மன மலர்



வீட்டின் கிணற்றடியில் ஒரு பன்னீர் மரம் இருந்தது. பூக்கும் நாலு ரெண்டு பூவையும், ‘பெருமா கோயிலுக்குப் போறேன் ஆத்தா’ என அர்ச்சனைத் தட்டுக்காக, அக்கம்பக்கத்தார் பறித்துக்கொண்டே போக, திடீரென, ‘அழாதேடி செல்லம்’ எனத் தேற்றுவது போல பூத்துக் குலுங்கும்.

பக்கத்து வீட்டில் (அதுவும் தாத்தா விற்றதாம்) ரோஜா கிளைத்து கிளைத்துப் பூத்தாலும், எனக்கென்னவோ, சிமென்ட் திண்ணையின் திண்டு தாண்டி ஆடும் நந்தியாவட்டையும், பவளமல்லியும், வாட வாட சூடித் திரியும் மகிழம்பூவும் பூக்கும் வீட்டில் குடியிருப்பது போலவே கனவு வரும்...

பாரிஜாதம் என்றும் செண்டுமல்லி என்றும் கொண்டாடிய பூவின் வாசத்துக்கும் அழகுக்கும் சொத்தே எழுதித் தரலாம்... அந்தப் பூவின் மீதான என் பிரியத்துக்காக, திருமணமாகி புதுச்சேரி வந்த பிறகும், ‘வெளியூர் ஓட்டுனர்’ நட்பில், அன்றாடம் நெகிழிப் பையில் பொதிந்த செண்டுமல்லி அனுப்பி வைக்கும் பிறந்த வீடு! ‘பூநாகம் இருக்கும்’ என்றுகூட அச்சுறுத்தியிருக்கிறார்கள் சிலர்...

தாழம்பூவை நறுக்கித் தைத்த பின்னலை அவிழ்க்க மனமின்றித் திரிந்த நான், பின்னாளில், பட்டுப்புடவை மடிப்பில் நறுக்கி வைக்க தாழம்பூ (திருப்பதியிலிருந்து திரும்புகையில்) வாங்கிக் கொண்டிருந்தேன்... பள்ளித் தோழி ஸ்ரீமதி சுவாமிநாதன் கொண்டுவரும் செண்பகப்பூ, எப்போதாவது, நல்லி
வாசலில் சரமாகக் கிட்டும். விதவிதமான சாயல்களில் செண்பகப்பூ விற்ற விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நின்றபோது, ‘ஆந்திராவில் குடியேறி விடலாமா’ எனக் குழம்பியிருக்கிறேன்!
வேதாரண்யம் பக்கமிருந்து வரும் சந்தன முல்லைதான் திருவாரூரில் அதிகம் மணக்கும். புச்சேரியின் பூக்காரர்கள், ‘ரெட்டமல்லீ’ எனக்கூவிச் செல்வது, ‘குண்டுமல்லி’ என நாங்கள் கொண்டாடி யதைத்தான் என்பது வந்த புதிதில் புரியவில்லை.

ராமபாணம் என்றும் வாழைக்காய் அரும்பு என்றும் ரசிக்கும் மலரை வாழை மட்டை நறுக்கிலோ, அட்டையிலோ கோர்த்து அலங்காரம் செய்வது வசந்தாக்காவுக்கு மட்டுமான வித்தை!
சம்பங்கி என்றொரு ஆசிரியை எங்கள் பள்ளியில் இருந்தார். அந்த மணம் அப்போது பரிச்சயம் இல்லை.

காதோரம் சூடிக்கொள்ள வழக்கமாக பத்து காசுக்குக் கிடைக்கும் ரோஜாக்களோடு,
பெங்களூர் வரவான டாலியாக்களும் போட்டி போட்டன. பொருளாதாரம், கொல்லையில்
பூக்கும் துலுக்க சாமந்தியையும் காதோர சிம்மாசனம் ஏற்றிவிடும்!

கொல்லையில் கனகாம்பரமும் டிசம்பர் செடியும் வளர்த்து, நூறு பூ பத்துகாசு என எண்ணி விற்ற செட்டியார் வீட்டம்மாவுக்கு எங்கள் மத்தியில் என்றும் தனி கௌரவம்தான்! அட்வான்ஸ் கொடுத்து வைப்பதும் உண்டு. சினிமா, கல்யாணத்துக்குப் போக திட்டமிடுகையில் பூ வாங்கிக் கட்டி தயாராவது, முக்கிய நேரம் பிடிக்கும்!
வேப்பம்பூ மணக்கும் பின்னிரவுகள் ரசனையின் பாலபாடம்...

பொங்கல் காலச் சாமந்தியில், மஞ்சளைவிட வெள்ளை ஏனோ மனசுக்கு நெருக்கம்.
நெடுஞ்சாலைத் தேசிய மலராக மாறிவிட்ட அரளியை, கதம்பக்காரர்கள் கூட அதிகம் மதித்ததில்லை! தஞ்சாவூர் கட்டுக் கதம்பம்... திருநீற்றுப் பச்சிலையும் மருக்கொழுந்தும் நீலக்குவளையும் சரத்தை வானவில்லாக்கி விடும்!

அபிஷேகம் அர்ச்சனை முடித்து வீடு வரும் ரோஜாமாலை உதிர்ந்தாலென்ன... ஒற்றை இதழ்களை ஊசிநூலில் கோர்த்து, தொங்கவிடுவதுண்டு... செம்பருத்தியும் வெற்றிச்செல்வியும், ஸ்ரீமதியும் செண்பகமும், முன் ஆடும் மல்லிகைச் சரமும் வசந்தியும்... பறிக்கும் விருப்பத்தை சொல்லக்கூடமுடியாதபடி கொல்லைக் கடைசி...சுவரோரம் மட்டுமே பூத்துக்கிடந்த பச்சைக் கனகாம்பரம், மன்னார்குடி அத்தை வீட்டின் விடுமுறை வினோதம்!
பிள்ளையாருக்காக தும்பையும் எருக்கும் சதுர்த்தி சமயம்... நகரின் கடைகளில்!

மார்கழியில் தேடித் திரிந்தது, கோலத்தில் சூட்ட, பரங்கி, பூசணிப்பூக்களை... வீட்டில் பீர்க்கும் பாகலும் படரத் தொடங்கினால் காயைவிடக் கோலத்துக்கான பூக்களுக்காகவே தனியாகக் கவனிப்போம்!

ஏதோ ஒரு மழையோ, புயலோ, கிணற்றடியின் பன்னீர் மரத்தைப் பலிவாங்கியது... வாஸ்து, கிணற்றை மூடியது... வருடங்கள் எங்கள் வயதையும் வீட்டின் பொலிவையும் விழுங்கிக் கடந்துவிட்டன... சிதிலம் சகியாமல் முற்றிலும் தகர்த்து வேலி போட முடிவானது... மண்டிக்கிடக்கும் வேம்பு மற்றும் பல கிளைகளைத் தாண்டி தலையசைத்தது பன்னீர் மரம்... இன்று தகர்த்தாலும் நாளை எம் மக்கள் நுகரக்கூடும் பன்னீர்ப்பூவின் மணம்!

உமா மோகன்