5 வயது ஆசை, 58ல் நிறைவேறியது!



ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனங்களில் 14 ஆண்டு கல்வி ஆலோசகர். 25 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி சார்ந்து இலவச ஆலோசனை வழங்கியவர். பெண்களுக்கு உளவியல் ரீதியான தீர்வுகளை வழங்குபவர். 
தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு முதன்மைப் பயிற்சியாளர் என பன்முகங்களை கொண்டவர்தான் நெல்லை உலகம்மாள். சிறுவயதில் ஆங்கில வழிக் கல்வியில் பயில விரும்பியவர்... சில காரணங்களால் அது தடைப்பட்ட நிலையில் தன்னுடைய முனைவர் பட்டத்தினை ஆங்கில வழியில் முடித்தே தீர வேண்டும் என நினைத்து அசத்தியுள்ளார்.

‘‘ஆங்கிலம் பேசும் குழந்தைகளைப் பார்க்கும் ேபாது எனக்கும் அவர்களைப் போல் பேச வேண்டும்னு ஆசை இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஏன் எனக்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது என்று நான் கேட்ட போது, எனக்கு கிடைத்த பதில், ‘ஆங்கில வழிக் கல்வி கொடுப்பதில் பெரிய அளவில் பிரச்னை ஒன்றுமில்லை.

ஆனால், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயில வேண்டும் என்றால், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தணும். அதை மற்ற பெற்றோர்கள் தவறாக எண்ணக்கூடும்’ என்றார்கள். காரணம், நான் ஒரு மாற்றுத்திறனாளி. அதனால் நான் தள்ளி வைக்கப்பட்டேன்.

1960ல் எங்க மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பட்ட முறையில்  ஆங்கில வழிக் கல்வி கற்பதற்கு அரசு அல்லது தனியார் பள்ளிகள் இயங்குகிறதா? என்று தேடினோம். ஆனால் எதுவும் அங்கில்லை. என்னுடைய உடல் நிலை காரணத்தால் நான் நிராகரிக்கப்படுகிறேன் என்று நினைத்து நினைத்து நான் மனதிற்குள் அழுதிருக்கிறேன். இரவு தூக்கம் வராமல் தவித்திருக்கிறேன்.

ஆனால் ஒருநாள் என் பெற்றோர், பெண் பிள்ளைக்கு கல்வி அவசியம். அது எந்த வழியில் கற்றால் என்ன? கல்வியினை ஒரு போதும் கைவிடக்கூடாது என்று கூறி எங்கப் பகுதியில் இருந்த நகராட்சிப் பள்ளியில் என்னை சேர்த்தார்கள். கல்வி, ஒழுக்கம், வாழ்க்கை என மூன்றையும் அங்கு கற்றுக் கொண்டேன். 

சில நேரங்களில் சக மாணவர்கள் என் நிலை புரியாமல் கேலி செய்வார்கள். அந்த நேரத்தில் என் ஆசிரியர்கள் அவர்களை கண்டித்து, என் நிலையை எடுத்து சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பார்கள். சொல்லப்போனால் என்னை மகாராணிப் போல் பார்த்துக் கொண்டார்கள். நான் இன்று உயர்ந்து இருக்க காரணம் அவர்கள் அன்று போட்ட அடித்தளம்தான்.

என்னுடைய கல்வியில் மட்டுமில்லாமல் என் உடல் நலத்திலும் என் பெற்றோர் அதிக கவனம் செலுத்தினார்கள். இரட்டை மாட்டு வண்டி போல் இரண்டிலும் கவனம் செலுத்தினாலும் சில நேரங்களில் ஒரு மாடு சண்டித்தனம் செய்வது போல என் உடல் நலம் அவ்வப்போது பிரச்னை ஏற்படுத்தும். 

அந்த நேரங்களில், நான் பள்ளிக்கு செல்ல முரண்டு பிடித்திருக்கிறேன். ஆனால் அந்த நேரத்தில் என்னை மிகவும் அழகாக கையாண்டு என் பாட்டி, அம்மா, அப்பா, உடன் பிறப்புகள் அனைவரும் இணைந்து என்னை பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள். நான் கல்லூரியில் பட்டம் வாங்கும் வரை இதே நிலைதான்.

ஆனால் ஒருநாள் கல்வி எவ்வளவு முக்கியம் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது. பட்டப்படிப்பு முடித்த பிறகு பல மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்பட ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து மேலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று முடிவு செய்தேன். 

என் விருப்பத்தை அப்பாவிடம் சொன்னேன். அவர், ‘நீ ஏற்கனவே மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறாய், இதற்கு இடையில் உன்னால் முனைவர் பட்ட ஆய்வைத் தொடர முடியுமா? பலர் ஆய்வினை தொடங்கிவிட்டு, முடிப்பதற்குள்  சிரமப்படுகிறார்கள்.

உனக்கும் இந்த நிலை நீடிக்காமல் பார்த்துக் கொள்’ என்றார். அவர் சொன்ன வார்த்தையால் எப்படியாவது முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பது என் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்துவிட்டது’’ என்றவர், தன் பலநாள் ஆசையினை இதன் மூலம் நிறைவேற்றியுள்ளார். ‘‘சில வருடங்களில் என் அப்பா காலமானார்.

அப்பா இறந்த 15 நாட்களில், முனைவர் பட்ட நுழைவுத் தேர்விற்கான அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் என் அண்ணன்தான் எழுதச் சொல்லி தைரியம் கொடுத்தார், பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வானேன்.

அதனைத் தொடர்ந்து முனைவர் பட்ட ஆய்வில் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டேன். ஆய்வறிக்கையை சமர்ப்பித்து, கடைசி கட்ட நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கிறேன்.

என்னுடைய முனைவர் ஆய்வினை ஆங்கில மொழியில் செய்துள்ளேன். இன்றைய பள்ளி மாணவர்கள், சிந்தனைச் சிதறலினால் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்களின் சிந்தனை சிதறாமல், ஒரு முகப்படுத்தும் பயிற்சி தொடர்பான ஆய்வுதான் என்னுடையது. 

இதன் மூலம் மாணவர்கள் தங்கள் வேலைகளை தாங்களே சுயமாக, ஒருமுகப்படுத்தி சிறப்பாக செய்ய முடியும். 5 வயதில் எந்த மொழி நான் படிக்க முடியாமல் போனதோ, அந்த மொழியில்தான் என்னுடைய 58 வயதில் ஆய்வு செய்துள்ளேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
 
இதனைத் தொடர்ந்து உளவியல் துறையில் என்னை மேம்படுத்திக் கொள்ள தனிப்பட்ட பயிற்சிகள் எடுத்து அதன் மூலம் பல விஷயங்களை கற்று வருகிறேன். இதனுடன் வில்வித்தைக்கான பயிற்சியும் எடுத்து வருகிறேன். என்னை விளையாட்டு, கல்வி என்று மேம்படுத்திக் கொள்வதால், மாணவர்களுக்கு நானே ஒரு எடுத்துக்காட்டா இருக்கிறேன். 

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ‘மாற்றுத் திறனாளி’ அல்ல ‘மாற்றும் திறனாளி’ ’’ என்று கூறும் உலகம்மாள் ஜெம் ஆஃப் திஷா, தைரியமான வீரமங்கை, இரும்புப் பெண்மணி, சமூகச் சிற்பி, சிறந்த கல்வியாளர், தங்க மங்கை என 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

பொ.ஜெயச்சந்திரன்