பேசும் பொம்மைகள்



வலி வேதனை மறக்கச் செய்யும் கலை

நிரஞ்சனா

சகலகலா வல்லியாக இருக்கிறார் நிரஞ்சனா. பிளஸ் 1 படிக்கிற பெண்ணுக்குள் இவ்வளவு திறமைகளா என பிரமிக்க வைக்கிறார். பாட்டு, நடனம், சமையல், ஸ்கேட்டிங், மேஜிக், மைம், ஷேடோ பிளே என எல்லாவற்றிலும் நிபுணியான நிரஞ்சனாவின் தனிப்பட்ட அடையாளம் அவரது வென்ட்ரிலாக்விசம்!



‘வென்ட்ரிலாக்விசமா? அப்படின்னா?’ எனக் கேட்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகம். `அவர்கள்’ படத்தில் கமல், கையில் ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, `இருமணம் கொண்ட திருமண வாழ்வில்...’ பாடுவாரே... கமலுடன் சேர்ந்து அந்த பொம்மையும் பாடும், பேசும். வாயசைப்பதுகூட தெரியாமல் பொம்மை பேசுவது போலச் செய்கிற அந்தக் கலைதான் வென்ட்ரிலாக்விசம். ஆக... இந்தக் கலை நம்மூருக்குப் புதிதல்ல. ஆனாலும், இதில் ஏனோ பெண் கலைஞர்களே இல்லாமல் இருந்தார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிற நிரஞ்சனா,  வென்ட்ரிலாக்விஸ்ட் வெங்கியின் மகள்!

``ஒரு வயசிருக்கும் போது வாக்கர்ல நடை பழகினபோதே, என்கூட பொம்மைகளை வச்சுக்கிட்டு அதுங்க பேசற மாதிரி பண்ணுவேனாம். அப்புறம் வளர, வளர அப்பா வென்ட்ரிலாக்விசம் பண்றதைப் பார்த்து நானும் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அப்பாகூட சம்மர் கேம்ப்புகளுக்கு போயிருக்கேன். குழந்தைங்களோட குழந்தையா இல்லாம, எனக்கும் தனியா ஒரு பொம்மை வேணும்னு கேட்டு அடம் பண்ணுவேன். அவர் எப்போதும் வெளியூர் நிகழ்ச்சிகள்ல பிசியா இருந்ததால,  இந்தக் கலையைப் பத்தி எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து இப்ப வரைக்கும் உதவியா இருக்கிறவங்க எங்கம்மா...’’ - அம்மாவை இறுக்கி அணைத்தபடி பேச ஆரம்பிக்கிற நிரஞ்சனா, தனது 6வது வயதில் முதல் மேடை ஏறி நிகழ்ச்சி கொடுத்ததன் பின்னணியிலும் அம்மாவே இருப்பதாகச் சொல்கிறார்.

‘`அம்மாவோட ஃப்ரெண்ட் குழந்தைக்கு பர்த்டே... அந்த பார்ட்டியில முதல் முதல்ல என்னை வென்ட்ரிலாக்விசம் பண்ணச் சொன்னாங்க அம்மா. அன்னிக்கு எனக்கு பயங்கர ஃபீவர். ஆனாலும், தைரியமா பண்ணினேன். அந்த புரோகிராமுக்கு நிறைய வி.ஐ.பிஸ் வந்திருந்தாங்க. எல்லாரும் என்னை பாராட்டினாங்க. அப்பலேருந்து நான் ஸ்டேஜ் ஷோஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்...’’ - பெருமையாகச் சொல்பவர், இந்தக் கலைக்காக கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொள்கிறார். "நாம வாயசைக்கிறதே தெரியக்கூடாது. அதே நேரம் நம்ம கையில உள்ள பொம்மையோட பேச்சு தெளிவா கேட்கணும். அது ஈஸியான விஷயமே இல்லை. ஒரே ஒரு பொம்மைன்னா கூட சமாளிக்கலாம். நான் ஷோவுக்கு ஏத்தபடி, கேரக்டருக்கு ஏத்தபடி பொம்மைகளை மாத்துவேன். பெண் குரல்ல பேசறது ஈஸி. ஆண் குரல்ல பேசறது கஷ்டம்.

இதுக்கெல்லாம் நிறைய பயிற்சிகள் எடுக்கணும். மெடிட்டேஷன் பண்ணணும். வென்ட்ரிலாக்விசத்துக்கான ஸ்பெஷல் பயிற்சிகளும் இருக்கு. அதையெல்லாம் ஒருநாள் விடாமப் பண்ணணும்...’’ - என்பவர், இப்போது ஒரே நேரத்தில் 2 பொம்மைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார். "முதல்ல ஒரு சாஃப்ட் டாய்ல ஆரம்பிச்சது. அப்புறம் ரெண்டு குரங்கு பொம்மைகள், ஒரு பறவை வச்சிருக்கேன். குரங்கு பொம்மைகளோட பேர் அஞ்சலினா, அஞ்சன். பஞ்சவர்ணக் கிளியோட பேர் பஞ்ச்னா. இவங்க மூணு பேர்ல பஞ்ச்னா தான் குட்டிப் பாப்பா. அதனால அதை வச்சுப் பண்றபோது, குட்டிப்பாப்பா வாய்ஸ்ல பேசணும்...’’ - சவால்களை விளக்குபவர், இந்த வயதிலேயே பள்ளிக்கூடங்களிலும் கார்பரேட் கம்பெனிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு பிசி.

"என்னோட ஷோவுக்கான ஸ்கிரிப்ட்ைட அம்மாதான் ரெடி பண்ணித் தருவாங்க.  இடத்துக்கு ஏத்தபடியும், ஆடியன்ஸுக்கு ஏத்தபடியும், அந்த நேரத்துப் பிரச்னைகளுக்கு ஏத்தபடியும் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணணும். குழந்தைங்க ஆடியன்ஸ் அதிகமா இருக்கிற இடங்கள்ல அவங்களுக்கு அவசியம் சொல்ல வேண்டிய டிராஃபிக் ரூல்ஸ், இயற்கையைக் காப்பாத்த வேண்டியதன் அவசியம், சுற்றுப்புற சுகாதாரம் மாதிரியான விஷயங்களை எடுத்துப்பேன். பெரிய பெரிய கம்பெனிகளுக்கு ஷோஸ் பண்றேன். ஆனாலும், குழந்தைங்களுக்கு மத்தியில நானும் ஒரு குழந்தையா மாறி பண்ற ஷோஸ் எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கும். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்காக நிறைய ஷோஸ் பண்ணியிருக்கேன். எதுக்குமே ரியாக்ட் பண்ணாத அந்தக் குழந்தைங்களை என்னோட குரங்கு பொம்மையும், அதோட பேச்சும் சிரிக்க வச்சிடும். எய்ட்ஸ் பாதிச்ச குழந்தைங்களுக்காக ஒரு ஷோ பண்ணினேன். சாவோட விளிம்புல இருந்த பிள்ளைங்க எல்லாரும். அது அவங்களுக்கே தெரியாது. ரொம்ப கனத்த மனசோட அவங்க முன்னாடி ஷோ பண்ணினேன். அடுத்த கொஞ்ச நாள்ல இந்த உயிரோட இருக்கப் போறதில்லைனு தெரியாம அந்தக் குழந்தைங்க மனசு விட்டு சிரிச்சு, என் நிகழ்ச்சியை என்ஜாய் பண்ணினதைப் பார்த்தப்ப மனசுக்குள்ள அழுதேன். ஆனாலும், வலியையும் வேதனையையும் மறந்து அவங்களை சிரிக்க வச்சதை பெரிய ஆசீர்வாதமா எடுத்துக்கிட்டேன்...’’ - நெகிழ்ச்சியாகச் சொல்கிற நிரஞ்சனா, இப்போது பிளஸ் 1 மாணவி.

"ஸ்கூல்ல படிச்சிட்டு எப்படி ரெண்டையும் பேலன்ஸ் பண்றேனு கேட்காத ஆளே இல்லை. டென்த் படிக்கிறபோதும் நான் நிறைய ஷோஸ் பண்ணியிருக்கேன். `டென்த்தா’னு ஆச்சர்யமா கேட்டவங்க, இது மாதிரி கலைத்துறைகள்ல இருக்கிறவங்களுக்கு படிப்புல பெரிசா ஆர்வம் இருக்காதுன்னும் பேசியிருக்காங்க. நான் டென்த்ல 500க்கு 487 மார்க்ஸ் தெரியுமா? பிளஸ் ஒன்ல சயின்ஸ் குரூப் எடுத்திருக்கேன். எனக்கு ஹோமியோபதி டாக்டராகணும்னு ஆசை. எங்கம்மா ஹோமியோபதி டாக்டர். அவங்களைப் பார்த்து எனக்கும் அதுல இன்ட்ரஸ்ட் வந்திருச்சு. இன்னொரு விஷயம் ஹோமியோபதி மருந்து மட்டும்தான் ஸ்வீட்டா இருக்கும்...’’ - குழந்தைக் குரலில் குதூகலிப்பவருக்கு வேறு சில ஆசைகளும் இருக்கின்றனவாம்.

"நடிகை கலைராணி எனக்கு பெரியம்மா. அவங்க நடிகர், நடிகைகளுக்கு கிளாஸ் எடுக்கும் போது நானும் அவங்களோட இருப்பேன். கூடவே நடிச்சுக் காட்டுவேன். என் பெரியம்மா வாயால நல்ல நடிகைனு பாராட்டும் வாங்கிட்டேன். டென்த் படிக்கிற வரைக்கும் எந்த கவனச்சிதறலும் இருக்கக்கூடாதுனு நடிப்பைப் பத்தி யோசிக்கலை. இப்ப திடீர்னு நடிக்கலாமேனு ஒரு ஆசை. அம்மாகிட்ட சொன்னேன். ஓ.கேனு சொல்லிட்டு, பெரியம்மாகிட்ட கொண்டு போய் விட்டுட்டாங்க. அவங்கக்கிட்டயே நானும் ஆக்டிங் கிளாஸ் போறேன். வெயிட்டை குறைக்க ட்ரை பண்ணிட்டிருக்கேன். `பசங்க’, `காக்காமுட்டை’, `கோலி சோடா’ மாதிரியான படங்கள்ல நடிக்க சான்ஸ் வந்தா சந்தோஷப்படுவேன். இன்னொரு பக்கம் பாடகர்களோட பாடி லாங்வேஜை அவங்களோட குரல்ல பாடி, இமிட்டேட் பண்றதுக்கும் பழகிட்டிருக்கேன்.  நிறைய ஷோஸ்ல அதைப் பண்ணியிருக்கேன். பயங்கர பாராட்டு வருது. அதுல ஸ்பெஷலைஸ் பண்ற ஐடியாவும் இருக்கு.

எனக்கு அடையாளம் கொடுத்த வென்ட்ரிலாக்விசத்தை என்னிக்குமே விடறதா இல்லை. அடுத்து மூணு பொம்மை களை வச்சு ஷோ பண்ணணும். அதான் சேலன்ஜ். ஐம் வெயிட்டிங்...’’ - தம்ஸ் அப் காட்டி கண் சிமிட்டுகிறார் நிரஞ்சனா.

சாவோட விளிம்புல இருந்த பிள்ளைங்க  எல்லாரும். அது அவங்களுக்கே தெரியாது. ரொம்ப கனத்த மனசோட அவங்க முன்னாடி ஷோ  பண்ணினேன். அடுத்த கொஞ்ச நாள்ல இந்த உயிரோட இருக்கப் போறதில்லைனு தெரியாம  அந்தக் குழந்தைங்க மனசு விட்டு சிரிச்சு, என் நிகழ்ச்சியை என்ஜாய்  பண்ணினதைப் பார்த்தப்ப மனசுக்குள்ள அழுதேன்...