இசை மொழி



கிலிக்கி கில்லாடி

ஸ்மிதா

`பாகுபலி’ படத்தை அத்தனை சீக்கிரத்தில் மறக்க முடியுமா? படத்தின் பிரமாண்டம் எத்தனை ஸ்பெஷலோ, அதே அளவு சிறப்பானது படத்தில் பழங்குடியின மக்கள் பேசும் கிலிக்கி பாஷை. பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கியின் கண்டுபிடிப்பு இந்த கிலிக்கி. அதே கிலிக்கி பாஷையை வைத்து `பஹா கிலிக்கி’ என்கிற பெயரில் மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் பாப் பாடகி ஸ்மிதா. தெலுங்குப் பட உலகிலும் இசைத் துறையிலும் ஸ்மிதாவின் பெயர் ரொம்பவே பிரபலம்!



அரைகுறை தமிழும் அழகான ஆங்கிலமும் கலந்த ஸ்மிதாவின் மெட்டாலிக் குரல் ஏதோ ஒரு மயக்கம் உண்டாக்குகிறது. ``ஹைதராபாத்ல பிறந்து, விஜயவாடாவுல வளர்ந்தவள் நான். எங்கப்பா சைடு எல்லாரும் பிசினஸ்ல இருந்தவங்க. அம்மா லட்சுமிகாந்தம்மா ஆந்திராவுல எம்.பியா இருந்தவங்க. நான் ஸ்கூல்ல படிப்பு மட்டுமில்லாம, டான்ஸ், பாட்டு, ஸ்போர்ட்ஸ்னு எல்லாத்துலயும் முதல் ஆளா நிற்பேன். ரொம்ப சின்ன வயசுலயே கர்நாடிக் மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். 10 வயசிருக்கும் போது, ஈ டி.வில `பாடுதா தீயகா’னு மியூசிகல் ரியாலிட்டி ஷோவுல சும்மா கலந்துக்கிட்டேன். அதுல ஜெயிக்கணும்... அடுத்த லெவல் போகணும்கிற எந்த எண்ணமும் அப்போ இல்லை. ஆனா, ஒவ்வொரு எபிசோடுலயும் நான் ஜெயிச்சு முதல்ல வந்ததும் எனக்கே ஒரு சீரியஸ்னஸ் வந்திருச்சு.  அதுக்கப்புறம் என் வாழ்க்கையில எல்லாமே மியூசிக்தான்... எங்கப்பா பயங்கரமான மியூசிக் லவ்வர். மைக்கேல் ஜாக்சன், மடோனா ஷோஸ் எல்லாம் நேர்ல போய் பார்க்கிற அளவுக்கு அவருக்கு மியூசிக் பிடிக்கும். அவரும் ஒருவகையில எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கார்.

2000த்துல `ஹை ரப்பா’னு என்னோட முதல் ஆல்பம் ரிலீஸ் பண்ணினேன். ரீமிக்ஸ் கலாசாரம் அப்ப அறிமுகமாகலை. அப்பவே நான் அந்த ஸ்டைல்ல ஆல்பம் ரிலீஸ் பண்ணினது பெரிய ஹிட் ஆச்சு. அடுத்து `மஸ்கா மஸ்கா’னு இன்னொரு தெலுங்கு ரீமிக்ஸ் ஆல்பம் ரிலீஸ் பண்ணினேன். அதுவும் சூப்பர் ஹிட். மூணாவதா `கலக்கல்’னு தமிழ் ஆல்பம் ரிலீஸ் பண்ணினேன். அதுல `இஞ்சி இடுப்பழகி’, `ரோஜாப்பூ ஆடி வந்தது...’ `ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டுதான்’னு தமிழ்ல சூப்பர் டூப்பர் ஹிட்டான 6 பாடல்களை ரீமிக்ஸ் பண்ணி அந்த ஆல்பம் ரிலீஸ் பண்ணினேன். அப்புறம் மூணு மொழிகள்ல `ஸ்மிதா’னு என் பேர்லயே ஒரு ஆல்பம் பண்ணினேன்.  இதுக்கிடையில தெலுங்கு, கன்னடப் படங்கள்ல பின்னணி பாடறதுலயும் பிசியா இருந்தேன். 2006ல ஃபிலிம் ஃபேர் அவார்ட்கூட வாங்கியிருக்கேன். `பஹா கிலிக்கி’ பண்ணினது ரொம்பவே சுவாரஸ்யமான அனுபவம்...’’ என்பவர், அதைப் பற்றிப் பேசும் போது ரீசார்ஜ் ஆனவர் போல உற்சாகமாகிறார்.

``யதேச்சையா `பாகுபலி’யில வர்ற கிலிக்கி லேங்வேஜை கேட்டேன். அதுக்கு முன்னாடியே  எனக்கு இது மாதிரி ஜிப்ரிஷ் லேங்வேஜ்ல ஒரு ஆல்பம் பண்ணணும்னு ஐடியா இருந்தது. அப்பதான் ‘பாகுபலி’ வந்த டைம்.. கிலிக்கி கேட்டதும் ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டேன். அதுலேருந்து சில வார்த்தைகளை மட்டும் எடுத்துப் பண்றதாதான் முதல்ல பிளான்.  அப்புறம்தான் அந்த கிலிக்கி மொழியை எழுதின உண்மையான எழுத்தாளரே இருந்தா, இந்த ஆல்பத்தை இன்னும் பெட்டரா பண்ண முடியுமேனு தோணினது. உடனே மதன் கார்க்கிகிட்ட பேசி, என்னோட ஆல்பம் பத்தின ஐடியாவை சொன்னேன். அடுத்த ரெண்டாவது நாள் மதன் கார்க்கி எனக்காக கிலிக்கி பாஷையில ஒரு பாட்டே எழுதி அனுப்பிட்டார். அதை வச்சு ஆல்பம் ஷூட் பண்ணினோம். அதை மதன் கார்க்கிக்கு அனுப்பினேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததா சொன்னார்.  இந்த ஆல்பமும் செம ஹிட்...’’ - குதூகலிக்கிற ஸ்மிதாவுக்கு இன்னொரு சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது கிலிக்கி ஆல்பம்.

``என்னோட நாலு வயசு பொண்ணு ஷிவி என்னோட பஹா கிலிக்கி ஆல்பம் பார்த்து, பாட்டைக் கேட்டுட்டு ஒரு நாள், `அம்மா நானும் பாடறேன். ரெக்கார்ட் பண்ணு’னு சொன்னா. அவ பாடினது என்னோடதைவிட, சூப்பரா வந்திருக்கு...’’ - மகளின் திறமையில் மகிழ்ந்திருக்கிறார் மம்மி. மோடியின் அரசியல் பிரசாரத்தின் போது `வேக்கப் இந்தியா’ ஆல்பத்தில் ஸ்மிதா பாடியது ஆந்திராவில் பெரிய வரவேற்பைப் பெற்றதாம். ஈஷா ஃபவுண்டேஷன் சார்பாக அவர்களுக்கான ஆன்மிக ஆல்பம் ஒன்றை அவர்களது வளாகத்துக்குள்ளேயே அனுமதி பெற்று ஷூட் செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு இருக்கிறது. டையிங் டு பீ மீ’ என்கிற குறும்படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். சிவராத்திரிக்காக ஸ்பெஷல் ஆல்பம் ஒன்றை வெளியிடும் வேலைகளில் இப்போது பிசியாக இருக்கிறாராம்.

``பியூட்டி பார்லர், டெக்ஸ்டைல் டிசைனிங், புரொடெக்‌ஷன் கம்பெனினு வேற சில விஷயங்கள்லயும் நான் பிசி. தமிழ் படங்கள்ல இன்னும் பாடலை. அப்படியொரு வாய்ப்புக்காக ஆர்வத்தோட வெயிட் பண்ணிட்டிருக்கேன். மதன் கார்க்கியோட சேர்ந்து ஒர்க் பண்ண இன்னொரு வாய்ப்பு வந்தா சந்தோஷப் படுவேன். சீக்கிரமே தமிழ்ல ஒரு ஹிட் கொடுத்துட்டு மீட் பண்றேன்...’’ - ஸ்வீட்டாக சைன் அவுட் செய்கிறார் ஸ்மிதா!

`கலக்கல்’னு தமிழ் ஆல்பம் ரிலீஸ்  பண்ணினேன். அதுல `இஞ்சி இடுப்பழகி’, `ரோஜாப்பூ ஆடி வந்தது...’ `ஆத்தாடி  அம்மாடி தேன்மொட்டுதான்’னு தமிழ்ல சூப்பர் டூப்பர் ஹிட்டான 6 பாடல்களை  ரீமிக்ஸ் பண்ணி அந்த ஆல்பம் ரிலீஸ் பண்ணினேன். என்னோட நாலு வயசு பொண்ணு ஷிவி  என்னோட பஹா கிலிக்கி ஆல்பம் பார்த்து, பாட்டைக் கேட்டுட்டு ஒரு நாள்,  `அம்மா நானும் பாடறேன். ரெக்கார்ட் பண்ணு’னு சொன்னா. அவ பாடினது  என்னோடதைவிட, சூப்பரா வந்திருக்கு...