தகிக்கும் வெயிலும் தர்பூசணியும்!



இயற்கை 360°

கோடைக்காலம் வெயிலுக்கு மட்டுமா பெயர் போனது? தனித்துவமான கோடைக்கால பழங்களுக்கும் சேர்த்தே அல்லவா பெயர் போனது.?! இதில், பார்த்தவுடன் உண்ணத் தோன்றும் பழம், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பழம், பிக்னிக் புறப்பட்டால் பெரிதும் பயன்படுத்தப்படும் பழம், தகிக்கும் வெயிலில் தாகத்தைத் தணித்திடும் பழம் என, தனது நிறத்தாலும், சுவையாலும், நீர்த்தன்மையாலும் கோடைக்காலத்தை வரவேற்கும் நமது தர்பூசணியுடன் ஓர் இயற்கை 360° பயணம் மேற்கொள்வோம் வாருங்கள்!

அதிகளவு நீர்த்தன்மை கொண்ட பழம் என்பதால் ‘Watermelon’ என ஆங்கிலத்தில் பொதுவாக அழைக்கப்படும் தர்பூசணியின் தாவரப்பெயர் Citrullus lanatus. தோன்றிய இடம்: ஆப்ரிக்கா. Citrullus என்றால் எலுமிச்சைக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும், lanatus என்றால் கம்பளி போன்ற தோற்றம் கொண்டது என்றும் லத்தீன் மொழியில் பொருள்படுகிறது. 
கம்பளி நூலைப் போன்ற சிறு மயிர்களை அதன் கொடி மற்றும் இலைகள் கொண்டுள்ளதால் lanatus பெயர் தர்பூசணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. தரையில் படரும் கொடிவகைத் தாவரமான தர்பூசணியை கோசாப் பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி, தண்ணீர்ப் பழம், குமட்டி பழம், வத்தகப்பழம் என்றெல்லாம் நாம் அழைப்பது போல, தர்பூஸ், தர்பூஜ், தொர்மூஜ், எர்ரிபுசா, கலிங்காட் என நமது பிற மாநிலங்களில் தர்பூசணியை அழைக்கின்றனர்.

‘‘தேவதைகள் எந்தக் கனியை உட்கொள்வார்கள் என்பதை, தர்பூசணியை சுவைத்த யாராலும் எளிதாகக் கூற முடியும்..!” இது இலக்கிய மாமேதை மார்க் ட்வெய்னின் பிரபல வரிகளுள் ஒன்றாகும். தேவதைகள் மட்டுமா..? தெருக்கோடியில் அமர்ந்திருப்பவர்களும் உண்ணும் எளிய, இனிய பழமாக அல்லவா தர்பூசணி உள்ளது! அப்படி என்னதான் மேஜிக் இதில் நிறைந்துள்ளது என்பதை இனி பார்ப்போம்.

வருடம் முழுவதும் வளரும் கொடிவகைத் தாவரமான தர்பூசணி, பொதுவாக சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது என்றாலும் மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களிலும்
இப்பழங்கள் காணக் கிடைக்கின்றன. இதில் தர்பூசணியின் அடர் பச்சை நிறத்தோலுக்குள் உள்ள rind எனப்படும் வெண்ணிறப் பட்டை, பெருமளவு காணப்படும் சிவப்பு நிற சதை, மையப் பகுதியில் உள்ள கருப்பு அல்லது பழுப்பு நிற விதைகள் என ஒவ்வொரு நிறத்திலும் ஆரோக்கியம் அடங்கியுள்ளது.

கண்ணைப் பறிக்கும் தர்பூசணியின் சிவப்பு நிற சதைப்பகுதியில் அதிக நீர்த்தன்மையும் (91%), அதிக நார்ச்சத்தும் (0.4g) அதேசமயம் குறைந்த கலோரிகளும் (40/100g) உள்ளது என்பதுடன் பல அத்தியாவசிய கனிமங்களும் வைட்டமின்களும் உள்ளது என்று அதனைக் கொண்டாடும் உணவு ஊட்ட வல்லுநர்கள், அதன் சத்துகளை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், ஜிங்க், செலினியம், மெக்னீசியம், கோலின், பீட்டா கரோட்டீன், பீட்டைய்ன், ஃப்ளூரைடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துகளும், A, B C, E வைட்டமின்களும், இவற்றுடன் குறைந்தளவு புரதமும், கொழுப்பு அமிலங்களும் நிறைந்தவை தர்பூசணி என்றாலும், மருத்துவ உலகம் இப்பழத்தைக் கொண்டாடக் காரணமே அதிலுள்ள லைக்கோபீன் (lycopene), ஆன்த்தோ-சயனின்கள் (anthocyanins) மற்றும் சிட்ரூல்லின் (citrulline) போன்ற முக்கியத் தாவரச்சத்துகள்தான்.

இவை தவிர குக்யூர்பிட்டேசின் (cucubitacin), ட்ரை-டெர்பீன்ஸ் (triterpenes), ஃபைட்டோ-ஸ்டீரால்ஸ் (phytosterols), ஃபீனாலிக் அமிலம் (phenolic acids) மற்றும் ஆல்கலாய்டுகள் (alkaloids) உள்ளிட்ட பிற தாவரச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.

ஆனால் கனியைக் காட்டிலும், நாம் தூக்கியெறியும் தர்பூசணி பட்டைகளிலும் விதைகளிலும் இன்னும் அதிக சத்துகள் உள்ளது என்று கூறும் மருத்துவ அறிவியல், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், சோடியம், கால்சியம் உள்ளிட்ட கனிமச்சத்துகளும், தையமின், ரிபோஃபிளேவின், நியாசின், ரெட்டினால், அஸ்கார்பிக் அமிலம் உள்ளிட்ட வைட்டமின்களும் நிறைந்தவை தர்பூசணிப் பட்டைகள் என்றால், அதன் விதைகளோ மேற்சொன்ன சத்துகளுடன் குறைந்த கலோரிகளும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும், டானின், சப்போனின், ட்ரை டெர்பனாயிட் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடெண்டுகளையும் கொண்டது என்கிறது.

கோடையில் தாகத்தைத் தணித்து, நீர்த்தன்மையை அதிகரிக்கிறது என்பதைத் தாண்டி, இன்னும் பல மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது தர்பூசணி. குறிப்பாக இதிலுள்ள லைக்கோபீன் (Lycopene) இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாய் அடைப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. தக்காளியைக் காட்டிலும் அதிகளவு லைக்கோபீன் இதில் உள்ளதால், இதய பாதுகாப்பு தாண்டி, புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதுடன் சரும நோய்களுக்கும் நிவாரணமளிக்கிறது தர்பூசணி. 

அடுத்து, பசலைக் கீரையைக் காட்டிலும் அதிகளவு இரும்புச்சத்து கொண்டதால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான ஏற்ற உணவாக இது திகழ்கிறது. அத்துடன், இதிலுள்ள அதிக கோலின் (Choline) எனும் நரம்பூக்கி, தூக்கமின்மையைப் போக்கி, ஞாபகத்திறனை அதிகரிக்கச் செய்கிறது என்பதால் குழந்தைகளுக்கான சிறந்த சிற்றுண்டியாக தர்பூசணிப்பழம் மற்றும் விதைகள் திகழ்கின்றன.

மேலும் இதன் பீட்டா கரோட்டீன்கள் மற்றும் நுண்ணூட்டங்கள், கண்களின் ஆரோக்கியத்தைக் காப்பதால் மாலைக்கண் நோய், விழி மிகை அழுத்த நோய் (glaucoma), கண் புரை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. இதன் ஆன்டி ஆக்சிடெண்டுகள் சளி, அலர்ஜி, ஆஸ்துமா, குடல் அழற்சி, மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் அழற்சி போன்றவற்றின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது. சிறுநீர் பெருக்கியாக விளங்கும் தர்பூசணியின் கனி மற்றும் விதைகள், சிறுநீர்த் தொற்றிலும் சிறுநீரகக் கற்களிலும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன. மது போதையிலிருந்து விடுபடவும் இதன் விதைகள் பெரிதும் உதவுகின்றன.

மேலும், தர்பூசணியின் அழற்சி எதிர்ப்புப் பண்பு, புற்றுநோய் செல்களின் அதீத வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது என்பதால், பெருங்குடல், பிராஸ்டேட், கருப்பை, மார்பகம், நுரையீரல் உள்ளிட்ட புற்றுநோய்களின் பரவுதலையும் தீவிரத்தையும் தர்பூசணி கட்டுப்படுத்துகிறது எனப்படுகிறது. 

அதுமட்டுமின்றி உடற்பருமன் குறைப்பு, நோயெதிர்ப்பு, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை, கல்லீரல் பாதுகாப்பு, நரம்புகளுக்கு ஊக்கம், சருமம் மற்றும் மூட்டுகள் பாதுகாப்பு என, தர்பூசணியின் பயன்களும் அதனைப் போலவே பெரியது.

தர்பூசணிப் பட்டையில் உள்ள சிட்ருலின் (Citrulline) அமினோ அமிலம், ஆர்ஜினைன் (Arginine) மற்றும் நைட்ரிக் ஆக்சைடு (Nitric oxide) என மாற்றமடைந்து ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. இந்த ரத்த நாள விரிவடைதல் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதோடு, ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது என்பதால் ‘இயற்கை வயாகரா’ என்றே தர்பூசணி அழைக்கப்படுகிறது.

ஆனாலும் இதன் அதிக நீர்த்தன்மை காரணமாக ஒருசிலருக்கு செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளை தர்பூசணி ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் அதிகளவில் உட்கொள்ளும் போது, இதிலுள்ள லைக்கோபீன் சிலருக்கு ஒவ்வாமை மற்றும் வயிற்று அழற்சியை ஏற்படுத்தலாம் என்பதையும் நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும்.

எகிப்தியர்கள் தர்பூசணியை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தியது அவர்களது ஓவியங்கள் மற்றும் பழங்கதைகளில் தெரிய வருகிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்க காடுகளில் விளைந்த ஒரு தாவரத்தை, மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும், சீனாவிற்கும் பின்னர் உலகெங்கும் கொண்டு சென்றது கடல் வாணிபம்தான். மத்திய தரைக்கடல் நாடுகளில், வறட்சி மற்றும் கோடைக் காலங்களில் முக்கிய உணவாக, தாகத்தைத் தீர்க்கும் அருமருந்தாக இது விளங்கியுள்ளது.

இதுபற்றிய குறிப்புகளைத் தனது பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள டேவிட் லிவிங்ஸ்டன், ஆரம்ப காலத்தில் தர்பூசணியின் சிவப்பு நிறப்பகுதி மிகவும் சிறியதாக இருந்தது என்றும், பல்வேறு காலச்சூழ்நிலை மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே முழுவதும் உண்ணக்கூடிய ஒன்றாக இது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பல நிறங்களில், பல அளவுகளில் 1200 வகைகள் வரை காணப்படும் தர்பூசணியில், விதைகள் இல்லாத, அதேசமயம் அதிக நீர்த்தன்மை மற்றும் அதிக இனிப்புச் சுவையுடன் கூடிய ஆரஞ்சு நிற தர்பூசணியை சமீபத்தில் உருவாக்கியுள்ளது இந்திய வேளாண் ஆய்வு மையம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தாமாகவே விதைகளிலிருந்து வளரும் தன்மை கொண்ட தர்பூசணியை வேளாண் பயிராக்கி, இன்று உலகளவில் அதிகம் உற்பத்தி செய்வது சீனாதான். நான்காம் நூற்றாண்டில் இந்தியா வந்தடைந்த இதனை சிந்து நதிக்கரையோரம் விவசாயப் பயிராகக் கண்ட சுஷ்ருதா, இதற்கு கலிங்கா என்று பெயரிட்டு, இதன் மருத்துவப் பலன்களை தனது சுஷ்ருத சம்ஹிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வெப்பமும் அதிக நீரும் தேவைப்படும் இந்த வெப்ப மண்டல வேளாண் பயிர், பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயிரிடப்பட்டு, 120 நாட்கள் அதாவது, மூன்று மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது என்றாலும், சமீபத்திய வகைகளான யமாட்டோ, சுகர்பேபி, அனார்கலி, அர்கா ஜோதி, அர்கா மதுரா போன்ற வகைகளை வருடம் முழுவதும் விளைக்கலாம். உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் தர்பூசணி அதிகம் பயிரிடப்படுகிறது.

பொதுவாக உருண்டை அல்லது நீள்வட்ட வடிவில், 5-10 கிலோ எடையுள்ள பழங்களை ஏக்கருக்கு 15 டன் என்றளவில் மகசூல் செய்யலாம் என்றுகூறும் வேளாண் வல்லுநர்கள், ஐஸ்பாக்ஸ் மெலன் எனும் 1-1.5 கிலோ எடையுள்ள சிறிய கனிகளை அமெரிக்கர்களும், அதேபோல ஏற்றிச் செல்வதற்கும், ஃபிரிட்ஜில் வைப்பதற்கும் ஏதுவான சதுர வடிவிலான தர்பூசணிகளை ஜப்பானியர்களும் கண்டுபிடித்துள்ளனர் என்கிறார்கள். 

இயற்கை தந்துள்ள இனிப்பு மிட்டாய் (Nature’s Sweet candy) என கொண்டாடப்படும் தர்பூசணியை, அதன் சிறப்பு குணங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி, உலக தர்பூசணி தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கோடைக்கால நீர்வறட்சி, உடல் வெப்பம் ஆகியவற்றைத் தணித்து புத்துணர்ச்சி ஊட்டும் நீர்ப்பழங்களில் முன்னிற்பது என்றும் தர்பூசணிதான். தர்பூசணியை விதைகளை நீக்கிய பின் பழத்தின் சிவப்பு பகுதியை துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம் அல்லது சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவியும் சாப்பிடலாம். ஜூஸாகவும் பருகலாம். எளிமையான, அதேசமயம் புத்துணர்ச்சி பானமாக என்றும் இருப்பது தர்பூசணி ஜூஸ்தான்.

மேலும் சர்பத், சாலட், ஸ்மூத்தி, ஐஸ்கிரீம், கேண்டி போன்ற பலவகையான உணவுகளிலும், சுவையூட்டியாகவும், குறிப்பாக மாக்டெய்ல் மற்றும் காக்டெய்ல்களில் தர்பூசணி பயன்படுத்தப்படுகிறது. தர்பூசணியின் வெண்ணிறப் பட்டைகள் கறியாகவும், சாலட்களிலும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகின்றன. 

வறுத்த தர்பூசணி விதைகள் உணவாகவும் சிற்றுண்டியாகவும், பொடி செய்யப்பட்ட விதைகள், சூப், ஸ்ட்யூ தயாரிக்கவும், அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. தம் ஆரோக்கிய பலன்கள் காரணமாக, தர்பூசணி விதைகள் சமீபமாக அதிக கவனம் பெற்று வருவதையும் நாம் பார்க்கலாம்.

புது வருடத்தில் முக்கிய உணவாக தர்பூசணி விதைகளை சீனர்களும் வியட்நாமியர்களும் உட்கொள்கின்றனர். சூய்க்கா (suika) என ஜப்பானில் வழங்கப்படும் தர்பூசணி, அங்கு மிகப் பிரபலமான பழமாக விளங்குவதுடன், மதிப்புமிக்க பரிசுப் பொருளாகவும் திகழ்கிறது. அதேசமயம் அமெரிக்க கறுப்பினத்தவர்களிடையே, அடிமைத்தனத்தை உடைக்கும் சின்னமாக தர்பூசணி சித்தரிக்கப்படுகிறது.

உண்மையில் தொன்மைகளில் மட்டுமன்றி நன்மைகளிலும், அதாவது, அனைத்து சத்துகளையும் அள்ளித்தரும் பூசணி (தரும்+பூசணி) என்பதே மருவி தர்பூசணி ஆனது எனலாம். ‘அடேய் தர்பூசணி மண்டையா’ என்று யாரேனும் நம்மை பகடி கூறி அழைத்தால் கூட, புன்னகையுடனும் பெருமையுடனும் அதனைக் கடப்போம்... தன்னுள்ளே அனைத்து ஆற்றல்களையும் சேர்த்து வைத்துள்ள தர்பூசணி போலவே..!

(இயற்கைப் பயணம் நீளும்!)