இலந்தைவடை
சீக்ரெட் கிச்சன்
விஜி ராம்
தாய்மை அடைந்திருந்த என் தோழியை பார்க்க போகும் போது, அவளுக்கு பிடித்ததாக ஏதேனும் வாங்கிப் போகலாமே என்று அழைத்தேன். பெரிய பெரிய இனிப்பகங்களில் இருந்து எத்தனையோ ஸ்வீட் சொல்லுகிறேன்... அவள் அதிலெல்லாம் திருப்தி அடையவில்லை. ‘சரி... நான் வீட்டில் செய்து வந்து தரட்டுமா’ என்றாலும், ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் ‘என்னதான் வேணும்’ என்று கேட்ட போது, மெதுவாக ‘இலந்தைவடை வாங்கிட்டு வர முடியுமா’ என்றாள். அவள் கேட்ட விதம், அதிலிருந்த ஆவல் எல்லாம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது!
உணவு என்பதே ஒரு பயணம்தான். பிறந்தது முதல் நம்மோடு பயணிக்கிறது. பிறந்த குழந்தையாக பல் இல்லாத போது திரவமாக, சிறிது வளர்ந்த போது நொறுக்குத்தீனிக்கு ஆசையாக, வளரிளம் பருவத்தில் ரசித்து ருசிக்கும் சுவையாக... நம்மோடு பள்ளி வருகிறது... அலுவலகமும் வருகிறது. உணவும் நாமும் பிரிக்க முடியாத பந்தம். பள்ளிக்காலத்தில் வாசலில் விற்ற பண்டங்களுக்கு இருக்கும் அதே ஆவல், அலுவலகத்தில் உணவு இடைவேளையில் டிபன்பாக்ஸ் பிரிக்கும் போதும் இருக்கும். எல்லார் வீட்டிலும் என்ன என்ற ஆவலாவது வரும். தாய்மைப் பருவத்துக்கும் உணவுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. அந்தக் காலத்தில் கால்சியம், மெக்னீஷியம் போன்றவை அதிக அளவில் தேவைப்படு வதால்தான் சாம்பல் புளிப்பு என்று தேடுகின்றனர். அதிலும் பச்சை மாங்காயும் இலந்தைவடையும் - சொல்லும்போதே கண் சுருக்கி நாவூற செய்யும் சக்தியுடையவை.
பித்த மயக்கருசி பேராப் பெருவாந்தி மொத்தனில் மெல்லா முடிந்திடுங் காண்-மெத்த உலர்ந்த வெறும்வயிற்றி லுண்டால் எரிவாம் இலந்தை நெறுங்கனியை யெண் - அகத்தியர்
இப்படிப் பாடல் பெற்ற தலம் போல் பாடல் பெற்ற கனிகளில் ஒன்று இலந்தை! இலந்தையின் பூர்வீகம் சீனா. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அங்கு உபயோகத்தில் இருந்திருக்கிறது. குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்பதெல்லாம் இலந்தையின் இன்னும் சில பெயர்கள். ரெட் டேட்ஸ், இந்தியன் டேட்ஸ் என்றும் பெயருண்டு. இதையெல்லாம் விட சுலபமாக மனதில் நிற்கும் இன்னொரு பெயரும் உண்டு. ஜுஜுபி. ஆம்... ஜுஜுபி என்பதும் இலந்தையின் பெயரே! இந்தப் பழத்தில் சிறுசிறு புழுக்களும் காணப்படும். சிறுவயதில் காட்டில் இலந்தை மரத்தில் எல்லாரும் பழம் பறித்து பங்கு போடுவார்கள். அதிலிருக்கும் புழுவால் அந்தப் பங்கில் என் பெயர் இருக்காது!
இனிப்பும் புளிப்பும் கலந்த நாவூறும் சுவையுடன், வைட்டமின் ஏ, பி, சி, டி, சுண்ணாம்பு, இரும்புச் சத்துகளும் அதிகம் உள்ளது இப்பழத்தில். பகல் உணவுக்குப் பின்னர் உண்பதுதான் நல்லது. இதனால் தின்ற உணவு எளிதில் செரிப்பதுடன், பித்தமும் கபமும் சாந்தப்படுமாம். அதிக அளவில் உண்டால் மறுநாள் மலம் இளகலாகப் போகும். மேலைநாடுகளில் இதிலிருந்து டீ, பர்பி, ஜாம் போன்றவை செய்து அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இந்தியா வில் இது ஒரு சீசன் பழம். தை மாதம் அதிகம் காணப்படும். பஞ்சாப் இலந்தை மிக ருசியானது. இலந்தை முள் மர வகையை சேர்ந்தது. இலந்தைப் பழமே ருசிக்கும் போது இலந்தைவடை எப்படி இருக்கும்? இலந்தை பழம்தான் எனக்கு பிடிக்காது. ஆனால், இலந்தை வடை... இலந்தைவடை சாப்பிடுவது கூட ஒரு கலைதான். கையெல்லாம் பிசுபிசுப்பு இருந்தாலும், அந்தப் புளிப்பும் பெருங்காய வாசமும் வாயில் வைப்பதற்கு முன்பே நாவூறும். அப்படி ஒரு புளிப்பு, அப்படி ஒரு இனிப்பு, காரம் எல்லாம் கலந்த ஒரு சுவை.
எங்க வீட்டில் ஆத்தா உரலில் இடிக்கும்போதே உதவி செய்கிறேன் பேர்வழி என்று பங்குக்கு துண்டு போடுவோம். மிளகாயும் வெறும் சட்டியில் வறுத்த உப்பும் சேர்த்து இடித்து, இலந்தையும் நாட்டுச் சர்க்கரையும் பெருங்காயமும் சேர்த்து இடிக்க வேண்டும். அது இடிப்பதும் ஒரு நேக்குதான்! கொட்டை அதிகம் உடையக்கூடாது, ஆனால், எல்லா பழமும் இடிபட வேண்டும். இலந்தை பழம் காய்ந்து வத்தலான பின் இடிப்பது ஒரு சுவை, இலந்தை பழமாக இடித்து சாப்பிடுவது தனியொரு சுவை. இப்போதெல்லாம் ஜிகினா பேப்பரில் காற்றடைத்த பைகளில் வந்து நம் வாழ்வின் வசந்தகாலத்தையே பறித்த சாக்லெட்டுகளுக்கு மத்தியில் இலந்தைவடை செய்பவர்களை தேடிப்பிடிப்பது பெரும் வேலையாக இருந்தது. பெரும்பாலான இலந்தைவடை விற்பனையகங்களில் பார்த்து எல்லாவற்றையும் ருசித்து இறுதியில் இதில் மிக அதிக காலம் இருப்பவர்களை தேடிப் பிடித்தோம்.
சத்தியமங்கலம், அக்ரஹாரம் காமாட்டியர் தெருவில் இருக்கும் மேன்பவர் ஃபுட் புராடெக்ஸ்... பாலமுருகனின் அப்பா 1972ம் ஆண்டு ஆரம்பித்த இந்த இலந்தைவடை, பாலமுருகன் மேற்பார்வையில், தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாகத் தொடர்கிறது. மகன் கிஷோர் குமார் ஃபுட் டெக்னாலஜி படித்தபடியே தந்தைக்கு உதவி செய்கிறார். அந்தப் பகுதியெங்கும் இலந்தைவடை வாசம் நாசி நுழைந்து இப்போதே ருசிக்கும் ஆவலை தூண்டுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலந்தை வடை செய்யும் இவர்கள், இதற்கான நல்ல தரமான பழங்களைக் கொண்டு, சுகாதாரமாகச் செய்வதால், இன்றைக்கும் குறிப்பிடும் அளவில் உள்ளார்கள். இவர்களின் இலந்தைவடையை 4 மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாமாம்.
வீட்டில் செய்வது சுலபம். ஆனால், உலர்ந்த இலந்தைப்பழம் தேவைப்படும். அல்லது இலந்தை வத்தலாக வாங்கியும் செய்யலாம். பாலமுருகன் குழுவினர் தரமான இலந்தை வத்தல்களை வாங்கி உலர வைத்து, பதப்படுத்தி, இடித்து, எந்த வித செயற்கைப் பொருட்களும் சேர்க்காமல் தயாரிக்கின்றனர். அருகி வரும் பாரம்பரிய சுவை உணவுகள் பெரும்பாலும் கைகளால் செய்யப்படுவதே. அதன் ருசியும் மணமும் தனித்துவமானது. இங்கும் அரைப்பது இயந்திரம் என்றாலும், மற்ற வேலைகள் கைகளில் செய்கின்றனர்.
சீக்ரெட் ரெசிபி - இலந்தைவடை
தை மாதம் வந்துவிட்டது. ஒரு மாறுதலுக்கு இலந்தைவடை செய்வோம் வாருங்கள்...
என்னென்ன தேவை?
இலந்தை பழம் - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - கால் கப், பச்சை மிளகாய் - 4, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்து, அத்துடன் இலந்தை, பெருங்காயம், உப்பு, நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும். மிக்ஸியில் விட்டு விட்டு அரைத்து எடுக்கவும். சிறு வில்லைகளாக தட்டி ஒரு நாள் உலர விட்டு உபயோகித்தால், அபாரமான சுவை!
படங்கள்: ராஜா
|