16 தெருக்கள் 50 நாய்கள் பசி தீர்க்கும் சேவை!



அன்பு தானம்

பேபி நிர்மலா

எழுபதை நெருங்கும் வயது... பைபாஸ், ஹெர்னியா, கர்ப்பப்பை நீக்கம் என தொடர்ந்து மூன்று பெரிய அறுவை சிகிச்சைகளை சந்தித்த உடம்பு.  இதற்கிடையில் கால் முறிவு... இப்படியொரு நிலையில் ஒரு பெண் எப்படி இருப்பார்?  படுத்த படுக்கையாக..? பலவீனமாக..? வாழ்க்கையை நொந்து கொண்டு..?அப்படி இருக்க வேண்டிய பேபி நிர்மலா, விதிவிலக்காக வியப்பூட்டுகிறார். வார்த்தைகளில் தொடங்கி, வாழ்கிற வாழ்க்கை வரை எதிலுமே உற்சாகம் குறைந்துவிடாதபடி கவனமாக இருக்கிறார். `மெட்ராஸ்’ பட வில்லன் வினோத்தின் அம்மாவான பேபி நிர்மலா, முதுமையை பாரமாக, சாபமாக நினைக்கிற ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்!

முதுமையையோ, உடல் உபாதைகளையோ காரணம் காட்டி, ஓய்வெடுக்க விரும்பாமல், இந்த வயதிலும் அவர் செய்கிற சேவை, பாராட்டப்பட வேண்டியது. பசியால் வாடும் மனிதர்களையே கண்டுகொள்ளாத சமூகத்தில், பசியால் தவிக்கிற வாயில்லா ஜீவன்களுக்கு சேவை செய்கிறார் பேபி நிர்மலா. ``முப்பத்தி மூன்றரை வருஷங்கள் டீச்சரா வேலை பார்த்துட்டு, நாலு வருஷம் சர்வீஸ் இருக்கும் போதே வி.ஆர்.எஸ். வாங்கிட்டு வந்துட்டேன். வேலையை விட்டதும் நிறைய நேரம் கிடைச்சது. நாலு பேருக்கு உபயோகமா ஏதாவது செய்யணும்கிற யோசனையில இருந்தப்ப, என்னோட ஃப்ரெண்ட் சுமனை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவங்களும் நான் குடியிருக்கிற கொளத்தூர்லதான் இருக்காங்க. தினமும் அவங்க குடியிருக்கிற தெருவுல உள்ள நாய்களுக்கு சாப்பாடு வைப்பாங்க. ஒருநாள்கூட அலுக்காம, சலிக்காம அவங்க பண்ற இந்தச் சேவையைப் பார்த்ததும் எனக்குள்ளயும் ஒரு பொறி தட்டின மாதிரி இருந்தது.

எனக்கு நாய்க்குட்டிகள்னா ரொம்பப் பிடிக்கும். ஆஷினு ஒரு கிரேட் டேன் நாய்க்குட்டியை வளர்த்திட்டிருந்தேன். ரொம்பச் செல்லமா இருந்த அது திடீர்னு இறந்திடுச்சு. அது என் மனசுல ஆறாத துக்கத்தை ஏற்படுத்திடுச்சு. அதுலேருந்து வெளியில வர எனக்கும் ஒரு வடிகால் தேவைப்பட்டது. சுமன் மாதிரியே நானும் என் ஏரியாவுல உள்ள ஆதரவில்லாத நாய்களுக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சேன். முதல்ல 5, 6 நாய்கள்லதான் ஆரம்பிச்சது. இப்ப 50 நாய்களா அதிகரிச்சிருக்கு. எங்க ஏரியாவுல உள்ள 16 தெருக்களைச் சேர்ந்த நாய்களுக்கு தினம்
சாப்பாடு தரேன்...’’ ஆச்சரிய அறிமுகம் தருகிறார் பேபி நிர்மலா.

வேலையாட்களுக்கோ, வீட்டைச் சுற்றி வருகிற நாய், பூனைகளுக்கோ, நமக்குத் தேவையில்லாத மிச்ச மீதி உணவுகளைக் கொடுப்பதுதான் பரவலான மனோபாவம். பேபி நிர்மலா அப்படிச் செய்வதில்லை. ``தினம் 5 கிலோ அரிசியில சாதம் வைப்பேன். எங்க வீட்டுக்காரர் கறிக்கடையில சிக்கன், லெக் பீஸ் எல்லாம் தனியா வாங்கிட்டு வருவார். அதைத் தனியா சமைப்பேன். அப்புறம் ரெண்டையும் கலந்து, தனித்தனி பாக்கெட்டுகளா போடுவேன். தினம் சாயந்திரம் 5 மணிதான் என் டைம். ஒவ்வொரு தெருவா போய் அங்க உள்ள நாய்களுக்கு அந்த சாப்பாட்டுப் பொட்டலத்தை வைப்பேன். நான் வரப்போற நேரம் தெரிஞ்சு அத்தனையும் பசியோட காத்திட்டிருக்கும். அதுங்க சாப்பிட்டதும் அந்த கவரை நானே திரும்ப எடுத்து, அப்புறப்படுத்திடுவேன்.



நாய்கள் அஞ்சறிவு படைச்சதுங்க. அதுங்களுக்கு சாப்பிட்ட இடத்தை சுத்தம் பண்ணவெல்லாம் தெரியாது. அப்படியே போட்டுட்டுப் போயிடும். கவரோ, சாப்பாடோ இரைஞ்சு கிடக்கிறதைப் பார்த்தா, அந்தந்த தெருவாசிகள் பிரச்னை பண்ணுவாங்க. வேற என்னென்னவோ குப்பைகள் கிடக்கும். அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. நான் கொண்டு போகிற சாப்பாட்டு கவரை விட்டுட்டு வந்துட்டா அதனாலதான் அந்த ஏரியாவே அசுத்தமாயிடுச்சுனு சொல்வாங்க. அப்படியொரு பேச்சுக்கு இடம் கொடுக்க வேண்டாம்னு நானே அதை எடுத்துட்டு வந்துடுவேன்...’’ - மக்களின் மனோபாவம் அறிந்தவராகச் சொல்கிறார்.

``‘வாயில்லா ஜீவன்களும் உயிர்கள்தானே... அதுங்க பசியாற எங்கே போகும்... ஏதோ அவங்களுக்கு மனசிருக்கு பண்றாங்க’னு சொல்றவங்களை விட, இதெல்லாம் தேவையானு திட்டறவங்கதான் அதிகம். அபூர்வமா சிலர் ரேஷன்ல வாங்கற அரிசியை நாய்களுக்கு சமைக்கக் கொடுத்து உதவுவாங்க. நான் யாரோட விமர்சனங்களையும் காதுல போட்டுக்கிறதில்லை. 12 வருஷங்களா இதைப் பண்ணிட்டிருக்கேன். உடம்புக்கு முடியலை, ஊர்ல இல்லைனு நாய்களுக்கு சாப்பாடு கொடுக்க முடியாம போன நாட்கள் ரொம்ப ரொம்பக் கம்மி. இன்னும் சொல்லப் போனா, இந்த வேலையை ஆரம்பிச்சதுக்குப் பிறகு சொந்தக்காரங்க வீடுகளுக்கோ, விசேஷங்களுக்கோ போகறதைக் கூடக் குறைச்சுக்கிட்டேன்.

அப்படியே தவிர்க்க முடியாம போயாகணும்கிற நிலைமையில, அதுங்களுக்கு சாப்பாடு வச்சிட்டுத்தான் போவேன்.  ஒருநாள் வெளியூர் போயிட்டு திரும்ப ராத்திரி 12 மணி ஆயிடுச்சு. அன்னிக்கு சாப்பாடு வைக்க முடியலை. அந்த நடு ராத்திரியிலயும் அத்தனை நாய்களும் தெருவுல பசியோட என்னை எதிர்பார்த்துக் காத்திட்டிருந்ததைப் பார்த்து எனக்கு மனசு கலங்கிடுச்சு. அதுக்கப்புறம் அப்படி நடக்காம இருக்கணும்னு ரொம்ப கவனமா இருக்கேன்...’’ என்பவர், 12 வருடங்களாக இந்தச் சேவையை தன் சொந்தச் செலவில்தான்
செய்து வருகிறார்.

``இதை என்னோட ஆத்ம திருப்திக்காக செய்யறேன். என் கணவர் வின்சென்ட்டோட என்கரேஜ்மென்ட்டும் உதவியும் இல்லைனா என்னால பண்ண முடியாது. என்னோட மூத்த மருமகள் காளீஸ்வரியும் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் என்கூட வந்து சாப்பாடு வைப்பாங்க.  எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்த என்னோட ஃப்ரெண்ட் சுமன், இப்பவும் நாய்களுக்கு சாப்பாடு கொடுத்திட்டிருக்காங்க. அவங்க கொடுக்கிற ஏரியா தவிர்த்து மத்த ஏரியாக்களுக்கு நான் பண்றேன்.

ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா... நாங்க இப்படி சாப்பாடு வைக்கிறது  தெரிஞ்சு வேற வேற ஏரியாவை சேர்ந்த பலரும் அவங்கவங்க நாய்களைக் கொண்டு வந்து  தெருவுல கட்டிப் போட்டுட்டும் விட்டுட்டும் போயிடறாங்க. அது ரொம்ப  வேதனையான விஷயம். எனக்கு வயசாயிட்டிருக்கு... உடம்புக்கும் முடியலை. ஆனாலும், என்னை நம்பி இத்தனை ஜீவன்கள் இருக்கேன்னு முடியாட்டாலும் பண்ணிட்டிருக்கேன். எனக்குப் பிறகு இந்த வேலையைத் தொடர்ந்து செய்ய யாராவது முன் வந்தாங்கன்னா நல்லாருக்கும். அது மட்டும்தான் என் கவலை...’’ - கடிகாரத்தைப் பார்க்கிறவர், மணி 5 அடிக்கப் போவதை உணர்ந்து, நமக்கு விடை கொடுக்கிறார். தனது அன்னதானத்தையும் அன்புதானத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிற வாயில்லா நண்பர்களை சந்திக்க விரைகிறார்.

"ஒருநாள் வெளியூர் போயிட்டு திரும்ப ராத்திரி 12 மணி ஆயிடுச்சு. அன்னிக்கு சாப்பாடு வைக்க முடியலை. அந்த நடு ராத்திரியிலயும் அத்தனை நாய்களும் தெருவுல பசியோட என்னை எதிர்பார்த்துக்  காத்திட்டிருந்ததைப் பார்த்து எனக்கு மனசு கலங்கிடுச்சு."

படங்கள்: ஆர்.கோபால்