ப்ரியங்களுடன்....



எமிஜாக்சன் இங்கிலாந்து நாட்டவர் என்றாலும் இந்திய மக்களின் இதயங்களில் இரண்டறக் கலந்துவிட்டார் என்பதே உண்மை. தமிழின் பெருமையை அவர் விளக்கிய விதம் அருமை!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர் மற்றும் வள்ளியூர் ஏ.பி.எஸ்ரவீந்திரன், நாகர்கோவில்.

சீனப்பெண்ணாக பிறந்து தமிழ் மீது கொண்ட காதலால் தமிழை முதன்மை பாடமாக பயின்று சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் இயக்குனராக பதவி வகிக்கும் சீன கலைமகள் பாராட்டுக்கு உரியவர். பாரதியார் கவிதைகள் படிக்க ஆசை என்று கூறியதைக் கேட்டு உள்ளம் இனித்தது.
- மயிலை கோபி, சென்னை., திருமதி சுகந்தாராம், சென்னை, என்.ஜெயம் ஜெயா, காரமடை, என்.சண்முகம், திருவண்ணாமலை மற்றும் ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91 (மின் அஞ்சலில்...)

மாணவ மணிகளுக்கு ஓவர் டைம் போல சனிக்கிழமை மற்றும் மாலை நேர வகுப்புகளில் திணித்து, வலிகள், வேதனைகள், மன அழுத்தம் கொடுத்து விளையாட்டை இழக்க செய்யக்கூடாது. இன்றைய குழந்தைகள் சனி, ஞாயிறுகளையே விரும்புவதில்லை என்பதை எங்கு போய் சொல்ல?
- கோதை ஜெயராமன், மீஞ்சூர் மற்றும் சி.கார்த்திகேயன், சாத்தூர்.



‘புண்ணியமாகப் போகட்டும்’ கட்டுரை சற்று நகைச்சுவை கலந்து எழுதியிருந்தாலும், அது ஒட்டுமொத்த பெண்களின் குமுறல்தான். இந்த அவஸ்தைக்கு என்று நிவர்த்தி கிடைக்கும்?
- இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல், சென்னை.

ஃப்யூஷன் சமையல் இதுவரை கேள்விப்படாத பொருட்கள், வாயில் நுழையாத தலைப்பு... இத்தனை அயிட்டங்களா என வியக்கும் அளவு செய்துகாட்டி அசத்தி
விட்டாரே செல்லமான செல்லம்!
- ராஜி குருசாமி, ஆதம்பாக்கம், சென்னை மற்றும் பிரமீளா நாகராஜன், புதுக்கோட்டை.

உலகின் டாப் 10 தனிச்சிறப்புச் சாலைகள் ஒவ்வொன்றையும் பார்த்தது போல வியப்பில் ஆழ்த்தியது.
- ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர் மற்றும் வி.மோகனப்பிரியா, திருச்சி.

வார்த்தைகளை கோர்த்து தோரணமாக்கி இருந்தார் ‘ஊர் சுற்றலாம் வாங்க’ பகுதியில் தீபா ராம்!
- வி.கமலா, அண்ணாநகர், மதுரை.

வித்யா குருமூர்த்தியின் ‘கலகல காலண்டர்’ பல அரிய விஷயங்களை தெரியப்படுத்தியது. சும்மா சொல்லக்கூடாது அனைத்துத் தகவல்களையும் வாரி வழங்கியிருந்தது அபாரம்.
- டி.ஹேமலதா, திருச்செங்கோடு மற்றும் கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வெளிநாட்டு வாழ்க்கை, பணம் என்று அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு பாடம் புகட்டுவதாக இருந்தது லேடி சாப்ளின் சந்தியாவின் மைம் கலை!
- சாகிதா அன்சர், பாளையங்கோட்டை.

இளம்பிறையின் ‘ஏரிக்கரையில் நடந்து கொண்டிருக்கிறேன்’ மனதை வருடும் வரிகள். அப்போது ஏற்பட்ட அழிவுகள் மனதிற்கு தரும் வலிகள்.
- யாமினி சேகர், விழுப்புரம்.

திருமணத்தின் போது கனவு தேவதையாகத் தோன்றியவளை காலப்போக்கில் கெட்ட கனவாக நினைக்கும் கணவர்களும், தேவலோக இளவரசனாக மனதில் நின்றவன் கால வெள்ளத்தில் தாவும் தேரையாக மாறுவதைக் கண்டு மனம் வெதும்பும் மனைவிகளும் எப்படி நிதர்சனத்தை ஏற்று வாழ்வது என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை மருத்துவர் காமராஜ் அருமையாக வழங்கி இருந்தார்.  
- வளர்மதி  ஆசைத்தம்பி, விளார், தஞ்சாவூர்-6 (மின் அஞ்சலில்...)