மொழிபெயர்ப்புத் தமிழ் வாழ்க்கையே இலக்கியம்!



‘ஒருவருக்குப் புரிந்த மொழியில் பேசும்போது நம் பேச்சு அவரது அறிவைத் தொடுகிறது. அவரது தாய்மொழியில் பேசும் போது அது இதயம் தொடுகிறது’ என்றொரு பிரபல பொன்மொழி உண்டு. மொழிக்கு அத்தனை வல்லமை உண்டு. கேட்கிற எல்லாருடைய இதயத்தையும் தொடும் வகையில் இருக்கிறது ராஜேஸ்வரி கோதண்டத்தின் பேச்சு.

சுந்தரத் தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் எனப் பன்மொழிகளிலும் புலமை பெற்றவர் பிரபல மொழி பெயர்ப்பாளர் ராஜேஸ்வரி கோதண்டம். அகவை 65-ஐ நெருங்கிவிட்ட பிறகும், இலக்கியத்தின் மீதும், அதைவிட அதிகமாக மொழிகளின் மீதும் கொண்ட ஈடுபாடு காரணமாக எழுத்துப் பணியை சிறப்புறச் செய்து வருகிறார்.

‘‘குழந்தையாக இருக்கும்போதே நாமெல்லாம் கதைகள் கேட்டுத்தானே வளர்கிறோம்... அப்போதே எனக்குள் இலக்கிய ஆர்வம் துளிர்த்திருக்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்த பிறகு புத்தகங்கள் படித்து என் இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கையே இலக்கியமாக மாறி, அழகானது. கணவர் கொ.மா.கோதண்டமும் இலக்கியவாதி...

குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுபவர்... கவிஞர்... மேடைப் பேச்சாளர்... சாகித்ய அகடமி வென்றவர். அவருடன் வாழ்க்கையில் இணைந்த பிறகு என் எழுத்தார்வமும் மொழி ஆர்வமும் விருத்தியானது. எங்கள் சமூகத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்கவோ, வெளியில் அனுப்பவோ அனுமதிக்க மாட்டார்கள். அதிகம் படிக்க முடியாத ஏக்கம் எனக்குள் நிறைய இருந்தது. அதுதான் மொழிகளைக் கற்கும் வெறியை எனக்குள் உருவாக்கியது. எனக்குத் தாய்மொழி தெலுங்கு. ஆனாலும், வீட்டுக்குள் தமிழில்தான் உரையாடல்கள் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் தெலுங்கைவிட, தமிழை இன்னும் சிறப்பாக பேச, எழுத சிறிய வயதிலேயே கற்றுக் கொண்டேன். சமஸ்கிருதப் பண்டிதர் ஒருவரிடம் சமஸ்கிருதம் கற்றுக் கொண்டேன். நானாகவே மலையாளம் கற்றுத் தெரிந்து கொண்டேன். இந்தியில் முதுகலைப் பட்டம் முடித்தேன்.

எங்கள் ஊரான ராஜபாளையத்தில் இயங்கிய மணிமேகலை மன்றத்தில் துடிப்பாக இருந்த காலம் உண்டு. அங்கே நிறைய சொற்பொழிவுகள் நடக்கும். பல மாநிலங்களைச் சேர்ந்த இலக்கிய வாதிகள் கூடுவார்கள். இந்த நிலையில்தான் பன்மொழி இலக்கிய வித்தகர் மு.கு.ஜெகநாதராஜாவின் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய மொழி ஆர்வத்தைப் பார்த்த அவர்தான் என்னை மொழிபெயர்ப்புத் துறைக்கு வரச் சொல்லி அழைத்தார். அல்லூரி சீதா ராமராஜுவின் வாழ்க்கைச் சரிதத்தை தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததுதான் முதல் முயற்சி.

ஆரம்பத்தில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கணவர், எழுத்தில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டார். என் இரண்டு மகன்களும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டினார்கள். எனக்கென ஒரு தனிப்பட்ட பாணியை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில்தான் மொழிபெயர்ப்புத் துறையை எனக்கானதாகத் தேர்வு செய்து கொண்டேன். இன்று வரை அதுதான் எனக்கான அடையாளமாக நிற்கிறது...’’ - சற்றே நீண்ட அறிமுக உரை ஆற்றி நிறுத்துகிறார் ராஜேஸ்வரி.

‘நேதாஜியின் வரலாறு’, ‘ஞானம் வழங்கும் ஆன்மிகக் கதைகள்’, ‘சுகம் கூட’, ‘பீர்பால் கதைகள்’, ‘அம்மு உனக்காக’, ‘இறையருளார் கதைகள்’ என சில சுய படைப்புகளுக்கும், ‘வேமனா பாடல்கள்’, ‘காட்டுக்குள்ளே மான்குட்டி’, ‘நெஞ்சம் மறந்த நேசம்’, வனக்கோயில்’, ‘கருணை விழிகள்’, ‘அக்னி’, ‘சுந்தரி, பால்மடி’, ‘ஜீவன கமனம்’, ‘கண்ணன் பிறந்தான்’ உள்ளிட்ட ஏராளமான மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கும் சொந்தக்காரரான ராஜேஸ்வரிக்கு மொழிகளை நேசிப்பதில் பாரபட்சமே இல்லை!

‘‘எந்த மொழியில் உள்ள நல்ல இலக்கியத்தையும் தேடிப் படிப்பேன். பாரதியும் பிடிக்கும். பழமை இலக்கியமும் பிடிக்கும். பழமையின்றி புதுமை இல்லை. இன்று பலரும் புதுமை என்கிற பெயரில் வருகிற இலக்கியங்களை மட்டுமே படிக்கிறார்கள். பழமை இலக்கியங்களில் சொல்லப்படாத புதுமைக் கருத்துகளா?’’ என்கிறவருக்கு மொழிபெயர்ப்புப் பணிகளில் சவாலானதும் சுவாரஸ்யமானதுமாக நிறைய அனுபவங்கள் இருக்கின்றன.

‘‘தேர்வுகளில் மொழிபெயர்ப்பு என ஒரு பகுதி வரும். 20, 30 மதிப்பெண்கள் இருந்தாலும் யோசிக்காமல் பலரும் அதைத் தவிர்க்கவே செய்வார்கள். மொழிபெயர்ப்பு என்பது அத்தனை சிரமமானது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டு மொழிகளிலும் அர்த்தம் தெரிய வேண்டும். எழுத்தாளரின் எண்ணம் தெரிந்திருக்க வேண்டும். அவர் சொன்ன விஷயங்களை அர்த்தம் மாறாமல் உள்வாங்கிக் கொண்டு, கருத்து மாறுபடாமல் இன்னொரு மொழியில் சொல்ல வேண்டும்.

அதே நேரம், அதை வாசிக்கிறவர்களுக்கு அது மொழி பெயர்க்கப்பட்டது என்கிற உணர்வு வரக்கூடாது. என்னுடைய மொழிபெயர்ப்புப் படைப்புகளைப் படிக்கிறவர்கள், எளிமையாகவும் சரளமாகவும் இருப்பதாகச் சொல்லும்போது பெருமையாக இருக்கும். அதை நான் அகங்காரமாக எடுத்துக் கொள்வதில்லை. எனக்கும் அந்தத் திறமை கைகூட வருகிறதே என மகிழ்ச்சியாகத்தான் நினைப்பேன்.  மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு பெரிய சாளரத்தின் வழியே உலகத்தையே பார்ப்பவர்கள். அந்த வகையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகாமலேயே ஒரு நட்பு மலர்கிறது. அது எத்தனை அழகான ஒரு விஷயம்? அப்படி எனக்கு ஏராளமான நட்பைத் தேடித் தந்த மொழி பெயர்ப்புப் பணிக்கு நன்றி...’’ - ஆத்மார்த்தமாகச் சொல்கிறவரின் எதிர்கால இலக்கியப் பணித் திட்டங்களில்
தமிழைப் பரப்புவதே பிரதானமாம்!

ராஜேஸ்வரி கோதண்டம்

கவித்தமிழ் முதல் மொழிபெயர்ப்புத் தமிழ் வரைதமிழ் வளர்க்கும் 6 அறிவுத் தோழிகளின் நேர்காணல்:

ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்,
பரணி, பாஸ்கரன், ஆர்.சி.எஸ்.