புவனேஸ்வரி மாமி



எல்லாருக்கும் வணக்கம். எல்லாரும் நலம்தானே? வெரிகுட். இந்த மாசம் ரெண்டு விசேஷம் பிரதானமா வருதுங்க. ரெண்டுமே சிவபெருமான் சம்பந்தப்பட்டதுதான். என்னன்னு பார்க்கலாமா?

மார்ச் 7
மஹா சிவராத்திரி




மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சம் (பௌர்ணமிக்கு அடுத்த) சதுர்த்தசி திதி, திருவோணம் நட்சத்திரம் சேர்ந்த புண்ணிய நாள்ல மஹா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுதுங்க. அம்பாளுக்கு நவராத்திரின்னா, ஐயனுக்கு சிவராத்திரி! சிவபெருமானோட அடி, முடி காண ட்ரை பண்ணி ஏமாந்த பிரம்மனுக்கும், மஹாவிஷ்ணுவுக்கும் தான் ஒரு இன்ஃபினிடின்னு ஜோதி வடிவமா காட்சி கொடுத்த நாள்தான் சிவராத்திரி. இதேபோல சிவ புராணம், லிங்க புராணம், ஸ்கந்தம் மற்றும் பத்மம் முதலான பத்து புராணங்கள்ல சிவராத்திரி விசேஷத்துக்கு வேற வேற புராணக் கதை இருக்குங்க. மான் வேட்டைக்குப் போன ஒரு வேடன் ஒரு வில்வ மரத்து மேலே ஏறி, அங்கேருந்து அம்பு விட, அவன் இடுப்பிலே கட்டியிருந்த குடுவையிலிருந்து கொஞ்சம் தண்ணி சிதறி, கீழே மரத்தடியிலிருந்த ஒரு லிங்கத்து மேல அபிஷேகமாக, பின்னாலேயே எய்த அம்பு வெட்டிய வில்வ இலைகளும் அந்த லிங்கத்து மேல விழுந்துதுங்க. அது ஒரு சிவராத்திரி நாள்ங்கறதால, தானே அறியாம செய்த ‘சிவ வழிபாடு’ காரணமா அவனுக்கு ஈசனால நற்கதி கிடைச்சதாக ஒரு சம்பவம் உண்டுங்க.
 
இந்த சிவராத்திரியில் விரதம் இருந்து தன்னை வழிபடறவங்களுக்கு, எல்லா நன்மைகளையும் பரமசிவன் அருள்வாருங்க. இந்த ராத்திரியில எல்லா சிவன் கோயில்கள்லேயும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரைக்கும், மூன்று மணிநேர இடைவெளியில நான்குகால பூஜைகள் நடைபெறுமுங்க.

மார்ச் 14
காரடையான் நோன்பு


பரமசிவனும் உமாதேவியும் தனிச்சிருந்த  ஒரு நேரத்ல, உமாதேவி விளையாட்டாக  சுவாமியோட கண்களைப் பொத்திட்டா. உடனே அண்ட சராசரமே இருட்டாகிப் போச்சு. ஈசனோட வலது கண் சூரியன், இடது கண் சந்திரனாச்சே! பளிச்னு பகவான் கோபிக்க தன் குற்றம் புரிஞ்சுகிட்ட உமை, ஐயன்கிட்ட சாப விமோசனம் கேட்டாள். ‘பூலோகத்ல தவமிருந்து என்னை பூஜித்துவா. நான் அங்க வந்து உன்னை ஏற்றுக்கறேன்’னு சொல்லிட்டார். அவரை அம்பிகை கொஞ்சகாலம் பிரிஞ்சிருக்கறதே பெரிய தண்டனைதானே!

பூலோகத்ல காஞ்சி தலத்திற்கு வந்து, கம்பா நதிக்கரையில அன்னை உட்கார்ந்தா. மணலால ஒரு லிங்கம் பிடிச்சு வெச்சா. அப்படியே ஆழ்ந்த தவத்ல மூழ்கிட்டா. உமையை இன்னும் சோதிக்க நினைச்ச பரமன், ஒரு பிரளயத்தை உருவாக்கினார். வெள்ளம் பாய்ந்து வர்றதைப் பார்த்த அம்பிகை தான் பிடிச்சுவெச்சத் தன் நாயகனான லிங்கத்திற்கு ஆபத்து வருமோன்னு பயந்தாள். உடனே காரடையான் நோன்பை மேற்கொண்டாள். காரடை தயாரித்து அதை ஈசனுக்கே நைவேத்யம் பண்ணி, ஒரே சிந்தனையோட அவன் நாமம் ஜபித்தாள். பிரளயம் விலகிப் போச்சு. பரமன் காட்சி தந்தார். அன்னை காமாட்சியாக, ஐயன் ஏகாம்பரேஸ்வரராக, அவங்களோட திருமணம் அங்கே சிறப்பா நிகழ்ந்தது. சிவ-பார்வதி திருமண பந்தம் இன்னும் உறுதியாச்சு. இதே விரதத்தைக் கடைபிடிச்சதாலதான் எமன் கையிலிருந்து கணவன் சத்தியவானின் உயிரை சாவித்ரியால் மீட்க முடிஞ்சதுன்னும் ஒரு கதை உண்டு.
 
சரி, எப்படி காரடையான் நோன்பை அனுஷ்டிக்கறது? அன்னிக்கு அதிகாலையிலேயே தூங்கி எழுந்து குளிச்சுட்டு, சுத்தமான ஆடை உடுத்தி காரடையைத் தயாரிக்கணும். அந்த அடையோட வெண்ணெய் சேர்த்து சிவபெருமானுக்குப் படைச்சு வணங்கணும். ஒரு மஞ்சள் சரடை எடுத்து பூஜையில் வைத்து, எடுத்து வலது மணிக்கட்டில் கட்டிக்கணும். திருமணமான பெண்கள், கணவர் நோய் நொடியில்லாம நீண்டநாள் வாழ்ந்து தன்னோட குடும்பத்தாருக்கு ஆதரவாக இருக்கணும்னு வேண்டிக்கொண்டு அந்த சரடைக் கழுத்தில கட்டிக்கறது வழக்கம். திருமணத்திற்காகக் காத்திருக்கற பெண்கள் தமக்கு நல்ல கணவன் அமைந்து அவனோடு பன்னெடுங்காலம் வாழ்ந்து வளம் பெறணும்னு வேண்டிப்பாங்க. அப்படி வேண்டிக்கறவங்களை ‘தீர்க்க சுமங்கலி பவ,’ன்னு பரமேஸ்வரன்-பார்வதி தம்பதி ஆசீர்வதிச்சு அருள்பாலிப்பாங்க.
ஓகேயா? அடுத்த மாசம் பார்க்கலாமா?

இந்த மாசத்ல வேற என்ன விசேஷம்?

(மார்ச் 2016)

ஏகாதசி - 5, 19
பிரதோஷம் - 6, 20
அமாவாசை - 8/9
சதுர்த்தி - 12
சங்கடஹர சதுர்த்தி - 27
சஷ்டி, கார்த்திகை - 14
ஹோலி பண்டிகை - 22
பௌர்ணமி - 23