தர்மினி கவிஞர் / பெண்ணியலாளர் ''இடம் ''



அரவணைக்கும் சுதந்திர நகரம் 10 ஆண்டுகளாக பாரீஸ் நகரில் வாழ்ந்து வருகிறேன். பல நாட்டவரும் வாழும் இந்நகரம், என்னை அந்நியமாக உணராமல் நடமாடும் மனநிலையை ஏற்படுத்துகிறது. பல்வேறு கலாசாரங்களையும் மக்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது இந்நகர். பிரான்ஸ் காலனிகளாக வைத்திருந்த நாட்டு மக்களும், அரசியல் அகதிகளும், இந்நகரில் அடிமட்ட வேலைகளிலிருந்து சொந்த நிறுவனங்கள் நடத்துவது வரையென பல்வேறு தொழில்களைச் செய்கின்றனர்.

சிறந்த எழுத்தாளர்கள் வாழ்ந்த இந்நகரம் இன்றும் கலைஞர்களுக்கு அங்கீகாரத்தை அளிக்கிறது. நகரை ஊடறுத்துச் செல்லும் செயின் நதியும் அதில் பயணம் செய்வதும் மகிழ்ச்சி தரும். ஈபில் கோபுரம் வெளிநாட்டவர் அனைவரும் பார்த்துச் செல்லும் நினைவுச்சின்னம். தாவரவியல் பூங்கா, நவீன கலைகளுக்கான பொம்பிடோ அறிவியல் நிலையம், லூவர் அருங்காட்சியகம் (உலகெங்குமிருந்து கொண்டுவரப்பட்ட ஓவியங்கள்,

கலைப்பொருட்கள் சிலைகள் ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்க்கிறது. மோனலிசா ஓவியம் பெரிதும் ரசிக்கப்படுகின்றன), மனித பரிணாம அருங்காட்சியகம், லாவிலத் அறிவியல் பூங்கா, மிகப்பெரிய நாடக அரங்கமான ஒபேரா, மன்னர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பெருஞ்சிறை பஸ்ரில் போன்றவை இந்நகரிலேயே உள்ளன.

மனித உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு களம் அமைப்பதில் இந்நகரும் மக்களும் பின் நிற்பதில்லை. பஸ்ரில் சிறையுடைப்பில் கனன்ற தீ இன்றும் கூட உலகில் நடக்கும் போராட்டங்களுக்கு முன்னுதாரணம். 12க்கும் மேற்பட்ட வீதிகள் சந்திக்கும் வெற்றிவளைவின் கீழ் நாட்டுக்காகப் போராடி இறந்த வீரர்களின் நினைவாக 1923ல் தொடங்கி அணையா விளக்கொன்று எரிகிறது. சாம்ஸ்எலிசே உலகின் மிக அழகான சாலை என வர்ணிக்கப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட நோர்த்டாம் தேவாலயமும் பாரீஸ் நகருக்கு அழகு சேர்க்கும் வேலைப்பாடு
களுடையது.

பழமையை விரும்பும் மக்கள் வீதிகளில் நெடிதுயர்ந்து நிற்கும் பழைய கால கட்டிடங்களை பழமை கலையாமல் பராமரிக்க விரும்புகின்றனர். நிலக்கீழ் சுரங்க வண்டிகளும் நெடுந்தூர வண்டிகளும் நெரிசல் மிக்க நேரங்களிலும் பயணங்களைச் சுலபமாக்குகின்றன. லாசப்பல் பகுதியில் தமிழ்ப்புத்தகக்கடைகள், மொழிபெயர்ப்பு நிலையங்கள், இலங்கை, இந்தியர்களின் உணவுச்சாலைகள் ஏராளமுள்ளன. இங்கு அடிக்கடி நடைபெறும் அரசியல், இலக்கியம் தொடர்பான தமிழர் கூட்டங்களும் சேர்ந்து, தாய்நாட்டை விட்டு வந்து, அண்டி வாழும் தமிழர் எவருக்கும் தாம் அந்நியம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பில்லாதவாறு பாரீஸ் நகரின் லாசப்பல் பகுதி தமிழர் பிரதேசம் போலவே காட்சி தரும்.

என்னைப்போல வருடக்கணக்காக அரசியல் அகதியாக, பிறந்து வளர்ந்த நாட்டையும் உறவுகளையும் திரும்பவும் ஒரு முறை பார்க்க முடியாமல் வாழும் அகதிகளுக்கு பாரீஸ் நகரும் அதன் அரவணைப்பும் அது தரும் சுதந்திரமும் இதமானதே.

திரைப்படம்

நாடோடி தென்றல் 2005ல் வெளியானது ஜிலீமீ சிணீஸ்மீ ஷீயீ tலீமீ சீமீறீறீஷீஷ் ஞிஷீரீ ஆவணப்படம். தாய், தந்தை, மூன்று குழந்தைகளடங்கிய மங்கோலிய குடும்பத்தின் எளிய வாழ்வின் சில நாட்களை ஆவணப்படுத்தியுள்ளார் பெண் இயக்குனரான ஙிஹ்ணீனீதீணீsuக்ஷீமீஸீ ஞிணீஸ்ணீணீ. நான்ஸால் என்ற 6 வயதுடைய மூத்த குழந்தையின் மனவுணர்வுகளுக்கு ஊடாகவே, நானும் இப்படத்தில் உடன் பயணிக்க முடிந்தது. அவர்களின் வசிப்பிடத்திலிருந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு கூடாரத்தைக் காண முடியவில்லை. மலை, புற்தரை, நீரோடை, குதிரைகள், செம்மறியாடுகள், எருமைகள், விரிந்த வானமென்று காட்சிகள்.

 மெல்லிய இசையும் நாடோடிப் பாடல்களும் அதனோடு சேர்ந்து நாம் வேறொரு சூழலை அனுபவிக்கச் செய்கின்றன. வட்டவடிவமான அவர்களது கூடாரத்தில் சமையல், தையல், வழிபாடு, நித்திரை, பாலாடைக் கட்டித் தயாரித்தல் என அனைத்துக்கும் இடம் ஒதுக்கி வைத்துள்ளனர். அச்சில நாட்களில் ஒன்றிரண்டு உடைகளைத் தவிர வேறெதுவும் அணியவில்லை அக்குடும்பம். பால் காய்ச்சி அருந்துவதும், புத்தரை வழிபடுவதும், ஓயாமல் வேலை செய்து கொண்டே யிருக்கும் தாயும், உலர வைத்த மிருகங்களின் தோல்களை விற்கச் சென்று சில நாட்களின் பின் வீடு திரும்பும் தகப்பனின் எளிய பரிசுகளுமென நுட்பமான பதிவுகள்.

 தூரத்துப் பள்ளிக்கூடம் சென்ற நான்ஸாலை பழைய வாகனம் இறக்கிவிடுகிறது.  உடைமாற்றிக் கொண்டு குதிரையிலேறி மேய்ச்சலுக்குப் போன தம் கால்நடைகளைச் சாய்த்து
வருகிறாள். பாலாடைக் கட்டித் தயாரிப்பில், கூடாரத்தை பிரித்து அடுக்குவதில், சகோதரர்களைப் பராமரிப்பதில் என அக்குழந்தையின் வேலைகளும், அவளது தாயாரின் வேலைகளும், பார்க்கும்போதே நாம் களைத்து விடுமளவு இருக்கிறது. நான்ஸால், கற் பாறைகளிடையில் ஒரு நாயைக் கண்டுபிடித்து வீட்டுக்கு வளர்க்கக் கூட்டி வந்ததை அவளது தந்தை விரும்பவில்லை. அவர்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தைத் தேடிப் போக வேண்டிய நிலையில் கூடாரத்தைப் பிரித்து அடுக்கி வண்டிகளைப் பிணைத்துப் பயணத்துக்கு ஆயத்தம் செய்த போது அந்த நாயை ஓரிடத்தில் கட்டிவிட்டுச் செல்கிறார் தந்தை.

மிகுந்த துக்கத்துடன் பயணிக்கும் நான்ஸால் வரிசையாகப் பிணைத்தபடி செல்லும் வண்டியிலிருந்து அவளது தம்பி மெதுவாக இறங்கியதைக் கவனிக்கவில்லை. இடைவழியில் குழந்தையைத் தேடி தந்தை பழைய கூடாரமிருந்த இடம்நோக்கிக் குதிரேயிலேறிப் போகும்போது கட்டவிழ்த்த நாய், கழுகுகளிடமிருந்து அக்குழந்தையைக் காப்பாற்றிக் காவல் செய்வதைக் காண்கிறார். நான்ஸாலின் தகப்பனார் நாயினால் காப்பாற்றப்பட்ட அக்குழந்தையின் காரணமாக அந்த நாயையும் அழைத்து வருகிறார். நான்ஸாலின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இயற்கையை நேசிக்கும் எளிய மனிதர்களின் மென்னுணர்வுகளுடனே ஒன்றரை மணி நேரம் கடந்து, படம் நிறைகிறது.

நூல்


போருக்குப் பின்னே... புலம்பெயர்ந்து நார்வேயில் 27 ஆண்டுகளாக வாழும் ‘படுவான்கரை’  நூலாசிரியர் சஞ்சயன், 2012ல் இலங்கையின் மட்டக்களப்பிலுள்ள படுவான்கரை பிரதேசத்தில் தன் பயணத்தின் பல நாட்களைக் கழிக்கிறார். அங்கு அநாதரவாகக் கைவிடப்பட்ட மனிதர்களைத் தேடித்தேடிச் சந்தித்த அனுபவங்களைக் கட்டுரைகளாக்கி இருக்கிறார்.

‘இலங்கைத்தீவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும், அதில் பாதிப்புற்று மனப்பிறழ்வானவர்களாகவும், அங்கவீனர்களாகவும், உறவு களை இழந்தவர்களாகவும் நிற்கும் முன்னாள் போராளிகளின் நிலை ஏன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது? போராட்டத்துக்கு ஆயுதங்களை வாங்க அள்ளியள்ளிக் கொடுத்தவர்களும் அதைச் சேகரித்தவர்களும் இவர்களைக் கண்டும் காணாமல் கைவிட்டதன் காரணம் என்ன? புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டு மீண்டும் தொடரும் மிடுக்கு பற்றிப் பேசுபவர்கள் இவர்களை மறந்த காரணம் என்ன?’ என்று கேட்கிறார் சஞ்சயன்.

கவனிக்காமல் விடப்பட்ட ஊனமுற்ற போராளிகளும் குடும்பங்களும் தம் துன்பங்களை பகிர்ந்து கொண்டு யாராவது தம்மைக் கைதூக்கி விடமாட்டனரா என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு கட்டுரையிலும் படிக்க முடிகிறது. ‘புலம்பெயர் தேசங்களில் ஆடம்பரங்களாகச் செய்யப்படும் நினைவு தினங்களில் உயிரோடு வாழும் இவர்களை நினைத்துப் பார்க்கிறார்களில்லை?’ என ஆதங்கத்தோடு, அன்றாடத் துயரங்களையும் சமூகத்தின் புறக்கணிப்புகளையும் நம்முன் வைக்கிறார் சஞ்சயன். ‘இவை எவ்விதப் புனைவுமல்ல. இந்த மனிதர்கள் துயரங்களைச் சுமந்தபடி ரத்தமும் சதையுமாக என் முன்னால் இருந்து உரையாடியவர்கள்’ என்கிறார் நூலாசிரியர்.

உடல் உறுப்பை விற்று வாழும் நிலையில் முன்னாள் போராளிகள், இரண்டு கைகளையுமிழந்து கிராமத்துப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஈரோஸ் இயக்கத்திலிருந்தவர், பாலியல் தொழிலை செய்யவேண்டிய நிலையில் கட்டாயப்படுத்தி இயக்கத்தில் இணைக்கப்பட்ட ஒரு பெண் போராளி, ஊனமுற்ற கால்களுடன் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய நிலையில் வாழ்ந்து, தற்கொலைக்கு முயற்சிக்கும் போராளிகளான தம்பதி என்று சிலரின் கதைகளைப் படிக்கும் போது நம்மிடமிருந்து எழும் குற்றவுணர்வு இவர்களைப் பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்க வைக்கிறது. யுத்தம் துப்பிப் போட்ட சக்கைகளாக மீதிக்காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் இவர்களைப் போன்ற பலரின் வாழ்க்கைக் கதைகள் இன்னும் எழுதாமலும் சொல்லாமலும் ஏராளமுண்டு.
(வெளியீடு: எழுநா ஊடக நிறுவனம்)