இல்லத்துக்கு வெளியே ஒரு சிற்றில்லம்!



நம் வீட்டு மதிற்சுவர்களின் உள்ளே - நாம் புழங்கும் பிரதான வீட்டுக்கு வெளியே துணை வீடு ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதுவே புறக்கட்டுச் சிற்றில் அல்லது சிற்றில்லம் (அவுட் ஹவுஸ்) என அழைக்கப்படும். சிற்றில்லங்கள் அவசியமா?

ஒரு சிறிய வீட்டினை வீட்டின் பின்கட்டில் அமைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு போதிய இடவசதியும் பொருளாதார வசதியும் இருக்குமெனில், அவ்வகை துணை வீடு ஒன்றினை அமைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய பலன்கள் கூடுதல். குறை என ஏதுமில்லை. நிறைய ஆள்புழக்கமும் நடமாட்டமும் உள்ள ஒரு வீட்டுக்கு இது மிக மிக அவசியம்!

இது வேலையாட்களுக்கான இருப்பிடம் கூட... சிற்றில்லங்கள் பல பலன்களை நல்க இயலும். அதில் மிக முக்கியமானது நம் வீட்டோடு வேலையாட்களை வைத்துக் கொள்ளும்போது, அவர்களுக்கான தனி இருப்பிடத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பதே. மற்றொரு குடும்பத்தையும் நம் வீட்டோடு வைத்துக் கொள்வதென்பது சில நேரம் இயலாது. நம் சுதந்திரமும் அவர்களது சுதந்திரமும் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் வரலாம். அவருக்கென ஒரு வீடு இருப்பின் வேலை நேரம் போக அவரது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும். வேலையாட்கள் கிடைப்பதற்கு அரிதாக இருக்கும் இக்காலகட்டத்தில் நீண்ட நாட்கள் அவரை நம்மோடு தங்க வைத்திருக்க இது ஒரு சிறந்த சூத்திரமும் கூட!

சிற்றில்லங்களை அமைக்கும்போது - குறிப்பாக அவை தங்குமிடங்களாக வடிவமைக்கப்படும்போது - பிரதான வீட்டின் சிறிய மாதிரியாகவே அவற்றை அமைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக சிறிய முன் வாசலுடன் கூடிய ஒரு அறை மற்றும் சிறிய சமையலறை என அமைக்கலாம். பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையெனில் ஓரறை கூட போதும். செருப்பு வைப்பதற்கான இடம் முதல் தொலைக்காட்சி மற்றும் தலையணை, போர்வைகளுக்கான இடம் வரை முன்னரே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

 ஏன் எனில், அளவில் மிகச்சிறியதாக இவ்வீடு இருக்கப்போவதால் வீட்டில் இட(வசதி)ப்பற்றாக்குறை கண்டிப்பாக இருக்கும். அதனால், அனைத்து அத்யாவசிய பொருட்களுக்கான இடத்தையும் வீடு கட்டுவதற்கு முன்னரே நாம் திட்டமிட்டுக் கொண்டு, வரைபடம் தயார் செய்து வைத்துக் கொள்வது நல்லது. ஒரு சுவரில் தேவையான அளவுக்கு கடப்பா அல்லது ஆர்.சி.சி (சிமென்ட்) தட்டுகளை அமைத்துக் கொள்ளுங்கள். அனைத்துப் பொருட்களும் (கீழே பரப்பி வைக்கப்படாமல்) சுவரில் உள்ள அலமாரிகளுக்குள் அடங்கினால் கூடுதல் நலம்.

சமையலறை ஒரு ஆள் நின்று சமைக்கிறாற்போல இருந்தாலே போதுமானது. முடியாதவர்கள் அறையின் ஒரு ஓரமாகவே சமையல் திண்டையும் பாத்திரம் மற்றும் சமையல் பொருட்களை வைப்பதற்கான கடப்பா தட்டுகளையும் அமைக்கலாம். இங்கேயும் எல்லா பொருட்களும் அலமாரிகளுக்குள் அடங்குகிறாற்போல பார்த்துக் கொள்ளுங்கள்.

நாம் சமீபத்தில் வடிவமைத்த ஒரு சிற்றில்லம் 120 சதுரடி மட்டுமே கொண்ட ஓரறை... எனினும் ஒரு பக்கம் சமையலுக்கான திண்டும், அதன் கீழே சாமா ன்கள் வைப்பதற்கான கடப்பா திண்டுகளும், மற்றொரு பக்கம் சிறிய தொலைகாட்சிப் பெட்டி மற்றும் பிற சாமான்கள் வைப்பதற்கான ‘ட’ வடிவ திண்டும், அதன் கீழே கடப்பா திண்டுகளும் அமைத்திருந்தோம். கீழே பொருட்கள் இல்லாததால், முழு அறையையும், அவர்களால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. இவ்வீட்டில் குளியலறையும் கழிப்பறையும் தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது.அலுவல் அறை தனியாகத் தொழில் செய்கிறீர்கள். ‘வீட்டில் இருந்த வண்ணமே நான் என் அலுவல்களை கவனித்துக் கொள்ள முடியும்.

 எனினும் எனக்கும் வீட்டாருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் மிக முக்கியம்’ என எண்ணுபவரா நீங்கள்? எனின் உங்களுக்கும் சிற்றில்லங்கள் பயன்படக் கூடியவையே. ஓரறை கொண்டதாக இருப்பின் உங்களது மேசை நாற்காலிகளை ஒரு ஓரமாகவும், சிறிய தடுப்பினை அமைத்து அதன் அப்புறம் ஒரு சிறிய கட்டிலையும் போட்டுக் கொள்ளலாம். தொலைதூரத்தில் இருந்து வரும் உங்களது நண்பர்கள் தங்கவே இவ்வசதி. இங்கேயும் போதிய அலமாரிகளை அமைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு முக்கிய கட்டுமானம் கை கழுவுவதற்கான கோப்பை ஒன்று. குளியலறை மற்றும் கழிப்பறைகளை அறையுடன் இணைத்தோ, தனியாகவோ அமைத்துக் கொள்ளலாம். வீட்டுடன் இணைந்தபடியும் அதே நேரம் வீட்டிலிருந்து ஒதுங்கியும் இருக்குமாறு கட்டப்பட்ட இத்துணை வீடானது உங்களது அலுவல்களை எந்தத் தொந்தரவும் இன்றி கவனித்துக் கொள்ளவும் பெருமளவில் உதவும்.

சங்கீதக் கூடம் / ஓவியக்கூடம் / விருந்தினருக்கான அறை / தட்டு முட்டு சாமான்களுக்கான அறை...விருந்தினர்களை தங்க வைத்துக் கொள்ளலாம். ஓவியம் மற்றும் சங்கீதத்தில் ஆர்வம் உள்ளவராக இருப்பின் அதற்கான பிரத்யேக கூடத்தினை இத்துணை வீட்டில் அமைத்துக் கொள்ளலாம். வேண்டிய மற்றும் வேண்டாத சாமான்களை பத்திரப்படுத்தவும், குழந்தைகளுக்கான விளையாட்டு அறையாகவும் இவ்வீட்டினை பயன்படுத்தலாம். நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் தியான அறையாகவும் உடற்பயிற்சிக் கூடமாகவும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.வாடகைக்கும் விடலாம்!

இச்சிற்றில்லங்களை நன்கு அறிந்தவர்களுக்கு வாடகைக்கும் விடலாம். இதில் பெரும்பலன் ஒன்றுண்டு. குடும்பத்தோடு நெடிய பயணம் போகிறோம். வீட்டைப் பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும். அது போன்ற சூழல்களில் இவர்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் செய்வார்கள்!

வீட்டின் பயன்பாடு சூழலுக்குத் தகுந்தாற்போல மாறினாலும், அடிப்படையாக இதை ஒரு சிறிய வீடு போன்ற அமைப்பிலேயே உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இதை ஓவியக் கூடமாக பயன்படுத்தினாலும், இரு அறைகள் கொண்டதாக இருப்பின், சமையலுக்கான திண்டினையும் முன்னரே அமைத்திடுங்கள். இது பிற்கால மாற்றங்களுக்கும் வசதியாக இருக்கும். வீட்டின் முன்னே நிறைய செடிகளையும் நடலாம். இது ஒரு பெரிய வீட்டின் எல்லா அம்சங்களையும் நம் சிற்றில்லத்துக்குக் கொடுத்துவிடும்.
(பழகுவோம்... படைப்போம்!)

வீட்டில் நீங்கள் பயன்படுத்தப் போகும் அனைத்து பொருட்களுக்கான இடத்தையும் முன்னரே தீர்மானித்து விடுங்கள். தீர்மானித்தால் மட்டும் போதாது... எல்லாவற்றையும் எழுத்திலும் வரைபடத்திலும் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்!

‘அவுட் ஹவுஸ்’ என்பதற்கு நம் ஊரில்தான் புற வீடுகள் அல்லது சிற்றில்லங்கள் என்று பொருள்.
அமெரிக்காவிலோ வீட்டை விட்டு ஒதுக்குப்புறமாக இருக்கும் குழிக் கழிவறைகளுக்கே இப்பெயர்.
அவர்கள் நம் பாணி சிற்றில்லங்களை ‘பாக்யார்ட் ஹோம்ஸ்’ என்றே அழைக்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் ஐரோப்பிய அரச குடும்பங்கள் மற்றும் செல்வந்தர் குடும்பங்களில் வேலையாட்கள் வீட்டுடன் தங்கும் வழக்கம் இருந்தது. 17ம் நூற்றாண்டுக்குப் பின்னரே அவர்களுக்கான தனி வீடுகள் அரண்மனையின் பின் பகுதியில் அமைக்கப்பட்டன. எனினும் அவற்றை ‘செர்வண்ட்ஸ் குவார்ட்டர்ஸ்’ என்றே அழைத்தனர்.

தமிழினி