சென்னையில் பேனா திருவிழா!
அதிகாரப்பூர்வ கையொப்பம் தொடங்கி ஆகப்பெரும் சிந்தனைகளை வெளிப்படுத்துவது வரை பேனா முனை இன்றியமையாதது. இந்த நவீன காலத்தில் எழுதுவதற்கென்று எத்தனையோ டிஜிட்டல் வசதிகள் வந்துவிட்டாலும் இப்போதும் எப்போதும் பேனாவின் மவுசு குறைவதில்லை.  அதே குறையாத மவுசுடன் சென்னை அடையாரில் மார்ச் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடந்தேறியது சென்னை பென் ஷோ. சென்னை வாசிகள் மட்டுமின்றி பல்வேறு நகரங்கள், மாநிலங்கள், நாடுகளை சேர்ந்தவர்களும் கூட பங்கேற்ற இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான பேனாக்கள், மைகள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவை கவனம் ஈர்த்தன. 
உலகின் மிகப்பெரிய பென் ஷோவாக கருதப்படும் இந்த நிகழ்வில் 150க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச அளவிலான பேனா உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். சிலர் தங்களது தனித்துவமான பேனாக்கள் பற்றியும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். “நாங்க திருவள்ளூர்லருந்து வந்திருக்கோம்.  ரங்கா பென்ஸ் என்றாலே உலகம் முழுவதும் பிரபலம்தான். தொடர்ந்து 60 ஆண்டுகளாக பேனா உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பல்வேறு வகையான பேனாக்களை ஏற்றுமதி செய்கிறோம். பலவகையான பேனாக்களை நாங்க உற்பத்தி செய்து வந்தாலும் எபோனைட் பேனாக்கள் தயாரிப்பில் எல்லோராலும் அறியப்படுகிறோம். ஆன்லைனில் எங்களிடம் விரும்பி பேனாக்களை வாங்குபவர்களை கூட இங்கே நேரில் சந்திக்க முடிந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மகிழ்ச்சியுடன் ரங்கா பேனாவினை வாங்கி செல்கின்றனர். உற்பத்தி தரமும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் எங்களை 60 ஆண்டுகளாக செயல்பட வைக்கிறதாக நம்புகிறோம். எங்களின் பேனா பிராண்டுகளை மேலும் உலகமறிய செய்ய இந்த பேனா கண்காட்சி உதவியா இருக்கு” என்றார் ரங்கா பென்ஸ் நிறுவனர் பாண்டுரங்கன்.
“மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடங்கி, முதலமைச்சர் ஸ்டாலின் வரை அனைவரும் ஃபவுன்டைன் பேனாக்களை விரும்பி பயன்படுத்துகின்றனர். இந்த வகை பேனாக்களின் மீதான காதல் இன்றளவும் யாரிடமும் குறையவில்லை. எத்தனை வகையான தனித்துவமான பேனாக்களின் மத்தியிலும் ஃபவுன்டைன் பேனாக்கள் மவுசு குறையாமல் இருப்பதைப் பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நாங்க ஃபவுன்டைன் பென் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறோம்.
பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எங்க பேனாக்களில் ரெனைஸ்ஸன்ஸ் பேனாக்கள் பிரபலமானவை. உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய பென் ஷோக்களில் இதுவும் ஒன்று என்பதால், இது போன்ற நிகழ்ச்சிகளால் பேனாக்களின் புது வரவுகளையும் சிறப்பம்சங்களையும் மக்களுக்கு காட்சிப்படுத்த முடிகிறது. பேனா பிரியர்கள் ஃபவுன்டைன் பேனாவைக் கொண்டு உடனடியாக எழுதி பார்த்து சந்தோஷமாக வாங்கி செல்கின்றனர்” என்றார் கிளிக் ப்ராண்டின் பங்குதாரர் ஹர்ஷ் கக்வானி.
தைவானிலிருந்து வந்திருந்த இங்க் இன்ஸ்டிட்யூட் எனும் ப்ராண்ட் அதிக கவனத்தை ஈர்த்தது. மரத்தினால் நேர்த்தியாக செய்யப்பட்ட இங்க்கில் தோய்த்து எழுதக்கூடிய கேலியோகிராஃபி பேனாக்களை கொண்டு பலரும் எழுதிப் பார்த்தனர். பேனாவை சுற்றிலும் ஒரு பாம்பு பின்னியிருப்பது போன்று வடிவமைக்கப்பட்ட பேனாவை பார்வையாளர்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
பேனாவில் காணப்படும் பாம்பு போன்ற வடிவம் வெள்ளியில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல வித்தியாசமான பேனாக்களை வைத்திருந்தாலும், ப்ராண்டின் அடையாளமாக இருந்த இங்க் வகைகள் பயன்படுத்த வேண்டுமென்கிற ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தன. லில்லி மலர்களின் நிறங்களிலும், அந்நாட்டின் சோடியாக் குறியீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பேனா மைகளும் வைக்கப்பட்டிருந்தன.
“ரெட் ஸ்னேக் விஷமற்றது, அது புனிதமான ஒரு பிரகாசமான நிறம் கொண்டது. இந்த இங்க் நிறமும் அப்படித்தான். இதை பயன்படுத்தும் போது பிரகாசமான ஒரு உணர்வை தருவதாக இருக்கும்” என அவற்றை காட்சிப்படுத்தியிருந்த நபர் விளக்கினார்.
தவிர, 9 கேரட் தங்கத்தால் ஆன நான்கு ஷேட்களை கொண்ட ஒரே பேனா, 25 லட்சம் மதிப்புள்ள 800 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட வைர பேனா போன்றவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. சென்னை பென் ஷோவை நடத்திய இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் எண்ட்லெஸ் ப்ராண்டின் இணை நிறுவனருமான தீரஜ் நந்தூரி உடன் பேசியதில்... “சென்னையில் இந்த பேனா கண்காட்சியினை நாங்க இரண்டாவது முறையாக நடத்தியிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய பேனா ஷோக்களில், சென்னையில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இந்தக் கண்காட்சியினை துவங்கி வைத்தார். மேலும் பல பிரபலங்கள் கண்காட்சிக்கு வருகை தந்தனர்.
பேனாக்களை சேகரிக்கும் பழக்கமுள்ள பேனா பிரியர்கள் சென்னையிலிருந்து மட்டுமின்றி பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஆந்திரா, நெல்லூர், மைசூர் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆர்வமுடன் கண்காட்சியை காணவும் தங்களை கவர்ந்திழுக்கும் பேனாக்களை வாங்கவும் வந்திருந்தனர். முதல் முறை இந்தக் கண்காட்சி நடைபெற்றபோது 100 பேனா உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த முறை 150க்கும் மேற்பட்ட பேனா உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் என இல்லாமல் நேரடியாக சில ப்ராண்ட் நிறுவனர்களே வந்து இதில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதல் முறையாக தைவான் நாட்டிலிருந்து தங்களின் பேனாக்களை காட்சிப்படுத்தி இருந்தனர். 80 ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள பேனாக்கள் வரையிலும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.
நிறைய சிறுவர்களும் விரும்பி பேனாக்களை வாங்கினர். பொதுவாக சென்னையில் ஏகப்பட்ட பேனா பிரியர்கள் உள்ளனர். ஆனால் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவும் விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் மூலமும் தங்களுக்கு விருப்பமான ப்ராண்ட் பேனாக்களை வாங்கியிருப்பார்கள். இந்த காண்காட்சியின் போது ப்ராண்ட் நிறுவனர்களும் உற்பத்தியாளர்களும் நேரடியாக வந்திருந்ததால், வாடிக்கையாளர்களுடன் நேரில் சந்தித்து உரையாட முடிந்தது.
‘‘இத்தனை வருடங்களுக்கு முன் உங்ககிட்டருந்துதான் ஆர்டர் செய்து பேனா வாங்கினேன், உங்க ப்ராண்ட் பேனாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்” என சந்தோஷமாக உரையாடும் அளவிற்கு வாடிக்கையாளர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் அந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது பெருமையாக உள்ளது. தவிர, இங்கு நடத்தப்பட்ட கேலியோகிராஃபி ஒர்க் ஷாப்பிலும் ஆர்வமுள்ளவர்கள் பலரும் கலந்து கொண்டனர். எண்ட்லெஸ் ஸ்டேஷ்னரி தொடங்கியதிலிருந்து நானும் இணை நிறுவனர் ஆதித்யா பன்சாலியும் வெளிநாடுகளில் நடைபெறும் நிறைய பேனாக்கள் கண்காட்சிக்கு செல்வோம். பின்னர்தான் இந்தியாவில் அதுவும் சென்னையில் இதை நடத்த வேண்டும் என்ற முடிவில் இதனை நடத்தினோம். எங்களின் இரண்டாவது கண்காட்சியையும் சக்சஸாக நடத்தி முடித்திருக்கிறோம்’’ என்றார்.
ரம்யா ரங்கநாதன்
|