லதா லலிதா லாவண்யா



மகளிர் தினத்துக்குக் கூட ட்ரீட் வேணுமாம்!

ஜென்னி

தெருக்கூத்து பார்ப்பதற்காக லதாவும் லலிதாவும் நாகேஸ்வரராவ் பார்க் வந்து சேர்ந்தனர். கூத்து பார்ப்பதற்கு ஒருபக்கம் கூட்டம் குழுமியிருந்தது. இன்னொரு பக்கம் நடைப்பயிற்சியில் ஒரு கூட்டம் ஈடுபட்டிருந்தது. ‘‘நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் நேரம் ஆகும் போலருக்கு... லாவண்யா வரும் வரை ரெண்டு ரவுண்ட் நடந்துட்டு வரலாம்’’ என்றாள் லதா. இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.

‘‘என்ன லலிதா, மகளிர் தினத்துக்கு உங்க பத்திரிகையில் ஏதாவது ஸ்பெஷல் ஸ்டோரி செய்யறீங்களா?’’ ‘‘அதெல்லாம் இப்போ ரொம்ப சம்பிரதாயம் ஆகிருச்சு லதா! அதனால, நாங்க வேற மாதிரி பிளான் பண்ணியிருக்கோம்...’’ ‘‘எங்க ஆபீஸில் விமன்ஸ் டேக்கு ட்ரீட் கொடுக்கணும்னு படுத்தி எடுக்கறாங்க... ரொம்பக் கடுப்பா இருக்கு... விமன்ஸ் டே எதுக்காக என்பது கூட இவங்களுக்குத் தெரியலை...’’ ‘‘எங்க ஆபீஸில் கூட, ‘நீங்க எல்லாம் படிச்சு, வேலையில் இருக்கீங்க...



இதுக்கு மேல என்ன வேணும்’னு கேட்கறாங்கப்பா...’’ ‘‘ஹாய்!’’ என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினர். லாவண்யா வேகமாக வந்து கொண்டிருந்தாள். ‘‘நான் வர்றதுக்குள்ள அரட்டை ஆரம்பிச்சாச்சா? எனக்குக் கொஞ்சம் கால் வலி. நடக்க முடியாது. மரத்தடியில் உட்கார்ந்து பேசலாம்...’’ ‘‘நம்ம மீட்டிங்கே ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவதான் நடக்குது... இதுல நீ வேற லேட்டா வர்றே?’’ என்று செல்லமாக முறைத்தாள் லலிதா. ‘‘லீவ் நாளில் கூட கிளம்பிடறாளேன்னு வீட்ல எல்லோரும் ஒரு பார்வை பார்க்கிறாங்க. குழந்தை வேற விடமாட்டேனுட்டான்...’’ ‘‘எல்லார் வீட்டிலும் அதே கதைதான்... அதுக்காக நமக்கே நமக்கான நேரத்தை விட்டுத் தந்துடக்கூடாது... உறுதியா இருக்கணும்’’ என்று சிரித்தாள் லதா. லலிதாவும் லாவண்யாவும் தலையசைத்து ஆமோதித்தனர்.

‘‘என்ன பேசிட்டு இருந்தீங்க?’’ ‘‘மகளிர் தினத்தை வைத்து எங்க ஆபீஸ்ல நடக்கும் கூத்துகளைப் பத்திதான்...’’ ‘‘நம்ம நாட்டில் டாய்லெட்களை விட செல்போன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமா இருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்தால் அவசரத் தேவைக்கு ஒரு டாய்லெட் இருக்க மாட்டேங்கிது. இந்த லட்சணத்தில் மகளிர் கொண்டாட்டமா?’’ ‘‘ஏய்... இந்த பார்க், பீச்ல எல்லாம் மொபைல் டாய்லெட் இப்போ வச்சிருக்காங்கப்பா... உனக்குத் தெரியாதா?’’ - லலிதா. ‘‘மொபைல் டாய்லெட்ல தண்ணி இல்லைன்னா அது வெறும் டப்பாதான். இருக்கிற மாதிரி இருக்கணும்... யூஸ் பண்ணிடவும் கூடாது... இப்படி இருந்தா எப்படி?’’ ‘முஸ்தபா முஸ்தபா... டோன்ட் ஒர்ரி முஸ்தபா... மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்’ பாடல் எங்கோ ஒலித்தது. ‘‘போப் இரண்டாம் ஜான் பால் நட்பை விட உறுதியான நட்பை நீங்க சொல்ல முடியுமா?’’ என்று கேட்டாள் லலிதா.

‘‘கார்ல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் நட்புக்கு இணையா வேறு எந்த நட்பையும் நான் ஏத்துக்க மாட்டேன்... நம்ம நட்பு உள்பட!’’ என்றாள் லதா. ‘‘நான் சொல்றது ஆண்-பெண் நட்பு. அமெரிக்க தத்துவவியலாளர் அன்னா- தெரசாவுடன் 35 ஆண்டுகள் நட்பில் இருந்திருக்கிறார் ஜான் பால். ரொம்ப ஆச்சரியமா இருக்கு இல்ல!’’ ‘‘ஓ... இதைத்தான் திருமணமான பெண்ணுடன் போப் நட்புன்னு தலைப்பு வச்சு உங்க பத்திரிகையில எல்லாம் நியூஸ் போட்டீங்களா?’’ ‘‘லலிதாவை இன்னும் சீண்டலையேன்னு பார்த்தேன்...’’ என்று செல்லமாக லதாவின் காதைத் திருகினாள் லாவண்யா. ‘‘நட்பில் ஆண் நட்பு என்ன? பெண் நட்பு என்ன? ஒரு ஆணிடம் பழகும்போது நமக்கு அவர் ஆண் என்ற எண்ணம் வராமல் இருந்தால், அதுதான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப்னு சொல்வேன். நட்புக்கு அன்பும் நம்பிக்கையும்தான் தேவை. பாலின வித்தியாசம் தேவை இல்லை... நீங்க என்ன சொல்றீங்க?’’

‘‘நீ சொல்றது ரொம்ப கரெக்ட். எனக்கும் அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் இருக்கிறார்...’’ என்று சிரித்தாள் லாவண்யா. ‘‘சத்தமா சொல்லாதேடி. திருமணமான பெண் ஓர் ஆணிடம் நட்பு என்று யாராவது தலைப்பு வச்சு நியூஸா போட்டுடப் போறாங்க!’’ ‘‘அதுக்கெல்லாம் போப் மாதிரி பிரபலமா இருக்கணும்... நம்மை யாரும் கண்டுக்க மாட்டாங்க... உண்மையிலேயே இந்த விஷயத்தில் போப் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டுருச்சு. கடவுள் கொடுத்த பரிசு தெரசான்னு சொன்ன போப், தன் உயிர் பிரியும் வரை கடிதம் எழுதியிருக்கிறார்! போப் ஆக இருந்தால் நட்பை எல்லாம் விட்டுடணுமா என்ன? அவர் இறந்து  10 வருஷங்களுக்குப் பிறகு, கடிதங்களை வெளியிட்டு, பரபரப்பு தேடுது மீடியா...’’

‘‘தெருக்கூத்து இன்னும் ஆரம்பிக்க மாட்டேங்கிறாங்க... சரி...  ‘இறுதிச் சுற்று’ போனீங்களே... எப்படி இருந்தது?’’ ‘‘நீ மிஸ் பண்ணிட்டே... ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது. மணிரத்னம் மாணவியாம் சுதா கொங்கரா. குருவை விட மிஞ்சிய சிஷ்யையாக மாறிட்டார்னுதான் சொல்வேன். மையக் கருத்தை விட்டு நகராமல், மிக நேர்த்தியா படம் பண்ணிருக்கார்! பெண் இயக்குனர்னு சொல்லி தனிமைப்படுத்தக்கூடாது. இயக்குனர்னுதான் சொல்லணும்... நீ கண்டிப்பா பாரு லாவண்யா!’’ ‘‘நானும் வரேன். இன்னொரு தடவை பார்க்கணும்’’ என்றாள் லதா. ‘‘அடிப்பாவி... மாதவனுக்காகத்தானே படம் பார்க்கப் போறே? இன்னும் அதிலிருந்து எல்லாம் வெளிவரலையா?’’



‘‘எதுக்கு வெளியில் வரணும்? ரித்திகா கிழம் கிழம்னு சொன்னப்ப ரெண்டு குத்து விடணும்னு தோணுச்சு!’’ என்று சிரித்தாள் லதா. ‘‘ஏய்... ரொம்பப் பசிக்குதுப்பா... ஏதாவது சாப்பிடலாமா?’’ ‘‘பீச்ல ஏகப்பட்ட தின்பண்டங்கள் கிடைக்கும்... பார்க்ல ஒண்ணும் இருக்காதுடி...’’ ‘‘பழமுதிர்ச்சோலை வாசலில் ஏதாவது கிடைக்கும்... வாங்க...’’ மூவரும்  சிறுதானிய தோசைகளை சாப்பிட ஆரம்பித்தனர். ‘‘லலிதா... உங்க ஊர்க்காரருக்கு இந்திய அரசு தேசிய அறிவியல் தொழில்நுட்ப விருது கொடுத்திருக்கு... தெரியுமா?’’ ‘‘யாருப்பா அது?’’ ‘‘முத்தாரம், குங்குமம் டாக்டர் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுறாரே... ராஜபாளையம் டாக்டர் கு.கணேசன். அவருக்குத்தான் இந்த விருது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ அறிவியலை எளிய தமிழில் அழகாகக் கொண்டு சேர்த்ததற்காக... தேசிய அறிவியல் நாளான பிப்ரவரி 28 அன்னிக்கு டெல்லியில் நடந்த விழாவில் அவருக்கு விருதும் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டிருக்கு...’’ ‘‘ஓ... சரியான நபருக்குத்தான் விருது கொடுத்திருக்காங்க! குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா மூலம் மருத்துவ எழுத்துக்கு வந்தவர்... வாழ்த்துகள் டாக்டர்!’’ ‘‘அவருக்கு போன் பண்ணிச் சொல்லுடி. சிபாரிசோ, கோல்மாலோ பண்ண முடியாது. மிக உயரிய விருது!’’ ‘‘ஆமாம்... டாக்டர் இப்போ தமிழ்நாட்டின் முன்னணி இதழ்களிலும் நாளிதழ்களிலும் கலக்கிட்டு இருக்கார்! அவரது மருத்துவ எழுத்துக்கு நான் ஃபேன்’’ என்றாள் லதா.

‘‘இப்பத்தானே மாதவன் ஃபேனுன்னு சொன்னே... அதுக்குள்ளே கட்சி மாறிட்டீயே லதா!’’ ‘‘அவ தெளிவாதான் சொன்னா... மருத்துவ அறிவியல் எழுத்துக்கு ஃபேனுன்னு... சும்மா கிண்டல் பண்ணாதடி’’ என்று சிரித்தாள் லாவண்யா. ‘‘கூத்து ஆரம்பிச்சாச்சு... வாங்க போகலாம்...’’ ‘‘அடுத்த தடவை எங்கே மீட் பண்ணலாம்?’’ ‘‘புக்ஃபேர்ல?’’ ‘‘அதுக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு. அதனால, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சண்டே காலை 6 மணிக்கு பீச்ல மீட் பண்ணுவோம்...’’ என்று லலிதா சொன்னதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். புரிசை கலைஞர்களின் தெருக்கூத்து களை கட்டியது. மகாபாரதத்தின் ஒரு பகுதியை அன்றைய கூத்தின் முக்கிய அம்சமாக மாற்றியிருந்தனர். ‘‘நானே தெருக்கூத்தை இப்போதான் பார்க்கிறேன். இந்த மாதிரி பாரம்பரியக் கலைகள் எல்லாம் இப்போ மறைஞ்சிட்டு வருவதை நினைத்தால் வருத்தமா இருக்கு. இவங்களுக்கு வருஷம் முழுவதும் வருமானம் கிடைக்குமா? இங்கே கூட கூட்டம் ரொம்பக் குறைவா இருக்கு. இலவசமா ஒரு நல்ல நிகழ்ச்சி கொடுத்தாலும் பார்க்க ஆள் வரலைன்னா எப்படி?’’

‘‘அந்தக் காலத்துல மின்வசதி இல்லை... மைக் இல்லை... உரக்கப் பேசி நடிச்சாங்க... இப்போதான் எல்லாமே இருக்கே... அப்புறமும் இவ்வளவு கத்திப் பேசறாங்க... பாடறாங்க... தொண்டை புண்ணாகிடப் போகுது...’’ என்று வருத்தத்துடன் சொன்னாள் லதா. ‘‘நான் கூட காலையில வாக்கிங் வந்தப்போ ஒரு பேச்சரங்கம் இங்கே நடந்தது. முதல் ரவுண்ட் நடக்க ஆரம்பிச்சப்போ ரெண்டு குழந்தைகளுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். 5வது ரவுண்ட் வந்தப்போ 8 பேர் இருந்தாங்க... ஆனாலும், மனம் தளராமல் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தறவங்களைப் பாராட்டணும்பா!’’

‘‘ஒரு காலத்தில் பொழுதுபோக்குவதற்கு விஷயங்கள் அவ்வளவா இல்லை. இப்போ அப்படி இல்லை. வீட்டைத் தாண்டி, டி.வியைத் தாண்டி ஒரு உலகம் இருக்குன்னு எல்லோருக்கும் தெரிஞ்சாதான் இதுக்கெல்லாம் கூட்டம் வரும். மெசேஜ் வர ஆரம்பிச்சிருச்சுப்பா... நான் கிளம்பறேன். பீச்ல பார்க்கலாம்’’ என்று, வேகமாக ஸ்கூட்டியைக் கிளப்பினாள் லாவண்யா. ‘‘ம்... கல்யாணம் ஆனா நாமளும் இப்படித்தான் ஓடணுமா லலிதா?’’ ‘‘பொறுப்பை அதிகமா சுமக்கிறவங்க எல்லாம் ஓடித்தான் ஆகணும்... நாம கொஞ்சம் இதையெல்லாம் மாத்திப் பார்க்கலாம்... இப்போ கிளம்பலாம்’’ என்றாள் லலிதா. இருவேறு திசைகளில் ஸ்கூட்டிகள் பறந்தன. 

வீட்டை விட்டு வெளியே வந்தால் அவசரத் தேவைக்கு ஒரு டாய்லெட் இருக்க மாட்டேங்கிது. இந்த லட்சணத்தில் மகளிர் கொண்டாட்டமா? மாதவனை ரித்திகா கிழம் கிழம்னு சொன்னப்ப ரெண்டு குத்து விடணும்னு தோணுச்சு!

(அரட்டை அடிப்போம்!)