எப்படி வந்தது தேனீ?



Spelling Bee போட்டி பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்... தெரியாதவங்களுக்கு ஒரு சின்ன அறிமுகம்... அது வேற ஒண்ணும் இல்லைங்க... இந்த போட்டியில் ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிப்பாங்க... காதால் கேட்டதை வைத்து போட்டியில் கலந்து கொள்ளும் சிறுவர்கள் சரியான spelling சொல்லணும். அது இருக்கட்டும்... spelling போட்டியில் ‘Bee’ என்னத்துக்கு வந்துச்சு அப்படின்றதுதான் இப்போ நம்ம ஆராய்ச்சி!



பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் இங்கிலாந்தில் bee என்ற வார்த்தை been or bean என்றே எழுதப்பட்டது. அதன் அர்த்தமும் கொஞ்சம் மாறுபட்டே இருந்தது. அக்கம்பக்கம் உள்ளவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அண்டை அயலாருக்கு உதவி செய்வதே been/bean என்கிற வார்த்தையின் நிஜ அர்த்தமாக இருந்தது. sewing bee (தையல் வேலை), quilting bee (போர்வை நெய்யும் வேலை) என்று செய்யும் வேலைக்கு ஏற்றாற்போல bee சேர்த்துக் கொள்ளப்பட்டது. அவ்ளோதான்!
 
புள்ளி வைக்கலாமா? கூடாதா?

தமிழில் சமையல் மாஸ்டர், கராத்தே மாஸ்டர் என்றெல்லாம் சொல்லும் வழக்கம் உண்டு. master என்றால் அவருதான் பாஸ்னும் நமக்கு புரியும். இந்த master என்பதன் நேரடி திரிபுதான் Mister. சுருக்கமா Mr. பொதுவா ஆங்கிலத்தில் எழுதும் போது Mr பக்கத்தில் பழக்க தோஷத்தில் ஒரு புள்ளி வைப்போம்.



ஆங்கிலம் பிறந்த நாடான இங்கிலாந்தில் இந்தப் புள்ளி வைக்க மாட்டார்கள். ஏன்னா ‘mister’, ‘doctor’ மாதிரி வார்த்தைகளை சுருக்கும் போது முதல், கடைசி எழுத்தை உபயோகிப்போம். அப்படி செய்யும் போது புள்ளி தேவை இல்லையாம்... அப்படின்னு Oxford A-Z of Grammar and Punctuation சொல்லிருச்சாம்.

அமெரிக்காகாரங்க, ‘அதெல்லாம் முடியாது... நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது’ன்னு தனிச்சையா முடிவெடுத்து, ‘நான் புள்ளி வைப்பேன்’னு Mr. President, Dr.Steveனு எழுதப் பழகிட்டாங்க. இது இப்படி இருக்க பெண் வாத்தியாரை முன்னொரு காலத்தில் maistresseனு சொல்லுவாங்க... அதன் சுருக்கம்தான் Mrs. இப்படிதான் Mr., Mrs., Ms. மற்றும் Miss சுருக்கங்கள் எல்லாம் பின்னாளில் ஆங்கில பேச்சுவழக்கில் சேர்ந்து கொண்டன.

கல்யாணம் ஆன பின் Mrs. பட்டம் கொடுக்குறதும் திருமணம் ஆகாதவர்களை Miss என்று அழைப்பதும் இன்று ரொம்ப சர்வசாதாரணம். நிஜத்தில் Ms. என்னும் பொது பட்டமே இருவருக்கும் கொடுக்க வேண்டுமாம். ஆனால், அப்படி செய்தால் திருமணம் ஆனவரா ஆகாதவரான்னு குழப்பமா இருக்கும். அதைத் தவிர்க்கத்தான் Miss, Mrs ன்னு தெளிவா போட்டு காட்டிவிடுகிறோம் இன்று!

கல்யாண வைபோகமே!

ஒரு கல்யாணம் ஆயிரம் சடங்குகள், பல உறவுகள் ஒண்ணா சங்கமிக்கும் இடம். அதுல ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் உண்டு... நிச்சயதார்த்த விழாவை betrothal, engagement அப்டின்னு சொல்லலாம். மாப்பிள்ளை அழைப்பை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்றது ? இப்படி பல கேள்விகளுக்கான விடைகள்தான் இங்கே!



இதுநாள் வரை கல்யாண வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை ‘wedding guest’னு சொல்லித்தான் கேள்விப்பட்டிருப்போம். அவங்களை bridallers என்றும் சொல்லலாம்.  bride and bridegroom... அதாங்க மணமகள், மணமகனை பற்றி பெருமையா சொல்லும் கவிதை அல்லது பாடலுக்கு பேருதான் epithalamion.

ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்படும் Bachelor பார்ட்டி எல்லாருக்கும் தெரியும். bachelorette partyனு ஒண்ணு இருக்குங்க... அது பொதுவா கல்யாண பொண்ணோ, பையனோ தனக்குத் தெரிந்த எல்லாருக்கும் கொடுக்கும் பார்ட்டியின் பெயர்! Affiance என்பது மணப்பெண்ணை அவளது பெற்றோர் மணமகனுக்கு தாரை வார்த்தல் சடங்கு. ‘இன்று முதல் இவள் எனது பொறுப்பு’ அப்படின்னு மணமகன் வாக்குறுதி செய்து கொடுக்கும் சடங்குதான் இது. அதனால்தான் இதற்கு Affianceனு பேரு வந்துச்சாம். Affiance என்றால் ஆங்கிலத்தில் நம்பிக்கை என்று பொருள்! மணப்பெண்ணின் கல்யாண உடை.... அதாங்க நம்மூரில் சொல்வோமே தாலிகட்டு சேலைன்னு அதுக்கு பேரு trousseau. மணமகளின் தோழி bridesmaid. அதுபோல மணமகனின் தோழன் so called மாப்பிள்ளைத் தோழன் groomsman. மணமகளின் தோழி, மாப்பிள்ளைத் தோழன் - இவங்க ரெண்டு பேரையும் பொதுவா சொல்ற பெயர்தான் paranymph!

(வார்த்தை வசப்படும்!)