கடந்து போன காலம்



வலைப்பூ ஸ்பெஷல்

ஜெஸிலா பானு

ஆரம்ப காட்சியைப் புரிந்து கொள்ள கடைசிக் காட்சி வரை நம்மைப் பார்க்க வைக்கும் பிரெஞ்சு படம் ‘தி பாஸ்ட்’ (The Past - Le Passe). தலைப்பை ‘தி பாஸ்ட்’ என்று வைத்துவிட்டு ஒரு ‘ஃபிளாஷ்பேக்’ கூட இல்லாமலும், இதுவரை நடந்தது என்ன என்று ஒரு கதைசொல்லி மூலமோ, குட்டிக்கதை மூலமோ சொல்ல முற்படாமல், கதையில் வரும் காட்சிகளின் நகர்வை வைத்தும், வசனங்களை வைத்தும் நம்மைப் புரிந்து கொள்ள வைக்கிறார் ஈரானிய இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி!

‘எ செப்பரேஷ’னை தொடர்ந்து அதே விவாகரத்தை மையமாகக் கொண்ட படம் ‘தி பாஸ்ட்’. அஹ்மத்-மேரியான் இருவரும் காரை பின்னோக்கி எடுக்கும்போது, பின்புறம் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்ப்பது கடந்தவற்றைத் திரும்பிப் பார்ப்பவர்கள் இவர்கள் என்பது போல ‘தி பாஸ்ட்’ என்று படத்தலைப்பு விரிகிறது. படத்தின் காட்சிகள் திருமண முறிவுக்குச் செய்யும் ஏற்பாடுகளும் அதன் பிறகு மேரியான் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் புதிய உறவைப் பற்றியும் புதுத் திருமண வாழ்வையொட்டியும், அதனால் பாதிக்கப்படும்
குழந்தைகளைப் பற்றியுமாக நகர்கிறது.

திருமணத்தின் கசப்பால் இரு குழந்தைக்குப் பிறகு விவாகரத்து பெற்று அஹ்மத்தை கைப்பிடித்து, அவர் நிழலில் குழந்தைகள் வளர்ந்து, பிறகு அவருடனும் பிளவென்பதால், மற்றொரு விவாகரத்தை வேண்டும் மேரியான்... சமீர் என்பவரின் குழந்தையைச் சுமந்துகொண்டு அவரை மறுமணம் செய்ய விரும்புவதை மேரியானின் மகள் லூசி வெறுக்கிறாள். சமீரின் மகன் ஃபூவாதும் புது உறவுகளை ஏற்க முடியாமலும் தவிர்க்க முடியாமலும் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

தன் வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை. அவனது தாய் தற்கொலை செய்ய முயற்சித்து கோமாவில் இருக்கிறாள். அவளைத் தற்கொலைக்குத் தூண்டுவது எது? மேரியான்- சமீரின் தொடர்பா? இந்தப் புள்ளிகளில் நகர்வது தான் கதை. ஒரு பதின்ம வயது மகள் தாயின் மூன்றாவது திருமணத்தை எதிர்கொள்ளும் போராட்டமும், அமைதியாக வாயே திறக்காமல் கண்களால் பேசி வேடிக்கை பார்க்கும் அவள் தங்கையின் தவிப்பும், சமீரின் மகனாக வரும் ஃபூவாத்தின் வசனமில்லாத முகபாவமுமாக ஆயிரம் விஷயங்களைச் சொல்லிச் செல்ல வைக்கிறார் இயக்குனர்.



தன்னைப் பற்றி மட்டும் யோசித்து சுலபமாகக் கண்ணீருடன் கிழித்துப் போடும் திருமணங்களின் வலியில் துடிப்பது குழந்தைகள் என்பதை அழுத்தமாகக் காட்டி இருக்கும் இயக்குனர், அதில் எந்த மதத்தை வலியுறுத்தியோ, அறநெறி, ஒழுக்கப் பிரச்னைகளின் போதனையோ இல்லாமல் மிக அற்புதமாகச் சொல்ல விரும்பியிருக்கிறார். ‘எ செப்பரேஷன்’ - மதத்தின் போலித்தனமான பாசாங்குகளையும் முக்கியமாக வர்க்க வேறுபாட்டை வெளிப்படுத்தியும் அந்த உண்மையை உரக்கச் சொல்லியும் ஆஸ்கர் தட்டிச் சென்றவர் ஃபர்ஹதி. இந்தப் படத்தில் மதச்சார்பற்ற மேலைநாடுகளில் சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்ற தவறான நடத்தையால் அடுத்தத் தலைமுறைக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டு ஆகின்றனர் என்பதையும் புலப்படுத்தியிருக்கிறார்.

‘அம்மா சாகட்டும்’ என்கிறான் சமீரிடம் மகன் ஃபூவாத். ஆச்சரியத்துடன் சமீர் ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்க, ‘உயிர் வாழ விரும்பாதவர்கள்தானே தற்கொலை செய்ய முயற்சிப்பார்கள்? பின்பு ஏன் அம்மா உயிருடன் இருக்க வேண்டும்?’ என்று தாய் தன்னைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்காமல் செய்த வெறுக்கத்தக்க செயலின் கோப வெளிப்பாட்டை, ஒரு குழந்தையாக உடல் மொழியின் மூலம் வெளிப்படுத்தும் அந்தப் பிஞ்சின் நடிப்பு பாராட்டுக்குரியது. இப்படத்தின் கதாநாயகி மேரியானாக வரும் பெஜோ தேர்ந்த நடிகை. ஆஸ்கருக்கு சிறந்த நடிகைக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இப்படத்தில் கோபக்கணைகளை வீசும் போதும் தன் மகள் லூசியிடம் ‘ஏன் எனக்கு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணினே’ என்று ஓலமிட்டு அழும் போதும், அவர் அடையும் ஆத்திரத்தில் நாமும் சேர்ந்தே நடுங்கிவிடுகிறோம்.

 ‘தி பாஸ்ட்’ - கடந்த காலம் அல்லது கடந்தவை என்பது வெறும் கடந்தவையல்ல... நடந்த பாதை, நினைவுகள், பழைய உறவு என்று பல பொருள்படும் இந்தப் படத்தின் முதல் காட்சியில் அஹ்மத்-மேரியான் இருவரும் அடர்த்தியான கண்ணாடியின் வெவ்வேறு புறங்களிலிருந்து கையசைவின் மூலம் மட்டுமே பேசிக் கொள்வார்கள். அதுதான் அவர்கள் வாழ்ந்த கடந்தவையின் புரிதல். விரிவாகப் படிக்க: www.jazeela.blogspot.ae