விற்காதீங்க........ வாங்காதீங்க..... தத்தெடுத்து வளர்த்துப் பாருங்க!



இதுவும்  பெரிய  சேவைதான்

கரிஷ்மா ராஜரத்தினம்

``சமீபத்திய வெள்ளத்துல சிக்கி உயிருக்குப் போராடினவங்களை காப்பாத்தின எத்தனையோ பேரைப் பத்தி  நாமெல்லாம் பெருமையோடவும் நன்றியோடவும் பேசிட்டிருக்கோம். சென்னை முழுக்க பரவலா எல்லா பகுதிகள்லயும் வெள்ளத்துல சிக்கிக்கிட்ட வாயில்லா ஜீவன்களைக் காப்பாத்தினதுல எங்களோட `The Pound’ குழுவினருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த நாலஞ்சு நாட்களும் எங்க உறுப்பினர்கள் அத்தனை பேரும் அவ்வளவு தீவிரமா செயல்பட்டு, குட்டிக்குட்டி  உயிர்களைக் காப்பாத்தினதை இங்கே பெருமையோட பகிர்ந்துக்கறேன்...’’ - பெரிய விழிகளில் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் கரிஷ்மா ராஜரத்தினம்!

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் கலக்கும் இளம் தொழில் முனைவர், உளவியல் நிபுணி எனப் பன்முகம் கொண்ட கரிஷ்மாவின் அடையாளம், விலங்குகளை நேசிப்பவர். உபயோகமற்ற எத்தனையோ விஷயங்களுக்கு இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில், கைவிடப்படுகிற, உயிருக்குப் போராடுகிற வாயில்லா ஜீவன்களை மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் `The Pound’ என்கிற பெயரில் ஃபேஸ்புக் குழு நடத்துபவர்!

``சென்னையில டபிள்யூ.சி.சி.ல சைக்காலஜி முடிச்சிட்டு, அதுலயே மாஸ்டர்ஸ் பண்ண வெளிநாடு போயிட்டேன். நான் அடிப்படையில அனிமல் லவ்வர். ஃபாரின்ல படிப்பை முடிச்சிட்டு இந்தியா வந்ததும், சென்னையில என்னோட தெருவுல ஒரு நாய்க்குட்டி திரிஞ்சிட்டிருந்ததைப் பார்த்தேன். அதுக்கு மிஸ்சீஃப்னு பேர் வச்சு நானே பார்த்துக்கிட்டேன். திடீர்னு ஒருநாள் அந்த நாய்க்குட்டியை காணோம். ‘தெருவுலயே வளர்ந்த நாயாச்சே... எங்கே போய் எப்படிக் கண்டுபிடிக்கிறது’னு தெரியாம என் ஃப்ரெண்ட் சமுத்ரகுப்தாகிட்ட கவலையோட பேசிட்டிருந்தேன். அப்பதான் எங்களுக்கு ஃபேஸ்புக்ல அதுக்காக ஒரு பேஜ் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது.

அந்த பேஜ் மூலமா என் செல்லத்தைக் கண்டுபிடிச்சேன். அதைப் பார்த்துட்டு நிறைய ேபர் அவங்கவங்களோட நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும் காணோம்னு அந்த பேஜ்ல போட்டோ போட ஆரம்பிச்சாங்க. நிறைய பேருக்கு இந்தத் தேவை இருக்கிறது தெரிஞ்சு `த பவுண்ட்’ அமைப்பை ஆரம்பிச்சோம். முதல்ல செல்லப் பிராணிகளைத் தொலைச்சவங்களுக்கு உதவற ஒரு பிளாட்ஃபார்மா ஆரம்பிச்சாலும், போகப் போக, பவுண்ட் அமைப்போட செயல்பாடுகள் விரிவடைய ஆரம்பிச்சது...’’ என்கிற கரிஷ்மா, தமது  அமைப்பின் நோக்கங்கள், லட்சியங்கள், செயல்பாடுகள் என எதிலும் வணிகம் புகுந்துவிடாதபடி கவனமாக இருக்கிறார்.

``த பவுண்ட்’ அமைப்புல கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேலான உறுப்பினர்கள் இருக்காங்க. தமிழ்நாடு மட்டுமில்லாம, பெங்களூரு, டெல்லினு எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவங்களும் இருக்காங்க.  உயிர்னா எல்லாமே உயிர்தானே..? மனுஷனோட உயிர் மட்டும் உசத்தி, மத்ததெல்லாம் மட்டமா என்ன?  உயிருக்குப் போராடற எந்த ஜீவராசியும் உடனடியாக கவனிக்கப்பட்டு, காப்பாத்தப்படணும்கிறதுதான் எங்களோட தாரக மந்திரம். தினம் தினம் சாலையைக் கடக்கிறபோது எத்தனையோ ஜீவராசிகள் அடிபட்டுக் கிடக்கிறதைப் பார்ப்போம். வேகமா வண்டி ஓட்டிக்கிட்டுப் போறதுல அடிபட்டுத் துடிக்கிற மிருகங்களைப் பார்க்கறோம். ‘ஐயோ பாவம்’னு ஓர் இரக்கப் பார்வையை வீசிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துடறது மனிதாபிமானமாகுமா? வேற என்ன செய்ய முடியும்னு கேட்கறவங்க, முடிஞ்சா அந்த உயிர்களை மீட்டுக் காப்பாத்தற முயற்சிகள்ல இறங்கலாம்.

இன்னும் ஒரு படி மேல போய், அந்த மிருகத்தை போட்டோ எடுத்து, `த பவுண்ட்’ ஃபேஸ்புக் பேஜ்ல படத்தோட தகவல்களையும் போடலாம். விருப்பமுள்ளவங்க அந்த ஜீவராசியை எடுத்து வளர்க்க முன் வர்றதும் இங்கே நடக்கும். அடிபட்ட மிருகங்களைக் காப்பாத்தறது மட்டுமில்லாம, தெருவுல அனாதையா திரியற நாய்க்குட்டிகளையும் பூனைக்குட்டிகளையும் எடுத்து வளர்க்கறவங்களும் இந்த அமைப்பை நாடலாம். எங்களோட இன்னொரு முக்கியமான நோக்கம்... இது மாதிரியான செல்லப் பிராணிகளை வாங்கி விற்கறதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கிறதில்லை. ‘விற்காதீங்க... வாங்காதீங்க... அதுக்குப் பதில் தத்து எடுத்து வளர்த்துப் பாருங்க’னு சொல்றோம்.

உயர் ரக நாய்க்குட்டிகளை அந்தஸ்துக்காக வளர்க்கிறது இன்னிக்கு ஒரு ஃபேஷனா மாறியிருக்கு. தெருவுலேருந்து ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிட்டு வர்ற குழந்தையை `அதெல்லாம் வேணாம். அழுக்கு. நான் உனக்கு காஸ்ட்லியான நாய்க்குட்டியா வாங்கித் தரேன்’னு சொல்ற பெற்றோர்தான் அதிகம். நாட்டு நாய்கள்,  விலை அதிகமான, உயர்ரக நாய்க்குட்டிகளைவிட எந்த வகையிலும் குறைஞ்சு போயிடறதில்லை.

இப்படி அந்தஸ்துக்காக நாய்க்குட்டிகள் வாங்கறவங்கக்கிட்ட அந்த உயிர்கள் மேல உண்மையான அன்பு இருக்க வாய்ப்பில்லை. உண்மையா விலங்குகளை நேசிக்கிற யாரும் இப்படி ஸ்டேட்டஸ் பார்த்து வாங்கவோ வளர்க்கவோ மாட்டாங்க. அந்தஸ்து பார்த்து மிருகங்களை நேசிக்கிற இந்த மனோபாவம் மாறணும்னா, சின்ன வயசுலேருந்தே குழந்தைகளைப் பழக்கணும்...’’ - கோபமாகச் சொல்கிற கரிஷ்மா, வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகள் பற்றிய மக்களின் மனநிலை குறித்த தன் வருத்தத்தையும் பகிர்கிறார்.

``சமீபத்துல வந்த வெள்ளத்துல மனுஷங்களைப் போலவே வாயில்லா ஜீவன்களும் நிறைய மாட்டிக்கிட்டாங்க. மீட்புப் பணிகளுக்குப் போயிருந்தப்ப நான் பார்த்த சில விஷயங்கள் மனசுக்கு சங்கடமா இருந்தது. கண் எதிர்ல நாயோ, பூனையோ, மாடோ உயிருக்குப் போராடிட்டிருக்கிறதைப் பார்த்த மக்கள்,  உடனடியா அதுங்களைக் காப்பாத்த ஒரு ஆம்புலன்சை வரவழைக்கணும்னோ, ப்ளூகிராஸ் மாதிரியான அமைப்புகளுக்குத் தகவல் சொல்லணும்னோ நினைக்கலை. அதுக்குப் பதில், `கார்ப்பரேஷன் ஆட்களைக் கூப்பிடணும்... அவங்க வந்தா இதுங்களைக் கொன்னுடுவாங்க. கொன்னதோட இல்லாம இறந்து போன சடலத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிடுவாங்க’னு சொன்னதைக் கேட்டப்ப மனிதாபிமானம் இருக்காங்கிற கேள்வி வந்தது.



தன்னோட வீட்டு வாசல்ல உயிருக்குப் போராடிட்டிருக்கிற ஒரு ஜீவன், தள்ளிப் போய் சாகணுமே தவிர, அங்கேயே சாகக்கூடாதுனு நினைக்கிறவங்களும் இருக்காங்க. இந்த விஷயத்துல நான் எங்களோட `த பவுண்ட்’ உறுப்பினர்களைப் பாராட்டியே தீரணும். வெள்ளம் வந்தப்ப, சென்னை முழுக்க வேற வேற ஏரியாக்கள்ல சிக்கித் தவிக்கிற வாயில்லா ஜீவன்களைப் பத்தின தகவல்களை அப்டேட் பண்ணி, முடிஞ்சளவுக்குக் காப்பாத்தியிருக்காங்க. ரொம்ப நெகிழ்ச்சியான நேரம் அது...’’ - நிஜமான சந்தோஷத்தில் ேபசுகிறார்.

`ஸ்ட்ராட்டர்’ என்கிற பெயரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிசினஸ் நடத்துகிறார் கரிஷ்மா. இதிலும் தனது உளவியல் பின்னணியையே  மூலதனமாக்கி இருக்கிறார் அவர். ``ஒவ்வொரு மனுஷங்களும் ஒரு விஷயத்துல முடிவெடுக்கிறதோட பின்னணியில அந்தந்த சூழ்நிலைக்குப் பெரிய பங்கு உண்டு. அந்தச் சூழல் மாற்றங்கள் ஒரு பொருளையோ, சர்வீசையோ அவங்க தேர்ந்தெடுக்கிறதை எப்படித் தீர்மானிக்குதுனு பார்த்து நுகர்வோர் முடிவெடுத்தலை ஒரு வரைபடமா டிசைன் பண்ணுவோம்.  இதுக்குப் பேர் காக்னிட்டிவ் டார்கெட்டிங்...’’ - தனது இன்னொரு முகத்துக்கு சின்ன விளக்கம் அளிப்பவர், த பவுண்ட் அமைப்பை தொண்டு நிறுவனமாக பதிவு செய்திருக்கிறார்.

``விலங்குகளை நேசிக்கிற வெகுசிலரை விட, மத்தவங்களோட மனநிலையை மாத்தி, விழிப்புணர்வைக் கொண்டு வர்றதுதான் பெரிய சவாலா இருக்கு. அடுத்த சவால் பணம்.  இந்தச் சேவைக்கு நிறைய செலவாகுது. பெரும்பாலும் என் சொந்தப் பணத்தைப் போட்டுதான் சமாளிக்கிறேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாய்க்குட்டி வண்டியில அடிபட்டதுல, அதோட ஒரு பாதம் முழுக்க போயிடுச்சு. ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல நிறைய செலவு பண்ணித்தான் அதைக் காப்பாத்தினோம்.

என்னோட வேண்டுகோள் ஒண்ணுதான்... அபார்ட்மென்ட்ஸ்ல நாய் வளர்க்க முடியாது... பார்த்துக்க டைம் இல்லைனு ஆளாளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது அவங்கவங்க தனிப்பட்ட விருப்பம். மிருகங்களை நேசிக்கணும்னா, வீட்டுக்குள்ள வச்சு வளர்த்துதான் அன்பைக் காட்டணும்னு அவசியமில்லை. தெருவுல மழை பெய்யுது... ஒரு நாய்க்குட்டி  உங்க வீட்டு வாசல்ல ஒதுங்கி நிற்குது... மழை நிற்கற வரைக்குமாவது அதுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். முடிஞ்சா சாப்பாடு கொடுக்கலாம்.

உங்க தெருவுல உள்ள நாய்களை கார்பரேஷன் ஆட்களைக் கூப்பிட்டுப் பிடிச்சிட்டுப் போகச் சொல்றதுக்குப் பதில், அதுங்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணிட்டு, அங்கேயே விட்டுடலாம். அதுங்களோட எண்ணிக்கையும் அதிகரிக்காது. ஆதரவில்லாம இறக்கிறதும் தவிர்க்கப்படும்... இதையெல்லாம் செய்தாலே பெரிய சேவைதான்...’’ - அக்கறையாகச் சொல்பவர், அம்ருதா என இன்னொரு தோழியையும் தன்னுடன் இந்த சேவையில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

"அடிபட்ட மிருகங்களைக் காப்பாத்தறது  மட்டுமில்லாம, தெருவுல அனாதையா திரியற நாய்க்குட்டிகளையும்  பூனைக்குட்டிகளையும் எடுத்து வளர்க்கறவங்களும் இந்த அமைப்பை நாடலாம்..."

"ஒவ்வொரு மனுஷங்களும் ஒரு விஷயத்துல  முடிவெடுக்கிறதோட பின்னணியில அந்தந்த சூழ்நிலைக்குப் பெரிய பங்கு உண்டு.  அந்தச் சூழல் மாற்றங்கள் ஒரு பொருளையோ, சர்வீசையோ அவங்க தேர்ந்தெடுக்கிறதை  எப்படித் தீர்மானிக்குதுனு பார்த்து நுகர்வோர் முடிவெடுத்தலை ஒரு வரைபடமா  டிசைன் பண்ணுவோம்.  இதுக்குப் பேர் காக்னிட்டிவ் டார்கெட்டிங்..."

"மிருகங்களை நேசிக்கணும்னா,  வீட்டுக்குள்ள வச்சு வளர்த்துதான் அன்பைக் காட்டணும்னு அவசியமில்லை.  தெருவுல மழை பெய்யுது... ஒரு நாய்க்குட்டி  உங்க வீட்டு வாசல்ல ஒதுங்கி நிற்குது... மழை நிற்கற வரைக்குமாவது அதுக்கு அடைக்கலம் கொடுக்கலாம்.  முடிஞ்சா சாப்பாடு கொடுக்கலாம்."

படங்கள்: ஆர்.கோபால்