ஒரு தோழி பல முகம்



ஸ்டார் தோழி

நான்...ஒரு சிறந்த பெண் தொழில் அதிபரின் உதவியாளராக பணிபுரிகிறேன். பிறந்த ஊர் ‘ஹரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு’ (சங்கர நாராயணர்) என்கிற வரிகளுக்கு சொந்த ஊரே எனது ஊர்... சங்கரன்கோவில்!



வீடு
வீடு வெறும் செங்கலும் சிமென்ட்டும் கலந்த கலவையே... வீடு என்பதை விட இல்லம் என்ற சொல்லே சிறந்தது. அன்பும் பண்பும் பரிவும் நம்பிக்கையும் கொண்ட கணவன். ஆசைக்கும் ஆஸ்திக்குமாக ஒரே ஒரு செல்வ(ல) மகன். பரிவு கொண்ட மாமியார், கண்டிப்பு மிக்க மாமனார் என 4 முக்கிய தூண்களை கொண்டது எனது அழகிய இல்லம்.

என் கணவர்
மீனாவாக இருந்த என்ன அமிர்தா மீனாவாக மாற்றியது இவர்தான். உற்ற தோழன், என் நலம் விரும்பி, சிறந்த கணவர் மட்டுமல்ல... சிறந்த தந்தையும் கூட. உண்மையில் இவர் சிறந்த மனிதரும் கூட. என் சினேகிதன் மட்டுமல்ல... என் ரகசிய சினேகிதனும் இவர்தான். இரவு 12 மணி வரை பேசிக்கொண்டு இருப்போம். காலையில் அவர் சீக்கிரம் கிளம்பி சென்றுவிடுவார். ஆனால், மணிக்கு ஒரு முறையாவது போனில் பேசிவிடுவோம் (விஷயம் ஒண்ணும் இருக்காது!). தினமும் நாங்கள் சண்டை போடாமல் இருக்கவே மாட்டோம். ஆனால், கொஞ்ச நேரத்தில் பேசி விடுவோம். பேசாமல் இருந்தாலும் குறுஞ்செய்தி மூலமாகவாவது பேசுவோம். 2 நாள் பேசாமல் இருந்திருக்கிறோம். அப்போது கூட ஒரே சோபாவில் அமர்ந்து பேசாமலே குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தோம் மாற்றி மாற்றி. உண்மையில் மனுஷன் ரொம்ப நல்லவர். நான் எப்ப கால் செய்தாலும் எடுத்து விடுவார். வேலையாக இருந்தாலும் கால் எடுத்து ‘வேலையா இருக்கேன் செல்லம் கூப்பிடுறேன்’ எனச் சொல்லிதான் கட் பண்ணுவார். திட்டும்போதும் கூட, ‘செல்லம் நீ செய்றது ஒண்ணும் சரி இல்லை பார்த்துக்கோ’ எனச் செல்லமாகத்தான் திட்டுவார் (பி.கு: கோவக்கார கணவன்தான்!). என்னவரைப் பற்றி பேசச் சொன்னாலோ, எழுதச் சொன்னாலோ முடிவே இல்லாம இருக்கும். அவ்வளவு ப்ரியம்!

பிடித்த புத்தகங்கள்
ரா.பார்த்திபனின் ‘கிறுக்கல்கள்’, கவிப்பேரரசுவின் ‘கருவாச்சி  காவியம்’...

பொழுதுபோக்கு
புத்தகங்கள், நண்பர்கள், இசை, தொலைக்காட்சி...

இயற்கை
சில்லரைகளாக சிதறி ஓடும்
நீரோடை
மெய் சிலிர்க்கும் பூங்காற்று
கலைந்தாடும் கருமேகங்கள்
அதிகாலை இளஞ்சூரியன்
முத்தமிடத் தோன்றும் முழுநிலவு
ஓவென்று ஆர்ப்பரித்து மிரட்டும்
அலைகடல்
மழையில் கரையும் காகங்கள்
தண்ணீரில் தாளமிடும்
தவளைகள்
மாலை மலரும் மல்லிகையின்
நறுமணம்
மார்கழி காலைப் பனியில்
புல்வெளி
இவ்வாறு என் ரசனைக்கு உரிய இயற்கையின் பட்டியல் நீளமே!

கடந்து வந்த பாதை
கற்களும் முட்களும் கொண்ட கரடு முரடான ஒற்றை அடிப்பாதையைப் போல வலிகளும் வேதனைகளும் மட்டுமல்ல... வெற்றி-தோல்வி, மகிழ்ச்சி-துன்பம் கலந்த பல பாடங்களும் அனுபவங்களும் நிறைந்த, திரும்பிப் பார்த்து திகைக்கக்கூடிய பாதை நான் கடந்து வந்த பாதை. என்னைப் போல, என்னை விட மகிழ்ச்சி யாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் இருந்தாலும், வறுமையில் நான் வாடியது போல யாரும் வாடக் கூடாது என்பது என் எண்ணங்களில் ஒன்று.

பிடித்த ஆளுமை
ஜான்சி ராணி லட்சுமிபாய்.

ஃபேஸ்புக்
முகம் அறியா நண்பர்கள் பலர், உடன்பிறவா சகோதர, சகோதரிகள் சிலர், கருவறையில் எனை சுமக்காத தாய், கண்டிப்பில்லா தந்தை, குறும்புகள் நிறைந்த தம்பி, தங்கைகள், சில்மிஷ சில்வண்டுகள் (block செய்யும் வசதியுடன்), சிறந்த தகவல்களையும் கருத்துகளையும் பதிவு செய்யும் நண்பர்கள், நட்சத்திர வட்டாரங்கள் என என் முகநூல் பக்கம் எனது கட்டுப்பாட்டில் பிரமாண்டமாக உள்ளது.

அழகு
அன்பின் வெளிப்பாடே அழகென்பேன். அன்புள்ளத்துடன் பார்க்கும்போது பன்றியும் அழகாகத் தெரியும். வெறுப்போ கோபமோ கொண்டு பார்க்கும்போது மென்மையான அழகிய ரோஜா மலர்கள் மட்டுமல்ல... உலக அழகி கூட அழகற்றவளாகவே தெரிவாள். பெண்களும் இயற்கையும் மட்டுமே அழகல்ல... பெண்ணை மதிக்கும் ஒவ்வொரு ஆணும் அழகே! சிங்கத்தின் கம்பீரம் அழகு! சிறு எறும்பின் சுறுசுறுப்பு அழகு! நாயின் நன்றி அழகு! பசுவின் தாய்மை அழகு! சிட்டுக்குருவியின் சிணுங்கல்கள் அழகு! காக்கையின் பகிர்ந்துண்ணல் அழகு! தொட்டாற்சிணுங்கியின் உணர்தல் அழகு! எதிரியால் தோன்றும் விடாமுயற்சி அழகு!

சமூகம்
என் சமூகம் அவலங்கள் மட்டுமே நிறைந்தது அல்ல! நேர்மையான அதிகாரிகளும், திறமையான ஆசிரியர்களும், அன்னை தெரசா போல அன்புள்ளம் கொண்ட பல அன்னையர்களும், துடிப்புமிக்க இளைஞர்களும் கொண்ட எனது சமூகம் தலை நிமிர்ந்தே நிற்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த பேரிடரே சாட்சி.  துடிப்புமிக்க இளைஞர்களும், சுயலாபம் இல்லா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், நற்பண்புகள் நிறைந்த தனிமனிதர்களும் இணைந்தே அப்பாவி மக்களுக்கும், இயற்கை வளத்தை அழித்த இதயமில்லா மனிதர்களுக்கும் உதவி செய்தனர்... செய்கின்றனர்... செய்வார்கள்!

பெண்களும் இயற்கையும் மட்டுமே அழகல்ல... பெண்ணை மதிக்கும் ஒவ்வொரு ஆணும் அழகே!

அமிர்தா மீனா