மக்களின் எண்ணம் மாறும் வரை என் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும்!
‘‘நான் வாழும் இந்த வாழ்க்கை மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்’’ என சொல்கிறார் எழுத்தாளரான நீலா. ‘பாமர தரிசனம்’, ‘கற்றது சிறையளவு’ போன்ற புத்தகங்களை எழுதியவர். சமூக செயற்பாட்டாளருமான இவர் புதுக்கோட்டையில் உள்ள மக்களுக்காக பல சமூகம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் குரலுக்கு செவி கொடுக்கும் இவர் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முதன்மையானவராக தீர்த்தும் வைக்கிறார். தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வரும் நீலாவிடம் பேசும் போது...

‘‘எனக்கு சொந்த ஊரு புதுக்கோட்டை பக்கத்தில இருக்கிற ஒரு குக்கிராமம். எனக்கு படிப்பு மேல ஆர்வம் அதிகம் ஏற்பட காரணம் என் அம்மா. அவங்கதான் இலக்கியத்தோடு கல்வியையும் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.
அம்மாக்கு உடல் நிலை சரியில்லாம போகவே எனக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தாங்க. 18 வயசில் கல்யாணமாகி புதுக்கோட்டைக்கு வந்துட்டேன். கல்யாணம் ஆனாலும் நான் தொடர்ந்து படிக்கணும்னு ஆசைப்பட்டதால என் கணவர் என்னை படிக்க வச்சார்.  கல்லூரியில் சேர்ந்து படிச்சேன். படிப்பு முடிக்கும் போது தான் அறிவொளி என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் நான் வயதானவர்களுக்கு வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன். மாலை நேரங்களில் விளக்கு ஒளி வெளிச்சத்துல வகுப்புகள் நடக்கும். பலரும் ஆர்வமா கலந்து கொண்டு எழுதப் படிக்க கத்துக்கிட்டாங்க. அதில் ஒரு பாட்டி என்னிடம் பாடம் கற்றுக் கொள்ள வந்தாங்க. அவங்களின் வாழ் நாள் முழுதும், அவருக்கு வரும் தபால்களை கை நாட்டு போட்டுதான் வாங்கி இருக்காங்க.
என்னிடம் எழுதப் படிக்க தொடங்கின பிறகு கையெழுத்து போட்டு வாங்க ஆரம்பித்தாங்க. அதை பார்த்து எனக்கு சந்தோஷமா இருந்தது. என்னுடைய அந்த அனுபவத்தை கவிதையா எழுதினேன்.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமே பிரசுரமான ஒரு பத்திரிகைக்கு அந்தக் கவிதையை அனுப்பி வைத்தேன். அவங்களும் அதை பிரசுரம் செய்தாங்க. அதை பார்த்த அப்போதையை கலெக்டர் ஷீலா ராணி என்னை பாராட்டினார். அந்தக் கவிதைதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையா மாறியது’’ என்றவர் அவருடைய பயணம் குறித்து மேலும் பேசத் தொடங்கினார்.
‘‘அந்தக் கவிதைக்கு பாராட்டு கிடைக்கவே புத்தகங்களும் எழுத தொடங்கினேன். ‘பாமர தரிசனம்’, ‘கற்றது சிறையளவு’, ‘வீணையல்ல நான் உனக்கு’ என்ற தலைப்புகளில் புத்தகங்களை எழுதினேன். இதன் மூலம் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது.
நாங்க எல்லோரும் ஒருங்கிணைந்து வேலை செய்தோம். இதே காலக்கட்டத்தில்தான் கலைக்குழுக்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. நான் கலைஞர்களை எல்லாம் சேர்த்து ‘விடியல்’ என்ற பெயரில் கலைக்குழு ஒன்றை தொடங்கினேன். அதில் நாட்டுப் புற பாடல்கள், கருத்துள்ள பாடல்கள், சினிமா பாடல்கள் என எல்லாவற்றையும் ஊர் ஊராக சென்று அரங்கேற்ற தொடங்கினோம்.
அந்த சமயத்தில ஷீலா ராணி மேடத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என் கவிதை மூலம் ஏற்கனவே நான் அறிமுகமாகி இருந்ததால், என் கலைக்குழு குறித்து வாழ்த்தும் தெரிவித்தார்.
கலைக்குழுவிற்கு மக்களிடம் வரவேற்பு இருந்ததால் புதுக்கோட்டை முழுவதும் சென்று நிகழ்ச்சிகள் நடத்துங்கள் என்று உத்தரவு ஒன்று கொடுத்து அது அரசு சார்பில் நடத்தவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஒவ்வொரு ஊருக்கும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தும் போது அந்த ஊரை பற்றி தெரிந்து கொண்டேன். அப்படி ஒரு ஊருக்கு செல்லும் போது அங்கிருந்த கிராம மக்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.
அந்தக் கிராமப் பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது அந்த ஊர் அம்மன்தான் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. அதனால் கர்ப்பிணி பெண்களை பொட்டல் காட்டிற்கு அழைத்து சென்று பெண்களே பிரசவம் பார்த்து வந்தனர். அந்த சம்பவம் என்னை பெரிய அளவில் பாதித்தது. அதை பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரையாக எழுதினேன். அது பெரிய பாதிப்பினை ஏற்படுத்த, அந்த ஊர் மக்களை அரசு அதிகாரிகள் சந்தித்து விழுப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் அந்த மக்கள் அவர்களின் நம்பிக்கைகளில் இருந்து வெளியே வரவில்லை. தொடர்ச்சியாக பேசியதன் விளைவாக மருத்துவமனைகளில் சென்று பிரசவம் பார்க்க தொடங்கினார்கள். இந்த நிகழ்வு இது போன்ற மூடநம்பிக்கை உள்ள இடங்களுக்கு சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுற்றி மக்களை சந்திக்க தொடங்கினேன். அதில் நான் பார்த்த ஊர்தான் விராலி மலை. இங்குள்ள கிராமத்தில் தேவதாசி முறை இருந்தது. கோவில்களுக்கு பெண்களை பொட்டு கட்டி விட்டு விடுவார்கள்.
கோவில்களை சுத்தம் செய்வது, சாமிக்கு பூ கட்டுவது, கோவிலை பராமரிப்பது போன்ற வேலைகளை செய்வதற்குதான் ஆரம்பத்தில் தேவதாசிகள் இருந்தனர். தேவதாசிகள், இறைவனுக்கு சேவை செய்யப் பிறந்தவர்கள் என்று கடவுளுக்கு திருமணம் செய்விக்கப்பட்டனர். இதனால் இவர்களுக்கு எல்லோரும் மரியாதை கொடுக்கத் தொடங்கினார்கள். தேவதாசிகள் ஆடல், பாடல் கலைகளில் நல்ல தேர்ச்சிப் பெற்று இருந்தனர். காலப் போக்கில் மன்னர்களும், நிலச்சுவான்தார்களும், ஊரில் உள்ள பெரிய ஆட்கள் எல்லோரும் அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமைகள் செய்யத் தொடங்கினார்கள். தேவதாசி என்பது தாசி என மாறி அவர்களை கீழான நிலையிலும் அவமானமாகவும் பார்க்கத் தொடங்கினார்கள். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமென டாக்டர் முத்துலெட்சுமி கடுமையாக போராடி அதில் வெற்றி கண்டார்.
1947ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்பு நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் இந்த ஊரில் மட்டும் தேவதாசி முறை இருந்து வந்தது. அங்குள்ள ஒரு முருகன் கோவிலில் பெண்களை பொட்டு கட்டி விட்டு வந்தார்கள்.
இதனால் அந்தப் பெண்களில் பலர் எச்.ஐ.வி தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது குறித்து நான் ஷீலா ராணி அவர்களிடம் தெரிவித்தேன். அவர் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொடுத்ததோடு எல்லோரும் இந்தத் தொழிலை விட்டு வெளியே வரச் சொல்லி பேசினார். அதை ஏற்றுக் கொண்ட 32 பெண்களுக்கு சொந்தமாக தொழில் செய்வதற்கு பயிற்சி ஒன்றை கொடுத்து, வங்கியில் கடனுதவி ஏற்படுத்திக் கொடுத்து சொந்தமாக தொழில் செய்யவும் வழி வகுத்து கொடுத்தோம். இது மட்டுமில்லாமல் அவர்களுக்கு 5 சென்ட் நிலமும் கொடுத்து அவர்களை ஊக்குவித்தனர். அரசு தொடர்ந்து அந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக அந்தக் கிராமத்துப் பெண்கள் அனைவரும் தேவதாசி தொழிலிலிருந்து வெளியே வந்தனர்.
அதன் பிறகு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் அப்போதைய கலெக்டராக இருந்த கவிதா ராமு அவர்கள் மூலம் வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்தோம். ஆனால் அந்த வீடு கட்டப்பட்ட நிலையில் இருந்தாலும், அந்தப் பெண்கள் தேவதாசி என்பதால் ஊர் மக்கள் அவர்களை அங்கு வந்து தங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய வாழ்க்கையை வாழ நினைக்கும் அந்தப் பெண்களுக்காக நான் இன்று குரல் கொடுத்து வருகிறேன். மக்களின் எண்ணம் கூடிய விரைவில் மாறும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறேன்’’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் நீலா.
மா.வினோத்குமார்
|