ஆச்சரியம்!



நினைவாற்றல் விளையாட்டால் படிப்பாற்றல் மேம்படும்!

ஸ்ரீவைஷ்ணவி

`மெமரி குயின்’ - ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவியை இப்படி அழைப்பதுதான் சரியாக இருக்கும். சர்வதேச நினைவாற்றல் வீராங்கனை! 20 வயதில் இவர் செய்திருக்கும் சாதனைகளைப் பாராட்டி, சமீபத்தில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 100 பெண் சாதனையாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியிருக்கிறது. அந்த 100 பெண்களில் ஸ்ரீவைஷ்ணவிதான் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது!



100 பேர்ல நானும் ஒருத்தி... நம்பவே முடியலை. என்கூட அவார்ட் வாங்கினவங்கள்ல நிறைய பேர் கல்வித் துறை சம்பந்தப்பட்டவங்க. அவங்களோட இணைஞ்சு, எனக்குத் தெரிஞ்ச நினைவாற்றல் பயிற்சியை சொல்லிக் கொடுத்து மாணவர்கள் முன்னேற்றத்துல ஒரு சின்ன மாற்றத்தையாவது பண்ண முடியுமானு யோசிச்சிட்டிருக்கேன்...’’ - முதிர்ந்த வார்த்தைகளில் முகம் மலர ஆரம்பிக்கிறார் வைஷ்ணவி. அப்பா, அம்மா, ஒரு அக்கானு அளவான குடும்பம். நான் இப்ப பி.ஏ. சைக்காலஜி கடைசி வருஷம் படிக்கிறேன். அடுத்து கிளினிகல் சைக்காலஜி படிக்கற ஐடியாவுல இருக்கேன். ஆரம்பத்துல நான் ஒரு செஸ் பிளேயர். எங்கம்மாதான் என்னோட செஸ் விளையாட்டுக்கு உதவியா இருக்கும்னு ஒருமுறை மெமரி ஒர்க்‌ஷாப்ல சேர்த்துவிட்டாங்க. எனக்கு அந்த ஸ்போர்ட் ரொம்பப் பிடிச்சுப் போனதால, என்னால வேற எதைப் பத்தியுமே யோசிக்க முடியலை...’’ என்பவர், மெமரி ஸ்போர்ட்ஸ் பற்றி சின்ன அறிமுகமும் தருகிறார். ``வேர்ல்ட் மெமரி ஸ்போர்ட்ஸ் கவுன்சிலால அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் மெமரி ஸ்போர்ட்ஸ் கவுன்சிலால நடத்தப்படற விளையாட்டு இது.

இந்த சாம்பியன்ஷிப்ல 10 பிரிவுகள் இருக்கும்.  நம்பர்ஸ், ஸ்பீட் நம்பர்ஸ், ஸ்போக்கன் நம்பர்ஸ், பைனரி டிஜிட்ஸ், பிளேயிங் கார்ட்ஸ், வார்த்தை விளையாட்டு, பெயர்கள் மற்றும் முகங்கள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வருங்கால தேதிகள், abstract உருவங்கள், ஸ்பீடு கார்ட்ஸ்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதம். சாம்பியன்ஷிப்போட தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு பிரிவுக்குமான நேரம் வித்தியாசப்படும். நேஷனல் சாம்பியன்ஷிப் ஒரு நாளும், இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் ரெண்டு நாட்களும் நடக்கும். ஒவ்வொரு பிரிவுலயும் அதிகமான விஷயங்களை நினைவுல வச்சுக்கிறவங்களுக்கு தங்கமும், எல்லா பிரிவுகளுக்கும் சேர்த்து அதிக பாயின்டுகள் வாங்கறவங்களுக்கு சாம்பியன்ஷிப்பும் கிடைக்கும்...’’ போட்டியின் விதிகளை விளக்குபவர், முதல் தங்கப் பதக்கம் வென்ற பிறகே இந்த விளையாட்டின் தீவிரம் உணர்ந்ததாகச் சொல்கிறார்.

``முதல்ல எனக்கு இது ஒரு வேடிக்கையான பொழுதுபோக்காதான் இருந்தது. ஒரு மாசம் கூட பயிற்சி எடுக்காத நிலையில 2010ல சீனாவுல நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்ல இந்தியாவை ரெப்ரசன்ட் பண்ணக் கலந்துக்கிட்டேன். அதுல ஜூனியர் லெவல்ல கோல்டு மெடல் வாங்கின பிறகுதான் சீரியஸ்னஸ் வந்து, 2011ல மறுபடி நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப்புக்கு முழுசா தயாராகிப் போனேன். அதுலயும் தங்கம் ஜெயிச்சேன். ஓபன் கேட்டகிரில தங்கம் ஜெயிச்ச முதல் இந்தியப் பெண் நான் என்ற பெருமையும் கிடைச்சது. அந்த நம்பிக்கையும் சந்தோஷமும்தான் இந்த விளையாட்டுல என்னை வெறித்தனமா ஈடுபட வச்சது...’’ - விழிகள் விரியப் பேசுகிறார் வைஷ்ணவி.

எந்த விளையாட்டுக்கும் பயிற்சிகளும் உழைப்பும் அவசியம். நினைவுத்திறன் விளையாட்டுக்கு அவை கொஞ்சம் அதிகம் என்கிறார் வைஷ்ணவி. இப்படித்தான் பிராக்டிஸ் பண்ணணும்னு இந்த ேகம்ல குறிப்பிட்ட விதிமுறைகள் கிடையாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டெக்னிக் கை கொடுக்கும். அது எந்த டெக்னிக்னு கண்டுபிடிக்கிறதுதான் பெரிய சவால். எனக்கான வழி என்னனு கண்டுபிடிக்கவே ஒன்றரை வருஷங்கள் ஆச்சு. இப்ப அந்த டெக்னிக்ஸ்ல ஸ்பெஷலைஸ் பண்ணி, என் மூளையை அதிவேகத்துல இயங்கப் பழக்கறதுலதான் மொத்த கவனமும் இருக்கு. 500 இலக்கங்களை வெறும் அஞ்சே நிமிஷத்துல மனப்பாடம் பண்ற அளவுக்கு ஒருத்தரோட மூளையோட சக்தி எப்படி இருக்கும்னு உங்களால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? மெமரி அத்லெட்ஸ் அப்படித்தான்...’’ - அனாயாசமாக சொல்கிறார்
வைஷ்ணவி.

அதிகம் அறியப்படாத அல்லது அதிக நபர்கள் உள்ளே வராத எந்த விளையாட்டுக்கும் ஆதரவு சற்றே குறைவாகத்தான் இருக்கும். நினைவாற்றல் விளையாட்டும் அப்படித்தான் என்கிறார் வைஷு. இந்தியாவுக்கு இது ரொம்பப் புது ஸ்போர்ட். இன்னும் நிறைய பேருக்கு இப்படியொரு ஸ்போர்ட் இருக்கிறதே தெரியலை. இதுக்கான அங்கீகாரமும் ரொம்பக் கம்மி. அதனால எங்களை மாதிரி ஆட்களுக்கு விளம்பரதாரர்களோட சப்போர்ட்டும், அரசாங்க உதவிகளும் கிடைக்கிறதே பெரிய போராட்டமாதான் இருக்கு...’’ - வார்த்தைகளில் வெளிப்படுகிற வருத்தத்தை வாழ்க்கையில் அனுமதிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் வைஷ்ணவி. நினைவாற்றல் விளையாட்டால் தனது படிப்பாற்றல் மேம்பட்டிருப்பதில் அவருக்கு பெருமகிழ்ச்சி!

"உடற்பயிற்சி பண்ணினா உடம்பு உறுதியா இருக்குங்கிற மாதிரிதான் இது மனசுக்கும் மூளைக்குமான பயிற்சி. அதை அனுபவிச்சாதான் உணர முடியும். நான் எக்சாம்ஸுக்கு ஒரு மாசம் முன்னாடிதான் படிக்கவே ஆரம்பிப்பேன். வருஷம் முழுக்க விழுந்து விழுந்து படிச்சாலும் மத்தவங்களால வாங்க முடியாத மார்க்ஸை நான் ஒரே மாசத்துல படிச்சு வாங்கிடுவேன்னா, காரணம் என்னோட மெமரி ஸ்போர்ட்ஸ்தான். விளையாடறதுக்கு நான் உபயோகிக்கிற மெமரி டெக்னிக்ஸை படிப்புலயும் யூஸ் பண்ணுவேன். எத்தனை மணி நேரம் படிக்கிறோம்கிறதுதான் மதிப்பெண்களை தீர்மானிக்கும்னா என் விஷயத்துல வேற மாதிரி ஆயிருக்கும். இதை நான் மத்த ஸ்டூடன்ட்ஸுக்கும் சொல்லிக்க ஆசைப்படறேன். எவ்வளவு நேரம் படிக்கிறோம்கிறதைவிட கொஞ்ச நேரத்துலயே எப்படி எஃபெக்டிவா படிக்கிறோம்கிறதுதான் முக்கியம். அப்படிப் பழகிட்டா, மத்த ஆர்வங்களுக்கும், பொழுதுபோக்குகளுக்கும் நேரம் செலவிட முடியும். படிப்புங்கிறது மன அழுத்தத்தைக் கொடுக்கிற விஷயமாகவும் இருக்காது...’’ - பயனுள்ள டிப்ஸ் சொல்கிறார்.

"இந்த இடத்துல நான் எங்கம்மா, அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லணும். யாருமே அதிகம் ஈடுபடாத ஒரு துறையில முட்டி, மோதி முன்னுக்கு வர்றதுங்கிறது ரொம்பப் பெரிய விஷயம். அந்தத் துறையைப் பத்தித் தெரியாதவங்க `எதுக்கு இந்தத் தேவையில்லாத வேலையெல்லாம்...’னு கன்னாபின்னானு கமெண்ட் அடிப்பாங்க. ரெண்டு, மூணு போட்டிகள்ல கோல்டு மெடல் வாங்கின பிறகும்கூட, `இதையெல்லாம் வச்சு என்ன பண்ணப் போறே’னு கேட்டவங்க இருக்காங்க. அப்பல்லாம் நான் மனசு தளராம இருக்க வேற எதைப் பத்தியும் யோசிக்காம என் ஸ்போர்ட்ஸ்ல மட்டுமே கவனமா இருக்க என் அம்மா அப்பாதான் பக்கத்துல இருக்காங்க. எனக்குப் பிடிச்ச, எனக்கு நல்லா வர்ற ஒரு விஷயத்தை நான் பண்றேன். அவ்வளவுதான். அடுத்தவங்க விமர்சனங்களை நான் பொருட்படுத்தறதில்லை...’’ - பதிலடி கொடுப்பவருக்கு பெரிய பெரிய கனவுகளும் லட்சியங்களும்!

"ஜூன் மாசம் தொடங்கப் போற இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப்ல இந்தியா சார்பா கலந்துக்கணும். அதுக்காக தீவிர பயிற்சிகள் எடுத்துக்கிட்டிருக்கேன். ஏப்ரல் மாசம் என்னோட சொந்த மெமரி ட்ரெயினிங் அகடமி ஆரம்பிக்கப் போறேன். பாடத்திட்டத்துல அந்த டெக்னிக்கை அறிமுகப்படுத்தச் செய்ய முடியுமாங்கிற யோசனையும் இருக்கு. இந்தத் துறையில உள்ள திறமைசாலிகளை கண்டுபிடிச்சு அவங்களுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிற மாதிரி ஒரு குழுவை உருவாக்கற திட்டமும் இருக்கு...’’ - வித்தியாச விருப்பங்களில் வியக்க வைக்கிறார் வைஷ்ணவி.

உடற்பயிற்சி பண்ணினா உடம்பு உறுதியா  இருக்குங்கிற மாதிரிதான் இது மனசுக்கும் மூளைக்குமான பயிற்சி. அதை  அனுபவிச்சாதான் உணர முடியும். நான் எக்சாம்ஸுக்கு ஒரு மாசம் முன்னாடிதான்  படிக்கவே ஆரம்பிப்பேன். வருஷம் முழுக்க விழுந்து விழுந்து படிச்சாலும்  மத்தவங்களால வாங்க முடியாத மார்க்ஸை நான் ஒரே மாசத்துல படிச்சு  வாங்கிடுவேன்னா, காரணம் என்னோட மெமரி ஸ்போர்ட்ஸ்தான்...

500 இலக்கங்களை வெறும் அஞ்சே நிமிஷத்துல  மனப்பாடம் பண்ற அளவுக்கு ஒருத்தரோட மூளையோட சக்தி எப்படி இருக்கும்னு  உங்களால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? மெமரி அத்லெட்ஸ்  அப்படித்தான்...