கிராமப்புற பெண்களுக்கு உதவ ஒரு செயலி!
மக்கள் தொழில்நுட்பம்
பிரசவத்தில் இறக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பது இன்றும் இந்திய சவாலாகவே இருந்து வருகிறது. இதன் பின்னணியில் பயன் தரும் ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார்கள் இளைஞர்கள்!
தங்கள் பகுதியிலுள்ள கர்ப்பிணிகள் மற்றும் இளம் தாய்மார்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்வது முதல் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் தங்களுடைய நேரடிக் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தின் துணை செவிலியர்கள். இப்படி ஒவ்வொரு குடும்பத்தின் நெருங்கிய தோழியாக செயல்பட்டு வரும் இவர்கள் அவசர நேரங்களில் தம் மக்களுக்கு உதவும் பணிகளில் திறம்பட செயலாற்றுவதில் பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘சுயோஜனா’ (Suyojana) எனும் மொபைல் செயலி!
இந்த செயலியில் உள்ள படிவத்தில் நோயாளியின் தனிப்பட்ட விவரங்கள், கர்ப்பகால வரலாறு, கர்ப்பத்தின் விளைவுகள், ஆபத்து அறிகுறிகள், உடல் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மேலும் அடிப்படை பாதுகாப்பு, கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பை கண்காணித்தல், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் ஆபத்து போன்ற விவரங்களும் அடங்கியிருக்கும். இந்தச் செயலி மூலம் நோயாளிகள் ஒவ்வொருவரின் தடுப்பூசி தவணைகள், மருத்துவரை அணுக வேண்டிய தேதிகள், மருத்துவரின் அடுத்த சந்திப்புகள் போன்று அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்க முடியும்.
ஆஃப்லைனிலும் ஜிபிஆர்எஸ் சேவையைப் பயன்படுத்தி நோயாளி பற்றிய அறிக்கைகளை சர்வருடன் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வர் மூலமே மேற்பார்வையாளர்கள் செவிலியர்களின் நடவடிக்கைகள், நோயாளிகளின் சுகாதார வசதிகள், கர்ப்பகால பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை கண்காணிக்க முடியும். இதனால் மருத்துவ தேவைகளை கவனிப்பதற்கான முழுமையான நேரம் மேற்பார்வையாளர்களுக்கு கிடைக்கிறது. ‘சுயோஜனா’ செயலியை உருவாக்கிய ‘ஸ்வஸ்தி’ அறக்கட்டளை ஏழை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் 2002ல் தொடங்கப்பட்டது. லட்சக்கணக்கான சமூக ஆர்வமுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஸ்வஸ்தியின் மூலமந்திரம் பொது சுகாதாரத்தில் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதே. இவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள் என்பது பெருமைக்கு உரிய விஷயம்!
- உஷா
|