100 பொருட்கள் வாயிலாக பெண்கள் வரலாறு



மருதன்

அறிமுகம்: ஒரு தீக்குச்சி


எல்லா விஷயங்களையும் போல வரலாறும் ஆண்களுக்கானதாகவே இருக்கிறது. அவனே அதன் உந்துசக்தி. ஆதி மனிதன் ஓர் ஆண். சிக்கிமுக்கி கல் கொண்டு நெருப்பு பற்ற வைத்தவன் அவனே. இலைகளையும் விலங்குத் தோல்களையும் கொண்டு ஆடைகள் உருவாக்கியவன் அவனே. பாய்ந்து ஓடக்கூடியவனாக, சண்டையிடும் ஆற்றல் கொண்டவனாக, பலமிக்கவனாக அவனே திகழ்ந்தான் என்பதால் அவனே முதல் வேட்டைக்காரனாகவும் அவதரித்தான். விலங்குகளை கொன்று இறைச்சியை சமைத்தவன் அவனே என்பதால் சமையல் கலையின் பிதாமகன் என்றும் அவனை அழைக்க  முடியும். கருவிகளை உருவாக்கும் ஆற்றலை மனித குலம் பெற்றது அவனால். மனித குலம் பரிணாம வளர்ச்சி பெற்றதற்கு அடிப்படை காரணம் ஆண்!



பள்ளிக்கூடங்களில் தொங்கவிடப்பட்ட வண்ண வண்ண சார்ட்டுகளைப் பார்வையிட்டார் ரோஸாலிண்ட் மைல்ஸ். வேட்டைச் சமூகம், நியோலிதிக் யுகம், வெங்கல யுகம், இரும்பு யுகம் என்று காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. பாடப் புத்தகங்களைப் பிரித்துப் பார்த்தார் மைல்ஸ். மனிதகுலத்தின் நாகரிக வரலாறு விவரிக்கப்பட்டிருந்தது. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்களாக, திட்டமிடுபவர்களாக, முடிவெடுப்பவர்களாக, விவாதிப்பவர்களாக, செயல்படுத்துபவர்களாக ஆண்களே இருந்தார்கள். அரசியல், அறிவியல், சட்டம், கணிதம், மதம் என்று அனைத்துத் துறைகளையும் உருவாக்கி, வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் அவர்கள்தாம். மைல்ஸ் யோசித்தார். பெண்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? வரலாற்றில் ஏன் அவர்கள் எந்தப் பங்களிப்பையும் நிகழ்த்தவில்லை? தன்னந்தனியாக ஓர் ஆண் இந்த உலகைப் படைத்திருக்கிறானா? தன்னந்தனியாக அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் தோற்றுவித்திருக்கிறானா? தன்னந்தனியாக உலக உருண்டையை தன் முதுகில் கட்டி குகையில் இருந்து உருட்டி இங்கே, இந்த இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறானா? எனில், இது உண்மையாகவே மாபெரும் சாதனைதான். கண்கள் பனிக்க, உதடுகள் துடிக்க இரு கரம் சேர்த்துக் குவித்து அந்த மாபெரும் ஆணுக்கு ஒட்டுமொத்த மனிதகுலமும் நன்றிக்  கடன் செலுத்தத்தான் வேண்டும்.

காலம் உருண்டோடத் தொடங்கியது. ரோஸாலிண்ட் மைல்ஸ் வாசித்த புத்தகங்களில் இப்போது சில பெண் பெயர்களும் தட்டுப்படத் தொடங்கின. அவர் கண்கள் ஆச்சரியத்தில் பல மடங்கு விரிந்து மலர்ந்திருக்க வேண்டும். ஜோன் ஆஃப் ஆர்க் பற்றியும் எலிஸபெத் பற்றியும் கிளியோபாட்ரா பற்றியும் அத்தியாயங்கள் விரியத் தொடங்கியபோது அவர் தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டாரா என்று தெரியவில்லை. வரலாற்றில் பெண்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் எப்படி? தலைமுடியை கத்தரித்துவிட்டுக்கொண்டு, கையில் வாளும் கண்களில் கோபமும் மின்ன குதிரையின் மீது ஏறி போரிட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்?

அப்படியானால் பெண்களுக்கும் வீரம் இருந்திருக்கிறது என்று அர்த்தமாகிறது. பெண்களுக்கும் சிந்திக்கத் தெரிந்திருக்கிறது. குதிரை ஓட்டத் தெரிந்திருக்கிறது. பெண்களும் வரலாற்றின் போக்கை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இயன்றவரை உழைத்திருக்கிறார்கள். ஆண்களுடன் சேர்ந்து கொஞ்சம்போல் ஓடியிருக்கிறார்கள். கொஞ்சம் கை கொடுத்திருக்கிறார்கள். ஆண்களைக் கொண்டு மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும் நீண்டு நீண்டு செல்லும் மனித குல வரலாற்றில் ஒரு சில அடிக்குறிப்புகளிலாவது பெண்களின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.. எனவே, பெண்கள் குற்றஉணர்வு கொள்ளத் தேவையில்லை என்றாகிறது அல்லவா? அம்மட்டில் மகிழ்ச்சிதான்.

தொடர்ந்து வாசித்தபோது அந்த மகிழ்ச்சியும் மைல்ஸிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டுவிட்டது. ஜோன் ஆஃப் ஆர்க் வாள் சுழற்றி போராடியது உண்மைதான். ஆனால், பிரெஞ்சு வீரர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லவேண்டிய அவசியம் ஜோனுக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா? தகுதி வாய்ந்த ஆண்கள் அவசரத்துக்கு அகப்படவில்லை. அதே காரணத்தால்தான் முதலாம் எலிஸபெத் இங்கிலாந்தை ஆள நேரிட்டது. எனவே இத்தகைய சம்பவங்களை விபத்துகள் என்றுதான் அழைக்க முடியும். மிஞ்சி போனால் விதிவிலக்குகள் என்று. அதற்கு மேல் நீட்டித்துச் செல்ல இடமில்லை... மன்னிக்கவும். சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் பெண்கள் தன்னெழுச்சியுடன் ஜொலிக்கிறார்கள். ஆண்களின் பாத்திரத்தை அற்புதமாக வகிக்கிறார்கள். ஓர் ஆண் இல்லாத குறையைத் தம்மால் இயன்றவரை பூர்த்தி செய்கிறார்கள். எலிஸபெத்தும் ஜோன் ஆஃப் ஆர்க்கும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே. சபாஷ்!

சரி... குறிப்பாக இந்த இரு பெண்மணிகளும் எதற்காகப் புகழப்படுகிறார்கள்? ஜோன் தன் உயிரைத் தியாகம் செய்ததன் மூலம் மகத்தான ஓரிடத்தைப் பெற்றார். அதுவும் எப்படி? இறைவனின் பெயரை உச்சரித்தபடி உயிருடன் கொளுத்தப்பட்டதன்மூலம் நீங்காப் புகழை ஈட்டினார். அவர் சாதாரண பெண்ணல்ல, புனிதர். இங்கிலாந்தை ஆண்ட முதலாம் எலிஸபெத் இறுதிவரை தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றி புகழ்பெற்றார் என்னும் விஷயம் உங்களுக்குத் தெரியுமல்லவா? மைல்ஸுக்கு அப்போது வாசிக்கக் கிடைத்த பாடப் புத்தகங்களும் பிற புத்தகங்களும் இப்படிப்பட்ட சில அசாத்திய பெண்களையும் புனிதர்களையும் அடையாளம் கண்டு புகழ்ந்திருந்தது. பிளாரென்ஸ் நைட்டிங்கேல் இடம்பெற்றிருந்தார். அமெரிக்க சமூக சீர்திருத்தவாதியும் பெண்ணியவாதியுமான சூசன் பி.ஆண்டனி இடம்பெற்றிருந்தார். மைல்ஸின் அசாத்திய பசிக்கு இந்த நொறுக்குச் செய்திகள் போதவில்லை. இப்படி அபூர்வமாகத் தென்படும் சிலரும்கூட ஏதேதோ காரணங்களுக்காக உயர்த்திப் பிடிக்கப்படுவதைக் கண்டு அவர் எரிச்சலடைந்தார். அதென்ன பெண்ணாக இருந்தும்?  பெண் என்பது ஒரு குறைபாடா?

சிறு வயதில் தோன்றும் கேள்விகள் மரணிப்பதில்லை. நாம் வளர வளர கேள்விகளும் குட்டிப்போட்டு, குட்டிப்போட்டு நமக்குள் வளர்கின்றன. தீராத பெரும்பசியை ஏற்படுத்துகின்றன. இந்தக் குடைச்சல் தீரவேண்டுமானால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். கேள்விகளை நமக்குள் இருந்து வெளியில் இழுத்துப்போட்டு அவற்றுடன் புதிதாக ஓர் உரையாடலைத் தொடங்கவேண்டும். புதிதாக ஒரு தேடலைத் தொடங்கவேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் தீனிபோட்டு அடக்கவேண்டும். அப்போதுதான் பசி ஆறும். ரோஸாலிண்ட் மைல்ஸ் செய்தது அதைத்தான். பள்ளிப் பருவத்தில் இருந்து தனக்குள் உருவாகி வளர்ந்த கேள்விகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்ளத் தொடங்கினார். லத்தீன், கிரேக்கம் பயின்றார். இலக்கியத்திடம் குறிப்பாக ஷேக்ஸ்பியரிடம் தீராத காதல் கொண்டார். எம்.ஏ., பிஹெச்டி என்று மொத்தம் 5 பட்டங்கள் பெற்றார். 13 வயதில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய மைல்ஸ், 26வது வயதில் சட்டமும் கற்று ஒரு மாஜிஸ்டிரேட்டாக பதவியேற்றார். நாவல் எழுதினார். பிபிசி நிறுவனத்தில் வர்ணனையாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

அவருடைய அடிப்படைத் தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. வரலாற்றில் ஏன் இல்லை பெண்கள்? ஏன் அவர்களைத் தேட வேண்டியிருக்கிறது? ஏன் அவர்கள் அடிக்குறிப்புகளில் மட்டும் வாழ்கிறார்கள்? ஏன் அவர்கள் மீது வெளிச்சம் பாயவில்லை? ஒரு ஜோன், ஒரு நைட்டிங்கேல், ஒரு எலிஸபெத் போக மற்றவர்கள் எல்லோரும் எங்கே போய்விட்டார்கள்? அவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டியது அவசியமில்லையா? ஆண்களால், ஆண்களுக்காக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் அனைத்தும் முழுமையற்றவை என்பதுதானே நிஜம்?  வரலாற்றைச் சரிசெய்ய வேண்டியது முக்கியமில்லையா? ஒரு பகுதியை மட்டும் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் எதையுமே தெரிந்துகொள்வதில்லை என்றாகிறது. ஒரு தரப்பை மட்டும் முதன்மைப்படுத்துவதன்மூலம், அதை மட்டுமே அழுத்தமாக வலியுறுத்துவதன் மூலம் நாம் வேறெதையோ மறைக்கப் பார்க்கிறோம் தானே? வரலாறு என்பது பகுதிகளில் அல்ல... முழுமையில் அடங்கியிருக்கிறது. அதனாலேயே அதனை முழுமையாகக் கற்க வேண்டி இருக்கிறது.

ரோஸாலிண்ட் மைல்ஸ் தனது ஆய்வை விரிவுபடுத்தி எழுதத் தொடங்கினார். ‘Who cooked the Last Supper?’  என்னும் புத்தகம் உருவாக ஆரம்பித்தது. அது ஓர் இருள் பயணம். திரும்பும் திசையெங்கும் இருள் பரவிப் படர்ந்திருந்தது. ஒரே ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி கையில் பிடித்தபடி மைல்ஸ் நடக்கத் தொடங்கினார். சில நேரம் அபூர்வமாக ஒரு சிறு வெளிச்சத் துளி எங்கோ இருப்பது போல தோன்றும். அதைப் பாய்ந்து சென்று பற்றிக் கொள்வார். மீண்டும் நடைபோடுவார். மேலும் சில துளிகள் கிடைக்கும். ஒவ்வொரு வெளிச்சத்தையும் சிந்தாமல் அள்ளியெடுத்து சேமித்துக் கொள்வார். கையிலிருந்த தீக்குச்சி மெல்ல மெல்ல தீப்பந்தமாக வளரத் தொடங்கியது. மாபெரும் சாம்ராஜ்யங்களும் பேரரசு களும் அவர் கண்முன் விரிந்தன. அங்கே ஆண்கள் மட்டும் இருக்கவில்லை. வெங்கல யுகம், இரும்பு யுகம் என்று சென்றுகொண்டிருந்தார். அங்கெல்லாம் ஆண்களை மட்டும் அவர் தரிசிக்கவில்லை. குகைகளுக்குள் சென்றார். அங்கு ஆண்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. வேட்டைச் சமூகத்தில் ஆண்கள் மட்டும் காட்சியளிக்கவில்லை. வரலாற்றில் பெண்களும் இருந்தனர். அதென்ன பெண்களும்? வரலாற்றில் பெண்கள் இருந்தனர்.

தன்னுடைய புத்தகத்துக்கு இந்த அளவுக்கு ஆதரவு குவியும் என்றோ கவனம் கிடைக்கும் என்றோ ரோஸாலிண்ட் மைல்ஸ் எதிர்பார்க்கவில்லை. 80 வயது மூதாட்டி ஒருவர் கை நிறைய பிரதிகள் வாங்கிக்கொண்டு போனார். எனக்கு வயதாகிவிட்டது. ஆனால், என் 4 பெண்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இன்னும் வயதாகவில்லை. அவர்கள் கற்கவேண்டிய வரலாறு இதில் இருக்கிறது என்று மைல்ஸுக்கு அவர் கடிதம் எழுதினார். டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த அன்பளிப்பையும் அவர் கூறிய வார்த்தைகளையும் தன்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை என்கிறார் மைல்ஸ். இறந்துபோன தன் அம்மாவின் நெக்லஸ், காதணி இரண்டையும் கொண்டுவந்து மைல்ஸிடம் ஒப்படைத்த அந்தப் பெண் கூறிய வார்த்தைகள் இவை... ‘உங்கள் புத்தகத்தைப் படித்த பிறகு முதல் முறையாக என் அனுபவங்களை பெண்களின் வரலாற்றோடு பொருத்திப் பார்த்து என் வாழ்வையும் அதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டேன். வாழ்நாள் முழுவதும் இதனை மறக்கமாட்டேன். இப்படியொரு முழுமையான திருப்தியை நான் இதுவரை அனுபவித்தது இல்லை!’

வரலாறு அற்று இருந்தவர்களுக்கு ஒரு வரலாற்றைக் கொடுத்ததுதான் மைல்ஸ் செய்த பணி. ஜொலிக்கும் சில நட்சத்திரங்களை திரட்டிக்கொண்டு வந்து காண்பித்து, ‘பார் இதுதான் பெண்களின் பிரகாசமான வரலாறு’ என்று அவர் பரவசப்படவில்லை. பெண்களின் நிஜமான வரலாறு என்பது இதுகாறும் அவர்களுக்கு நேர்ந்த அனைத்தையும் நேர்மையாகப் பதிவு செய்வதில் இருந்து தொடங்குகிறது. இந்த உலகம் பெண்கள் மீது செலுத்திய தாக்கம், பெண்கள் இந்த உலகின் மீது செலுத்திய தாக்கம் இரண்டையும் அத்தகைய வரலாறு
உள்ளடக்கியிருக்க வேண்டும். ஓர் ஆணைப் போல பெண் என்பது இன்னொரு உயிர் என்பது உண்மையல்ல. உலகம் இருவரையும் சமமாக பாவிக்கவில்லை. ஒரே அனுபவங்களை இருவருக்கும் அளிக்கவில்லை. ஒரே வாழ்வை, ஒரே உணர்வுகளை இருவரும் பெற்றிருக்கவில்லை. ஒன்றுபோல பிறந்ததில்லை. ஒன்றுபோல வாழ்ந்ததில்லை. ஒன்றுபோல மரணித்ததும் இல்லை.

ஓர் உலகம் அல்ல; நாம் வாழ்ந்து வருவது இரு வேறு உலகங்களில். இதுவரை நமக்குக் கிடைத்திருப்பது ஓர் உலகத்தின் வரலாறு மட்டுமே. இதுவரை நாம் கண்டிருப்பது ஒரு கண்ணின் காட்சியை. இன்னொரு உலகின் வரலாறை இனிதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மிக நீண்ட காலமாக இருளில் மூழ்கிப்போயிருந்த இந்த உலகை ரோஸாலிண்ட் மைல்ஸ் போன்ற பலர் தீப்பந்தம் ஏந்தி கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த  உலகை தரிசிக்க நம்முடைய இன்னொரு கண்ணையும் நாம் திறந்தாக வேண்டும்.

பெண்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? வரலாற்றில் ஏன் அவர்கள் எந்தப் பங்களிப்பையும் நிகழ்த்தவில்லை? மனிதகுல வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றா? தன்னந்தனியாக ஓர் ஆண் இந்த உலகைப் படைத்துஇருக்கிறானா? தன்னந்தனியாக உலக உருண்டையை தன் முதுகில் கட்டி குகையில் இருந்து உருட்டி இங்கே, இந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறானா?

ஜோன் ஆஃப் ஆர்க் பற்றியும் எலிஸபெத் பற்றியும் கிளியோபாட்ரா பற்றியும் அத்தியாயங்கள் விரியத் தொடங்கியபோது அவர் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. வரலாற்றில் பெண்களும் வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் எப்படி? தலைமுடியை கத்தரித்து விட்டுக்கொண்டு, கையில் வாளும் கண்களில் கோபமும் மின்ன குதிரையின் மீது ஏறி போரிட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்!

சிறு வயதில் தோன்றும் கேள்விகள் மரணிப்பதில்லை. நாம் வளர வளர கேள்விகளும் குட்டிப்போட்டு, குட்டிப்போட்டு நமக்குள் வளர்கின்றன. தீராத பெரும் பசியை ஏற்படுத்துகின்றன. இந்தக் குடைச்சல் தீரவேண்டுமானால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். கேள்விகளை நமக்குள் இருந்து வெளியில் இழுத்துப்போட்டு அவற்றுடன் புதிதாக ஓர் உரையாடலை தொடங்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் தீனிபோட்டு அடக்க வேண்டும். அப்போதுதான் பசி ஆறும்.

(வரலாறு புதிதாகும்!)