சவாலான வேலை! மருத்துவர் சுதா சேஷய்யன்



பன்முகப் பிரபலமாக இருந்தாலும் அமைதியின் அடையாளமாக இருக்கிறார் சுதா சேஷய்யன்.சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறையின் இயக்குனரான இவருக்கு ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என வேறு முகங்களும் உண்டு. பரபரப்பான மருத்துவப் பணிகளுக்கிடையிலும் தனது இத்தனை ஆர்வங்களுக்கும் நேரம் ஒதுக்கும் இவரது நேர நிர்வாகத் திறமை வியக்க வைக்கிறது!

‘‘சாதனையாளர்கள் எல்லாருக்குமே 24 மணி நேரம்தானே இருந்தது? நேரம் போதவில்லை என்பது நமக்கு நாமே சொல்லிக் கொள்கிற சாக்கு. உண்மையில் சொல்லப் போனால் எல்லோருக்கும் தேவைக்கு அதிகமாகவே நேரம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து உபயோகித்துக் கொள்வதுதான் நமது திறமை. நேரத்தை மிச்சப்படுத்துவதில் எனக்கு சில பாணிகளை வைத்திருக்கிறேன். தொலைபேசியில் பேச அதிக நேரத்தை செலவிடுவதில்லை. என்ன சொல்ல வேண்டுமோ, அதை சுருக்கமாகப் பேசி முடித்துவிடுவேன்.

அதற்கும் நேரமில்லாதபோது குறுந்தகவல் அனுப்புவேன். ஒரு வேலையை இன்னொன்றுக்கான ஓய்வாக நினைத்துச் செய்கிற வரை, எந்த வேலையும் அலுப்பையோ, சலிப்பையோ தருவதில்லை. பெற்றோர் எனக்குக் கற்றுத் தந்த இந்தப் பாடம்தான் என் நேர நிர்வாக ரகசியம்...’’ என்பவரின் நேரத்தை வீணடிக்க விருப்பமின்றி, பேச வந்த விஷயத்துக்குச் சென்றோம்.

அது அவரது தமிழார்வம் பற்றியது... காலத்துக்கும் அவர் பெயர் சொல்லப்போகிற மருத்துவக் களஞ்சியம் மற்றும் பிரிட்டானிகா தமிழ் கலைக் களஞ்சியம் தொகுப்பில் அவரது
மகத்தான பணி பற்றியது...‘‘என்னுடைய தமிழார்வத்துக்குத் தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை. அப்பா மருத்துவர் என்றாலும், அவருக்கு தமிழ் ஆர்வம் அதிகம். நிறைய கதைகள் சொல்வார். ஏராளமான நூல்களை சேகரித்து வைத்திருந்தார். ஆனாலும், ‘அதைப் படி, இதைப் படி’ என என்னிடம் எதையும் வலியுறுத்தியதில்லை. இயல்பாக எனக்குள் தமிழார்வம் வளர்ந்தது. திடீரென கம்பராமாயணத்தையோ, பெரிய புராணத்தையோ பற்றிப் பேச வேண்டும் என்றால், குறிப்பெடுக்க அந்த நூல்கள்தான் எனக்கு ஆதாரம். அடுத்து சென்னை கம்பன் கழகத்தில் நீதிபதி இஸ்மாயில் போன்றோர் அளித்த ஆதரவு... மேடையில் பேசும் போது வயதில் சிறியவர் சொல்லும் கருத்து என நினைக்காமல் ஊக்கப்படுத்துவார்கள்.

தமிழார்வம் அதிகமானதும், என் உயர் கல்வியும் அது தொடர்பானதாக இருக்க வேண்டும் என்கிற ஒரு சின்ன ஆசை இருந்தது. அதற்கேற்ற சூழல் அமையாததால் மருத்துவம் படித்தேன். முழுநேர மருத்துவரான பிறகும் என் இலக்கிய ஈடுபாடு குறையாமல் பார்த்துக் கொண்டேன். இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டேன். அப்படியொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்றால், என்னை நான் அதற்குத் தயார்படுத்திக் கொண்டாக வேண்டும்.

 நிகழ்ச்சிகளே இல்லை என்றால் அந்தத் தயாரிப்பு தள்ளிப் போகும். இலக்கியத் தொடர்பு வேண்டும் என்பதற்காகவே அதை நான் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை செய்தேன். ‘மருத்துவரான பிறகு இலக்கியம் எதற்கு? இலக்கியம் சோறு போடுமா? அது உனக்கு என்ன செய்துவிடப் போகிறது?’ என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு. நான் அப்படியெல்லாம் யோசிக்கவில்லை. இலக்கிய ஈடுபாடு காரணமாகத் தான் மருத்துவத்தில் நான் தனிப்பட்ட பயிற்சியில் (பிரைவேட் பிராக்டீஸ்) கூட ஆர்வம் காட்டவில்லை. அரசாங்க மருத்துவராக மட்டுமே என் பணியைத் தொடர்கிறேன்.

ஆரம்ப காலத்தில் பட்டிமன்றங்களில் அதிகம் பேசிக் கொண்டிருந்த நான், கடந்த சில வருடங்களாக நிறுத்திக் கொண்டேன். பட்டிமன்ற மேடைகளில் ஏற்பட்ட சிதைவுதான் காரணம். பட்டிமன்றங்களில் பேசப்படுகிற பல விஷயங்கள் தரமானவையாகப் படவில்லை. வெறும் பாராட்டையும் கைத்தட்டல்களையும் வாங்கும் ஒரு மேடையாக மாறிப் போனதால் நான் விலகிக் கொண்டேன்.
அதைத் தொடர்ந்து ஆன்மிக உரைகளில் என் ஆர்வம் அதிகமானது. இப்படியாக தமிழுடன் என் பணி சிறப்பாக தொடர்ந்து கொண்டிருந்த வேளையில்தான் மருத்துவக் களஞ்சியம் மற்றும் பிரிட்டானிகா தமிழ் கலைக் களஞ்சியம் என இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகளைச் செய்கிற பெரிய வாய்ப்பு வந்தது.

இரண்டுமே இரண்டு விதமான அனுபவங்களைத் தந்தன. மருத்துவக் களஞ்சியம் என்பது என் துறை சார்ந்தது. என் துறை செய்திகளை தமிழில் சிந்தித்துச் சொல்வதில் எனக்கு சிரமம் தெரியவில்லை. ஆனால், பிரிட்டானிகா தமிழ் கலைக் களஞ்சியத்தில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் தகவல்களை மொழிபெயர்க்க வேண்டிய சவாலான வேலை. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க ஆங்கிலத்தில் இருந்தன.

மொழி பெயர்ப்பு என்பது ஒரு விஷயத்தை உள்வாங்கிக் கொண்டு, பிறகு இன்னொரு மொழியில் அர்த்தம் மாறாமல் கொடுக்க வேண்டிய ஒன்று. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க முடியாது. அந்தப் பணியில் எங்களுக்கு உடன்பாடில்லாத, நம் மக்களுக்குப் பயன்படாதெனத் தெரிந்த 3 ஆயிரம் தகவல்களை நீக்கச் சொல்லி, அவற்றுக்குப் பதில் இந்தியாவை, தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய விஷயங்களைச் சேர்க்க வைத்தோம். தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள், அரசர்கள் என தவிர்க்கக்கூடாத சில தகவல்களைச் சேர்த்தோம். இந்தத் தொகுப்பின் முதல் பதிப்பு 2007 ஏப்ரல் மாதம் வெளிவந்த போது அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தார்.

இரண்டாம் பதிப்பு அதே வருடம் அக்டோபரில் வெளியான போது பிரதீபா பாட்டில் குடியரசுத் தலைவராகி  இருந்தார். அத்தனை சீக்கிரத்தில் இது போன்ற மாற்றங்களைச் சேர்த்துக் கொடுத்தது இன்னொரு சவால். மருத்துவக் களஞ்சியமும் சரி... பிரிட்டானிகாவும் சரி எனக்கு நிறைய புதிய விஷயங்களைக் கற்றுத் தந்தன. அந்த அனுபவம் அலாதியானது...’’ - நிகழ்காலத்துக்குத் திரும்புகிற சுதா, எழுத நினைத்துத் திட்டத்தில் வைத்திருக்கிற தலைப்புகள் சுவாரஸ்யத்தையும், ஆர்வத்தையும் கூட்டுகின்றன.

‘‘தியாகராஜர் கீர்த்தனைகளில் காணப்படும் ராமாயணம், லெமூரியா, கம்ப ராமாயணத்தில் பெண் கதாபாத்திரங்கள் என சில நூல்களுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடராஜ தாண்டவம் மற்றும் வடமொழியில் உள்ள தாமிரபரணி மகாத்மியத்தை தமிழில் எழுதுவது என இன்னும் இரண்டு நூல் ஆய்வுகளுக்கான திட்டமும் இருக்கிறது. பார்ப்போம்...’’ நிறைய நல்ல விஷயங்களை உணர்த்திய திருப்தியுடன் முடிகிறது சுதாவுடனான உரையாடல்!

‘மருத்துவரான பிறகு இலக்கியம் எதற்கு? இலக்கியம் சோறு போடுமா? அது உனக்கு என்ன செய்துவிடப் போகிறது?’என்றெல்லாம் கேட்டவர்கள் உண்டு!