ஆசிரியைகளுக்கு ஓவர் கோட்... ஆசிரியர்களுக்கு?!



பள்ளிக்கூடம்

சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் சகோதரத்துவத்தையும் பயிற்றுவிக்கும் இடமே பள்ளிக்கூடம். குழந்தைகளின் எதிர்காலம் பள்ளியில்தான் வார்க்கப்படுகிறது. பெற்றோரை விட ஆசிரி யர்களிடம்தான் பிள்ளைகள் அதிக நேரம் செலவிடுகிறார்கள். அதனால்தான் சமூகம் ஆசிரியர்களை மெச்சுகிறது. அவர்களை தெய்வத்துக்கு நிகராகக் கொண்டாடுகிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தான் முன்மாதிரிகள். அவர்களைப் பார்த்தே மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். வளர் இளம் பருவம் மாணவர்களுக்கு முக்கியமானது. துடிப்பும் துறுதுறுப்பும் துளிர்விடும் இத்தருணத்தை தக்க விதத்தில் பக்குவமாக ஆசிரியர்கள் கையாள வேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை விளைவுகளே ஏற்படும். இப்படியான ஒரு யதார்த்தத்தை உள்வாங்கிக்கொண்டு மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் உள்ள வன்னிவேலன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வோம்.

மாணவர்களின் கேலி, கிண்டல்கள், சீண்டல்கள், அத்துமீறல்களைத் தடுப்பதற்காக மாணவிகளுக்கு ஓவர் கோட் (மேல் கோட்) போடும் நடைமுறையைக் கொண்டு வந்தார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். இத்திட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து இதே நடைமுறை ஆசிரியைகளுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊர் மக்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் நிறைந்த அரங்கில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பெருமிதத்தோடு ஆசிரியைகளுக்கு ஓவர் கோட் வழங்கி இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்கள்!

மாணவர்கள் ஆசிரியைகளையும் சக மாணவிகளையும் கேலி செய்யும் சம்பங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. அதை சக ஆசிரியர்கள் தட்டிக் கேட்டாலோ, பள்ளி நடவடிக்கை எடுத்தாலோ பிரச்னைகள் உருவாகின்றன. அதுபோன்ற பிரச்னைகளைத் தடுப்பதற்காக பள்ளிக்கல்வி இயக்குனரகம் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது. மாணவர்களின் கவனத்தை திசை திருப்பாமல் இருப்பதற்காக ஆசிரியைகளுக்கு ஓவர் கோட் வழங்குவதும் அத்திட்டங்களில் ஒன்று. இது தொடர்பாக அனைத்து பள்ளிகள், ஆசிரியர்களிடத்தில் கருத்துக் கேட்கப்பட்டது. பெருவாரியான ஆசிரியைகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வன்னிவேலன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரோ ஆர்வத்தோடு அத்திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்.

அண்மைக்காலமாக பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை வயது பேதமின்றி பெண்கள் சீண்டல்களையும், வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறபோதெல்லாம் அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும், அமைச்சர்களும் ‘பெண்கள் முறையாக உடை உடுத்தாததே பிரச்னைகளுக்குக் காரணம்’ என்று திருவாய் மலர்கிறார்கள். ‘ஆண்கள் அப்படித்தான் தவறு செய்வார்கள். பெண்கள்தான் தங்கள் உடம்பை முழுதாக மறைத்துக் கொண்டு அடக்க ஒடுக்கமாக வாழ வேண்டும் என்ற பொதுப்புத்தியின் பார்வையே அது.

அதே போன்ற ஒரு கருத்தின் அடிப்படையில்தான் வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் ஓவர் கோட் திட்டத்தை தொடங்கியிருக்கிறார். மாணவர்களின் கிண்டலில் இருந்தும் சீண்டல்களில் இருந்தும் தப்பிப்பதற்காக மாணவிகளுக்கு ஓவர்கோட். அது சக்சஸ் ஆனதும் ஆசிரியைகளுக்கு... அடுத்து..? சாலையில் நடமாடும் பெண்கள்... அடுத்து? வீட்டில் இருக்கும் பெண்கள்... எல்லா பெண்களும் ஓவர் கோட் போட்டுவிட்டால் நாட்டில் எந்த வன்முறையும் நடக்காதல்லவா?!

மீண்டும் நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது... பள்ளிக்கூடம் மாணவர்களை வார்த்தெடுக்கும் இடம். எதிர்காலத்தை உருவாக்கும் இடம். அறத்தையும், தர்மத்தையும் நியாயத்தையும் உண்மையையும் ஜனநாயகத்தையும் நேர்மையையும் சத்தியத்தையும் சகோதரத்துவத்தையும் தோழமையையும் கற்றுத்தந்து அவர்களை நல்வழிப்படுத்தும் இடம். கட்டுக்கட்டான புத்தகங்கள் வழி, அதில் உள்ள பாடங்கள் வழி இதைத்தான் ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறார்கள். மாணவர்கள் அவற்றையெல்லாம் சரியாகக் கற்றார்களா என்பதைச் சோதிக்கத்தான் தேர்வுகள். அந்தத் தேர்வுக்குத்தான் மதிப்பெண்கள்.

‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்று கற்றுக் கொடுத்து, ஒருவேளை அவர்கள் பெண்களை தவறாகப் பார்ப்பார்களேயானால் அவர்களை நல்வழிப்படுத்தி செம்மையாக்க வேண்டியது பள்ளியின் வேலை... கடமை! ஆசிரியர்களை தெய்வமாகக் கருதியே தங்கள் பிள்ளைகளை பெற்றோர் முழுமையாக ஒப்படைக்கிறார்கள். மாணவர்களையும் தங்கள் பிள்ளைகளாகக் கருதி அவர்களின் தவறுகளை சரி செய்து செம்மைப்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு. அப்படியான கடமை உணர்வும் கருணையும் கனிவும் உள்ளவர்களே ஆசிரியர் பொறுப்புக்கு வரவேண்டும்.

மாறாக, மாணவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக மாணவிகளுக்கு ஓவர்கோட்... ஆசிரியைகளுக்கு ஓவர் கோட்! எங்கோ ஒரு மாணவன் தவறு செய்தான் என்பதற்காக அத்தனை மாணவர்களையும் குற்றவாளியாக்குவதுதான் வன்னிவேலன்பட்டி நியாயமா..? ஒருவேளை, மாணவர்கள் தவறு செய்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் தண்டனை, மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்குமா? ஒரு அறிவார்ந்த கல்விக்கூடத்தின் இந்த மேலோட்டமான செயல்பாட்டை எப்படி புரிந்து கொள்வது?



‘‘அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு தலைமையாசிரியர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், மேம்பாடு என்பது வகுப்பறைச் சூழலில் இருக்க வேண்டும். மாணவர்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். புரிதலோடு இருக்க வேண்டும். இப்படி அல்ல!

அந்தப் பள்ளியில் முதலில் மாணவிகளுக்கு மட்டும் ஓவர்கோட் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இல்லை. இப்போது ஆசிரியைகளுக்கு ஓவர் கோட். ஆசிரியர்களுக்கு இல்லை. சீரூடை என்றால், மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆசிரியைகளுக்கு சீருடை கொண்டு வரும்போது ஆசிரியர்களுக்கும் கொண்டு வரவேண்டும். வகுப்பறையிலேயே ஆண்களை ஒருமாதிரியும், பெண்களை ஒருமாதிரியும் நடத்துகிற ஒரு பள்ளி எப்படி தரமான, சமத்துவமான, ஜனநாயகப்பூர்வமான கல்வியை வழங்கும்..?

ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி... ஆடையில் கட்டுப்பாடு அவசியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்தக் கட்டுப்பாட்டை அடுத்தவர்கள் விதிக்கக்கூடாது. ஆடை உடுத்துவது தனிமனித உரிமை. ஆசிரியைகளுக்கு பிறரை விட பொறுப்பும், கடமை உணர்வும், கண்ணியமும் அதிகம். அவர்களுக்கு தங்களுக்கான உடையைத் தீர்மானித்துக்கொள்ளத் தெரியும். ஓவர்கோட் அணிவதன் மூலம், மாணவர்களை குற்றவாளியாக்கி, ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் குற்ற உணர்வை உருவாக்குகிறார்கள். பள்ளியின் தலைமையாசிரியர் வேட்டி, சட்டை அணிந்து பள்ளிக்கு வருகிறார். ஆசிரியர்கள் ஸ்டைலாக பேன்ட், சர்ட் அணிந்து வருகிறார்கள். அதில் எல்லாம் பிரச்னை இல்லை. அதெல்லாம் டீசன்டான உடை. ஆசிரியைகள் புடவை அணிந்து வருவது டீசன்டான உடையில்லை. அதற்கு மேல் மேலங்கி அணிய வேண்டுமாம்.

இப்படியொரு சீருடையை ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் பொதுவாக அரசு கொண்டு வரலாம். அதில் யாருக்கும் பிரச்னையில்லை. ஆசிரியைகளுக்கு மட்டும் ஓவர்கோட் போடச்சொல்லி கட்டாயப்படுத்துவது, மாணவர்களுக்கு குற்ற உணர்வையும், ஆசிரியைகளுக்கு மன உளைச்சலையும்தான் உருவாக்கும்’’ என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வயது மிகவும் சிக்கலானது. மிகவும் கவனமாக கையாள வேண்டிய பருவம். பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் அதில் சமபங்கு கடமை இருக்கிறது. அக்காலம் போல இல்லாமல் இன்று மாணவர்களுக்கு நெருக்கமாக ஊடகங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். குடும்பங்களில் தனிமை மிகுந்து விட்டது. மாணவர்கள் தங்கள் தவிப்புகளையும் குழப்பங்களையும் வெளிக்காட்ட இயலாமல் மிகுந்த அழுத்தத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  

இச்சூழலில் முன்னைவிட ஆசிரியர்களுக்கு பொறுப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் நம்பிக்கையாக இருப்பது அரசுப்பள்ளிகள்தான். தனியார் பள்ளிகளில் விலை கொடுத்து கட்டுபடியாகாது. இந்த தலைமுறையாவது வாழ்க்கையை மாற்றிவிடாதா என்ற எதிர்பார்ப்பில்தான் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கிறார்கள் பெற்றோர். தனியார் பள்ளிகளைப் போலன்றி, முறையான கல்வித்தகுதி, பயிற்சிகளுக்குப் பிறகுதான் அரசு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சகிப்புத்தன்மையும் பொறுப்பும் அவர்களுக்கு அதிகம் தேவை.  

பெண்களுக்கான வாய்ப்புகள் விசாலமாகி வருகின்றன. இதெல்லாம் பெண்களுக்குப் பொருந்தாது என்று ஒதுக்கப்பட்ட எல்லாவற்றையும் தொட்டு சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். ஏன்..? ஆண்களே தொடத் தயங்கும் துறைகளைக் கூட வென்றெடுக்கிறார்கள். அவர்களுக்கு தனிச்சீருடை வழங்குவதன் மூலம் உடலமைப்பை முன்னிறுத்தி பலவீனப்படுத்தி, அவர்களின் எல்லையைச் சுருக்கிவிடக்கூடாது என்ற கவலையும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதுதான்.

 ‘‘ஒரு ஆசிரியையாக இதை நான் அவமானமாக உணருகிறேன். ‘ஒழுக்கம் என்பது பெண்களுக்கானது மட்டும்தான். ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற மனநிலை உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எதைக் கற்றுத்தரப் போகிறார்கள்? அடுத்த தலைமுறையையும் இவர்கள் தவறான பாதைக்கு எடுத்துச் செல்கிறார்கள். பொதுவாக, கல்விச் சூழலே இதுமாதிரியான எண்ண ஓட்டத்தில்தான் இயங்குகிறது. 10ம் வகுப்பு, +2 பொதுத்தேர்வு நடந்தபோது, தேர்வறை கண்காணிப்பாளர்களாக செல்லும் ஆசிரியைகள் பூ வைத்துக் கொண்டு செல்லக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு போட்டார்கள். பூ வைத்துக் கொண்டு போனால் மாணவனின் கவனம் சிதறி விடுமாம். இதைவிட ஆசிரியைகளை எப்படி இழிவுபடுத்த முடியும்?உணர்வுகள் எல்லாருக்கும் பொதுவானதுதான். ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு என்றெல்லாம் இல்லை.

ஜீன்ஸ், டைட் சர்ட் போட்டுக்கொண்டு ஆண் ஆசிரியர்கள் வரும்போது மாணவிகளை அது பாதிக்காதா? பெண்கள் என்ன ஜடமா? இது மிகவும் ஆழமாக விவாதிக்கத்தக்க விஷயம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிள்ளைகள் பள்ளியில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையின் பெருங்காலத்தை பள்ளிக்கு இழக்கிறார்கள். பள்ளியில், ஆண், பெண்  உறவுகள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறோமா..? வாழ்க்கைக் கல்வி இருக்கிறதா? அல்லது இதுபற்றி ஆசிரியர்களுக்குத்தான் புரிதல் இருக்கிறதா? அந்தப் பருவத்தில் ஏற்படும் பாலியல் ஈர்ப்புகளையும் மாயைகளையும் போக்கி அவர்களின் கவனத்தை கல்வியின் பக்கம் திருப்ப நம்மிடம் என்ன ஏற்பாடு இருக்கிறது?

ஆண்களின் எல்லாச் செயலையும் நியாயப்படுத்துவது... பெண்களை மேலும் மேலும் சுருக்கி அவர்களை மேலெழும்ப விடாமல் செய்வது! கிராமப்புற பெண்கள் தாழ்வு மனப்பான்மை அகன்று இப்போதுதான் பொதுவெளிக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். இதுமாதிரி செயல்கள் அவர்களை அச்சமூட்டி மீண்டும் வீட்டுச் சமையலறைக்குள் தள்ளிவிடும்’’ என்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும், அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) மாநில தொடர்பாளருமான பெ.இளங்கோவனிடம் இதுபற்றி பேசினோம்.

‘‘எங்கோ சில மாணவர்கள் செய்த தவறுக்காக, அதற்கு தொடர்பே இல்லாத மற்ற மாணவர்களை தவறானவர்களாகப் பார்ப்பது சரியல்ல. எல்லா மாணவர்களும் தவறானவர்கள் அல்ல. மாணவர்கள் பள்ளியில் மட்டும் பெண்களைப் பார்க்கவில்லை. சகோதரியாக, அம்மாவாக வீட்டிலும் பெண்களோடுதான் வாழ்கிறார்கள். சமூகத்திலும் நிறைய பெண்களைப் பார்க்கிறார்கள். ‘அவன் எப்படிப் போனால் என்ன..? நான் பாதுகாப்பாக இருந்து கொள்கிறேன்’ என்று ஆசிரியைகள் நினைக்க முடியாது. மாணவர்களிடம் கண்டிப்பு, கனிவின் மூலம் மரியாதையை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான விதிமுறைப்படி ஆசிரியைகள் சேலைதான் உடுத்த வேண்டும். அவர்கள் ஓவர் கோட் போட வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அரசே பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் ஓவர் கோட்டை சீருடையாகக் கொண்டு வந்தால் அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை.

தனியார் பள்ளிகளில் கூட ஆசிரியைகளுக்கு சேலைதான் சீருடையாக வைத்திருக்கிறார்கள். பிரச்னை உடையில் இல்லை. கண்ணோட்டத்தில், கருத்தில், சிந்தனையில் இருக்கிறது. இது மூன்றையும் மாணவர்களிடத்தில் செம்மைப்படுத்துவதுதான் ஆசிரியர்களின் பணி. அதில் தவறு இருக்குமானால் அதற்கும் ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்...’’ என்கிறார் இளங்கோவன். சரி... ஆசிரியைகளுக்கு ஓவர் கோட் போடும் திட்டத்தை கொண்டு வந்த வன்னிவேலன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் என்ன சொல்கிறார்? ‘‘எங்கள் பள்ளி ஆசிரியைகளே விரும்பி மேற்கொண்ட செயல் இது. ஆனால், தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. முதலில், மாணவிகளுக்குத்தான் ஓவர் கோட்டை நடைமுறைப்படுத்தினோம்.

அதற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஆசிரியைகளும் அதை விரும்பினார்கள். அதனால் ஓவர் கோட் அணியும் திட்டத்தை சி.இ.ஓ, டி.இ.ஓ முன்னிலையில் தொடங்கினோம். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் எல்லாம் கோட் போடுகிறார்கள்... அதைப்போலவே ஆசிரியைகளும் கோட் போடுகிறார்கள். இப்போது ஆசிரியைகளுக்கு தனி அடையாளம் கிடைத்திருக்கிறது. கம்பீரமாகவும் பெருமிதமாகவும் இருப்பதாக ஆசிரியைகள் சொல்கிறார்கள். இதை பெற்றோரும் பாராட்டுகிறார்கள். பள்ளிக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது. இங்கு மட்டுமல்ல... வேறு சில அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற நடைமுறை இருக்கிறது. இதில் ஆணாதிக்கம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. இயல்பான ஒரு ஏற்பாடுதான். சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் இதில் எதுவுமே இல்லை... இதை எதிர்ப்பவர்கள் பற்றி கவலையும் இல்லை...’’ என்கிறார் பாஸ்கரன். சரிதான்!

"மேம்பாடு என்பது வகுப்பறைச் சூழலில் இருக்க வேண்டும். மாணவர்களை  மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆசிரியர் - மாணவர் உறவை மேம்படுத்துவதாக  இருக்க வேண்டும். புரிதலோடு இருக்க வேண்டும்."

"காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிள்ளைகள் பள்ளியில் இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையின் பெருங்காலத்தை பள்ளிக்கு இழக்கிறார்கள். பள்ளியில், ஆண், பெண் உறவுகள் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறோமா..? வாழ்க்கைக் கல்வி இருக்கிறதா? அல்லது இதுபற்றி
ஆசிரியர்களுக்குத்தான் புரிதல் இருக்கிறதா?"

"பிரச்னை உடையில் இல்லை. கண்ணோட்டத்தில், கருத்தில், சிந்தனையில் இருக்கிறது. இது மூன்றையும் மாணவர்களிடத்தில் செம்மைப்படுத்துவதுதான் ஆசிரியர்களின் பணி."

- வெ.நீலகண்டன்