பாட்டுத் தமிழ் இது புது மழை!



ஒரே படம் அல்லது பாடலுடன் காணாமல் போகாமல், அடுத்தடுத்த வாய்ப்புகளுடன் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் ‘வல்லினம்’ படத்தைத் தொடர்ந்து ‘ஜில்லா’ மற்றும் ‘திருமணம் என்கிற நிக்கா’ என இரண்டு படங்களின் அசத்தல் பாடல்களை எழுதிவிட்டு, ஆரவாரமின்றி, அமைதியாக இருக்கிறார் பார்வதி. முதுகலை வரை ஆங்கில இலக்கியம் படித்தவரின் பேச்சில் அந்த வாசனை சிறிதும் இல்லை. பார்வதியின் தமிழில் அத்தனை இனிமை!

‘‘பள்ளி இறுதியிலேயேகூட மேம்பட்ட ஆங்கிலம் (அட்வான்ஸ்டு இங்லீஷ்)தான் என் விருப்பப் பாடம். அதையடுத்து இளங்கலை, முதுகலை எல்லாவற்றிலும் ஆங்கில இலக்கியம். தகவல் தொடர்பியலும் முடித்தேன். சிறுவயதிலிருந்தே தமிழ் பிடிக்கும். பள்ளி, கல்லூரி நாட்களில் தமிழ்த் துறைகளில் என்னை அழைத்துப் பேசச் சொல்வார்கள்.ஆங்கில இலக்கியம் படிக்கத் தொடங்கிய பிறகுதான் தமிழில் எழுதவே ஆரம்பித்தேன்.

 எழுத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்க வைத்தது கவிஞர் அறிவுமதியின் ‘நட்புக்காலம்’. அதை வாசித்த பிறகு ஆண்-பெண் நட்பு பற்றி ஒரு பெண்ணின் பார்வையில் எழுதினால் என்ன எனத் தோன்றியது. அந்தப் பாதிப்பில் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு, ‘இப்படிக்கு நானும் நட்பும்’ எழுதினேன். இரண்டாவது தொகுப்பான ‘இது வேறு மழை’ எழுதிய பிறகும்கூட திரைப்படங்களில் பாடல் எழுதுவது பற்றிய எந்தச் சிந்தனையும் எனக்கில்லை.

ஆனால், அவ்வப்போது எனக்குப் பிடித்த மெட்டுகளுக்கு நானே வரிகள் எழுதிப் பார்த்து ரசித்திருக்கிறேன். என்னுடைய இரண்டாவது தொகுப்பு வெளிவந்த நேரம் தனிப்பட்ட முறையில் எனக்கு சில சிக்கல்கள்... அந்த நேரத்தில் அழுத்தமாக ஏதேனும் செய்து என்னுடைய இருப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. என்னுடைய பலத்தை வைத்தே அதைச் செய்யலாம் என யோசித்த போதுதான், பாடல் எழுதும் எண்ணமும் வந்தது. ஆசை இருந்ததே தவிர, அறிமுகம் அத்தனை சுலபத்தில் சாத்தியப்படவில்லை...’’ என நிறுத்துகிற பார்வதியின் பேச்சில் அந்த வலி தெரிகிறது.
 ‘‘பாடல் எழுத வாய்ப்பு கேட்டு அலைந்தேன். பலரும் நேரில் சந்திக்கவே தயாராக இல்லை. பிரபலமான ஒருவரின் பெயர் பாடல் குறுந்தகட்டில் இடம்பெறுவதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். என் திறமை நிச்சயம் எனக்கு வாய்ப்பு வாங்கித் தரும் என்கிற நம்பிக்கையுடன் தளராமல் முயற்சி செய்தேன். ‘வல்லினம்’

பட இயக்குனர் அறி
வழகன் ஏற்கனவே எனது கவிதைகளை வாசித்திருக்கிறார். அந்த வகையில் அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார்.
முதல் வாய்ப்பைவிட, அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறு வதுதான் பெரிய போராட்டம். திரைப்படம் என்பதே போராட்டக் களம்தான். அதில் இடம் பிடிப்பதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் மிகவும் சவாலானதாகவே இருக்கிறது. இது எனக்கு மட்டுமின்றி, உள்ளே நுழையத் துடிக்கிற ஒவ்வொருக்குமானது. எத்தனையோ உதவி இயக்குனர்கள் வருடக்கணக்கில் பல படங்களில் வேலை பார்த்து விட்டு, வாய்ப்புக் கிடைக்காமல் வேறு வேலைகளுக்குப் போவதைப் பார்க்கிறோம். எனக்கு என்னுடைய இரண்டாவது வாய்ப்பானது, முதல் பாடலுக்கு

சம்பந்தமில்லாததாக அமைய வேண்டும் என நினைத்தேன். ‘ஜில்லா’வில் நான் எழுதியிருக்கும் ‘விரசா போகையிலே...’ அப்படித்தான் அமைந்தது. அந்தப் பாடலுக்கு நிறைய பாராட்டுகள்... அதையடுத்து ‘திருமணம் என்கிற நிக்கா’ படத்தில் 2 பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

நான்கு வருடங்களாக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த சமூக வலைத்தளத்திலும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. அதன் மூலம் வாய்ப்பு கேட்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய திறமையும் தொடர் முயற்சியும் நிச்சயம் எனக்கு வெற்றியைத் தரும் என்கிற நம்பிக்கையில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாய்ப்புகள் வேண்டுமே என்பதற்காக எல்லாவற்றையும் நான் ஒப்புக் கொள்வதுமில்லை. ஆபாசமாக எழுதுவதில்லை என்பது என் கொள்கை.

 ‘வல்லினம்’ படத்துக்குப் பிறகு 4 படங்களை மறுத்திருக்கிறேன். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். பாடல் துறையில் அழுத்தமான ஒரு முத்திரையைப் பதிக்க வேண்டும்.

அதன் பிறகுதான் திருமணம் பற்றி யோசிப்பது என முடிவு செய்திருக்கிறேன்...’’ - உறுதியாகச் சொல்கிறவரின் லட்சியம் சீக்கிரமே நிறைவேற வாழ்த்துகள்!

என் திறமை நிச்சயம் எனக்கு வாய்ப்பு வாங்கித் தரும் என்கிற நம்பிக்கையுடன் தளராமல் முயற்சி செய்தேன்...


பார்வதி