மடிசார் மருத்துவர்!



நினைவுகள்  அழிவதில்லை

சுமிதா ரமேஷ்

கல்யாணி... அழகான ராகம். அந்த ராகம் மனதுக்கு பிடித்ததைப் போலவே தன் மகளுக்கும் பெயராக்கி அழைத்து மகிழ்ந்தார் அந்தத் தந்தை. ‘கல் ஆணி... Stone nail’ என்று கிண்டல் செய்யும் அளவுக்கு, தஞ்சைமாவட்டத்தின் ஒரு கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தப் பெண் அவர். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் மூன்றாவது ஃபார்ம் (இப்போதைய எட்டாம் வகுப்பு எனலாம்) வரை மட்டுமே படிக்க முடிந்த அவரால் எப்படி மருத்துவர் ஆக முடிந்தது?

பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் ஹீரோவாக இருப்பார். சில அப்பாக்களுக்கு தன் பெண்ணே தாயுமாகி உயிருமாகி இருப்பாள். அப்படி ஒரு சொற்ப நிலம் கொண்ட   விவசாயி... கூடுதலாக ஆயுர்வேத மருத்துவம் தெரிந்ததால் ஊராரால் ‘டாக்டர்’ என அழைக்கப்பட்டவர்... தன் மகளையே வாரிசாக எண்ணி தனக்குத் தெரிந்த சமையல் நுட்பங்கள் - 4 பேருக்குச் சமைக்கும்போது 6 பேர் வந்து விட்டால் செய்ய வேண்டியது, எப்படி பரிமாறுவது, விவசாயத்தின் நுணுக்கங்கள் - எத்தனை கலம் விதைத்தால் எத்தனை அறுவடை செய்யலாம், மருத்துவ நுணுக்கங்கள் - எந்தெந்த நோய்க்கு என்னென்ன மருந்துகள், அதை செய்யும் முறைகள்... இப்படி அருகில் அமர்த்தி சொல்லித் தந்த போது, அந்தக் குழந்தைக்கு வயது 6.

தனக்குக் கீழே 2 தங்கைகள், ஒரு தம்பி, ஏதுமறியாமல் ரெண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்ட தாய் என்றிருந்தக் குடும்பச் சூழலில்... அறியாத பருவத்தில் தாய் மாமாவுக்கே திருமணம். அதற்கடுத்து எல்லாம் கற்றுத் தந்து ஆசானாக இருந்த தந்தையின் இழப்பு.
குடும்ப பாரம் சுமக்கவே தனக்கான திருமணம் என்பதையும் அறியாத வயது அந்தப் பெண்ணுக்கு. சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய கிராமம்... ஊர் கட்டுப்பாடும், பெண்களின் மீதான கட்டுப்பாடுகளும் மிக அதிகமாக கோலோச்சிய காலம். குடும்பத்தில் சொந்தங்கள் ஒரே ஊரில் இருந்தாலும், தன் வீட்டு கஞ்சியோ கூழோ மட்டுமே குடித்து வளர வேண்டும் என்று தன்மானத்தையும் சுயமரியாதையையும் சேர்த்து போதித்த காலமும் கூட.

அழகும் திறமைகளும் ஒன்றாக போட்டிப்போட, கோலம், சமையல், விவசாயம், மருத்துவம் என சகலத்திலும் சிறந்து விளங்கியவருக்கு, புகுந்த வீடு வசதியானக் குடும்பம். ஆதலால், ‘ஏன் முறையாகப் படிப்பை தொடரக்கூடாது’ என்ற எண்ணமும் உதயமானது. தனக்கென ஒரு பெண் குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும் காலத்தில் ஃபார்ம்3லிருந்து ஃபார்ம் 8 (அது அன்றைய உயர் படிப்புக்குள் நுழையத் தேவையானதாக இருந்தது) எழுதி பாஸ் செய்தவருக்கு, எப்படியாவது மருத்துவராக பட்டம் பெற வேண்டுமென்ற ஆசை துளிர்விட்டது.
துளிராகும் ஆசையே, இலையாக காயாக கனியாக விதையாக விருட்சமாகி ஒரு தலைமுறையையே தீர்மானிக்கிறது.

துளிர்விட்ட   ஆசையோ  சென்னை சென்று அலோபதி மருத்துவம் படிக்க வேண்டும் என்பது (அப்போது டாக்டர் முத்துலட்சுமி மட்டுமே அலோபதி படித்தவர்). குடும்பச்சூழல் அதற்குத் தடைவிதிக்க, ஜெர்மானிய மருத்துவ முறையான ஹோமியோபதி, நம் தமிழ்நாட்டில் பரவிட, அதைப் படிக்கும் ஆவலில் மனம் கட்டுக்கடங்காமல் கொதித்திருந்தது. முடியுமா? சாத்தியமா? 50 வீடுகள் கொண்ட கட்டுக்கோப்பான அக்ரஹாரம், ஆசாரமான குடும்பத்துப் பெண்மணி, ஒரு பெண் குழந்தைக்கு தாயானவள், அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்த கன்னித்தாய் போன்ற நாடு... இத்தனை தடைகளை தாண்டி படிக்கும் ஆசை நிறைவேறுமா? மனம் முழுக்க அலைபாயும் எண்ணத்தில்இருந்தார் அந்தப் பெண்.



முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற முனைப்புடன் வீட்டுப்பெரியோர்களிடம் விடை பெற்று தஞ்சையில் நடந்த வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தார். மடிசார் புடவையுடன் கல்வி கற்க செல்வதா? கிண்டலும் கேலியும் கைக்கொட்டிச்சிரிக்குமே கோரஸ் குரலில்!
9 கஜம் புடவையை கல்லூரியில் 6 கஜம் புடவையாக மாற்றிக் கொண்டு வகுப்புகள் முடிந்ததும், மீண்டும் 9 கஜத்திற்கு மாறி, தனியே பேருந்தில் பயணித்து, அக்ரஹாரம் பிரவேசம் செய்வது அன்றைய சவாலாக இருந்தது இவருக்கு. மிக வெற்றிகரமாக தஞ்சை மாவட்டத்தின் முதல் ஹோமியோபதி மருத்துவர் என்ற பெருமையுடன் - அங்கீகரிக்கப்பட்ட பட்டத்துடன் வீடு வந்தவரை குடும்பமோ சமுதாயமோ பெரிதாக வரவேற்கவில்லை.

அசராமல் ரகுபதி கிளினிக் என்ற பெயரில் வீட்டின் முன்பகுதியில் மருத்துவமனை தொடங்கி மருத்துவம் பார்க்க ஆரம்பித்தவர், சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் அவசரத்துக்கு ஓடி வைத்தியம் பார்த்தார். நல்ல குரல்வளம் கொண்டவருக்கு எம்.கே.தியாகராஜ பாகவதர், எம். எஸ். சுப்புலஷ்மி பாடல்கள் தலைகீழ் பாடம். முறையான கர்நாடக இசை கற்றவர். கூ(ட்)டத்தில் இவர் பாடிட, மற்றவர் வாய் மூடி மௌனிப்பர். விதியின் விளையாட்டிற்கு மானிட உயிர்கள் பகடைக்காய் ஆவதுபோல இவர் வாழ்விலும் இளவயதில் கணவரது பிரிவு, போராட்டக் களமான வாழ்க்கை, விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலை சீரியஸான மருத்துவ தொழிலுக்கு சற்று ஓய்வு தர செய்தன. விவசாயத்தை 1972ல் கையில் பிடித்தவர் தொடர்ந்து 40 வருடங்கள் பல சவால்களையும் சாதனைகளையும் சந்தித்தார். பல ஆண் மிராஸ்தாரர்களும் முடியாதென்று சொத்தினை விற்று விலக, இவர் நிலைத்து நின்றார். ‘துணிச்சல் பெரும் சொத்து... இல்லை
யெனில் ஓட ஓட விரட்டிடும் சமூகம்’ என்பது இவரது பேச்சில் தெரியும்.

இருட்டில் திருடர்களை விரட்டிப்பிடிக்கும் அசாத்திய துணிச்சலும், நிலத்தை குத்தகைக்காரர்களிடம் இருந்து மீட்க வழக்கு போட்டு, அதற்கான பகையையும் ஒருவராக நின்று சமாளித்ததும் என கிராமத்து ஜான்ஸிராணியாகவே வாழ்ந்திருந்தார் அந்த ஊர் மக்களின் முன். ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் அதை ஊட்டி தனக்குத் தெரிந்த கலைகளையும் சேர்த்துத் தந்தார். அழகு , அறிவு,  துணிச்சல் அனைத்துமான கலவையாக இருந்தவர் தனது இறுதிக்காலத்தையும் கணக்கிட்டு திருப்பாவை பாடிய படியே உயிர்துறந்ததும் இதே மார்கழியில்.

இத்தனை பெருமைக்குரிய மடிசார் உடுத்திய கல்யாணி என்ற என் பாட்டியின் பெருமையை நான்  உணர்ந்தது, எனது எட்டாவது வயதில். அன்று பாட்டியுடன் வயலுக்குச் சென்றவள், சற்றுக் கூடுதல் நேரம் பம்பு செட் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட ஆசைப்பட்டு, ‘நான் தனியாக வந்துவிடுவேன், நீங்க வீட்டுக்குப் போங்க’ என்று சவாலாக பேசியவள், குளித்து முடித்து திரும்பி வரும்போது, தலை முட்டும் நெற்பயிர்கள் சூழ உள்ள வயல்கள், சுழித்து ஓடும் வாய்க்கால்கள் என பார்த்தபடியே, வழி மறந்துபோய், சேற்றில் விழுந்து எழுந்து, கரையேறியது சென்றது அதே ஊரிலிருந்த வேறு பகுதிக்கு.

அங்கிருந்தவர்களிடம் தான் இன்னார் பேத்தி எனவும், ‘அவர் வீட்டுப் பெண்ணா பாப்பா நீங்க’ என்று ஒரு கும்பலே அழைத்து வந்து, நான் அழுத கதையை பாட்டியிடம் கூறி நகைத்து விட்டுச் சென்றது! அந்த வயதில்  இவர் விதைத்த விதை என்னுள்ளும் விருட்சமாகி இந்த எழுத்துகளில் பெருமையுடன் கனிந்திருக்கிறது. தடைகளும்  உடைப்பதற்கே! தடங்கல்களும் தாண்டிச் செல்வதற்கே! பெண் என்பவள் மாபெரும் சக்தியென உணரும்போது சாதிக்கிறாள்!

"இருட்டில் திருடர்களை விரட்டிப்பிடிக்கும் அசாத்திய துணிச்சலும், நிலத்தை குத்தகைக்காரர்களிடமிருந்து மீட்க வழக்கு போட்டு, அதற்கான பகையையும் ஒருவராக நின்று சமாளித்ததும் என கிராமத்து ஜான்ஸிராணி ஆகவே வாழ்ந்திருந்தார்."

"துளிராகும் ஆசையே இலையாக காயாக கனியாக விதையாக விருட்சமாகி ஒரு தலைமுறையையே  தீர்மானிக்கிறது."