நீங்கதான் முதலாளியம்மா
விதம் விதமான புட்டு
அழகேஸ்வரி
ஆவியில் வெந்த உணவுகள்தான் ஆரோக்கியமானவை என்பது அனைவரும் அறிந்ததே. இட்லியும் இடியாப்பமும் தவிர, ஆவியில் வேகும் உணவுகளில் பிரபலமானது புட்டு. இனிப்பு, காரம் என இரு சுவைகளிலும் ருசிக்கக்கூடிய புட்டு, ஏனோ எல்லா வீடுகளிலும் இடம்பெறுவதில்லை. பாரம்பரியமான இந்த உணவை முறையாகச் செய்யத் தெரியாததே காரணம். ஒன்றல்ல, இரண்டல்ல... ஐந்தாறு வகைகளில் புட்டு தயாரித்து விற்பனை செய்வதில் நிபுணி, சென்னையைச் சேர்ந்த அழகேஸ்வரி!
``சென்னையில ஒரு தனியார் பள்ளியில டீச்சரா வேலை பார்க்கறேன். பூர்வீகம் நாகர்கோவில். புட்டு எங்க ஊரு ஸ்பெஷல் அயிட்டம். எங்க வீட்ல வாரத்துல 3-4 நாள் புட்டு கட்டாயம் இருக்கும். அதை சாப்பிடறவங்க பாராட்டாமப் போக மாட்டாங்க. ஸ்கூல் டைம் முடிஞ்சு கிடைக்கிற நேரத்துல புட்டு ஆர்டர் கேட்கறவங்களுக்கு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். இப்ப அதுவே எனக்கொரு பார்ட் டைம் பிசினஸா ஆயிடுச்சு...’’ என்கிற அழகேஸ்வரி, பச்சரிசி, மக்காச்சோளம், சிவப்பரிசி, சாமை அரிசி, கேழ்வரகு, ஆள்வள்ளிக்கிழங்கு என விதம் விதமான பொருட்களில் புட்டு செய்கிறார். கூடவே புட்டுக்குத் தொட்டுக் கொள்ள கடலைக்கறியும்.
``புட்டுன்னதும் நிறைய பேர் அரிசியில பண்றதை மட்டும்தான் தெரிஞ்சு வச்சிருக்காங்க. அதைத் தவிர்த்து ஆரோக்கியமாவும் நிறைய வெரைட்டி புட்டு பண்ணலாம். புட்டுங்கிறது காலை, மாலைனு எப்ப வேணா சாப்பிடக்கூடியது. வயிற்றை ஒண்ணும் செய்யாது. அப்பளம், கடலைக்கறி, வாழைப்பழம்னு எது கூட வேணாலும் தொட்டுச் சாப்பிடலாம். வெறும் 300 ரூபாய் முதலீட்டுல புட்டுக்கான மளிகை சாமான்களையும், புட்டுக் குழலை 200 ரூபாய்லயும் வாங்கிடலாம். அரை கிலோ மாவுல 6 குழல் புட்டு வரும். அது 10 பேர் சாப்பிட போதுமானது. ஒரு குழல் 20 ரூபாய்க்கு, கடலைக் கறியோட கொடுக்கலாம். 50 சதவிகிதத்துக்கும் மேல லாபம் கிடைக்கும். தினம் ஒரு வெரைட்டியோ அல்லது ரெண்டு, மூணு வெரைட்டியோ செய்து விற்பனை பண்ணலாம்’’ என்கிறார் அழகேஸ்வரி. இவரிடம் 5 வகையான புட்டு மற்றும் கடலைக் கறி செய்முறையை ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ள கட்டணம் 500 ரூபாய்.
"பச்சரிசி, மக்காச்சோளம், சிவப்பரிசி, சாமை அரிசி, கேழ்வரகு, ஆள்வள்ளிக்கிழங்கு என விதம் விதமான பொருட்களில் புட்டு செய்கிறார். கூடவே புட்டுக்குத் தொட்டுக் கொள்ள கடலைக்கறியும்."
லிக்யூட் சோப்பு (துணி துவைக்க)
முத்துலட்சுமி
இன்று அனேக வீடுகளில் வாஷிங் மெஷின் இருக்கிறது. வீட்டுவேலைக்கு வருகிறவர்கள் கூட கைகளால் துணிகளைத் துவைப்பதை விரும்புவதில்லை. துணிகளைத் துவைக்க சோப்பு, சோப்பு பவுடரை தாண்டி, இன்று பலரும் விரும்புவது லிக்யூட் சோப்பு. பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தும் லிக்யுட் சோப்பை போலவே, துணிகளுக்கான லிக்யூட் சோப்பிலும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளதே காரணம். கைகளை அரிக்காது. அலர்ஜியை ஏற்படுத்தாது. அளவாகப் பயன்படுத்தலாம். உபயோகிக்க எளிது. வாசனை தூக்கலாக இருக்கும். இப்படி நிறைய... துணிகளுக்கான லிக்யுட் சோப்பு தயாரிப்பில் பிசியாக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி.
``ஸ்கூல் ஹெச்.எம்மா வேலை பார்த்து ரிட்டயர் ஆனதும் நிறைய ஓய்வு நேரம் கிடைச்சது. அதே நேரம் பென்ஷன் பணத்துல என் மருத்துவச் செலவுகளை சமாளிக்கிறதே பெரிசா இருந்தது. அப்பதான் மகளிர் சுய உதவிக்குழுவை அணுகி, எனக்கு ஏதாவது சுயதொழில் கத்துக் கொடுக்க முடியுமானு கேட்டேன். அவங்கதான் எனக்கு துணி துவைக்கிற லிக்யூட் தயாரிப்பை சொல்லிக் கொடுத்தாங்க. இன்னிக்கு எனக்கு அதுதான் ஆதரவா இருக்கு. வயசான காரணத்தால என்னால அதிக உடல் உழைப்பைப் போட்டு எந்த வேலையும் செய்ய முடியாது. இந்த லிக்யூட் சோப்பு தயாரிக்கிறது ரொம்ப சுலபம். ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். வாஷிங் சோடா உள்ளிட்ட சில பொருட்களும், வாசனைக்கான பொருளும் விருப்பப்பட்டா கலரும் சேர்த்துக்கலாம்.
இதை விற்கறதுக்கு பெரிய அலைச்சலோ, முயற்சியோ தேவையில்லை. அக்கம்பக்கத்து வீடுகளுக்கே வித்துடலாம். எல்லார் வீடுகள்லயும் எல்லா நாட்களும் துணி துவைக்கிற வேலை நடந்தே ஆகணும். இந்த திரவத்துக்கான தேவை என்னிக்கும் இருக்கும். ஒரு பக்கெட் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் லிக்யூட் கலந்தா போதும். 750 மி.லி. லிக்யூடை 100 ரூபாய்க்கு விற்கலாம். வேற வேற கலர், வேற வேற வாசனை சேர்த்து விற்பனை செய்தா, இன்னும் பெரியளவுல லாபம் சம்பாதிக்கலாம்’’ என்கிற முத்துலட்சுமியிடம் ஒரே நாள் பயிற்சியில் லிக்யூட் சோப்பு தயாரிக்கக் கற்றுக் கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய்.
- ஆர்.வைதேகி படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
|