கேள்வியின் நாயகியே! அறிவுராணி



சென்னை புறநகரில் செல்லப்பிராணிகள் விற்பனைக்கென தனிக்கடை ஆரம்பித்தால் லாபம் கிடைக்குமா? முதலீடு எவ்வளவு தேவைப்படும்?
- வந்தனா ரகுபதி, சென்னை-37.
ஆலோசனை சொல்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் ராமசாமி தேசாய்...

இன்றையச் சூழலில் செல்லப்பிராணிகள் வளர்க்க நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அது லாபம் தரக் கூடிய தொழிலே. அதனால் தாராளமாக ஆரம்பிக்கலாம். உயர்ரக நாய்களை விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். ஜெர்மன் ஷெப்பர்டு, பக், செயின்ட் பெர்னார்டு போன்ற நாய்களுக்கு எப்போதும் தேவை இருக்கிறது. அவற்றை வாங்கி விற்கலாம். சிலர் இந்த வகை நாய்களை விற்பனைக்காகவே வளர்ப்பார்கள். அவர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, கூடுதல் விலைக்கு விற்கலாம்.

 பறவை வகைகளும் அதே போலத்தான். வெளிநாட்டுப் பறவைகளை சிலர் எவ்வளவு விலையானாலும் வாங்கத் தயாராக இருப்பார்கள். சேலம், திருச்சி, பெங்களூர் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளை விற்பனை நோக்கத்துக்காக வளர்ப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் அவற்றை வாங்கி, விற்பனை செய்வது நல்ல லாபத்தை தரும். இது தவிர மீன், வெள்ளெலிகள், முயல் போன்றவற்றை வளர்க்கலாம். கூண்டு, மீன் தொட்டி, கூழாங்கற்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு 1 லட்ச ரூபாய் வரை தேவைப்படும். ஆனால், பல மடங்கு லாபம் தரக் கூடிய தொழில்களில் ஒன்று என்பதால் இதில் நம்பி இறங்கலாம். இதில் லாபம் என்ற விஷயத்தை விட முக்கியமானது செல்லப்பிராணிகள் பராமரிப்பும் அவற்றின் மீதான ஈடுபாடும். இந்த இரண்டும் இருந்தால் இந்தத் தொழிலில் மேலே மேலே உயர்ந்து கொண்டே போகலாம்.

என் மகளுக்கு கர்ப்பப்பையில் சின்னதாக கட்டி ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அவளுக்கு திருமணம்... இந்த கட்டியால் அவள் கருத்தரிப்பதில் பிரச்னை ஏதாவது வருமா?
- நாராயணி சீனிவாசன், சென்னை-34.
யோசனை சொல்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் கௌரி மீனா...

பொதுவாக கர்ப்பப்பை கட்டி என்பது நார்த்திசுக் கட்டி தான் (ஃபைப்ராய்டு). இதை எளிதில் அகற்றிவிடலாம். இது மூன்றில் ஒருவருக்கு வருகிறது. இந்தக் கட்டி, கருப்பையின் உள் ஜவ்வுப் பகுதிக்கு அருகில் இருக்கிறதா என்பதை சோதித்து கொள்வது அவசியம். அந்த இடத்தில் கட்டி இருந்தால் பாதிப்புகள் ஏற்படும். எனவே, உடனே அதை அகற்றுவதுதான் நல்லது. கட்டியின் அளவு 5 சதமமீற்றருக்கும் (சென்டிமீட்டருக்கும்) குறைவாக இருந்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும். அதற்கும் மேல் இருந்தால் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்வது நல்லது. இந்த பிரச்னையைச் சரி செய்துவிட்டால் கருத்தரிப்பதில் பிரச்னை எதுவும் வராது.

உப்புத் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வசிக்கிறேன். துவை இயந்திரம் (வாஷிங் மெஷின்), நீரை வெந்நீராக்கும் சாதனம் (கீசர்) போன்றவை உப்புத் தண்ணீரில் இயங்கினால் சீக்கிரமே பழுதடைந்து விடுமா?
- சரோஜா தெய்வநாயகம்,
தூத்துக்குடி-2.
பதில் சொல்கிறார் மின்சார வல்லுநர் சரவணன்...

உப்புத் தண்ணீர் அதிகம் உள்ள இடங்களில் மின்சாதனப் பொருட்களை இயக்கினால் சீக்கிரமே துருப்பிடித்துப் போகும். குறிப்பாக துவை இயந்திரம் இயங்க அதிக தண்ணீர் தேவைப்படும். அது உப்புத் தண்ணீராக இருந்தால் உள்ளிருக்கும் இரும்புப் பகுதி துருப்பிடிக்கும். இதனால் இயந்திரத்தின் ஆயுட்காலம் சீக்கிரமே முடிந்துபோய் விடும். அதுபோலத்தான் வெந்நீர் இயந்திரமும். உப்புத் தண்ணீர் அதிகம் உள்ளிழுத்துக் கொள்வதால் உள்பக்கம் உள்ள இரும்புப் பகுதியில் துரு சேரும். உப்பு, சின்னச் சின்ன கட்டிகளாக அடியில் சேர்வதால் தண்ணீர் சூடாவதற்கு அதிக நேரம் பிடிக்கும். மின்சாரமும் அதிகம் செலவாகும். உப்புத் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியில் வசிப்பவர்கள், உள்பக்கம் ‘பிவிசி’ பொருத்தப்பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. கடைகளில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தினால் பிரச்னை எதுவும் வராது.

கடைகளில் வாங்கி வரும் நெய் கெட்டியாக இருக்கிறது. உருக்கினாலும் கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கெட்டியாகி விடுகிறது. நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தினால் பாதிப்பு எதுவும் வருமா? - ரஞ்சிதா சேகர், மணப்பாறை. விளக்குகிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்...

நெய்யை தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து, உருக்கிப் பயன்படுத்துவது நல்லது. நெய்யை உருக்குவதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. மிதமான தீயில்தான் உருக்க வேண்டும். கட்டியிலிருந்து திரவ நிலைக்கு நெய் வந்த உடனே அடுப்பை அணைத்துவிட வேண்டும். உருக்கிய நெய் கொதித்தால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நெய்யை கொதிக்க வைத்து பயன்படுத்துவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம். அதே போல் நெய்யை திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்துவதும் தவறானது. அப்படிச் செய்தால் உடலில் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்து விடும். இதனால் உடல் பருமன் பிரச்னை உருவாக வாய்ப்பு அதிகம். எனவே தேவையான அளவு நெய்யை மட்டும் பயன்படுத்துங்கள். எண்ணெய் விஷயத்திலும் இதே முறையைப் பின்பற்றுவது நல்லது.