பொக்கிஷங்களின் பாதுகாவலர்!



‘எதிர்காலத்தின் சிறந்த தீர்க்கதரிசி இறந்த காலம்தான்’ என்று எழுதியிருக்கிறார் ஆங்கிலக் கவிஞர் பைரன். அதன் பின்னணியில் இருப்பதென்னவோ தொல்லியல் துறை என்பது மறுக்க முடியாத உண்மை. மனிதர்களின் புராதன அடையாளங்களையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பது தொல்லியல் துறை.

நம் மூதாதையர்களின் வாழ்க்கைச் சூழல், பழக்க வழக்கங்கள், அவர்களின் வாழ்வாதாரம் போன்ற தகவல்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஒரு தொல்லியலாள ருக்கு இருக்கிறது. கல்வெட்டு களை படித்து பழங்கால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டு, மற்றவர்களுக்கு விளக்குவது தொடங்கி அவற்றைப் பொக்கிஷமாக பராமரிப்பது வரை எல்லாமே இவர்களுடைய பணிதான். ‘களப்பணி’ என்ற ஒற்றை வார்த்தை இவர்களின்
தாரக மந்திரம்.

அப்படிப்பட்ட பெருமைமிக்க துறையில் இன்றைக்கு பெண்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது. சென்னை கோட்டையில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலகத்தில் முனைவர் மகேஸ்வரியை சந்தித்தோம். உலக அளவில் தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்... எளிமையான வார்த்தையில் தன் தொல்லியல் துறை பயணத்தை விவரிக்கிறார்...

‘‘பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னைக்கு அருகே இருக்கும் பெருங்களத்தூர்லதான். பள்ளிப் படிப்பை முடிச்சதும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில வணிகவியல் படிக்க விண்ணப்பம் செஞ்சேன். இடம் கிடைக்கலை. வேற வழியில்லாம இளங்கலைப் படிப்புக்கு வரலாறைப் பாடமா (பி.ஏ.) தேர்ந்தெடுத்தேன். போகப் போக வரலாறு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ஆர்வத்தோட படிக்க ஆரம்பிச்சேன். இரண்டாவது வருடம் படிச்சுட்டு இருந்தப்போ, பாடத்தில் இருந்த ‘உலக வரலாறு’ என்னை ரொம்ப ஈர்த்துடுச்சு.

 3வது ஆண்டுல புள்ளியியல் பாடம் வந்தது. அதைப் புரிஞ்சுக்க ரொம்பக் கஷ்டமா இருந்தது. அப்போ புள்ளியியலுக்கு துறைத்தலைவரா இருந்தவர் பேராசிரியர் ‘கிஃப்ட்’ சிரோமணி. நான் அவர்கிட்ட போய், ‘எதுவுமே புரியலை’ன்னு சொன்னேன். அவரோ, ‘இந்தப் பாடம் ரொம்ப எளிமையானது. ஆர்வத்தோட படிச்சாதான் புரியும்’னு சொல்லிட்டாரு. அப்புறம், கோயில்கள், கல்வெட்டுகளைப் பற்றி ஆய்வு செய்யும் திட்டப்பணி (ப்ராஜக்ட்) வேலை வந்தது.

நான் இருக்கும் பகுதியின் அருகிலேயே நிறைய கோயில்கள்... அங்கே போய் நிறைய தகவல்களை சேகரிச்சேன். அது என் வாழ்க்கையோட முக்கியமான நாட்கள்னு அப்போ தெரியல. மேற்படிப்புப் படிக்கலாம்னு நினைச்சப்போ என் கண்ணு முன்னாடி வந்தது தொல்லியல் துறைதான். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்புல ‘பண்டைய இந்தியாவின் வரலாறு மற்றும் தொல்பொருள் இயல்’ படிப்பு (எம்.ஏ. ஏன்சியன்ட் இந்தியன் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி) இருக்குறது தெரிஞ்சது. சேர்ந்துட்டேன்.

அதுவரைக்கும் கோயில்கள், கல்வெட்டுகள் மட்டும்தான் தொல்லியல் துறைன்னு நினைச்சிட்டு இருந்தேன். அந்தப் படிப்புலதான் தொல்லியல் துறை பற்றி முழுமையாக தெரிஞ்சுகிட்டேன். ரோமானியர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அரிக்கமேடு பகுதிக்குப் போய் ஆய்வுகளை செய்ததுதான் என் முதல் களப்பணி. கல்வெட்டுகளைப் பற்றி படிக்கும் ‘வெட்டெழுத்தியல்’ (எபிகிராபி), பழம்பொருட்களைப் பாதுகாக்கும் ‘பேணுகை’ (கன்சர்வேஷன்), பூமியின் அமைப்பை ஆராயும் ‘நிலவியல்’ (ஜியாலஜி), கட்டிடங்களின் அமைப்பை முழுமையாக அறிய உதவும் ‘கட்டிடக்கலை’ (ஆர்க்கிடெக்சர்) எல்லாம் படிச்சேன்.

இந்தப் படிப்பில் விஞ்ஞான முறையில் அகழ்வாராய்ச்சி செய்வது ரொம்ப முக்கியமானது. நாங்க களப்பணி செஞ்சப்போ நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. திண்டிவனம் பக்கத்தில் இருக்கும் திருவக்கரை பகுதியில கி.மு. ஆயிரத்தில் வாழ்ந்த மக்களோட வாழ்க்கையை பத்தி தெரிஞ்சுக்கற வாய்ப்பு அமைஞ்சது. இறந்து போனவங்களை பானையில போட்டு புதைக்கும் பழக்கத்தைப் பத்திக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தப் பகுதியில வாழ்ந்த மக்கள் ஒரு பெரிய இடத்தை தங்களுக்கு சொந்தமாக்கி தங்கள் குடும்பத்துலயும் சொந்தத்துலயும் இறந்து போன எல்லாரையும் ஒரே இடத்துல புதைச்சு வச்சிருந்தாங்க.

அதை ஒரு வீடு மாதிரி உருவாக்கி, சுரங்கப்பாதையெல்லாம் அமைச்சு அவ்வப்போது வழிபாடும் நடத்தியிருக்காங்க. இறந்தவங்க பயன்படுத்தின பொருட்களையும் கூடவே சேர்த்து புதைக்கிறது வழக்கமா இருந்திருக்கு. அங்கே கிடைச்ச பானைகள், சின்னச் சின்ன தட்டுகள், பானைகளில் இருந்த தானியங்கள்னு எல்லாத்தையும் நாங்க சேகரிச்சு வச்சிருக்கோம்’’ - பெருமையோடு அப்படிக் கிடைத்த பொருட்கள் சிலவற்றைக் காண்பிக்கிறார் மகேஸ்வரி.

‘‘படிச்சு முடிச்சேன். தொடர்ந்து டெல்லியில இருக்கும் ‘தொல்பொருள் நிறுவன’த்துல (இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஆர்கியாலஜி) முதுகலைப் பட்டப் படிப்புல சேர்ந்தேன். இரண்டு வருடப் படிப்பு. அதுல படிக்கிறதுக்கு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுத்துதான் அனுப்புவாங்க. தமிழ்நாட்டுல இருந்து நான் மட்டும் தேர்வாகி இருந்தேன். அங்கே படிச்ச இரண்டு வருடங்களும் புதுவிதமான உலகத்தை எனக்குக் காண்பித்தது. முழுக்க முழுக்க கட்டிடக்கலை சார்ந்து படிச்சேன்.

இந்தியாவில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்களை பார்த்தேன். தஞ்சை பெரிய கோயில், மத்தியப் பிரதேசத்துல இருக்கும் கண்டாரியா மஹாதேவா கோயில், சாஞ்சி ஸ்தூபம், ஒடிசாவில் உள்ள கோயில்கள்னு ஒவ்வொண்ணும் எனக்கு பல தகவல்களை அள்ளித் தந்தன. ஒரு கட்டிடத்துக்குள்ள இத்தனை விஷயங்கள் இருக்கான்னு வியந்து போனேன். கோயில்கள்ல இருந்த ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்துல எதையோ கத்துக் கொடுத்துச்சு. படிப்பு முடிஞ்சது. ஹைதராபாத்ல இருக்கும் பிர்லா தொல்பொருள் இயல் மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் (பிர்லா ஆர்கியாலஜிகல் அண்ட் கல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்) உதவித் தொல்பொருள் ஆய்வாளராக வேலைக்கு சேர்ந்தேன்.

புதைபொருட்களை கண்டறிந்து சொல்வதுதான் முழுநேரப்பணி. அதோட கல்வெட்டுகள்ல இருக்கும் வார்த்தைகளைப் படிச்சு, அதை நமக்குத் தெரிஞ்ச மொழிகள்ல எழுதுறது, படங்களைப் பார்த்து விளக்குறதுன்னு (பிக்டோகிராபி) பல வேலைகள் என் பொறுப்பில் இருந்தன. இடையில மாமல்லபுரத்துல இருக்கும் புஷ்கரணி குளத்தை கண்டுபிடிச்சு வெளி உலகத்துக்கு சொன்னேன். அது எனக்கு பெரிய பெருமையை தேடிக் கொடுத்துச்சு. பிறகு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) தேர்வெழுதி ‘கண்காணிப்பாளர்’ பதவியில் சேர்ந்தேன்.

இப்போ சென்னை அலுவலகத்தில் பணியாற்றுகிறேன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேல இந்தத் துறையில இருக்கேன். ஒரு பொருளை பார்த்ததுமே அது எந்த காலத்தைச் சேர்ந்ததுன்னு துல்லியமாக சொல்லிடுவேன். அந்த அளவுக்கு தொல்லியல் துறை என் உடம்பில் ஒரு பகுதி மாதிரி ஆகிடுச்சு. 

தமிழகம் முழுக்க இருக்கும் பல அருங்காட்சியகங்கள்ல அரிய பழங்காலப் பொருட்களைப் பாதுகாத்துட்டு வர்றோம். தமிழகத்தில் தொல்லியல் துறை சார்ந்த இடங்களை பராமரிக்குறதுலயும் கவனமாக இருக்கோம். நம்ம மூதாதையர் எப்படி வாழ்ந்தாங்க என்பதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு தொல்லியல் ஆய்வாளராக நான் பணிபுரிந்த காலகட்டங்கள் எல்லாமே ஒரு யுகம் மாதிரி. நாங்க பராமரிச்சுட்டு வர்ற பொருட்கள் எல்லாமே பொக்கிஷங்கள். ‘தமிழகம் பொக்கிஷங்களின் பூமி’ என்பதை நான் நேரில் பார்த்திருக்கேன். அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு போகப்போற பொறுப்பும் நம் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கணும் என்ற ஆர்வமும் எனக்கு நிறைய இருக்கு’’ - குரலில் உற்சாகம் தெரிகிறது மகேஸ்வரிக்கு.

தொல்லியல் படிக்க வேண்டுமா?

வழிகாட்டுகிறார் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் பாலாஜி...கலையிலும் நம் பாரம்பரியத்திலும் ஆர்வம் மிகுந்தவர்களுக்கான துறை. களப்பணி அதிகம் செய்ய வேண்டி யிருக்கும். கட்டிடக்கலை, ஓவியம், நடனம், கலாசாரம் என எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டியது இத்துறைக்கு அவசியம். பெரும்பாலும் முதுகலைப் படிப்பாக தொல்லியல் துறை வழங்கப்படுகிறது. அதில் சேர, இளங்கலையில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பாக (எம்.ஏ. ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி) கிடைக்கிறது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமாக (எம்.ஏ.) வழங்கப்படுகிறது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலைப் பிரிவில் இந்தப் பாடம் இருக்கிறது. அரசுக் கல்லூரிகளில் வருடத்துக்கு ரூ.2,500, தனியார் கல்லூரிகளில் வருடத்துக்கு ரூ.10,000 வரை செலவாகும். இந்திய அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொல்பொருள் ஆய்வு மையத்தில் பணி, மத்திய அரசுப் பணி, கல்லூரிகளில் பேராசிரியர் என பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் துறை இது.

“கோயில்கள்ல இருந்த ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்துல எதையோ கத்துக் கொடுத்துச்சு...”

மகேஸ்வரி

கண்காணிப்பாளர் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை.

- எஸ்.பி.வளர்மதி படங்கள்: கதிரவன்