தமிழம்மா... தமிழம்மா!
வாழ்க்கை எனும் நாடக மேடை
கல்பனா பண்டரிநாதன்
ஒரு நாடகக் கலைஞர் ஆசிரியராகவும் இருப்பது வரம். வகுப்பறையின் இருண்மையை அகற்றி அதைக் கொண்டாட்டக் களமாக மாற்றும் நுட்பம் கலைஞனுமான ஒரு ஆசிரியருக்கே வாய்க்கும். தடைகளற்று மாணவர்களின் இதயங்களோடு இணக்கமாக முடியும். கல்பனா அக்கறையுள்ள ஆசிரியர். நாடகக் கலையை மாணவர்கள் வாயிலாக அடுத்த தலைமுறைக்கு நகர்த்துகிறார். மேடைகள், தெருக்கள் என அவரது களங்கள் விரிகின்றன. அக்கறையோடு உருவாக்கப்படும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் பல குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
சென்னை முகப்பேரில் வசிக்கும் கல்பனா, பிறந்து வளர்ந்தது அயன்புரம். அப்பா பண்டரிநாதன், சைக்கிள் மெக்கானிக். அம்மா பெயர் வசந்தா. காயிதேமில்லத் கல்லூரியில் இளங்கலைத் தமிழும், எத்திராஜில் முதுகலைத் தமிழும் முடித்தவர். ஆசிரியைப் பணி சிறு வயதுக் கனவு.
“தமிழ் படிக்கிறவங்க எல்லாருக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். இளங்கலை முடிக்கிறவரை நானும் அதை மனசுல சுமந்துக்கிட்டுத் திரிஞ்சவதான். பேராசிரியை அரங்க.மல்லிகா மேடம்தான் அந்த எண்ணத்தை தகர்த்து வீசினாங்க. நாடகக் கலைக்குள்ள என் பயணத்தை தொடங்கி வச்சதும் அவங்கதான். பிளஸ்டூ முடிச்சதும் வரலாற்றுத்துறையைதான் முதல்ல தேர்வு செஞ்சேன். என்னோட வாசிப்பு, இலக்கிய ஆர்வத்தை பாத்து ‘நீ தமிழ் படி’ன்னு உற்சாகப்படுத்தினது அண்ணன்... அவர் வழக்கறிஞரா இருக்கார். ஒரு அக்காவும் உண்டு. செங்கல்பட்டுல இருக்காங்க. நான் அஞ்சாவது படிக்கும்போதே அப்பா எங்களை விட்டுட்டு தனியா போயிட்டார். அம்மாதான் எல்லாம். அம்மா நிறைய சுதந்திரம் தந்தாங்க. தைரியமா நடமாட விட்டாங்க. என் இயல்புக்கு ஆசிரியைப் பணி சரியா வரும்னு சின்ன வயதிலேயே எனக்குள்ள விதை தூவி விட்டாங்க. கையில குச்சியை வச்சுக்கிட்டு பிள்ளைகளை மிரட்டிக்கிட்டு மனசுக்குள்ள ஒரு ஆசிரியையாவே வளந்தேன்.
காயிதே மில்லத்லயும் சரி, எத்திராஜ்லயும் சரி... கல்லூரியில நடக்கிற எந்த நிகழ்ச்சியிலயும் தமிழ்த்துறை மாணவிகள் இருக்க மாட்டாங்க. வெறும் வேடிக்கைதான். அரங்க. மல்லிகா மேடம்தான் அந்த நிலையை மாத்தினாங்க. இன்னைக்கு ஒரு ஆசிரியையா நான் ரெண்டு பேரை முன்மாதிரியா மனசுல தாங்கிக்கிட்டிருக்கேன். எல்.கே.ஜி.யில ஆசிரியையா இருந்த வயலெட் மிஸ். எம்.ஏ. படிச்சப்போ பேராசிரியரா வந்த அரங்க.மல்லிகா மேடம். வயலெட் மிஸ் கனிவையும் அன்பையும் அணுகுமுறையையும் கத்துக்கொடுத்தாங்க. அரங்க.மல்லிகா மேடம் வாழ்க்கையையே கத்துத் தந்தாங்க.
தைரியம், விடாமுயற்சி, கம்பீரம்னு அவங்களைப் பார்த்துப் பார்த்துத்தான் என்னை நான் வடிவமைச்சுக்கிட்டேன். ஒவ்வொரு வகுப்புலயும் தமிழ் படிக்கிற மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள், தேவைகள் பத்தி பேசி நம்பிக்கை கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க கலந்துக்கிற இலக்கிய விழாக்களுக்கு எங்களையும் அழைச்சுக்கிட்டுப் போவாங்க. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இமயம்னு நவீன எழுத்தை அறிமுகப்படுத்துவாங்க.
ஒருமுறை எங்க கல்லூரியில முத்தமிழ் விழா நடந்துச்சு. நாடகத்துல தமிழ்த்துறை தவிர மற்ற எல்லாத் துறைகளும் கலந்துக்கிட்டாங்க. அரங்க.மல்லிகா மேடம் எங்களை அழைச்சு, ‘நிகழ்ச்சியை நடத்துறதே தமிழ்த்துறை... நீங்க கலந்துக்காம இருந்தா எப்படி’ன்னு கேட்டாங்க. ரொம்பவே அவமானமா இருந்துச்சு. , ‘நாங்களும் நாடகம் போடுறோம்’னு சொல்லிட்டேன். கீழ்வெண்மணி பிரச்னையை மையமா வச்சு எழுதப்பட்ட ‘வெண்மணி வெளிச்சம்’கிற புத்தகத்தைக் கொடுத்து, ‘இதில் இருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக்கோங்க’ன்னு சொன்னாங்க மேடம். அதை வச்சு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். ரொம்பவே இயல்பா அந்த நாடகம் அமைஞ்சது. முதல் பரிசும் எங்களுக்கே கிடைச்சுச்சு. அதுதான் தொடக்கம். தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை எல்லாம் காணாமப் போயிடுச்சு. அடுத்து, அடுத்துன்னு மனசு தேடத் தொடங்கிடுச்சு. பல கல்லூரிகள்ல அதே நாடகத்தைப் போட்டு பரிசுகளை குவிச்சோம். எங்க மேல தனிக்கவனத்தை ஏற்படுத்துச்சு அந்த நாடகம்.
கல்லூரியோட ஆண்டு விழா வந்துச்சு. இதே நாடகத்தை போடத் திட்டமிட்டோம். ஆனா, ‘நிறைய சிறப்பு விருந்தினர்கள் வர்றதால சாதி அடிப்படையிலான இந்த நாடகத்தை போட வேண்டாம்’னு முதல்வர் சொல்லிட்டாங்க. அந்த நேரத்துலதான் அரங்க.மல்லிகா மேடம் ஞாநியை கல்லூரிக்கு அழைச்சாங்க. அம்பையோட நாவல்ல இருந்து ஒரு பகுதியை எடுத்து பயிற்சி கொடுத்தார் ஞாநி. ‘நீ ஆண் நீ பெண்’கிற அந்த நாடகத்துக்கும் பெரிய கவனம் கிடைச்சுது. 20 மாணவர்கள் அதுல பங்கெடுத்தோம். நாடகம் நிறைவடைஞ்ச பிறகு, எங்களுக்குப் பயிற்சி கொடுத்த ஞாநிக்கு ஒரு நன்றிக் கூட்டம் நடத்தினோம்.
தைரியமாவும் உணர்வுப்பூர்வமாவும் நடிச்சதா எங்களை பாராட்டின ஞாநி, ‘வட்டம்’ங்கிற பேர்ல ஒரு நாடகத்தை நடத்தப்போறதாகவும், எல்லாரும் அதுல வந்து நடிக்கணும்னும் கூப்பிட்டார். பெரும்பாலான மாணவிகளை வீட்டில அனுமதிக்கலே. இறுதியில அதுல பங்கெடுத்துக்கிட்டது நானும் என் தோழி பிரேமகுமாரியும் தான். பிரேமாவும்கூட ஒருநாள் தான் வந்தா... ஆனா, நான் பரீக் ஷா கூட ஒட்டிக்கிட்டேன்.
அதன்பிறகு ஒவ்வொரு விடுமுறை நாளும் பரீக் ஷாவிலதான். பத்மா, பாலா, ராஜாமணி, பார்த்திபராஜா, ஜெய்கணேஷ்னு விரிவான நட்பு வட்டம் கிடைச்சுச்சு. எல்லார்கிட்டயும் நிறைய கத்துக்கிட்டேன். பரீக் ஷா என்னை முழுமையா செழுமைப்படுத்தியிருக்கு. நல்ல வாழ்க்கையையும் கொடுத்திருக்கு. என்னோட கணவர் பாலமுருகன் எனக்கு பரீக் ஷாவிலதான் அறிமுகம். ஞாநி நடத்தின ‘தீம்தரிகிட’ இதழ்ல இருந்தார். எனக்கு வீட்டில மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கின தருணம்... பெண் பார்த்தல், வெட்கப்படுதல், நளினம் காட்டுதல்னு வழக்கமான நடைமுறைகள் மேல எனக்கு கோபம் இருந்துச்சு.
மனசுக்கு உகந்த தோழனா, சுதந்திரத்துக்கு வரம்பு தீர்மானிக்காதவனா, என் தேடலை புரிஞ்சுக்கிட்டவனா, இயல்பைக் குலைக்காதவனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். ‘பாலா உனக்கு தகுந்தவரா இருப்பார்... திருமணம் பண்ணிக்கோ’ன்னு சொன்னார் ஞாநி. நண்பர்களா பேசத் தொடங்கினோம். ஒரு கட்டத்துல ஒருத்தரை ஒருத்தர் தவிர்க்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு திருமணம் செஞ்சுக்கிட்டோம். ஒரு மகள்... ஓவியா... வரம் வாங்கி வந்த மாதிரி இனிமையா இருக்கு வாழ்க்கை!
பரீக் ஷாவில இருக்கிற எல்லோரும் வெவ்வேறு துறைகள்ல வேலை செய்றவங்க. ஞாயிற்றுக்கிழமைகள்லதான் கூடுவோம். உறவுகள் சந்திச்சுக்கிற மாதிரி அவ்வளவு உற்சாகமா இருக்கும். தயக்கத்தைப் போக்கி, சமூகத்தை பார்க்கிற பார்வையை மாத்தி, முற்றிலும் என்னை உருமாத்தி வடிவமைச்சது பரீக் ஷாதான். ஒரு ஆசிரியையா அக்கறையோட செயல்பட அதுவே எனக்கு உதவியா இருக்கு.
குழந்தைகளோட உலகம் இன்னைக்கு வேறுமாதிரி மாறிடுச்சு. நமக்குக் கிடைச்சதைக் காட்டிலும் ஏக வாய்ப்புகள் அவங்களுக்குக் கிடைக்குது. ஆனா, நம்மை மாதிரி அவங்களால பால்யத்தை அனுபவிக்க முடியலே. அவங்களை வேறு திசையில வழிநடத்துறோம். நம்மோட பெரிய பெரிய கனவுகளை எல்லாம் அவங்க சின்ன மூளைக்குள்ள திணிச்சு. நிறைய சுமக்க வைக்கிறோம். திணறுறாங்க குழந்தைங்க. வகுப்பறைகள் அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. கடுமையும் கட்டுப்பாடும் அவங்களை மிரள வைக்குது.
கசங்கிப் போறாங்க. அவங்களுக்கு நம்பிக்கையை உருவாக்கி முந்தானையை பிடிச்சுக்கிட்டு, ஸ்னேகமாவும் உரிமையாவும் அவங்க வந்து நிக்கிற சூழலை உருவாக்குறது சவாலான வேலையா இருக்கு. அங்கே என்னோட நாடகம் பயன்படுது. ‘அம்மா என்குது வெள்ளைப்பசு, அதைக் கேட்டு துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி’ன்னு வெறும் பாட்டா பாடி முடிக்காம, மாடாவும் கன்றுக்குட்டியாவும் மாறிக்காட்டுற போது, குழந்தைகளோட மனசுக்குள்ள போக முடியுது. ‘தமிழம்மா தமிழம்மா’ன்னு குழந்தைகள் ஒட்டிக்கிறாங்க.
அவங்களோட எதிர்பார்ப்புகளே என்னை வடிவமைக்குது. நிறைய கத்துக்கொடுக்கிறாங்க. அந்த ஈர்ப்புல, அதிக சம்பளத்தோட கிடைச்ச உயர்வகுப்பு ஆசிரியை வாய்ப்பையே மறுத்துட்டேன். நாடகத்தை குழந்தைகள் மூலமா அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கணும். கற்பித்தல் முறையில நாடகக் கலையைப் பயன்படுத்தணும்... இப்படி சின்னச்சின்னதா நிறைய திட்டங்கள் வச்சிருக்கேன்...” - உற்சாகமாகச் சொல்லி முடிக்கிறார் கல்பனா.
"நாடகத்தை குழந்தைகள் மூலமா அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கணும். கற்பித்தல் முறையில நாடகக் கலையைப் பயன்படுத்தணும்..."
- வெ.நீலகண்டன் படங்கள்: ஆர்.கோபால்
|