பர். அதே நேரம் எங்கோ, எப்போதோ சந்தித்த, பழகிய சிலர் மேகங்களுக்கு இடையே மறைந்து மறைந்து தவழ்ந்து கொண்டிருக்கும் முழுமதி போல நெஞ்சவானில் நீங்காதவர்களாகி விடுவர் என்பதையும்...

‘பலநாளும் பக்கத்தார் ஆகினும் - ெநஞ்சில்
சிலநாளும் ஓட்டாரோடு ஒட்டார்’

என நட்பின் தத்துவம் உரைக்கிறது நாலடியார். நானறிந்த இரு நண்பர்கள். ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இருவரும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுகிறார்கள். இருவருமே நேர்முகத் தேர்வில் சிறப்பாக பங்களித்ததால் யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் நிர்வாகத்திற்கு. காரணம், இருப்பதோ ஒரே ஒரு பணியிடம்தான். எனவே நண்பர்களில் ஒருவரை அழைத்து, ‘நீங்கள் இருவருமே சிறப்பாகச் செய்ததால் யாருக்கு பணி தருவது என்ற குழப்பமாக உள்ளது’ என துறைத்தலைவர் கூறியதும், அவரோ சற்றும் சிந்திக்காமல் ‘எனது நண்பனுக்ேக வேலை கொடுங்கள். அவர் திருமணமாகி பொருளாதார வசதியின்றி மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து ெகாண்டிருக்கிறார். நீங்கள் அவருக்குத் தருவதுதான் நியாயம்’ என்றவுடன் அவரை ஓர் அறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மற்றொரு நண்பரை அழைத்து மேற்கூறியவற்றை துைறத்தலைவர் கூறியதும், இந்த நண்பரும் சற்றும் தாமதிக்காமல், ‘என் நண்பருக்கே ேவலை கொடுங்கள்.

எனக்காவது திருமணம் ஆகிவிட்டது. வேலையில்லாததால் அவருக்கு பெண் தரவே மறுக்கிறார்கள். எனவே அவருக்கு கொடுங்கள் தயவு செய்து’ என்றிருக்கிறார். என்ன செய்வது என்ற குழப்பத்தில், கல்லூரியின் உரிமையாளரிடம் இதனைச் சொல்கிறார் துறைத்தலைவர். அவரோ ‘தயவு செய்து இருவருக்கும் வேைல ெகாடுங்கள். இதுபோல நல்ல நண்பர்களை நல்ல மனம் படைத்தவர்களை இக்காலத்தில் காண்பது அரிது’ என்கிறார். இருவருக்கும் வேலை கிடைத்து விடுகிறது. இப்போது அரசுக் கல்லூரியில் ஒருவரும், பல்கலைக்கழகத்தில் ஒருவருமாக நிரந்தர வேலைவாய்ப்பு பெற்று பேராசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக எனது இலக்கிய நண்பர்கள். மிகுந்த தயக்கத்திற்குப் பின்பே அவர்கள் இந்நிகழ்வை நான் பதிவு செய்ய ஒப்புதல் அளித்தார்கள் என்ற போதிலும், தங்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் அவர்களின் பெயரைத் தவிர்க்க மனமின்றியே, நான் இங்கே தவிர்த்து உள்ளேன்.

‘மருவுக மாசற்றார் கேண்மை - ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலா நட்பு’

என்ற குறள்படி, நல்லோரின் நட்பை எப்போதும் பேண வேண்டும். குற்றமுடையோர் நட்பை ஒன்றைக் கொடுத்தாவது நீக்கிவிட வேண்டும். இக் காலத்தில் நட்பின் தேவை அல்லது எதிர்பார்ப்பு என்பது ஆறுதலான வார்த்தைகளே. அதுவே பல நேரம் போதுமானதாக உள்ளது என்பதை நான் உணர்ந்தெழுதிய ‘ஒரு வார்த்தை’ என்ற கவிதை இது... கடுந்தாகத்திலும் பருகிட முடியாத கழிவுநீராக பெருக்கெடுத்து ஓடுகின்றன சொற்களின் பலமும் அர்த்தங்களும்.

‘எப்போது வேண்டுமானாலும்
கதவைத் தட்டலாம்’ எனக் கூறியிருந்தாலும்
ஒருமுறை கூட தட்டிவிட வேண்டாம்.
‘நானிருக்கிறேன்’ என
எத்தனை முறை கூறியிருந்தாலும்
யாரும் இருப்பதாக
ஒருபோதும் நம்பிவிட வேண்டாம்.
நினைத்த கணம்தோறும்
அழைக்கக் கூறியிருந்தாலும்
அவசரத்திற்குக்கூட
குரல் கொடுத்திட வேண்டாம்.
தயவுகூர்ந்து கேளுங்கள்.
சொற்களை நம்பி நீங்கள்
அவமானப்பட வேண்டாம்.
ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே என்பதற்காக
வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.

உன் நண்பனை அளவோடு நேசி. ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு. ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்! உங்கள் முன் நாள்தோறும் எதிர்படுபவராக இருப்பினும்கூட, மனசுக்கு உகந்தவராக இல்லாதபட்சத்தில் ஒருபோதும் உங்கள் நட்பு நெஞ்சில், நன்னெஞ்சில், நினைவில் வராதவராகவே இருப்பர். அதே நேரம் எங்கோ, எப்போதோ சந்தித்த பழகிய சிலர் மேகங்களுக்கு இடையே மறைந்து மறைந்து தவழ்ந்து கொண்டிருக்கும் முழுமதி போல நெஞ்சவானில் நீங்காதவர்களாகி விடுவர்!

(மீண்டும் பேசலாம்!)

இளம்பிறைமணியம் செல்வன்