கவித்தமிழ் தமிழ் படப் பாடல்களின் தரம்???



தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்களுக்கான இடம் எப்போதும் காலியாகவே இருக்கிறது. அவ்வப்போது யாரேனும் ஒருவர் தலைகாட்டுவதும், ஒன்றிரண்டு படங்களுக்கு எழுதிவிட்டு காணாமல்  போவதும் சகஜமாக நடக்கிற ஒன்றுதான். அப்படிக்  காணாமல் போன தேன்மொழி மறுபடி வந்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவுக்குப் புதிய முகமல்ல. ‘கூடல் நகர்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட படங்களுக்குப் பாடல் எழுதிய அதே தேன்மொழிதான். இப்போது ‘திருமணம் என்கிற நிக்காஹ்’ படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

காணாமல் போன காரணத்துடனேயே ஆரம்பமானது பேச்சு. ‘‘எங்கேயும் போயிடலை. எழுதிட்டேதான் இருக்கேன். தெலுங்குலேருந்து தமிழுக்கு வந்த சில படங்களுக்கும், தமிழ் படங்கள் சிலதுக்கும் பாடல்கள் எழுதியிருக்கேன். நான் எழுதின தமிழ் படங்கள் வெளியே வரலை. 2011ல ஒரு பெரிய விபத்து... சென்னையிலேருந்து காஞ்சிபுரத்துக்கு வீடு மாத்தப் போயிட்டிருந்தப்ப நடந்த அந்த விபத்துல எங்கம்மா, சம்பவ இடத்துலயே கை தனியா, கால் தனியா, தலை தனியா தெறிச்சு என் கையிலயே துடிக்கத் துடிக்க இறந்தாங்க. எனக்கும் தலையிலயும், கையிலயும் மிகப் பெரிய அடி. நான் பிழைச்சதே பெரிசு. இந்த அதிர்ச்சியிலேருந்து சுலபத்துல என்னால மீண்டு வர முடியலை. மெல்ல மெல்ல என்னை நானே தேத்திக்கிட்டு, மறுபடி எழுதத் தொடங்கினேன். இரண்டு நாவல்களையும், என்னோட நான்காவது கவிதைத் தொகுப்பையும் எழுதி முடிச்சேன்.

அந்த நேரத்துலதான் நடிகர் அஜித்தோட மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமா ‘திருமணம் என்கிற நிக்காஹ்‘ படத்தோட இயக்குனர் அனிஸ் அறிமுகம் கிடைச்சது. நான் படிச்சது ராயப்பன்பட்டி. அனிஸ் கம்பத்துக்காரர். ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து ஊரைச் சேர்ந்தவங்கன்ற விவரம் நேர்ல சந்திச்ச போதுதான் தெரிஞ்சது. கிப்ரான் இசையில, அந்தப் படத்துல நான் ஒரு பாடல் எழுதியிருக்கேன். எனக்கு முழு திருப்தியைக் கொடுத்த பாடல் இது. என்னோட கவிதைத் தொகுப்பு ஒன்றுல ‘வயல்வெளிக் கொக்குகளின் கால்களில் வானம் பன்மை அடைகிறது’னு ஒரு வரி எழுதியிருப்பேன். அந்த வரிகள் இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்கும் பிடிச்சுப் போச்சு. அந்த பாதிப்புல எழுதின பாடல்தான் ‘ஜன்னல் ஓரங்கள் நகரும் வானங்கள்... அறியா மனிதர்கள் உறவில்
உருகும் பூமிகள்...’

- எழுதிய கணங்களை நினைத்துச் சிலிர்த்துப் பேசுகிற தேன்மொழிக்கு, தமிழ் சினிமா பாடல்களில் தரம் குறைந்து போன வருத்தம் ஏராளமாக இருக்கிறது. ‘‘நூறு பாடல்கள் வந்தால், அவற்றில் 40 பாடல்கள் பெண்களை இழிவுப்படுத்துகிற மாதிரி இருக்கிறதாக சமீபத்துல ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில இயக்குனர் வசந்த் சொன்னார். மனதை வருடும் பாடல்களோ, வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பாடல்களோ இன்னிக்கு இல்லை. எழுத வர்றவங்களும், தனக்குனு ஒரு அடையாளம் கிடைக்கிற வரைக்கும் தமிழைத் தலையில வச்சுக் கொண்டாடறாங்க. ஆனா, அடையாளமும் அங்கீகாரமும் கிடைச்சதும் வணிக ரீதியா இயங்க ஆரம்பிச்சிடறாங்க. தரமான பாடல்கள் குறைஞ்சு போனதுக்கான இன்னொரு காரணம், இங்கே எழுத வர்ற பலரும் கவிஞர்கள் இல்லை. கவிதைகள் எழுதிய அனுபவத்துடன் வர்றவங்களுக்கு பாடல்கள் எழுதும் போதும் கவித்துவம் நிச்சயம் எட்டிப் பார்க்கும். அ

வங்களுக்கு எந்தக் கட்டத்துலயும் கவிதை மேல உள்ள காதல் விலகாது. கவிதை எழுதின பின்னணி இல்லாம எழுத வர்றவங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கிறது, ஒரு குழுவை உருவாக்கிக்கிறது, தரமா எழுதறவங்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறது... இதெல்லாம் தான் பாடல்களோட தரம் குறைஞ்சதுக்கான காரணங்கள்... 2002ல என்னோட முதல் கவிதைத் தொகுப்பு வந்தது. ‘சினிமாவுக்குள்ளே போயிட்டா கவிதை எழுதறதுல உன்னோட தரம் கெட்டுப் போயிடும்’னு நிறைய பேர் சொன்னாங்க. இதோ நான்கு தொகுப்புகள் எழுதின பிறகும் என் எழுத்தை நான் எந்த வகையிலயும் விட்டுக் கொடுக்கலையே... கவிஞனா வாழறதுங்கிறது மிகப் பெரிய சவால். சிரமமா இருந்தாலும் அந்த சவால் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு...’’ காரமாகப் பேசுகிறவருக்கு அவரது குருநாதர் பாரதிராஜா படங்கள் உள்பட ஏகப்பட்ட வாய்ப்புகள் கைகளில்...

தேன்மொழியின் இன்னொரு முகம் சுவாரஸ்யமானது. உலகப் புகழ் பெற்ற காக்கர்ஸ் ஸ்பேனியல் ரக நாய்க்குட்டிகள்தான் இவரது உலகம். ‘‘எட்டு நாய்க்குட்டிகள் வளர்க்கறேன். மரணம் நெருங்கற வரைக்கும் திருமணத்தைப் பத்தி யோசிக்கிறதா இல்லை. இந்த 8 பேரும்தான் எனக்குப் பாதுகாப்பு. என்னோட உலகத்துல அன்பைக் கொட்டிக் கொடுக்க இந்த 8 பிள்ளைங்களுக்கும் ஆத்ம திருப்தியை அள்ளிக் கொடுக்க கடவுள் எனக்குக் கொடுத்த எழுத்துக்கும் மட்டும்தான் இடம். மனிதர்களுக்கு இடமில்லை...” செல்லங்களை சேர்த்தணைத்தபடி சிரிக்கிறார் தேன்மொழி.

தேன்மொழி