தினமும் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் உடல் உஷ்ணம் குறையும்!



பெண்களுக்கு அடர்ந்த கருமையான கூந்தல் மேல் எப்போதும் ஒரு மோகம் உண்டு. அது அவர்களின் அழகின் ஒரு அடையாளமாக கருதுவார்கள். தலைமுடி உதிர ஆரம்பித்தால் அவர்களால் அதை பொருத்துக் கொள்ள முடியாது. 
அதற்காக என்னென்ன சிகிச்சைகள், எண்ணெய்கள் உள்ளதோ அதை தேடிப் போய் வாங்கி பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். இவர்களுக்காகவே சித்தா முறைப்படி தயாரிக்கப்பட்ட மூலிகை எண்ணெயினை விற்பனை செய்து வருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஸ்வரி.

‘‘நான் சித்தா வைத்தியர் கிடையாது. அதே சமயம் இந்த எண்ணெயினை நான் தயாரிப்பதும் இல்லை. முழுக்க முழுக்க விற்பனை மட்டுமே செய்து வருகிறேன்’’ என்று பேசத் துவங்கினார்.
‘‘சித்தா வைத்தியரான டாக்டர் ராமகிருஷ்ணன்தான் இந்த எண்ணெயினை முறைப்படி தயாரிக்கிறார். 

தலைமுடி சிகிச்சைக்காக வந்தவர்களுக்குதான் முதலில் இவர்கள் எண்ணெயினை கொடுத்து வந்தார்கள். எனக்கு தலைமுடி உதிரும் பிரச்னை இருந்ததால், இதனை பயன்படுத்த ஆரம்பித்தேன். நல்ல ரிசல்ட் கொடுத்தது. அப்போதுதான் இதையே ஏன் சிகிச்சைக்கு வருபவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் விற்பனை செய்யக் கூடாது என்று யோசித்தேன்.

என் எண்ணத்தினை டாக்டரிடம் சொன்ன போது முதலில் மறுத்தார். பிறகு பொருள் தரமாக இருக்கும் போது மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்  என்று எடுத்து சொன்னேன். அவரும் சம்மதிக்க முறைப்படி அனைத்து சான்றிதழ்களும் பெற்று விற்பனை செய்ய ஆரம்பித்தோம்’’ என்றவர், இதற்கான சிகிச்சை பெற விரும்புபவர்களுக்கு டாக்டர் ஆலோசனையும் வழங்குவதாக தெரிவித்தார்.

‘‘தலைமுடி, கைகால் வலி போல் கிடையாது. அழகு சார்ந்த விஷயம். அதில் பாதிப்பு ஏற்பட விரும்ப மாட்டார்கள். அதனால் ஆரம்பத்தில் டாக்டரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயினை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். சிலர் கேள்விப்பட்டு வாங்க வருவாங்க. அவர்களுக்கு நேரடியாக விற்பனை செய்தோம். 

இன்றைய தலைமுறையினர் தலையில் எண்ணெய் வைக்கவே விரும்புவதில்லை. தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் இன்று மறைந்துவிட்டது. அதே போல் தலைக்கு குளிக்கும் போதும் எண்ணெய் வைப்பதில்லை. வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் பரிந்துரைப்பார்கள். காரணம், எண்ணெய்  உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

சிலர் எங்களிடம் வாரம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவதாக கூறுவார்கள். அவ்வாறு பயன்படுத்தினால் எந்த மாற்றமும் இருக்காது. நாங்க சொல்லும் அறிவுரையை பின்பற்றினால் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்பதை பரிந்துரைப்போம். தலைமுடி உதிர்வு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு எண்ணெய்  மட்டுமில்லாமல் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்துகளும் பரிந்துரைப்போம்’’ என்றவர் இந்தத் தொழிலை துவங்கியது பற்றி விவரித்தார்.

‘‘இப்போது மார்க்கெட்டில் நிறைய எண்ணெய்கள் உள்ளது. நாங்க சித்தா முறைப்படி இதனை தயாரிக்கிறோம். அதை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினோம். அதனால்தான் இதனை ஆன்லைன் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டோம். நேரடியாக சிகிச்சைக்காக வருபவர்களுக்கு 2005ல் இருந்தே இந்த எண்ணெயினை வழங்கி வந்தோம். கடந்த ஒரு வருடமாகத்தான் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம். 

எந்த ஒரு பொருளையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் போது, குறிப்பாக அழகு சார்ந்த பொருட்களுக்கு சரியான உரிமம் பெற வேண்டும். மேலும் சித்தா பொருட்களை விற்பனை செய்வது அவ்வளவு சுலபமில்லை. சித்தா பொருளுக்கான உரிமமும் எளிதாக பெற முடியாது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு தான் உரிமம் பெற முடியும். அதன் பிறகு தான் விற்பனை செய்ய முடியும்’’ என்றார்.

‘‘சித்தா முறையில் தலைக்கான எண்ணெய் மட்டுமில்லை. மூட்டுவலி மற்றும் உடல் வலிக்கான எண்ணெயும் அறிமுகம் செய்ய இருக்கிறோம். எங்களின் எண்ணெய் பாட்டில் முழுக்க முழுக்க ஈகோ ஃபிரண்ட்லி முறையில்தான் பேக்கிங் செய்கிறோம். எண்ணெயினை பாட்டிலில் அடைத்து அது உடையாமல் இருக்க மூங்கில் குடுவையில் வைத்து தருகிறோம்.

இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டும் பயன்படுத்தக் கூடாது. இதில் நிறைய மூலிகைகள் இருப்பதால், நிறைய எண்ணெயினை தலையில் தேய்த்து அதிக நேரம் ஊற வைத்தால் மூலிகையில் உள்ள குளிர்ச்சி தன்மை நம் உடலை பாதிக்க வாய்ப்புள்ளது. 

எண்ணெயினை தொடர்ந்து சோப்பு, மூட்டு வலி எண்ணெய், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களுக்காக முதுகுவலிக்கான எண்ணெயினை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது’’ என்ற ராஜேஸ்வரியை தொடர்ந்தார் டாக்டர் ராமகிருஷ்ணன்.

‘‘எங்களுடையது பாரம்பரிய சித்த வைத்திய குடும்பம். தாத்தா காலத்தில் இருந்தே சித்த வைத்தியம் செய்கிறோம். நான் கடந்த 20 வருடமாக சிகிச்சை அளித்து வருகிறேன். மருந்துகள் மட்டுமில்லாமல் தலைமுடிக்கான எண்ணெயும் பாரம்பரிய முறையில் தயாரித்து வருகிறோம். பேஷன்டுகளுக்குதான் முதலில் கொடுத்து வந்தேன். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் கேட்க ஆரம்பித்ததால், பேஷன்ட் அல்லாதவர்களுக்கும் கொடுக்க திட்டமிட்டோம்.

அவுரி, நெல்லிக்காய், கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கார்போக அரிசி என 21 மூலிகைகள் சேர்த்து இந்த எண்ணெயினை தயாரிக்கிறோம். மூலிகைகளை அரைத்து, சாறெடுத்து தூய்மையாக எங்களின் ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான மூலப்பொருட்களை இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களிடம் இருந்து பெறுகிறோம். தலைமுடி கொட்ட பல காரணம் உண்டு.

உடல் உஷ்ணம் மற்றும் பொடுகு காரணமாக முடி கொட்டும். அதிகமாக துரித உணவுகளை சாப்பிட்டாலும் முடி பாதிப்படையும். இந்த எண்ணெய் உடல் உஷ்ணத்தினை குறைப்பதால் முடி கொட்டுவதை தடுக்கும். தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து வந்தால் நாளடைவில் முடி கொட்டுவது கட்டுப்பட்டு முடி வளரும்’’ என்றார் டாக்டர் ராமகிருஷ்ணன்.

 நிஷா