பன்முக வித்தகி!



வயலின், கீ போர்டு வாசித்தல், பாட்டு பாடுவது என மூன்று வித இசைக் கலைகளில் அசத்தி வருபவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் ஸ்ரீப்ரியா ஸ்ரீநிவாசன். சிங்கப்பூர் தேசிய கலைக் கவுன்சில் மூலமாக 2020ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய கலைக் கவுன்சில் இந்திய இசைப் போட்டியில், கர்நாடக வயலின் போட்டியில் ஜூனியர் பிரிவில் இரண்டாம் பரிசையும், கர்நாடக குரலுக்கான இறுதிப் போட்டியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பாரதிய வித்யா பவன் திருச்சி கேந்திரா, ஸ்ரீரெங்கா ஃபைன் ஆர்ட்ஸ், சரஸ்வதி வித்யாலயா, காஞ்சி காமகோடி மடம், திருவானைக் கோயில், ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடம் போன்ற பல்வேறு இடங்களில் இவரின் இசைக் கச்சேரி அரங்கேறியுள்ளது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட கச்சேரிகளை சிங்கப்பூர், இந்தியாவில் நேரடியாகவும், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இணைய வழியாகவும் நடத்தியுள்ளார்.

‘‘நாங்க கடந்த 13 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வந்தோம். ஆனால் கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்து விட்டோம். தற்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறேன். 

சிங்கப்பூரில் இருக்கும் போது 7 வயதில் வயலின் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். மணிகண்டன் தான் என்னுடைய முதல் குரு. அவரிடம் ஆரம்ப பாடங்களையும் அதன் பிறகு நெல்லை ரவீந்திரன் என்பவரிடம் இடை நிலை மற்றும் கீர்த்தனங்களை கற்றேன்.

தமிழகத்திற்கு நான் குடிபெயர்ந்த வரைக்கும் எனக்கு பெரிய அளவில் வயலின் மேல் ஆர்வம் இருந்ததில்லை. ஆனாலும் அந்த வயதில் வயலின் பற்றிய மதிப்பு என்வென்று தெரியாமல்தான் கற்று வந்தேன். திருச்சிக்கு வந்த பிறகு வயலின் கலைஞர் ஸ்ரீமாதவ்விடம் அப்பா என்னை பயிற்சிக்காக சேர்த்தார். 

அதன் பிறகு தான் வயலின் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. இன்றும் அவரிடம் தான் பயிற்சி எடுத்து வருகிறேன். அவர் கொடுக்கும் ஊக்கத்தால்தான் பல மேடை நிகழ்ச்சிகள் செய்து வருகிறேன்’’ என்றவர், தன் இசைப்பயணம் குறித்து விவரித்தார்.

‘‘எங்களுடையது இசைக் குடும்பம். தந்தை புல்லாங்குழல் கலைஞர். எப்போதும் எங்க வீட்டில் கர்நாடக இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். அது தான் எனக்கு சிறு வயதிலேயே கர்நாடக சங்கீதம் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. மூன்று வயதில் தந்தையிடம்தான் அடிப்படை வாய்ப்பாட்டினை கற்றுக் கொண்டேன். 

அதன் பிறகு 5 வயதில் ராஜு சேகரிடம் கர்நாடக இசைக்கான பயிற்சி எடுக்கத் துவங்கினேன். இதனைத் தொடர்ந்து சங்கீத கலா ஆச்சார்யா விதுஷி நீலா ராமகோபாலின் மூத்த சீடரான சுமா வெங்கடேஷிடம் வாய்ப்பாட்டு கற்றேன். 8 வயதில் இருந்தே பாட ஆரம்பித்தேன். அதனைத் தொடர்ந்து வயலின் மற்றும் கீபோர்டும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போது, அப்பா வாசிக்கும் கீ போர்டில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு சின்ன வயசில் விளையாடி மகிழ்ந்த அந்தக் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அப்பாவின் நண்பரான கீ போர்டு பயிற்சியாளரான  செபாஸ்டின் என்பவரிடம் சேர்த்தார்.

4 வருடப் பயிற்சிக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள முக்கிய கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள், இலக்கிய மன்றங்கள் போன்ற எண்ணற்ற மேடைகளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2022ல் சிங்கப்பூர் தேசிய நூலக மையத்தில் குருநாதரின் வயலின் கச்சேரிக்கு நான் கீபோர்டு வாசித்த போது கிடைத்த மகிழ்ச்சியினை வார்த்தைகளால் சொல்ல இயலாது’’ என்றவர், வேர்ல்டு ஆஃப் கிட்ஸ், சங்கீத சிரோன்மணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

பொ.ஜெயச்சந்திரன்