மன்னும் இமயமலை எங்கள் மலையே!
10 விஷயம்
வித்யா குருமூர்த்தி
நம் நாட்டின் வட எல்லையில், ஆசியாவின் பிற நாடுகளில் இருந்து, இந்தியத் துணைக் கண்டத்தைக் காக்கும் இயற்கை பாதுகாப்பு அரணாக விளங்குவது இமயமலை. உலகத்தின் சிறந்த மாபெரும் மலைத் தொடர்களில் ஒன்றான இமயமலை பற்றி 10 ஆச்சரியங்கள்!
1.30 மலைகளையும் 9 மிக உயர்ந்த சிகரங்களையும் கொண்டது இமயமலைத் தொடர். 2, ஆயிரத்து 400 கி.மீ. நீளத்துக்குப் பரந்து விரிந்து, 29 ஆயிரம் அடி உயரத்துடனும், 320-400 கி.மீ. அகலத்துடன் கம்பீரமாக விளங்குகிறது. உலகின் மொத்த நிலப்பரப்பளவில், 0.4% அளவை இமயமலையே ஆக்ரமிக்கிறது.
2.உலகின் மிக இளமையான மலைத்தொடர் இமயமலைதான். சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு மிகப்பெரிய நிலப்பரப்புகள் (இந்தியா மற்றும் யுரேஷியாவின்) இடையே ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட நிலப்பிளவு மற்றும் புவி மாற்றத்தால் இமயமலை உண்டானதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இமயமலை உயிருடன் இருக்கும் ஒரு புவி அமைப்பு (Geologically alive) என்பது இன்னொரு ஆச்சரியம். அதாவது, இந்த மலைத்தொடர் ஆண்டுதோறும் சுமார் 20 மில்லிமீட்டர் நகர்கிறது. இதனால், இமயமலை அடிவாரம் எப்போதும் மிக வேகமான பருவநிலை மாற்றங்களுக்கும், வெள்ளம், நிலநடுக்கம், அதிக பனிப்பொழிவு போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கும் ஆட்படுகிறது.
3.இமயமலை மொத்தம் 6 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. அவை, இந்தியா, சீனா, பாகிஸ்தான், திபெத், நேபாள் மற்றும் பூடான்.
4.உலகின் பெயர்பெற்ற ஜீவநதிகளான சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா, மீகாங், மஞ்சள் ஆறு எனப்படும் யாங்சே போன்றவற்றின் பிறப்பிடம் இமயமலைதான்.
5.ஹிமாலயா என்றால், சமஸ்கிருதத்தில் ‘பனிகளின் உறைவிடம்’ என்று பொருள். மவுன்ட் எவரெஸ்டின் மேற்பகுதியில், என்றுமே உருகாத பனிப்பாறைகள் (Glaciers) சூழ்ந்துள்ளன. இவை ஸ்படிகம் போன்ற மிகச்சுத்தமான, தெளிவான நீர் உறைவிடமாகும். இந்தப் பனிப்பாறை அடுக்குகள், அன்டார்ட்டிக் மற்றும் ஆர்ட்டிக் பகுதியை அடுத்த 3வது பெரிய பனி உறைவிடம் (Ice Deposits).
6.உலகின் மிக உயரமான சிகரங்களின் தந்தை நம் இமயமலைதான். அதில் முதல் மூன்று இடங்கள்...
i) எவரெஸ்ட் - 8,848 மீ. (நேபாள் - திபெத் பார்டர்) ii) K2 - 8,611 மீ. ( சைனா - ஜம்மு & காஷ்மீர் எல்லை iii) கஞ்சன் ஜங்கா - 8,598 மீ. (இந்திய - நேபாள் எல்லை).
7.இமயமலை அடிவாரத்தில் கிடைக்கும் மருத்துவ மூலிகைகள் மிகத் தூய்மையாவை... சிறந்த பலன் கொடுப்பவை... கிடைப்பதற்கு அரியவை.
8.1953ம் ஆண்டு, டென்ஸிங் நார்கே என்பவர்தான், எவரெஸ்டின் மேல் ஏறிய உலகின் முதல் மனிதர். அதன் நினைவாக, அங்கு தன் அன்பு மகளின் சிவப்பு-நீல பென்சிலை புதைத்து வைத்து விட்டு வந்தார்.
9.இந்தியாவின் முக்கிய, புகழ்பெற்ற மலைவாச ஸ்தலங்களான லடாக், நைனிடால், முசௌரி, வைஷ்ணோ தேவி, குலு-மணாலி, பட்னி டாப் போன்றவை இமயமலைத் தொடர்களிலேயே அமைந்துள்ளன.
10.மிக அரியவகை விலங்கினங்களான பனிச்சிறுத்தை, திபெத்திய ஆடு, காட்டு ஆடு, கஸ்தூரி மான் போன்றவற்றின் இயற்கை வாழிடமாகவும் இமயமலைத் தொடர்கள் விளங்குகின்றன.
"இமயமலைத் தொடர் ஆண்டுதோறும் சுமார் 20 மில்லி மீட்டர் நகர்கிறது. இதனால், இமயமலை அடிவாரம் எப்போதும் மிக வேகமான பருவநிலை மாற்றங்களுக்கும், வெள்ளம், நிலநடுக்கம், அதிக பனிப்பொழிவு போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கும் ஆட்படுகிறது."
|