மிக்சி



எது ரைட் சாய்ஸ்?
ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!

கிர்த்திகா தரன்

இலவசமாகக் கிடைத்த மிக்சியை பற்றி எழுத என்ன இருக்கு என்று நினைத்தாலும்... இந்தக் காலத்தில் எந்த மிக்சியும் அதிக காலங்களுக்கு வருவதில்லை. எப்போதும் இதை வாங்க தேவை இருக்கவும் செய்கிறது. முக்கியமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முக்கிய பொருட்களில் மிக்சியும் ஒன்று!

உடல்நலம் பற்றி விழிப்புணர்வு கொண்ட ஒரு தோழி, ‘அம்மி, கல்லுரல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டேன். ஜிம்மை விட மிக உபயோகமாக இருக்கிறது’ எனக் கூறினாள். இன்னும் கொஞ்ச நாட்களில் எந்த பிராண்ட் அம்மி, கல்லுரல், உலக்கை சிறப்பாக உடல் இளைக்க வைக்கும் என்று ரைட் சாய்ஸ் தொடரில் எழுதினாலும் ஆச்சரியம் ஏதுமில்லை! ‘நாளையில் இருந்து உங்க ஆர்ம்ஸ்க்கு ஜிம்ல செலவு செய்யாதீங்கோ’ என்ற வசனம் கேட்க  நேரிடலாம். அதை விட... வெறும் 9,999 ரூபாய் மட்டுமே என்றும் அம்மி வாங்கினால் உரல், உலக்கை இலவசம், மின்சாரம் வேண்டாம், வாழ்நாள் மெயின்டனன்ஸ் ஃப்ரீ என்று கூட சொல்லும் காலம் வரலாம். காலம் என்றுமே ஒரு சுழல்கடிகாரம். சுற்றிக்கொண்டு இருக்கும்!

என்றாவது ஒரு நாள் திடீர் என்று கைவிட்டு விடும் மிக்சி... இதன் உள்ளே இருப்பது பெரிய விஷயமில்லை. ஒரு மின்சார மோட்டார். அதில் இணைத்து உள்ள ப்ளேட் எனப்படும் கத்தி. மெக்கானிகல் வடிவத்தில் இருந்ததை எலட்ரிக் வடிவத்தில் கொண்டு வந்தவுடன் பெரும் வெற்றி பெற்றது. சிறுவயதில் பாட்டி வறுத்த காபிகொட்டையை தினம் விடிகாலை 4 மணிக்கு அரைப்பார்கள். அப்படி அரைத்ததுதான் காபி டிக்காஷன். அதில் வரும் மணத்துக்காகவே தூக்கத்தில் எழுந்து போய் அடுக்களை சூட்டில் புகுந்து கொள்வேன். அதை கையால் சுழற்றினால் நடுவில் இருக்கும் ப்ளேட் போன்ற அமைப்பு காபிக்கொட்டையை பொடியாக்கிக் கொடுக்கும். இதுதான் நவீன மிக்சிக்கும் பாட்டி!

கையால் சுழற்றுவதற்குப் பதில் மின்சாரம்... வேறு ஒன்றுமில்லை. அத்தனை வேகமாக ஃபாஸ்ட் ஃபார்வர்ட் போட்டு ஆபீசுக்கு கிளம்பும் முன்  அவசர சட்னி அரைக்க முடியாது என்பதால் மின்சார மோட்டார் வரப்பிரசாதமாக இருக்கிறது. கப்பல்களில், படகுகளில்தான் முதலில் பிளேடு தொழில்நுட்பம் தோன்றியது. பிறகு 1900்களில் மின் மோட்டாரில் பிளேடு இணைக்கப்பட்டவுடன் மிக்சர் எனப்படும் அரவை இயந்திரம் தோன்றிவிட்டது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் மிக்சி இத்தனை கடினமாக உழைக்கிறது என்பதும் ஆச்சரியம்.

உலகம் முழுக்க மிக்சர், ஜூசர் உண்டு. எனினும் எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்திய தயாரிப்பு மிக்சியைதான்  இந்தியர்கள் தூக்கிக்கொண்டு செல்வார்கள். அதற்கான காரணம் எல்லா மசாலா பொருட்களையும் நம்மூர் மிக்சியால் மட்டுமே மிக சன்னமாக, நைஸாக அரைக்க முடியும். 750 வாட் சக்தி  இங்கு சர்வ சாதாரணம். பல நாடுகளில் சக்தி குறைவு... மிக்சி, கிரைண்டரில் கூட பவராக இருக்கும் இந்தியர்கள் நாம். நம் கிச்சன் கேபினட் வேறு நாடுகளை விட அதிக  சக்தி  வாய்ந்தது :-) ‘சுமீத்ல போடு’, ‘டால்டா போட்டாதான் பாதுஷா நல்லாருக்கும்’ - இதுபோல பிராண்டுகளால் அறியப்படும் பொருட்கள் ஏராளம். மிக்சி என்று அழைக்காமல் சுமீத் என்றே பலர் அழைப்பதைக் காணலாம்.  இங்குதான் ஒரு கதை சொல்ல வேண்டும். இந்தியாவில் சொந்தத் தயாரிப்பு மிக்சி நுழையாத காலம் அது. அதுவரை வெளிநாட்டு பிராண்டுகள்தான். சுமித் நிறுவனர் சத்யபிரகாஷ் மத்தூர் சிமன்ஸ்(Siemens)  கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவரின் மனைவி உபயோகப்படுத்தும் பிரான் (Braun) மிக்சியை ரிப்பேர் செய்து கொடுக்க கணவரிடம் கூறினார். அதைக் கழற்றி சரி செய்துகொண்டு இருந்த மதூருக்கு, இந்திய சமையலறைக்கு ஏற்றவாறு இதைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியது. சிமன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்த 4 நண்பர்களை அழைத்துக்கொண்டு பவர் கன்ட்ரோல்  கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து சுமீத் மிக்சிகளை தயாரிக்க ஆரம்பித்தார். சில வருடங்களிலேயே புகழ்பெற்று மாதம் 50 ஆயிரம் மிக்சிகள் விற்கத் தொடங்கின. மிக்சி என்ற பெயரே  தெரியாமல், ‘சுமீத்ல அரைக்கணும்’ என்று சொல்லும் அளவுக்குப் புகழ் பெற்றது. ஒரு பிராண்ட் பொருளாக தினப்படி புழக்கத்தில் வந்தது. தூங்கி எழுந்தவுடன் ஜூஸ், பிறகு கனிவு கொடுக்கும் சுவையான  சட்னி, மிளகாய்ப்பொடி, மதியம் முழுதும் கூட்டு, மாலைக்கு ஷேக், இரவுக்கு கிரேவி, நடுவுல வடை என்று வழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். ஆனால், இவை அனைத்தும் ஒன்றின் உதவியால் மட்டுமே செய்ய முடியும். அதான் மிக்சி!

நடுவிலே சாலட், இஞ்சிச் சாறு எடுத்தல் என்று பல்வேறு வேலைகளும் செய்ய வேண்டி இருக்கிறது.  மிக்சி வாங்க முடிவு செய்தாகி விட்டால், எதற்கு வாங்குகிறோம் என்பது மிக முக்கியம். மிக்சி பல வகைகளில் வருகிறது. ஹேண்ட் ப்ளெண்டர் எனப்படும் கை அரவை , ஃபுட் ப்ராசசர், காபி கிரைண்டர், மிக்சர் கிரைண்டர் அதைத் தவிர தேங்காய் துருவ, ஆரஞ்சு ஜூஸ் பிழிய என்று ஆயிரம் இணைப்புகள்! பொதுவாக பெரிய அளவில் விற்பனை இருப்பது 3 ஜார் மிக்சிகள். இவை பெரும்பாலும் சட்னி, பொடி என்று தினப்படி வழக்கங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.  இப்போதோ தினமும் ஜூசர், பிராசசர், பிளெண்டர் என்று புதிது புதிதாக வருகிறது. எதை வாங்கினால் நமக்கு உபயோகப்படும் என்பதே குழப்பத்தில் கொண்டு விடுகிறது.



மிக்சி வாங்கும் போது  பார்க்க வேண்டிய முதல் விஷயம் அதன் செயலாற்றல். அவை wattsல் அளக்கப்படும். 300 வாட்ஸில் இருந்து 1000 வாட்ஸ்க்கு மேலே வரை உள்ள மிக்சிகள் உள்ளன. அதனால், தேர்ந்து எடுக்கும்போது சக்தியை கவனம் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக சக்தியில் மட்டுமே கடினமான பொருட்களை அரைக்க முடியும்.  ஒரு குதிரை சக்தி (hp) என்பது 746 வாட்ஸ். பெரும்பாலான வகைகள் ஒரு குதிரைத்திறனை பெற்று இருக்கும்.   400 வாட்ஸ் மிக்சி என்றால் அரைபங்கு குதிரைத்திறன். அடைக்கோ, தோசைக்கோ மாவு அரைக்கும்போது வாட்ஸ் அதிகம் என்றால் விரைவில் செய்து விடும். நேரமும் சேமிப்பு ஆகும். பொதுவாகவே, கடினப் பொருட்களை அரைக்க அதிக சக்தி தேவை.

வேகம்

இந்தியன் மிக்சிகளை பொறுத்த வரை வேகம் ஒரு முக்கிய காரணியாக கருதப்படுவதில்லை. 5000 முதல் 20000 RPM  (ஒரு நிமிடத்துக்கு பிளேடு சுழலும் எண்ணிக்கை) அளவுகளில் வருகிறது. மிக வேகமான சுழற்சியில் ஒரு பிரச்னை... என்னவென்றால் பொருட்கள் சரியாக அரைக்கப்படாமல் வேகத்தில் ஜாரின் அடியிலேயே தங்கி விடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், வேகமான மிக்சிக்கும் அதன் திறனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.  அதற்கான மின்விசை மிக முக்கியமானது. பெரும்பாலும் 4 அளவுகளில் வரும். மிக வேகம் நன்றாக அரைக்காமல் போக வாய்ப்பு உள்ளதால் சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டலாம்.  முதலில் கலவையை சரியாக செய்துகொள்ள, கலந்துகொள்ள  (whip)விசையை அமுக்கினால் மட்டும் ஓடுமாறு உள்ள விசை  இருக்கும். அது இருப்பது நல்லது.

பாதுகாப்பு

மிக்சியை வைத்துக்கொள்வது முக்கியமில்லை. அவற்றை ஆடாமல், ஓடாமல் எப்படி வைத்துக்கொள்வது? என்னதான் மிக்சியை அங்கேயும் இங்கேயும் வைத்து அரைத்தாலும் அவை ஓடும்போது நகராமல் இருப்பது அவசியம். இல்லாவிடில் சுழலும் வேகத்தில் அவை ஆட ஆரம்பித்து விடும். இதற்காக பெரும்பாலும் வேக்கவம் புஷ் எனப்படும் ரப்பர் தக்கைகள் 4  இருக்கும். இவற்றால் அவை மேடையில் ஒட்டிக்கொள்ளும். தெர்மல் கட் ஆப் எனப்படும் விசை, அதிக அளவு சூடாகும்போது அல்லது அதிக அளவில் பொருட்கள் போட்டு அரைக்கும் போது மிக்சி தானாகவே நின்று விடும். பிறகு சிறிது நேரம் கழித்து அடியில் இருக்கும் சிவப்பு நிற விசையை அழுத்தினால் திரும்ப வேலை செய்யும். இந்த பாதுகாப்பு இல்லாவிடில் மோட்டார் புகையும்  அபாயம் இருக்கிறது.

தெர்மல் விசை அணைய 2 காரணங்கள் இருக்கலாம். ஒன்று அதிக பொருட்கள் போடுவது, இன்னொன்று அரைக்க முடியாத அளவுக்கு கடினமான அல்லது இழுவையான பொருட்களால் சக்திக்கு மீறி செயல்பட வைப்பது. இந்த பாதுகாப்பு விஷயத்தால்  மிக்சி பழுதாவது தடுக்கப்படுகிறது. அடுத்து மிக்சி அரைக்கும் போது வரும் பிரச்னை... காற்றின் அழுத்தம் தாங்காமல் மூடி வெளியே வந்து பொருட்கள் தெறிப்பது. பெரும்பாலும் ஒரு சிறிய துளை இருக்கும். அதன் மூலம் காற்று வெளியேறும். ஆனால், சுழலும் வேகத்தில் இன்னும் அழுத்தம் கூடும். அதனால், அணைத்து விட்டு ஒரு முறை காற்றை வெளியேற்றுவது பாதுகாப்பாக இருக்கும்.

பல மிக்சிகளில் இப்போது  மூடிகள் பூட்டிக்கொள்ளும் வசதியுடன் வந்து இருக்கிறது. அதனால் பிடித்துக்கொண்டே அரைக்கத் தேவையில்லை. கொஞ்சம் நகர்ந்தும் வேலை செய்ய முடியும். ஆனால், அவை எளிதாக உள்ளதா என்று பார்ப்பது அவசியம். சில லாக் மாடல்கள் சுலபமாக இல்லாததால் நாமே லாக் ஆகிவிடும் அபாயம் உள்ளது! ஃபுட் ப்ராசசர் எனப்படும் பலவித பயன்பாடு உள்ள மிக்சிகளை பலர் வீட்டில் பார்த்து இருக்கலாம். எக்கச்சக்க பிளேடுகள், தட்டுகள் இருக்கும். கேட்டால் எல்லாம் செய்யலாம், வீட்டு வேலையை அனைத்தும் செய்யும் என்று அடுக்குவார்கள். ஆனால், ஒவ்வொரு முறை பிளேடு மாற்றி உபயோகப்படுத்த அலுப்பாக இருக்கும் என்று பல காலங்கள் உபயோகப்படுத்தாமல் வைத்து இருப்பார்கள்.  காரணம்  கேட்டால், பல நேரங்களில் ஒவ்வொரு தட்டாக மாற்ற வேண்டும், சுத்தம் செய்வது கடினம் என்று அடுக்குவார்கள்.

இங்கு மிக முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். காய்கறி நறுக்க அதிக வேக  மோட்டார் உபயோகம் ஆகாது. அதனால் வெறும் மிக்சி போல கடின அரவைகளை மிக வேகமாக அரைக்க முடியாது. அந்த நேரத்தில் காய்கறி நறுக்குவது போன்றவற்றுக்கு மட்டும் நாம் அதை உபயோகப்படுத்துவதில்லை. சப்பாத்திக்கு மாவு பிசைவது, கோஸ், வெங்காயம் நறுக்குவது, ‘இஞ்சிச்சாறு குடித்தால் இடுப்பு அழகாகும்’ என நினைத்து, முழு இஞ்சியை அப்படியே போட்டு அரைக்காமல் அழுத்திப் பிழிந்து சாறு எடுப்பது, சாத்துக்குடி பிழிவது போன்றவற்றுக்கு மிக உபயோகமாக இருந்தது. ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் குறைவு என்பதால் மஞ்சள் போட்டு அரைப்பது, தேங்காயை துருவாமல் அப்படியே போட்டு அரைப்பது போன்ற செயல்களில் அது மிக துல்லியமாகச் செயல்படவில்லை.

இதுபோன்ற அமைப்பை தேர்ந்து எடுக்கும்போது குறைந்த சக்தி போதுமா என்று யோசித்துக்கொள்ள வேண்டும். அதில் கடின வேலைகளை செய்ய முடியாது. பெரும்பாலும் இரண்டாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை பல்வேறு விலைகளில் இவை கிடைக்கின்றன. இதில் இரு வகை விசைகளில் வரும். ஒன்று சுழலும் வகை. அடுத்தது பட்டன் போன்ற அழுத்தும் அமைப்பு. முன்பெல்லாம் ஃபுட் ப்ராசசர் என்றாலே வெளிநாட்டு மாடல்கள்  என்ற காலம் சென்று ஒவ்வொரு இந்திய பிராண்டும் இறங்கி விட்டது. அதனால் நமக்குத் தேவையான மாடலை தேர்ந்து எடுத்துக்கொள்ள வசதியாக உள்ளது.

ஜூசர் வகை ஜார்

சென்டரிப்யுகள் மற்றும் சிட்ரஸ் என 2 வகை ஜார்கள் வருகிறது. செயல்படும். சிட்ரஸ் ஜூசர் சாத்துக்குடி பிழிய உபயோகமாக இருக்கும். இஞ்சி, ஆப்பிள் போன்றவற்றில் அரைக்காமல் அப்படியே அழுத்தி சாறு எடுக்க சென்டரிப்யுகள் ஜூசர் உபயோகம். பெரும்பாலும் இவை இரண்டும் சேர்ந்தே அட்டாச்மென்ட்டில் கிடைக்கும்.

இணைப்புகள்

அட்டாச்மென்டுகள் எனப்படும் பலவித ஜார் மற்றும் பிளேடுகளும் கவனிக்க வேண்டிய விஷயமே. இவை எளிதாக மாற்றும்படியும் கழுவும் படியும் இருக்க வேண்டும். காய்கறி நறுக்க தனியாக பெரிய பிளேடு, கேரட் சீவ தனியாக தட்டு போன்ற அமைப்பு, ஜூஸ் பிழிய, தேங்காய் துருவ, சப்பாத்தி மாவு பிசைய என்று தனித்தனியாக இருக்கும். அதைத் தவிர சாறு எடுக்க வலை வடிக்கட்டி அமைப்புடன் ஜூசர் அமைப்பும் கிடைக்கும். தேங்காய் துருவ வேண்டும் என்றால் அதற்குரிய சக்தியுடன் இருக்கிறதா என்று கவனிக்கும் அவசியம்  உள்ளது. வீட்டின் தேவைக்கு ஏற்ப வாங்கிக்கொள்வது நல்லது. அத்தனை உபயோகம் இல்லாவிடில் அட்டாச்மென்டுகள் குறைவாக இருந்தாலும் நல்ல பொருளில் முதலீடு செய்யலாம்.

பஜாஜ் மாடல்

இதில் 3 ஜார்கள் உள்ளன. அதைத் தவிர காய் நறுக்க, கேரட் துருவ, மாவு பிசைய வசதிகள் உண்டு. 600 வாட்ஸ் சக்தியில் ஹெவி ட்யூட்டி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. மிக்சி, காய் நறுக்க 2 அடுக்குகள்,  6 பிளேடுகள், 2 ஜூசர்கள் மற்றும் 2 வருட வாரன்டி உடன் வருகிறது. மாஸ்ட்ரோ ப்ளஸ்  எனப்படும் ப்ரெஸ்டீஜ் மாடலில் 800 வாட்ஸ் சக்தியுடன் வருகிறது. விலை சற்று அதிகம். பெரும்பாலும் இவற்றை வாங்கும்போது அரவை மிகச்சரியாக ஆகிறதா என்று பார்த்து கூடுதல் கவனத்துடன் வாங்க வேண்டி உள்ளது. ஒரு வருட வாரன்டி. சட்னி, ஜூஸ் ஜார்கள் இணைப்பு. இதில் மாவு பிசையும் அமைப்பு சக்தியுடன் இயங்கும். ஐஸ் கிரஷர் போன்ற வசதிகள் உள்ளன. காய்கறி நறுக்க தரமாக இருக்கிறது. இருப்பினும் இவை மிக்சி செய்யும் கடின வேலைகளை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.

இது அதிக சக்தி இருப்பினும் சாதாரண சட்னி வகைகளை விட காய்கறி நறுக்க, மாவு பிசைய , ஜூஸ் பிழிய போன்ற விஷயங்களுக்கு உபயோகப்படுத்தலாம். 650 வாட்ஸ் சக்தியில் இயங்குகிறது. விலை தோராயமாக ரூ. 5,400. ஒரு வருட வாரன்டி. எக்கச்சக்க பிராண்டுகள் வந்துவிட்டன. ப்ரெஸ்டீஜ், பஜாஜ், பிலிப்ஸ், மார்பி ரிச்சர்ட்ஸ், இனால்சா, சிங்கர் என்று  வந்துகொண்டே இருக்கிறது. எனவே முதலில் ஆன்லைனில் மாடல் பார்த்துவிட்டு, வாட்ஸ் கவனித்து , அட்டாச்மென்ட் பிளேடுகள் பார்த்து  பிறகு நேரடியாகச் சென்று தேர்ந்து எடுப்பது நல்லது. இன்னும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது... உபயோகிக்க, பராமரிக்க எளிதாகவும், அதிக இடத்தை அடைத்துக் கொள்ளாமலும் இருக்க வேண்டும். அரைக்க இருக்கும் விஷயங்கள் அடுத்த இதழிலும்!

"‘இஞ்சிச்சாறு குடித்தால் இடுப்பு அழகாகும்’ என நினைத்து, முழு இஞ்சியை அப்படியே போட்டு அரைக்காமல் அழுத்திப் பிழிந்து சாறு எடுப்பது, சாத்துக்குடி பிழிவது போன்றவற்றுக்கு ஃபுட் ப்ராசசர் மிக உபயோகமாக இருந்தது."