நீங்கதான் முதலாளியம்மா



பழைய புடவைகளை புதிதாக மாற்றலாம்!

அருணா


டிசம்பர் மாத மழையும் வெள்ளமும் புரட்டிப் போட்ட வாழ்க்கையின் பாதிப்புகளில் இருந்து இன்னும்கூட மக்கள் முழுமையாக வெளியே வரவில்லை. பலருக்கும் பூஜ்யத்திலிருந்தே வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம். கழுத்து வரை தண்ணீர் புகுந்த வீடுகளில் பலராலும் காப்பாற்ற முடியாத பொருட்களில் பீரோவும் ஒன்று. அதனுள்ளே இருந்த உடைகள் மொத்தமும் பாழான அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களுக்கு ஆறுதலான சேதி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அருணா. பொட்டிக் வைத்து நடத்துகிற இவர், வெள்ளத்தில் பாழாகி, பழையதாகி, நிறம் மங்கிப் போன காஸ்ட்லியான உடைகளுக்கு புது மெருகு ஏற்றித் தருகிறார். அதையே அடுத்தவர்களுக்கு பிசினஸாகவும் சொல்லித் தருகிறார்.



``பிளாக் பிரின்ட்டிங், டை அண்ட் டை, பத்திக் பிரின்ட்டிங் எல்லாம் நானே பண்ணி, அந்த புடவைகளையும் சல்வார்களையும் விற்பனை பண்ணிட்டிருக்கேன். மூணு மாசத்துக்கு முன்னாடி மழையும் வெள்ளமும் வந்ததுல நிறைய பேர் பீரோவுக்குள்ள வச்சிருந்த காஸ்ட்லியான பட்டுப் புடவைகளும் டிசைனர் புடவைகளும் பாழாப் போச்சுனு தூக்கிட்டு வந்து, ‘அதையெல்லாம் ஏதாவது செய்ய முடியுமா’னு கேட்டாங்க.  பொதுவா இது மாதிரி சாயம் மங்கிப் போகற புடவைகளையும் பழசான புடவைகளையும் டையிங்தான் பண்ண முடியும். டையிங்ல உள்ள கெமிக்கல்ஸ், துணியை சீக்கிரமே கிழிய வச்சிடும்.

அதனால நான் என்னோட பிளாக் பிரின்ட்டிங் முறையிலயே பழைய புடவைகளுக்கு புது மெருகு ஏத்திக் கொடுக்க முடியுமானு முயற்சி பண்ணினேன். எதிர்பார்த்ததைவிட பிரமாதமா வந்தது. பழைய புடவைன்னே சொல்ல முடியாத அளவுக்கு அதோட தோற்றமே புத்தம் புதுசா மாறியிருந்தது. அதுலேருந்து இந்த பிசினஸை தீவிரமா பண்ணிட்டிருக்கேன்...’’ என்கிற அருணா, கடி, பைண்டர் மற்றும் மெட்டாலிக்  என மூன்றுவிதமான கலர்களில் இதைச் செய்கிறார்.

``கடிங்கிறது லைட் கலர் கொடுக்கிறது. பைண்டர்ங்கிறது டார்க் கலர். மெட்டாலிக்ல சில்வர், கோல்டு, பிரான்ஸ் கலர்கள்ல டிசைன் பண்ண முடியும். இந்த டெக்னிக்கை பட்டு, சில்க் காட்டன், காட்டன், ஷிஃபான், கிரேப், கோட்டானு எல்லா ெமட்டீரியல்லயும் பண்ண முடியும். பிளாக்ஸ் வாங்கவும், அதுக்கான சின்ன டேபிள் ரெடி பண்ணவும் 3 முதல் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். இதே டெக்னிக்கை புதுத் துணிகள்ல பண்ணினா இன்னும் ஸ்பெஷல். ஒரு புடவைக்கு 300 முதல் 500 ரூபாய் வரைக்கும் கட்டணம் வாங்கலாம். 2 நாள்ல வேலையை முடிச்சுக் கொடுக்க முடியும். இப்பல்லாம் யாருமே புடவைகள் கிழிஞ்சோ, நைந்தோ போய் தூக்கிப் போடறதில்லை. சென்டிமென்ட்டலான புடவைகள் எல்லார்கிட்டயும் இருக்கும். பழசானதால கட்டவும் முடியாம, தூக்கிப் போடவும் முடியாம தவிப்பாங்க. அந்த மாதிரி சேலைகளுக்கு இது சூப்பர் தீர்வு...’’ என்கிற அருணாவிடம் ஒரே நாள் பயிற்சியில் பழசைப் புதுசாக்கும் டெக்னிக்கை கற்றுக்கொள்ளக் கட்டணம் 700 ரூபாய்.

பட்டுநூல் நகைகள்

உமா மகேஸ்வரி



பட்டுப்புடவைகளுக்கும், சில்க் காட்டன் புடவை மற்றும் சல்வாருக்கும் மேட்ச்சிங் நகைகள் தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலானது. தங்க நகைகளைத் தவிர வேறு எதுவும் அதற்குப் பொருந்தாது. என்னதான் பார்த்துப் பார்த்து மேட்ச்சாக வாங்கினாலும் அதில் தெரிகிற கொஞ்சூண்டு வித்தியாசம் காட்டிக் கொடுத்துவிடும். பட்டுப்புடவையிலிருந்தே பிய்த்து எடுத்துச் செய்த மாதிரியான தோற்றத்தைக் கொடுப்பவை பட்டுநூல் நகைகள் மட்டுமே. பட்டுநூல் நகைத் தயாரிப்பில் பிசியாக இருக்கிறார் சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்த உமா மகேஸ்வரி.

"பிளஸ் டூ வரைக்கும்தான் படிச்சிருக்கேன். நிறைய விதமான நகைகள் செய்யத் தெரியும். சமீப காலமா பட்டுநூல் நகைகள் செய்யறதுல தீவிரமா இருக்கேன். அதுக்கு நிறைய டிமாண்ட் இருக்கு. பட்டுப்புடவை என்ன கலரோ, அதே கலர்ல நகைகள் செய்து போட்டுக்க முடியும். பட்டுல வரக்கூடிய எல்லாவிதமான காம்பினேஷனையும் அப்படியே நகைகள்ல கொண்டு வரலாம். செலவும் கம்மி...’’ என்கிற உமா மகேஸ்வரி, பட்டுநூலில் தோடு, ஜிமிக்கி, காதுக்கான வளையங்கள், கைகளுக்கு வளையல்கள் என எல்லாம் செய்கிறார். அவற்றிலேயே ஸ்டோன் மற்றும் முத்துகள் வைத்துச் செய்வது இவரது சிறப்பம்சம். ``வெறும் 1000 ரூபாய் முதலீட்டுல பட்டுநூல் நகைத் தயாரிப்பு பிசினஸை தொடங்கலாம். ஒரு நூல்கண்டோட விலை 15 ரூபாய். ஹோல்சேல் கடைகள்ல 12 ரூபாய்க்கு வாங்கலாம். ஒரு நூல்கண்டுல 15 முதல் 20 தோடு அல்லது 5 வளையல்கள் பண்ணலாம். இதுல முக்கியமான விஷயமே வேஸ்ட்டேஜ் இல்லாமப் பண்றதுதான். நூல்கண்டை சிக்கல் இல்லாமலும், வேஸ்ட் ஆகாமலும் கையாளக் கத்துக்கிறதுதான் முதல் பயிற்சி. அது கைவந்துட்டா, நகைகள் பண்றது சுலபமாயிடும்...’’ -  டிப்ஸ் சொல்பவர், ஒரு நாளைக்கு 10 செட் வரை பட்டுநூல் நகைகள் செய்யலாம் என நம்பிக்கை தருகிறார். ``ஒரு செட் ஜிமிக்கியை சின்ன சைஸ்னா 70 ரூபாய்க்கும், பெரிசுன்னா 110 ரூபாய்க்கும் விற்கலாம். மொத்தமா ஆர்டர் எடுக்கும் போது, கொஞ்சம் தள்ளுபடி விலையில கொடுக்கிறது லாபமானதா இருக்கும். டபுள் கலர், ட்ரிபிள் கலர்னு கிரியேட்டிவா பண்ணித் தந்தா இன்னும் அதிக ஆர்டர் குவியும்’’ என்பவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான பட்டுநூல் நகைகள் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். தேவையான பொருட்களும் அடக்கம்.

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்