இளம் வயதினரை நிலை கொள்ள செய்யும் ஹார்ட் அட்டாக்!
கடந்த சில மாதம் முன் சமூக வலைத்தளத்தில் திருமண நிகழ்வில் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்து இறந்து போன ஒரு இளம் பெண்ணின் வீடியோ வைரலானது. இறப்பு குறித்து பரிசோதித்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. பொதுவாக 30 வயதிற்குள் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதென்பது அரிதான ஒன்றாக உள்ளது.

மருத்துவமனைகளின் தரவுகளை பார்க்கும் போது 50% மாரடைப்பு நோயாளிகள் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதைக் காட்டுகின்றன. 40 வயதுக்குட்பட்ட தனிநபர்களிடையே இதய பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்தின் ஆய்வில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இதயப் பிரச்னையை எதிர்கொள்வதை கண்டறிந்துள்ளது. இதில் கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, நான்கு மடங்கு அதிகமாக ஆபத்து இருந்தது என்கிறார் இதய நல மருத்துவர் சொக்கலிங்கம். ‘‘மதுபானங்களில் முதன்மையான மூலப்பொருள் எத்தனால் ஆகும். இது ரத்த ஓட்டத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் முழுவதும் பரவி முக்கிய செயல்பாடுகளில் குறுக்கிடுகிறது. எத்தனால் உடலையும் கெடுக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெயில் வறுத்த உணவுகளில் கொழுப்புகள் அதிகம். வெண்ணெய் போன்ற முழு கொழுப்புள்ள பால் பொருட்களும் இதயத்திற்கு நல்லதல்ல. எண்ணெய் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிக அளவில் உட்கொள்வது அதிக கொலஸ்ட்ராலுக்கு பங்களிக்கும்.
இது தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுப்பதால், மாரடைப்பினை ஏற்படுத்தும். கபடி விளையாடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு வந்து இறக்கிறவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. காரணம், இயங்கிக் கொண்டு இருக்கும் இதயம் திடீரென தன் வேலையை நிறுத்துவதுதான். இதயம் திடீரென துடிப்பதை நிறுத்தும் இந்த நிலையைதான் கார்டியாக் அரெஸ்ட் என்று குறிப்பிடுகிறோம்.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டால், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். இதனால், அந்த நபர் சுயநினைவை இழந்து கீழே சரிந்து விடுகிறார். அப்போது சில நிமிடங்கள் இதயம் துடிப்பதை நிறுத்துகிறது. இதற்கு எந்த அறிகுறிகளும் இருக்காது’’ என்றவர், மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை விவரித்தார்.
‘‘சமீப காலங்களில் அதிகளவில் இளம் வயதினருக்கு மாரடைப்புகள் வருகிறது. பொதுவாக மாரடைப்பு என்பது வயதான பின்னர்தான் ஏற்படும். ஒரு சிலருக்கு மட்டுமே இளம் வயதில் மாரடைப்புகள் வந்து கொண்டிருந்தது.
அதிலும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை அதாவது, 40 வயது வரை மாரடைப்பு வருவது குறைவு தான். பெண்களுக்கு ஸ்ட்ரோக் கேன்சர் அதிகளவில் இந்தக் காலங்களில் வராது. அவர்கள் உடம்பில் இயல்பாக சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களாலும் இந்த மாரடைப்புகள் வராமல் இருந்தது. ஆனால் தற்போது பெண்களுக்கும் ஆண்களுக்கு இணையாக மாரடைப்பு வந்து இறந்து போகிறார்கள். நம்முடைய உடலில் உள்ள ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் அந்த கொலஸ்ட்ரால் ரத்தக் குழாய்களில் படியாமல் இருக்க வேண்டும். இப்படி படியாமல் இருப்பதற்கு எண்டாஸ்மோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் உதவுகின்றன. அதிக தூரம் பயணம், ஃபாஸ்ட்ஃபுட் உணவுகள், மன அழுத்தம், அதிக நேர வேலை, திடீரென பதட்டப்படுவது போன்ற காரணத்தால் இந்த இரு ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.
ஆல்கஹால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஒழுங்கற்ற இதயத் துடிப்பை ஏற்படுத்தும். தமனிகளில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். சாதாரண குடிப்பழக்கம் கூட ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் இதயத்தை கஷ்டப்படுத்தலாம். காலப்போக்கில், ஆல்கஹால் இதய தசையை பலவீனப்படுத்தி இதய செயலிழப்பு அல்லது திடீர் இதயத் தடுப்புக்கு வழிவகுக்கும்.
பதட்டம் அல்லது ஒரு வேலையை அதிவேகமாக செய்தல், அதிகமாக உடற்பயிற்சிகள் செய்யும் போது ரத்தக் குழாயில் கீறல் ஏற்பட்டு உடைய ஆரம்பிக்கும். கரோனரி என்று சொல்லக்கூடிய தமனிகளில் பாதிப்பு ஏற்படத் தொடங்கும். இந்தப் பாதிப்பு ஏற்படும் போது ரத்தம் இதயத்திற்கு செல்வதில் பிரச்னையாகும். இந்த நிலையில் இருப்பவர்கள் திடீரென கோபப்படும் போது ரத்தக்குழாய் சுருங்கி விரியும். விளைவு மாரடைப்பு ஏற்படும். அதிவேகமாகவும் பதட்டத்தோடும் ஒரு வேலை செய்யும் போது இந்த மாதிரியான பிரச்னைகள் வரலாம். 10 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது தவறு. குறைந்தது ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிகளவில் உடலை வருத்தக்கூடாது.
கீரை வகைகள், காய்கறிகள், இறைச்சி ஆகிய அனைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்கிறார்கள். ஒரே இடத்தில் 10 மணி நேரம் உட்கார்ந்திருப்பது 20 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமம். உடலுழைப்போடு சேர்ந்து மகிழ்ச்சியாகவும் இருந்தால் இதனை தவிர்க்கலாம்’’ என்கிறார் இதய நல மருத்துவர் சொக்கலிங்கம்.
இளம் வயதினருக்கு SCA மற்றும் பரம்பரை இதய நோய்களில் ஒன்றான ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி (HCM), இதய தசையை தடிமனாக்கி, ரத்தத்தை திறம்பட பம்ப் செய்வதை கடினமாக்குகிறது.
இதனாலும் மாரடைப்பு ஏற்படுகிறது. அரிதுனோ ஜீனி ரைட் வென்ட்ரிகுலர் டிஸ்ப்ளாசியா (ARVD) என்பது அரிதான, பரம்பரை இதயக் கோளாறு. இது இதய தசையில் ஏற்படும் ஒரு மரபணு நோய். அரித்மோஜெனிக் ரைட் வென்ட்ரிகுலர் கார்டியோமயோபதி (ARVC) என்றும் அழைக்கப்படுகிறது. எதிர்பாராத உடல் உழைப்பு செலுத்தினால் இந்த மாதிரி மாரடைப்பு வரும். இந்திய விளையாட்டுகளில், குறிப்பாக அதிக தீவிரம் கொண்ட துறைகளில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டிக்கு முந்தைய ECG திரையிடல்களை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் இன்னும் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு முறையான இதய பரிசோதனைகள் இல்லை.
மா.வினோத்குமார்
|