கடல் தாண்டி.... கண்டம் தாண்டி.... தனியே தன்னந்தனியே!



தடம் பதித்த தாரகைகள்

ஜெர்ரி மோக்

‘எனக்கு மிகவும் போர் அடிக்கிறது. வாழ்க்கையில் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது’ என்று 3 குழந்தைகளின் தாயான, 38 வயது ஜெர்ரி கேட்டபோது, அவரது கணவர் மோக் சிரித்து விட்டார். ‘ரொம்ப போர் அடித்தால் உலகத்தை வேணா சுற்றிவாயேன்’ என்று கிண்டல் செய்தார். ‘அட... எவ்வளவு அருமையான யோசனை சொல்லியிருக்கீங்க! இனி உலகத்தைச் சுற்றி வருவதுதான் என் லட்சியம்’ என்றார் மகிழ்ச்சியுடன் ஜெர்ரி!

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஜெர்ரியின் ஆர்வம் இன்று வந்ததல்ல. அவரது 7 வயதிலேயே அப்பாவுடன் காக்பிட்டில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. விமானப் பயணத்தின் மீது எல்லை இல்லாத ஈடுபாடு வந்தது. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஏரோனாட்டிகல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் பெண்கள் பொறியியல் படிப்புகளில் நுழையவில்லை. முதல் மாணவியாக ஜெர்ரி சேர்ந்தார்.  படிப்பை முடிப்பதற்குள் 20 வயதில் அவருக்கு ரஸ்ஸல் மோக்குடன் திருமணம் நடைபெற்றது. படிப்பைத் தொடர முடியவில்லை. சமையல், இசை, பயணம் என்று அவரது விருப்பங்கள் மாறின. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த ஆசை துளிர்த்தது.

ஜெர்ரியும் ரஸ்ஸலும் விமானிக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றனர். பயிற்சி முடித்த பிறகு சொந்தமாக ஒரு பழைய விமானத்தை வாங்கினர். விடுமுறை நாட்களில் விமானத்தில் பயணித்தனர். ஒருமுறை ஜெர்ரி விமானத்தை ஓட்டிச் சென்றார். அவருக்குத் தன்னம்பிக்கை அதிகரித்தது. தனியாளாகவே உலகத்தைச் சுற்றி வர முடிவு செய்தார். கடுமையாகப் பயிற்சிகள் செய்தார். ரஸ்ஸல் பயணத்துக்கான நிதியைத் திரட்டினார். ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு ஜெர்ரியின் பயணம் இறுதி கட்டத்தை அடைந்தது. 19 இடங்களில் தரை இறங்குவதற்காக வரைபடம் தயாரிக்கப்பட்டது. தரை இறங்கக்கூடிய நாடுகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

1964 மார்ச் 19...  ‘ஸ்ப்ரிட் ஆஃப் கொலம்பஸ்’ என்று பெயரிடப்பட்ட விமானத்தில் கிளம்பினார் ஜெர்ரி. மோக் மற்றும் குடும்பத்தினர் உற்சாகமாக அனுப்பி வைத்தாலும் சிறிது அச்சம் இருந்தது. 27 ஆண்டுகளுக்கு முன் அமெலியா எர்ஹார்ட், நூனன் என்பவருடன் சேர்ந்து உலகைச் சுற்றி வரும் பயணத்தை மேற்கொண்டார். ஆனால், அவர் திரும்பி வரவே இல்லை. சாதனை பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை, ஜெர்ரி பத்திரமாகத் திரும்பி வந்தால் போதும் என்று நினைத்தார்கள். பத்திரிகைகள் எல்லாம், ‘இல்லத்தரசியின் உலகப் பயணம்’ என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டன.

‘ஆதிக்கப் போட்டியில் யுத்தம் என்ற பெயரில் சக மனிதர்களைக் கொன்று குவிக்கும் இந்த பூமி, வானில் இருந்து பார்க்கும்போது எவ்வளவு அமைதியாக இருக்கிறது! பயிற்சிகளின் போது கடல் மீது பயணம் செய்ததில்லை. ஆனாலும், பயம் ஒன்றும் இல்லை’ என்று தன்னுடைய நோட்டில் குறித்துக்கொண்டார் ஜெர்ரி. பஹாமஸ், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, பாகிஸ்தான், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் என்று ஏற்கெனவே திட்டமிட்டபடி நாடுகளுக்குச் சென்று, தரை இறங்கினார். கணவருக்கும் ஸ்பான்சர்களுக்கும் தகவல்களைத் தெரிவித்தார். அதிகாரப்பூர்வமாக ஒவ்வோர் இடத்திலும் தன் வருகையைப் பதிவு செய்தார். திரும்பும் வழியில் மோசமான வானிலை. எல்லாவற்றையும் சமாளித்து, ஏப்ரல் 17 அன்று கிளம்பிய இடத்திலேயே தரை இறங்கினார். ஆயிரக்கணக்கானவர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர்.



ஒரே எஞ்ஜினில் தனியாளாக உலகைச் சுற்றி வந்த முதல் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார் ஜெர்ரி. அவருக்கு முன் உலகைச் சுற்றி வந்த ஜோன் ஸ்மித், அதிகாரப்பூர்வமாகத் தன் சாதனையைப் பதிய வைக்கவில்லை. அதனால், ஜெர்ரி உலகைச் சுற்றி வந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 37 ஆயிரத்து 180 கி.மீ. தொலைவை 29 நாட்களில் கடந்திருந்தார் ஜெர்ரி. தனியாக உலகத்தைச் சுற்றி வர ஏன் முடிவு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, ‘பெண்கள் தனியாக உலகைச் சுற்றி வர வேண்டிய காலகட்டம். அதனால் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்’ என்றார் ஜெர்ரி.

52 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக உலகைச் சுற்றி, சாதனை செய்திருந்தாலும் அவரிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகள் இவைதான்: ‘உங்கள் வீட்டை ரஸ்ஸல்தான் சுத்தம் செய்தாரா? குழந்தைகளை அவர்தான் கவனித்துக்கொண்டாரா? இல்லத்தரசியான நீங்கள் எப்படி 3 குழந்தைகளை விட்டுவிட்டு, பயணம் மேற்கொண்டீர்கள்?’ ஜோன் ஸ்மித்துடன் ஒப்பிட்டு, தன்னுடைய பயணத்துக்கு ரஸ்ஸல் கொடுத்த அழுத்தத்தை ஜெர்ரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதனைக்காகவோ, ஏற்கெனவே சாதனை செய்தவர்களை முறியடிக்கவோ ஜெர்ரி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார், வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். அவ்வளவுதான்!

அமெரிக்க அதிபர் லிண்டன் பி.ஜான்சன் விருதும் விருந்தும் கொடுத்து ஜெர்ரியை கெளரவித்தார். ஸ்பான்சர்களின் கடனை அடைப்பதற்காக சில கூட்டங்களில் கலந்துகொண்டு, தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ஜெர்ரி. மற்றபடி அவருக்கு இந்தப் பயணம் மூலம் கிடைத்த புகழையும் செல்வாக்கையும் அவர் பயன்படுத்திக் கொள்ளவும் தக்க வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, பயண அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டார். எகிப்தில் அனுமதிக்கப்படாத இடத்தில் தரை இறங்கியிருக்கிறார்,  இன்று கூட பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் விதித்திருக்கும் சவுதி அரேபியாவுக்கு விமானத்தை ஓட்டிச் சென்றிருக்கிறார்! பெரும்பாலான இடங்களில் ஆண்கள் அவரது முயற்சியை கண்டுகொள்ளவில்லை. உலகத்தையே சுற்றி வந்தாலும் உலகத்தை முழுவதுமாகப் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உலகைச் சுற்றி வரும் முயற்சியில் தோல்வியடைந்து, உயிரிழந்த அமெலியா எர்ஹார்ட் இன்றுவரை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். வெற்றிகரமாக உலகைச் சுற்றி வந்த முதல் பெண் ஜெர்ரியோ, அவர் விருப்பம் போலவே விரைவில் உலகத்தின் கவனத்தில் இருந்து மறைந்து போனார். குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொண்டார். ரஸ்ஸல் விவாகரத்து பெற்று வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஆனாலும், ஜெர்ரியிடம் தொடர்பில் இருந்தார். தனிமையை அதிகம் விரும்பும் ஜெர்ரி மகன்களிடம் வசித்து வந்தார். அடுத்தடுத்து 2 மகன்களும் இறந்து போன பின்னர், மகளுடன் வசித்தார். ஜெர்ரிக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்குக் கூட, அவர் உலகைச் சுற்றி வந்த சாகசக்காரர் என்ற விஷயம் தெரியாது!  ஜெர்ரியின் சாதனைக்கு 50வது ஆண்டை விமரிசையாகக் கொண்டாட விரும்பினார் அவரது மகள். எந்த நிகழ்ச்சிக்கும் ஜெர்ரி அனுமதி கொடுக்கவே இல்லை. அவர் சாதனைக்காக இலவச விமானப் பயணங்களையும் அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தன் சாதனைக்காக சிலை வைப்பதற்கும் தன்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்கும் அவர்  அனுமதிக்கவில்லை.

கடைசியில் பேரக்குழந்தைகளின் முயற்சியில் ஒரு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்கைப் மூலம் அதைப் பார்த்தார் ஜெர்ரி. ‘ஒரு எளிய இல்லத்தரசி உலகைச் சுற்றி வந்த சாதனை, சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு உதாரணம்’ என்று சொல்லப்பட்டபோது, ஜெர்ரியின் கண்கள் பனித்தன. ஜெர்ரி செய்தது ஒரே ஒரு பயணம்தான். ஆனால், அதில் 7 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்!  உலகைச் சுற்றி வந்த முதல் பெண், ஒரு எஞ்சினில் சுற்றி வந்த முதல் பெண், அமெரிக்கா-ஆப்பிரிக்கா வழியாக வட அட்லான்டிக்கில் பறந்த முதல் பெண்,  பசிபிக்கைக் கடந்த முதல் பெண், பசிபிக்கில் கிழக்கிலும் மேற்கிலும் பறந்த முதல் பெண், அட்லான்டிக், பசிபிக் இரண்டு கடல்களையும் கடந்த முதல் பெண், பசிபிக் கடலில் அனைத்து திசைகளிலும் பறந்த முதல் பெண் என்று ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஜெர்ரி மோக், 2014ம் ஆண்டில், 88 வயதில் உலகை விட்டுப் பிரிந்தார்.

"‘ஒரு எளிய இல்லத்தரசி உலகைச் சுற்றி வந்த சாதனை, சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு உதாரணம்’ என்று சொல்லப்பட்டபோது, ஜெர்ரியின் கண்கள் பனித்தன."