எது ரைட் சாய்ஸ்?



ஏா்கண்டிஷன்

ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!

இன்றைக்கு நம் தலைமுறையினர் ‘Take it Granted’ ஆக,  அதாவது, மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பல விஷயங்களின் கண்டுபிடிப்புகள் அத்தனை எளிதாக இல்லை. ஒரு காலத்தில் ஏ.சி. அதாவது, குளிரூட்டப்பட்ட  கடைகளை  ஒரு முறை போய் பார்க்கணும் என்று சொல்லுவோம். இப்போது இத்தொழில்நுட்பம் தொடாத இடங்களே இல்லை. மற்ற பல விஷயங்களும் கண்டுபிடிப்புகளும் அரசாங்கம் அல்லது பணக்காரர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டது. குளு குளு கூல் கூல் தொழில்நுட்பமும் அப்படித்தான்!



ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு  விதமாக  வெயிலில் இருந்து தப்பித்து குளிரூட்ட என்னென்னவோ முயற்சிகள். எகிப்தில் மரத்தில் ஆன திரையை தொங்கவிட்டு நீர் ஓடுவதுபோலச் செய்வார்கள். அதன் வழியே வெளிக்காற்று வீசும்போது குளுமையாக இருக்கும். இப்போது கல்யாண மண்டபங்களில் விண்ட் ஸ்க்ரீன் எனப்படும் குளிர்காற்று திரைக்கு மூப்பன் கண்டுபிடிப்பு!

ரோம் போன்ற நாடுகளில் அக்வா டக்ட் எனப்படும் சிறு கால்வாய் குழாய் போன்ற அமைப்பில் நீர் செல்லும். இது சுவர் வழியாக செல்கையில் அறைக்கு குளுமை தரும். அதிக குளிரும் வெப்பமும் உள்ள பாலைவன நாடுகளில் க்வானத் (qanat)  எனப்படும் அமைப்பைக் கட்டினார்கள். காற்றுப்புகும் ஜன்னல் வழியே உள்புகும் காற்று, நீர் கால்வாய் வழியாக உள்ளே செல்லும். அவை வீட்டின் அடிப்பாகத்தை - அதாவது, பேஸ்ெமன்ட் அறையை குளிரூட்டும். பிறகு காற்று, ஜன்னல்கள் மூலம் வெளியேறும் காற்று நீர் வழியே பயணப்படுவதால் குளிர்ச்சியாக இருக்கும். இதன் மூலம் வீடு குளிரூட்டப்படுகிறது.

சீனாவில் இரண்டாம் நூற்றாண்டில் விசிறியை அறைக்குக் குளிரூட்ட கண்டுபிடித்தார்கள். இம்பீரியல் மாளிகையில் ஒரு குளிர் அறை கட்டப்பட்டது. நீரால் சுழலும் சக்கரம் மூலம் குளிர் காற்று அனுப்பப்பட்டது. இந்தச் சக்கரங்கள் நீரூற்று மேலே எழும்பவும் உதவின. இந்தியா உள்பட பல நாடுகளில் முற்றம், மேலே ஜன்னல் போன்ற அமைப்புகள் வீடுகளை, பொது இடங்களை குளிரச் செய்வதில் முக்கியப் பங்காற்றின. முக்கியமாக ஜெய்ப்பூரில் உள்ள ஹவா மஹால் இன்றும்  இயற்கையாகவே காற்று வந்து குளிர்விக்கும் வகையில்
கட்டப்பட்டு இருக்கிறது. 953 ஜன்னல்கள் காற்றுப்புக ஏதுவாக உள்ளன. அவற்றின் வழியே குளிர்காற்று உள்புகுந்து மாளிகையை குளிரூட்டுகிறது. இன்றும் ராஜஸ்தானின் பல அரண்மனைகளில் ஏ.சி. அவசியம் இல்லாமலே இருக்கிறது.

அதை விடவும் தென்னங்கீற்றில் வேய்ந்த குடிசை அமைப்பு குளிர்ச்சியாகவே இருக்கும். இப்படி பல இயற்கை வழிகளை விட்டுவிட்டுதான் செயற்கை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அந்தக் காலத்து கட்டிடக்கலையை உற்றுநோக்கினால் காற்று பிடிப்பான் ஜன்னல்களை அமைத்து இருப்பர். அதன் வழியே காற்று உள்புகுந்து வெம்மையை சமப்படுத்தும். பல நாடுகள் காற்று பிடிப்பான் ஜன்னல்கள் கட்டுவதில் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதெல்லாம் சரி... இனி ஏ.சி. இல்லாமல் வாழ முடியுமா? அதுவும் வெயில் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்கிறவர்களுக்கு இதோ ஜில்லுன்னு ஏ.சி.யை எழுத்தில் கொண்டு வருகிறோம்!



1758ல், திரவம் ஆவியாகும்போது அந்த இடம் குளிர்விக்கப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஆல்கஹால் ஆவியானால் அந்த இடம் குளிர்ச்சியாகும். இது மிக முக்கியமான கண்டுபிடிப்பு. சில திரவங்களை  கையில் தடவிப் பார்த்தாலே உணரலாம். 1830ல் ஒரு ஆராய்ச்சியாளர் காற்று அழுத்தம் மூலமாக ஐஸ் தயாரித்து, அதன் வழியே காற்றை அனுப்பி, அந்தக் குறிப்பிட்ட பகுதியை குளிரச் செய்யும் கண்டுபிடிப்பைச் செய்தார். உரிமம் வாங்கியும் பண முதலீடு இல்லாததால் அவரின் கனவு காற்றில் கரைந்தது. அடுத்து மருத்துவர் ஒருவர் நோயாளிகளை வெயிலில் இருந்து காப்பாற்றி குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கும்போது நோயின் வெம்மையைக் குறைக்கலாம் என்று கண்டறிந்தார். அதைத் தவிர வெம்மையால் வரும் நோய்கள் குறைகிறது என்றும், வெயிலில் ஏற்படும் இறப்புகள் தவிர்க்கப்படுகிறது என்றும் கண்டறிந்தார். மருத்துவமனையில்  சில நோயாளிகளுக்கு  முக்கியத் தேவையான குளிரூட்டப்பட்ட அறை இருப்பதாகக் கூறினார். இதன் பிறகு அதன் முக்கியத்துவம் இன்னும் கூடியது.

1881ல், அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபில்ட் குண்டடிபட்டு வீழ்ந்தபோது, அவரை குளிரூட்டப்பட்ட அறையில் தங்க வைக்க புது கண்டுபிடிப்பு செய்தனர். அதாவது, ஈர திரைச்சீலையில் காற்றை கம்ப்ரசர் மூலம் வீசும்படி செய்தனர். அதனால் அறை நன்றாக குளிர் செய்யப்பட்டது. ஆனால், பல லட்சம் கிலோ ஐஸ்கட்டிகள் காற்றில் கரைந்து செலவை அதிகப்படுத்தின. எனவே, இந்த முறை தோல்வியில் முடிந்தது. வட கரோலினா மாநிலத்தில் ஸ்டுவர்ட் என்பவர் வென்டிலேட்டிங் இயந்திரம் கண்டுபிடித்தார். அவரின்  நெசவுத் தொழிற்சாலைக்குள் ஈரக்காற்றை அனுப்பியபோது கம்பளி நூல் உடையாமல் எளிதாக நெசவு செய்ய வசதியாக இருந்தது. உலகின் முதல் குளிரூட்டப்பட்ட அறை அங்குதான் உருவானது. 1906ம் வருடம்!

8 வருடங்களுக்கு பிறகு 7 அடி உயரம், 6 அடி அகலம், 20 அடி நீளமுடன் ஒரு வீட்டில் குளிர் வசதி செய்யப்பட்டது. ஆனால், அந்த வீடு உபயோகத்தில் இல்லாததால் யாருக்கும் உபயோகம் ஆகவில்லை! வில்லிஸ் கேரிர் என்பவர் இதில் பல மாற்றங்களை படிப்படியாகக் கொண்டு வந்தார். அதில் மிக முக்கியமானது கெடுதலான குளிர் திரவம் அம்மோனியாவை மாற்றியதுதான். 1950களில் மேல்நாடுகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் சம்மர் பீக் அவர் என்று மின்சார விநியோகத்தை கவனிக்கும் அளவுக்கு ஏ.சி. தன் கைகளை விரிக்க ஆரம்பித்தது.

இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியலாளர் மார்க்கம் ஏ.சி.தான் உணவுக்குப் பிறகு மனிதகுலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று கூறினார். இன்று உலகில் பணக்கார நாடுகளில் பெரும்பாலான வீடுகள் குளிர்சாதனம் இல்லாமல் இருப்பதில்லை. இந்தியாவிலும் அதன் ஆக்டோபஸ் கைகளால் விரிந்து ஆழமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இனி குளிரூட்டப்பட்ட அறை இல்லையென்றால் வாழவே தெரியாத சில மனிதர்களையும் உருவாக்க தவறவில்லை இந்த இயந்திரம்.



குளிர்சாதன இயந்திரம் எப்படி இயங்குகிறது?

இந்தியாவில் குடிசை, ஓட்டு வீடுகளில் காற்றோட்டமாக உட்கார்ந்து இருந்த நமக்கு, இன்று ஏ.சி. இல்லாவிடில் எதுவுமே இல்லை என்கிற நிலை. ஏற்கனவே ஃப்ரிட்ஜ் பகுதியில் எழுதியதுதான். ஒரு டார்டாய்ஸ் ஃபிளாஷ் பேக்... முயல் வேகத்தில்! குழாயில் அதிக அழுத்தத்தில் ரெஃப்ரிஜன்ட் வாயு சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த வாயுவுக்குக் கூட பெரிய வரலாறு உண்டு. இப்போதுதான் சுற்றுச்சூழலுக்கு அதிக ஆபத்து இல்லாத வாயு வந்திருக்கிறது. அந்த வாயுதான் குளிர்விக்க பயன்படுகிறது. கேப்பிலரி வால்வ் என்று ஒன்று இருக்கும். அது கிட்டத்தட்ட நம்ம ஸ்ப்ரிங் அமைப்பில் இருக்கும். அங்கு அதிக அழுத்தத்தில் திரவம் அனுப்பப்படும். அது சுற்றிச் சுற்றி அழுத்தம்  விரிவடையும் போது குளிர்ந்து  வெளியேறும். அது பெட்டிக்குள் இருக்கிற பொருட்களை குளிர்வித்து, அந்தப் பொருட்களின் வெப்பத்தை தான் தாங்கி சூடாக வெளியேறும். இது வெப்ப இயக்கியவியல் என்று சொல்லப்படும் தெர்மோ டைனமிக் தொடர்புடைய  விஷயம். அந்த வெப்பம் குளிர் சாதனப் பெட்டியின் பின்புறம் இருக்கிற கம்பிகள் மூலமாக வெளியேற்றப்படும். பிறகு அது கம்ப்ரசர் வழியாக போகையில் கம்ப்ரசர் அதை அதிக அழுத்தத்துடன் வெளியேற்றும். அப்போது அது கேப்பிலேரி குழாய் வழியாக திரும்பி போகையில் குளிர்விக்கப்படும். அழுத்தமாக அனுப்பி அது  விரிவாகும்போது குளிரும் விதியை பயன்படுத்தி குளிரூட்டப்படுகிறது. இப்படி திரவமாக வாயுவாக மாறிக்கொண்டே இருக்கும்.

இதே தெர்மோ டைனமிக்  விஷயம்தான் இங்கும். அடிப்படை ஒன்றுதான்... ரெஃப்ரிஜன்ட் எனப்படும் திரவம் குளிரூட்டப்பட்டு அது காற்றை குளுமையாக்க உதவுகிறது. முதன் முதலில் கம்ப்ரசர் அமைப்பு சிறிதாக செய்யப்பட்டு தொழில்நுட்பம் வளர்ந்தவுடன் ஜன்னலில் பொருத்தும் பெட்டி வடிவத்தில் வந்தது. படத்தில் காட்டப்பட்டு இருக்கும் தொழில்நுட்பத்தில் குளிரூட்டப்பட்ட காற்று நம் அறை அருகில் இருக்கும் விசிறியால் அழுத்தத்துடன் அனுப்பப்படுகிறது. அதே நேரத்தில் சூடான காற்று வெளியேற வழி தேவை. அவை நம் வீடுகளில் இருக்கும் எக்சாஸ்ட் விசிறி போல செயல்பட்டு சூடான காற்றை வெளியே அனுப்புகிறது. எங்கள் மாமா வீட்டில் ஒரு முறை அறைக்கு குளிரூட்ட ஏ.சி. வைத்துவிட்டு, அதன் அமைப்பு கூடத்தின் வெளியே இருந்தது. இரவு முழுக்க ஓடினால் காலை கூடம் முழுதும் சூடாக இருக்கும். அறையின் வெப்பம் வெளியேற்றப்பட்டு இருக்கும்.

சரி, அறை வெப்பம் மட்டும்தானே வெளியேறும். ஆனால், நீர் சொட்டுகிறதே? எங்கிருந்து வருகிறது இந்த நீர்? இப்படி பல நாள் யோசித்து இருக்கிறேன். ஒரு டம்ளரில் குளிர்நீரை ஊற்றினால் வெளியே வியர்த்து இருக்கும். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இதுவும். குளிரூட்டும்போது காற்றில் உள்ள ஈரப்பதமும் வெளியேறுகிறது. சில இடங்களில் மிக அதிகமாக ஈரப்பதம் இருக்கும். நமக்கே கச கச என்று இருக்கும். தட்பவெப்ப நிலை சீராகும்போது நீர் வெளியேற்றப்பட்டு வெளியே வருகிறது. அடுத்து ஸ்ப்ளிட் சிஸ்டம் எனப்படும் இப்போது பரவலாக உள்ள குளிர்சாதன முறை. இதில் இரு வகைகள். டக்ட் எனப்படும் வகையில் ஒரே நேரத்தில் பல அறைகள் குளிர்விக்கப்படுவது. இன்னொன்று ஒரே ஒரு ப்ளோயேர் உள்ள தனிப்பட்ட அமைப்பு.



அதே தொழில்நுட்பம்தான் இங்கும். ரெஃப்ரிஜன்ட் கேஸ் கம்ப்ரசர் உள்ளே அதிக அளவில் அழுத்தப்பட்டு  குழாய் வழியே செல்லும்போது சுருங்கி உறைதல் நடக்கிறது. அந்த நேரத்தில்  காற்று உள்ளே செலுத்தப்பட்டு அந்தக் காற்று குளிர்விக்கப்படுகிறது. இந்த ரெஃப்ரிஜன்ட் வாயு, குளிர்ந்தும் சூடாகியும் உள்ளே சுற்றிக்கொண்டே இருக்கும். ஸ்ப்ளிட் முறையில் கண்டன்சர், எக்சாஸ்ட் ஃபேன் போன்றவை வெளியே உள்ள அமைப்பில் இருக்கும். உள்ளே இருக்கும் அமைப்பில் சென்சார் அமைப்புகள், காற்றை உள்ளே செலுத்தும் விசிறிகள் இருக்கும். இரண்டும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும். இதனால் ஜன்னல் இல்லாத அறைகளை கூட குளிரூட்ட முடியும். சில இடங்களில்  ஜன்னல் குளிர்சாதனம் பொருத்தப்பட முடியாது. அந்த இடங்களில் இந்த ஸ்ப்ளிட் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. ஆயிரம் வார்த்தைகளை விட ஒரு படம் தொழில் நுட்பத்தை எளிதாக விளக்கிவிடும். இந்தப் படத்தின் மூலமாக  ஸ்ப்ளிட் அமைப்பு பற்றி தெரிந்துகொள்ள முடியும்.