ஜென்டில் வுமன்!



அடுக்குமாடி குடியிருப்பில் அரவிந்த் (ஹரிகிருஷ்ணன்) அவரது மனைவி பூரணியுடன் (லிஜோமோள்) தனியாக வசித்து வருகிறார். வீட்டிற்கு வரும் பூரணியின் தங்கையை வன்கொடுமை செய்ய முயற்சிக்கும் போது கீழே விழுந்து மயங்கி விடுகிறார் அரவிந்த். 
அந்த நேரத்தில் வந்த அவரது மனைவி பூரணிக்கு கணவர் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது. ஒரு பக்கம் வன்கொடுமை முயற்சி இன்னொரு பக்கம் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு என இருக்க அவர் அவருடைய கணவரை என்ன செய்தார்? அவருடைய
வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

திருமணம் ஆன பெண், முன்னாள் காதலி என இருவரின் உணர்வுகளை சொல்வதோடு மட்டுமில்லாமல் இருவரின் உணர்வுகளையும் எப்படி நாம் பார்க்கிறோம் என்பதையும் பேசுகிறது இத்திரைப்படம். பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் ஆண்கள், பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். 
அதனை அவர்கள் எப்படி வெளியில் சொல்ல வருகிறார்கள் என்பது குறித்து ஆழமான ஒரு உரையாடலை உருவாக்கியிருக்கிறார். மேலும் துரோகம், திருமணம் தாண்டிய உறவு, பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கு பின்னால் உள்ள அரசியல் என பெண்கள் மீது சுமத்தப்படுகின்ற எல்லா குற்றங்கள் குறித்தும் விவாதிக்க அழைக்கிறார் அறிமுக இயக்குனர் ஜோஷ்வா சேதுராமன்.

தினசரி செய்தித்தாள்களில் படிக்கும் சம்பவங்களை மையமாக வைத்து அதன்பின் உள்ளவற்றை எல்லாம் தெளிவாக பேசியிருக்கிறது இந்தப் படம். ஒரு குற்றம் நடக்கிறதென்றால் அந்த குற்றத்திற்கு தண்டனை கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த குற்றம் நடக்காமல் இருப்பதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டும் என்பதுதான் படம். 

விஷயம் என்ன நடந்தாலும் அது கணவன்தானே என சகித்து வாழக்கூடாது என்று சொன்னாலும் அதற்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் விவாதத்திற்குரியது. பெண்கள் எந்தளவிற்கு தங்களுக்குள் ரகசியங்களை காக்க முடியும் என்றும் அசாதாரணமான சூழ்நிலைகளில் கூட எப்படி சமயோசிதமாக செயல்படுகிறார்கள் என்று தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.

இந்த மூன்று கதாபாத்திரங்கள் தவிர படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று காவல் அதிகாரிகள் கதாபாத்திரங்கள் இரண்டுவிதமாகப் பெண்களை அணுகுவதும் நல்ல காட்சியமைப்புகள்.
பூரணி கதாபாத்திரம் எதுவும் தெரியாதவளாக அப்பாவியாக இருக்கும் இடத்தில் இருந்து மாறி தான் எல்லாவற்றையும் செய்யக்கூடியவள் என்பதை உணர்த்துவதற்காக வைக்கப்பட்டிருக்கிற காட்சிகள் அருமை.

அதிகாலை கணவருக்கு முன் எழுந்து வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கும் மனைவி.  கணவரின் ஆசையையும் தேவையையும் நிறைவேற்றி தூங்கச் செல்பவளாக எதுவும் அறியாதவளாகவும் இருக்கும் மனைவி. ஒரு கட்டத்திற்குப் பிறகு எல்லா விஷயங்களையும் துல்லியமாக முடிவெடுத்து புத்திசாலியாகவும் அதே சமயம் அப்பாவியாகவும் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்திப் போகிறார் லிஜோமோள் ஜோஸ். பொண்ணுங்க நிமிர்ந்து நடந்தா மட்டும் போதாது... எதிர்த்து நிற்கவும் கத்துக்கணும்.

ஆம்பளைங்கதான் குடும்பத்துல முதல் ஆளா நினைக்கிறாங்க. ஆம்பளையோட சாதி, மதம்தான் குழந்தைகளுக்கும் போகுது என குடும்பங்கள் எந்த அளவிற்கு ஆண்கள் மையமாக உள்ளது என்பதை கேள்வி கேட்கிறார். மனைவியிடம் ரொமாண்டிக்காக பேசியே தன் மீது தவறான எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார் ஹரிகிருஷ்ணன். திருமணத்திற்கு மீறிய உறவு என்றாலும் தன்னுடைய காதலனையும் நினைத்து ஏங்கும் அன்னா கதாபாத்திரத்திற்கு லாஸ்லியா நல்ல தேர்வு.

ராஜிவ் காந்தி, வைரபாலன், துணை ஆணையராக வருபவர் ஆகிய மூன்று பேரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். படத்தில் உணர்வுகளுக்கு உறுத்தலில்லாமல் ஒலிக்கிறது கோவிந்த வசந்தாவின் பின்னணி இசை. இயக்குநர் ஜோசுவா சேதுராமனுடன் பாடலாசிரியர் யுகபாரதியும் இணைந்து வசனங்கள் எழுதியுள்ளார். படத்தின் பலமே வசனங்கள்தான்.

‘வருங்காலத்தில் உதவுவாங்கனு வளர்த்ததற்கு புள்ளைங்க என்ன பிக்ஸட் டெபாசிட்டா’, ‘குழந்தை பெத்துக்காமலேயே ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாம்’ போன்ற வசனங்கள் எல்லாம் உறைந்து போய் கிடக்கும் பழமை மீது எறிந்த கற்கள். 

வீடு, அறை, கார், அடுக்குமாடிக் குடியிருப்பு எனச் சுற்றிய இடத்திலேயே கேமரா சுழன்றாலும், அதற்குள் என்ன சுவாரஸ்யங்களை கூட்ட முடியுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் காத்தவராயன். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் இருப்பும் அவர்கள் மீது தொடுக்கப்படுகிற குற்றங்கள் மீதும் மென்மையாகவும் அதே நேரத்தில் நுணுக்கமாகவும் கேள்விகளை எழுப்புகிறது ஜென்டில் வுமன்.

மா.வினோத்குமார்