போராட்டமே வாழ்க்கை சூசன் பி அந்தோணி



அடிமை ஒழிப்பு போராளி. பெண்ணுரிமைப் போராளி. ஆசிரியர். கல்வி சீர்திருத்தவாதி. தொழிலாளர் நலனுக்காகப் போராடியவர். மதுவிலக்குக்காகப் பாடுபட்டவர். பத்திரிகையாளர், பதிப்பாளர். எழுத்தாளர்... இப்படி தன்னுடைய 86 ஆண்டுகால வாழ்க்கையில் 66 ஆண்டுகள் சமூக  மாற்றத்துக்காகவே உழைத்தவர் சூசன் ப்ரௌனெல் அந்தோணி. அமெரிக்க வரலாற்றிலும் உலக அளவிலான பெண்கள் போராட்டங்களிலும் அழுத்தமாக முத்திரை பதித்தவர்!

1820 பிப்ரவரி 15... அமெரிக்காவிலுள்ள மாசாச்சூ செட்ஸில் பிறந்தார் சூசன். மத நம்பிக்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் அவரது பெற்றோர்... பொம்மைகளும் இசையும் கூட குழந்தைகளின் கவனத்தைச் சிதறடித்துவிடும் என்று நினைத்தவர்கள்! சூசன் உள்பட 6 குழந்தைகளையும் சமூகத்துக்குச் சேவை செய்யும் விதமாகவே வளர்த்தனர். அவர்கள் மூலம்தான் அடிமை ஒழிப்பு இயக்கத்திலும் மது ஒழிப்பு இயக்கத்திலும் சூசனுக்கு ஆர்வம் வந்தது.

18 வயதில் சூசனின் குடும்பம் அதிகபட்ச பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் படிப்பை விட்டு விட்டு, பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார் சூசன். ஏழாண்டுகளில் வீட்டில் நிலைமை சீரடைந்தது. சூசனுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினர். திருமணம் என்பது பெண்கள் வாழ்க்கையில் எந்தவித விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்திருந்த சூசன் ஒரு முடிவுக்கு வந்தார். ‘வசதி இல்லாத பெண்கள் திருமணம் செய்துகொண்ட பிறகு, கணவனுக்கு அடிமையாக வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதுவே பணக்காரப் பெண்களாக இருந்தால் செல்லப்பிராணிகளைப் போலவோ, பொம்மைகளைப் போலவோ இருக்க வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிலுமே எனக்கு விருப்பம் இல்லை. நான் திருமணம் செய்துகொள்வதை விட, பெண்களின் நிலையை மாற்றவும் முன்னேற்றவும் என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

1846ல் சூசனுக்கு ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியர்களுக்கும் இடையே சம்பள வேறுபாடு அதிகம் இருந்தது. படிப்பிலும் ஆண்-பெண் வித்தியாசம் நிலவி வந்தது. ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் உருவத்தில்தான் வித்தியாசம் இருக்கிறது. மூளையில் வித்தியாசம் இல்லை. இருவராலும் ஒரே மாதிரி சிந்திக்க முடியும்... செயல்பட முடியும். இனம், நிறம், ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கல்வி கற்பதில் இருக்கக்கூடாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்றார் சூசன். 
1851... அடிமை ஒழிப்புக்கான ஒரு கூட்டம்.

அதில்தான் எலிஸபெத் காடி ஸ்டாண்டன் அறிமுகம் கிடைத்தது. இருவரின் கருத்துகளும் ஒத்திருந்தன. ஆண்களின் மதுப்பழக்கத்தால் பெண்கள் எப்படிச் சீரழிகிறார்கள் என்பதைப் பற்றி இருவரும் பேசினார்கள். மதுவிலக்குக்காக இருவரும் சேர்ந்து போராடுவது என்று முடிவெடுத்தார்கள். குடிகாரக் கணவர்களால் பாதிக்கப்பட்ட மனைவிகள், மகள்களை இணைத்து ஓர் அமைப்பை ஆரம்பித்தார். மது விற்பனைக்கான கட்டுப்பாடுகளை கொண்டு வர வலியுறுத்தினார். குழந்தைகள், பெண்களிடம் 28 ஆயிரம் கையெழுத்துகளை வாங்கி ஆதரவு திரட்டினார்.

 அடுத்த ஆண்டு பெண்கள் உரிமைகளுக்கான முதல் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு சூசனுக்குக் கிடைத்தது. தொடர்ந்து பெண்கள் போராட்டங்களில் பங்கேற்றார். உரைகள் நிகழ்த்தினார். அடிமை ஒழிப்பு போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். உள்நாட்டுப் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பெண்கள் போராட்டங்களில் மட்டும் தீவிரமாகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சூசன்.
13வது திருத்தம் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் என்று சூசனும் ஸ்டாண்டனும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது ஏமாற்றத்தையே அளித்தது. 1866ம் ஆண்டு அமெரிக்க சம உரிமை இயக்கத்தைத் தோற்றுவித்தனர். புரட்சி என்ற செய்தித்தாளையும் ஆரம்பித்தனர். ‘ஆண்கள்... அவர்களது உரிமைகள்... ஒரு துளியும் அதிகமில்லை! பெண்கள்... அவர்களது உரிமைகள்...ஒரு துளியும் குறைவில்லை!’ என்று அனைவருக்கும் சம உரிமை வேண்டி எழுதினர். 

1866ம் ஆண்டில், ‘8 மணி நேரம் வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம்’ கேட்டு கட்டுரைகள் எழுதினார் சூசன். பல இடங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும், ஆண்களுக்கு இணையான சம்பளம் அளிக்கப்படவில்லை. அதனால், உழைக்கும் பெண்களுக்கான தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார் சூசன். முதலாளிகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை. தொழிற்சங்கம் மூலம் பெண்களுக்கு வேலை பற்றிய அறிவை ஊட்டினார். அவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளித்தார். ஒருமுறை ஆண்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை செய்ய ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பெண்களை வேலைக்கு அனுப்பினார் சூசன். ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வேலை செய்ததைக் கண்கூடாகக் கண்டனர். அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

1872ல் தேர்தல் கண்காணிப்பாளர்களைச் சம்மதிக்க வைத்து, ஓட்டுப் போடும் உரிமையைப் பெற்றார் சூசன்.   2 வாரங்கள் கழித்து, சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஓட்டு போட்ட குற்றத்துக்காக சூசன் கைது செய்யப்பட்டார். அவருடன் சகோதரிகள் மூவரும் சில போராட்டக்காரர்களும் கைதானார்கள். 100 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. சூசன் அபராதத்தைச் செலுத்த விரும்பவில்லை. இந்தச் சம்பவத்தின் மூலம் ஓட்டுரிமைப் போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டும் என்று எண்ணினார். செய்தி பரவியது. பெண்களிடம் ஆதரவு அதிகரித்தது. 

1977ம் ஆண்டு நாடு முழுவதும் 10 ஆயிரம் கையெழுத்துகளைச் சேகரித்தார். ஒவ்வொரு சட்டத் திருத்தத்தின் போதும் ஓட்டுரிமையை வலியுறுத்தினார். 1881-1885 வரை பெண்கள் உரிமைகள் போராட்டங்களைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டார் சூசன். 1887ம் ஆண்டு பெண்கள் போராட்டம் அமெரிக்க தேசிய பெண்கள் போராட்டமாக மாற்றம் அடைந்தது. ஸ்டாண்டன் தலைவராகவும் சூசன் துணைத் தலைவராகவும் பணியாற்றினர்.

1890ல் வயோமிங் மாநிலத்தில் முதல் முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் ஓட்டுரிமைக்காக வேலை செய்தார். ஆனால், அந்த முயற்சி தோல்வியைச் சந்தித்தது. சூசன் தளர்ந்துவிடவில்லை. ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் உரிமைகள் மாநாட்டில் கொண்டு வந்த தீர்மானங்களுடன் அரசியல்வாதிகளைச் சந்தித்தார். நம்பிக்கையோடு விவாதித்தார். எந்த வித முன்னேற்றமும் இல்லை. 41 ஆண்டுகள் இப்படி முயற்சியைக் கைவிடாமல், தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக நின்றார் சூசன்.

சூசனின் சில போராட்டங்கள் வெற்றியடைந்தன. ஆண்-பெண் படிக்கும் பள்ளிகள் உருவாகின. 1900ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பெண்கள் உடைகள், சிகை அலங்காரம் போன்றவற்றில் மாற்றங்கள் கொண்டு வந்தார். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று வலியுறுத்தினார். விவாகரத்து ஆனாலும், பெண்களால் சொத்து மற்றும் சொந்த சம்பாத்தியம் மூலம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியும். அதற்கேற்ப சொத்துரிமைச் சட்டத்தில் மாற்றம் வர வேண்டும் என வலியுறுத்தினார்.

திருமணம், வேலை, வாக்குரிமையில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டுமானால் பெண்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றார்.
போராட்டங்களால் காலம் வேகமாக ஓடியிருந்தது. வயதான காரணத்தால் சூசன் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டார். ஆனாலும், தன்னுடைய பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருந்தார். 86 வயதைக் கடந்த சூசன், தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்களுக்காகவே அர்ப்பணித்திருந்தார். ‘தோல்வி என்ற ஒன்றே கிடையாது. இத்தனை காலம் நிகழ்த்திய போராட்டங்களின் பலனாக விரைவில் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைக்கும். அதைக் காண நான் இருக்க மாட்டேன். என்னுடைய இறுதிச் சடங்கில் யாரும் கண்ணீர் விடக்கூடாது. நீங்கள் செய்வதற்கு ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன’ என்றார். 1906 மார்ச் 13 அன்று சூசன் மறைந்தார்.

அவர் இறந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 19வது திருத்தத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. இந்தத் திருத்தம் சூசனின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. முதல் முறையாக அமெரிக்க டாலரில் ஒரு பெண்ணாக சூசனின் உருவம் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.  உலகம் முழுவதும் பிற்காலத்தில் தீவிரமாக உருவெடுத்த பெண்ணுரிமைப் போராட்டங்கள், வாக்குரிமைப் போராட்டங்களுக்கு முன்னோடி சூசன்!       

ஆண்களின் மது பழக்கத்தால் பெண்கள் எப்படிச் சீரழிகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார். குடிகார
கணவர்களால் பாதிக்கப்பட்ட மனைவிகள், மகள்களை இணைத்து ஓர் அமைப்பை ஆரம்பித்தார்.

சூசன்மொழிகள்

*சுதந்திரமே மகிழ்ச்சி.
*பெண்கள் சொந்தக்காலில் நிற்பதும் சுதந்திரமாக இருப்பதும்தான் உலகிலேயே மிக அழகான இனிப்பான விஷயம்.
*இன்னும் ஒரு நூற்றாண்டு நான் வாழ்ந்தாலும் பெண்களுக்காகப் போராட ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன!
*வாக்குரிமை என்பது மிக மிக முக்கியமானது.